ஊஞ்சலாடிகள்
(70களில் எழுதியது.)
ஊரெங்கும் பார்க்கிறேன்
ஊஞ்சலாடிகள்.
உண்மைக்கும் பொய்க்குமிடை
ஊஞ்சலாடிகள்.
வீறுகொண்டு கொள்கை
ஒன்றை முழங்கி வந்தபேர்
மாறுபட்டு இன்று
பேசும் ஊஞ்சலாடிகள்.
எதிரி என்று ஊழலென்று
எதிர்த்த பேர்களை
பதவி கண்டு பல்
இளித்துப் பாதம் தாங்குவார்.
மந்தையாக எண்ணி
நம்மை மேய்க்க வந்தபேர்
விந்தை எங்கள்
தலைவர் எல்லாம் ஊஞ்சலாடிகள்.
அச்சமில்லை புரட்சி
என்று அறுதி இட்ட பேர்
அடிக்க ஓங்கும்
கையைக் கண்டு அஞ்சி ஓடுவார்.
தத்துவங்கள் கொள்கை
என்று கோஷமிட்டவை
தனக்கு என்று வந்தபோது
தப்பி ஓடிடும்!!
போரெடுக்க ஓங்கியகை
பூவை எடுக்கும்1
வீரநெஞ்சம் பகைவனுக்கு
வீசும் சாமரம்.
நெஞ்சுக்குள்ளே
வஞ்சம் என்னும் வாளும் இருக்கும்!
நேரம் பார்த்து
வீசிவிடக் காத்துக் கிடக்கும்!
ஊரெங்கும் பார்க்கிறேன்
ஊஞ்சலாடிகள்
உண்மைக்கும் பொய்க்குமிடை
ஊஞ்சலாடிகள்!
.