Wednesday 17 August 2016

தவம்

தவம்
பள்ளிப் பருவத்தில் கொள்ளை மகிழ்வுடன்
பாடிவைத்த கவி ஆயிரம்!
பிள்ளைப்பிதற்றல் என்றே பின்னர் நாட்களில்
பிய்த்தெறிந்தே போய்த் தொலைந்தன!
வாலிபப்பிராயத்தில் மங்கை அழகினை
வட்டமுகத்தினை வாணுதல்
கோலவிழியினைப் பாடிய பாடல்கள்
கொஞ்சம் முதிர்ந்ததும் ஒதுக்கினேன்!
போற்றும் இசைத்திற னோடு நான் பாடிய‌
பொற்கவி பற்பல யாவையும்
நாற்கவியில் இவை எவ்வகையும் இலை
நற்றமிழ்ப் பண்டிதர் தூற்றினார்!
மனத்துக்கினிதென மகிழ்வுடனே இங்கு
வரைந்த கவி சில உண்டுகாண்!
வனத்துக் குரங்கென விமர்சகப் பாதகர்
மாலையைப் பிய்த்து வீசினர்!
செம்பரம்பாக்கத்துப் புனலினில் போயின‌
சிற்சில நல்ல கவிதைகள்!
சம்பந்தனா என்ன? சமணரை வென்றிட‌
சலத்தினிலே எதிர் நின்றிட?
(வேறு)
பூமி பிளந்து போந்து வெளிப்பட்டு
பூத்திட ஓர்கவி காத்திருக்கும்;
ஓமெனும் பிரணவம் போலொரு மந்திர
ஒலிக்கே இங்கே தவமிருக்கும்!

Monday 15 August 2016

நாட்டுப்பற்று

நாட்டுப்பற்று
என்னாடு என்னுடைத்து என்றே தன்னுள்
எண்ணி மனம் மகிழ்ச்சியுறாத் தன்மையாளன்
பன்னாடு சுற்றியபின்,பிறந்த அந்தப்
பொன்னாட்டு மண்மிதிக்கப் பூரிப்பெய்தா
உள்ளம் செத்துணர்வோய்ந்து விட்ட பாவி
உண்டெனிலோ செல் அவனை உற்றுக்காண்க
உளம் உவந்து பாடிவிடப் பாணரில்லை,
எண்ணவொணாச்செல்வமெலாம் இருந்தபோதும்
எத்தனையோ பதவிகளை வகித்தபோதும்
செல்வாக்குப் பட்டமுடன் செல்வம் சேர்ந்தும்
சுயநலமே கருதிடுமப் பாவி வழ்வில்
சொல்லுபுகழ் செத்து உடல் சாகும்போது
சூனியமாய்ப் புழுதியுளே சென்றே வீழ்வான்
மண்தனிலே தோன்றியவன் மண்ணாய் மாய்வன்
மதிப்பின்றி இசையின்றிக் கவல்வோர் இன்றி!
மொழிபெயர்ப்புக் கவிதை1956
Like
Comment

Saturday 13 August 2016

எண்ணங்கள்

எண்ணங்கள்
எண்ணங்கள் சுமையாய்ப்போச்சு!
எப்படித் தூக்கிப்போட?
கர்ணனின் கவசம்போலக்
கழற்றிடல் கஷ்டமகும்!
கவிதையாய்ப் பாட ஒண்ணாக்
கசடான பல எண்ணங்கள்!
செவிகைத்துப்போகும் என்று
சேமமாய்ப்பூட்டி வைத்தேன்!
சாஸ்தாவைப் பற்றி எண்ணம்!
சாத்தானின் எண்ணம்கூட!
பேய்த்தன எண்ணத்தோடு
பேராண்மை எண்ணம் சேரும்!
நயந்தாராபற்றி எண்ணம்!
நாய்த்தொல்லை பற்றி எண்ணம்!
கமலினைப்பற்றி எண்ணம்!
கபாலிபற்றி எண்ணம்!
அழகிய பெண்ணைப்பற்றி
அசிங்கமாய் ஒற்றை எண்ணம்!
அத்துடன் பஜகோவிந்த
ஆசார்யப் பவித்ர எண்ணம்!
அடுத்தவர் மேன்மை கண்டு
அசூயை கொண்ட எண்ணம்!
அன்பையே உருவாய்க்கொண்ட
ஆர்வலர் தூய எண்ணம்!
அம்மாவின் மரணவேளை
அருகிலாச்சோக எண்ணம்!
அப்பப்போ பணிவிடைகள்
அன்புடன் செய்த எண்னம்!
ஆகாய மாளிகைக்கு
அடுக்கிய அட்டை எண்ணம்
அது கலைந்துபோக
அழுகையாய் வந்த எண்ணம்!
இதைச்செய்வேனதைச்செய்வேனென்று
இலட்சிய வேக எண்ணம்!
கதையாகக் கனவாய்ப்போக
கழிந்ததற்கேங்கும் எண்ணம்!
பாதகம் செய்தபேரை
மோதி மிதிக்கும் எண்ணம்!
பயம் கொண்டு பின்னால் சென்று
பதுங்கிய கோழை எண்ணம்!
எழுபது ஆண்டு செய்த
இழிசெயல் பற்றி எண்ணம்!
அம்ருதஸ்ய புத்ர என்று
ஆறுதல் கூறும் எண்ணாம்!
எரியுண்டு போகும்போது
என்னத்தை விட்டுச் செல்வேன்?
எலும்புகள் கூடச் சேர்த்து
எண்ணங்கள் பொறுக்கிக்கொள்வீர்!
LikeShow More Reactions
Comment
Comments
Venkata Ramani
Write a comment...

Monday 8 August 2016

தத்வமஸி
எண்ணுகிற நான்
எண்ணத்தைப் பிடிக்க முனைந்தேன்.
பிடித்த தருணத்தில்
நானே எண்ணமாகி விட்டேன்.
காவலனே திருடன் ஆனால்
திருடனைப்பிடிக்க முடியுமா?
பழத்தைக் கொத்தித்தின்ற
பிப்பில மரத்துப் புள்
சாந்தநிலைப் பறவையை
அணுகி விட்டது. ஆச்சரியம்!
இதுவே அதுவாகி விட்டது!
மயில் குயிலாச்சுதடீ!
Like
Comment

Wednesday 3 August 2016

கன்னத்தில் அறைந்த காதல்

கன்னத்தில் அறைந்த காதல்
செம்பொன்னாம் நிற நங்கை;தெரிந்தவள்தான்; கண்டேன்.
“செளக்கியமா நீவிர் உமக்கென் வேண்டும் ?என்றாள்.
“உளம்” என்றேன்.”இருக்கிறீர்;தெரிகிறது.” என்றாள்.
உற்றவளை விழுங்கிவிட ஆசையினால் பார்த்தேன்.
கண்டுவிட்டாள்.”விஷயம் என்ன?காண்கின்றீர்?”என்றாள்.
காதலினால் நெஞ்சுருகப் “பிரேமை” எனச்சொன்னேன்.
“கண்ணாடி பிரேம்தானே? குறைந்தவிலை;புதிசு.
காந்தம்மா ஆப்டிகல்ஸில் வாங்கியது.” என்றாள்.
பஞ்சடியை.மெல்ல வைத்துச் சென்றாள் தன் வீட்டுள்.
பார்த்த கண்கள் ஆசையினால்”அன்னம்” எனச் சொன்னேன்.
இலையிட்டாள்;அன்னமிட்டாள்;அருந்துகிறபோதே
இன்னும் என்ன வேண்டுமென எழில்வாயால் கேட்டாள்.
’’நீர்” என்றேன் துணிச்சலுடன்.நாசமவள் போக!
நீரெடுத்து டம்ளரிலே அருகினிலே வைத்தாள்.
காதல்வெறி தாங்கவில்லை;துணிவோடு சொன்னேன்.
கன்னத்தில் ஒன்றென்று;பளீர் ஐயோ செத்தேன்!
(தினமணி சுடர்-10-5-1959)