Thursday 30 November 2017

உண்ணாவிரத அறிவியல்

உண்ணாவிரத அறிவியல்
இன்றைய தினம் போராட்ட வழிமுறைகளில் உண்ணாவிரதம் ஓர் உத்தியாக மலிந்து விட்டது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், ஏன், தனி நபர்களும் கூடத் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.   மூன்று மணி நேர உண்ணாவிரதங்களும் எதிரான உண்ணும் விரதங்களும் சமயங்களில் நகைச்சுவையை இலவச இணைப்பாகத் தருகின்றன.
இத்தகைய போராட்டங்களை காந்திய வழியிலான அறப் போராட்டங்களாகக் கருதலாமா என்றே கேள்வி. காந்திஜி வடிவமைத்துக் கொடுத்த சத்தியாக்கிரக உண்ணாவிரதங்களின் இலக்கணங்களைத் தொகுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
“ என்னோடு சமகாலத்தில் வாழ்பவர்கள் எவரும் என்னைப்போல உண்ணாவிரதத்தையும் பிரார்த்தனையையும் ஒரு துல்லியமான அறிவியலாக்கி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. “ என்று காந்திஜி சொன்னார். உண்ணாவிரதத்தின் அடிப்படையே எடுத்துக் கொண்டுள்ள காரியத்திலும் மேற்கொண்டுள்ள வழிமுறையிலும் நம்பிக்கைதான்.
தூய்மையான உண்ணாவிரதத்தில் சுயநலம், கோபம், நம்பிக்கையின்மை, பொறுமையின்மை இவற்றுக்கு இடமே இல்லை. உண்ணாவிரதம் உடல், மனம், மற்றும் ஆன்மாவையும் தூய்மைப் படுத்துகிறது. தசையினை (சிலுவையில் அறைந்தது போல) வதைக்கிறது. அதன் மூலம் ஆன்ம சக்த்யை உருவாக்குகிறது. ஆன்மிக உண்ணாவிரதம் ஒரு தவமே. அது உண்ணாவிரதி, அவர் யார் சார்பில் உண்ணாவிரதம் இருக்கிறாரோ அவர், இருவரையுமே தூய்மைப் படுத்துகிறது.
உண்ணாவிரதம் கொழுந்து விட்டு எரியும் தீயினைப் போன்றதோர் ஆயுதமே. அதற்கென்று ஓர் அறிவியல் இருக்கிறது. அதனைக் குருட்டுப் போக்கில் கையாண்டால், அது உண்ணாவிரதிக்கும் எடுத்துக்கொண்ட காரியத்துக்கும் தீங்கே விளைக்கும்.
உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டியவருக்கு வேண்டிய தகுதிகள்
சத்தியத் தேடலுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிராளியிடம் கூட அன்பு கொண்டவர்கள், மிருக இச்சைக்கு இடம் கொடாதவர்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க உரிமை உண்டு. இத்தனையும் ஒருசேர ஒருவரிடம் இருப்பது கஷ்டம். எல்லையற்ற பொறுமை, திடமான தீர்மானம்,மேற்கொண்ட காரியத்தில் ஒருமுக நோக்கு, பூரண அமைதி ,கோபமின்மை ஆகியவை முக்கியத் தகுதிகளாகும்.
நமக்குத் தேவையான வலிமையைக் கடவுள் தருவார் என்ற நம்பிக்கை வேண்டும், துன்பத்தையும் பொருள் நஷ்டத்தையும்  ஏற்றுக் கொள்ளச் சித்தமாக இருக்க வேண்டும். பலனை இறைவனிடம் விட்டுவிட்டு,தமது நோக்கில் வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ,விரதத்தில் உறுதியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் உண்ணாவிரதத்தில் சிறிதளவு களங்கம் நேர்ந்தால்கூட  அதை கைவிடத் தயங்கக்கூடாது. மற்றவர் யாரோ இருக்கிறார் என்பதற்காக அவரைப் பின்பற்றி உண்ணாவிரதம் இருக்கக்கூடாது. ஆன்ம பலம் இல்லாதவர்கள் உண்ணாவிரதம் இருக்கவே கூடாது!
உண்ணாவிரதத்தின் நோக்கங்கள்
உண்ணாவிரதத்தின் நோக்கம் மற்றவர்களின் நன்மைக்காகவே இருக்க வேண்டும். சுயநல நோக்கம் கூடவே கூடாது. தன்னைத் தூய்மைப் படுத்திக் கொள்வது,  தீய வழியிலிருந்து திருத்துவது, ஆகியவை உண்ணாவிரத நோக்கங்களாக இருக்கலாம். சொந்த லாப நோக்குடன் உண்ணாவிரதம் இருப்பது சரியல்ல. வற்புறுத்திச் சலுகை பெற முயலக்கூடாது.
இறுதியாக, ஆனால் முக்கியமாக, உண்ணாவிரதம் இருப்பவருக்கு உண்ணாவிரதத்துக்கான நோக்கத்துடன் நேரடித் தொடர்பு இருக்க வேண்டும். ஓர் உதாரணத்தைக் காந்திஜி சொல்கிறார். பகத் புல் சிங் என்பவர் மாத் கிராமத்திலுள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அந்த இடத்திலிருந்த ஹரிஜனங்களுக்கு  அவர் தொண்டு செய்துள்ளார். அந்த கிராமவாசிகள் ஹரிஜனங்களுக்குத் தவறு இழைத்து வந்தனர். அவர்களுக்கு நீதி கிடைக்குபடி செய்வதற்கான எல்லா முறைகளையும் கைக்கொண்டு தோல்வி அடைந்த பிறகே புல்சிங்ஜி உண்ணாவிரதத்தை  மேற்கொண்டார். வெற்றியும் பெற்றார்.
யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கலாம்?
உங்களிடம் அன்பு கொண்டவர், பரிவு காட்டுபவர், நெருங்கியவர்கள் ஆகியோருக்கு எதிராக மட்டுமே உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால், அந்த உண்ணாவிரதம் அவரைத் தீய வழியிலிருந்து திருத்துவதற்காக இருக்கலாமே தவிர, சொத்தை எழுதி வாங்கிக் கொள்வது போன்ற காரணங்களுக்காக இருக்கக்கூடாது.
யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறோமோ, அவருக்கு உண்ணாவிரதத்துக்குக் காரணமான விஷயத்துடன் தொடர்பு இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.
எப்போது உண்ணாவிரதம் இருக்கலாம்?
உண்ணாவிரதம் என்பது சத்தியாக்கிரகப் போர்முனையின் கடைசி ஆயுதம். தீர்வு காண்பதற்கான மற்ற அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு, அவை அத்தனையும் பலனளிக்காமல் போனால் மட்டுமே உண்ணாவிரதம் இருக்கலாம்.
தவறான உண்ணாவிரதங்கள்
நிறைய நேரங்களில் உண்ணாவிரதங்கள் பலவந்தப்படுத்துவனவாக அமைவதுண்டு. உண்ணாவிரதம் சுயநலக் காரியங்களுக்காகப் பயன்படுத்தப் படுகிறது. அதற்கு மசிய மறுத்துவிட வேண்டும். உண்ணாவிரதத்தில் மரணம் அடைய நேர்ந்தாலும் பரவாயில்லை. நமது அபிப்பிராயத்தில் தகுதியற்ற காரணங்களுக்காக  உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று தோன்றினால் அந்த உண்ணாவிரதம் புறக்கணிக்கப்பட வேண்டியதே. இந்த வழக்கத்தை மக்கள் மேற்கொள்வார்களேயானால், , பலவந்தப்படுத்துதல், மற்றும் நியாயமற்ற செல்வாக்கு அடைதல் ஆகிய கறைகள் நீங்கப்பெறும்.

என்ன செய்ய? அநேக உண்ணாவிரதங்கள் சத்தியாக்கிரக உண்ணாவிரதங்கள் என்ற பிரிவில் அடங்குவன அல்ல. அவை பட்டினிப் போர்களே போதுமான  அடிக்கடி மேற்கொண்டால் அவற்றுக்கு ஓரளவு இருக்கக்கூடிய பலனும் போய்விடும். கேலிக்கூத்தாகி விடும்!
தவறான காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதங்கள் சிலநேரம்  வெற்றியைத் தரலாம். ஆனால்,,அந்த வெற்றி சத்தியாக்கிரகத்தின் வெற்றி அல்ல. துராக்கிரகத்தின் வெற்றியே ஆகும்!


Wednesday 29 November 2017

சத்திய சோதனை

சத்திய சோதனை.
மண்ணில் நல்ல வண்ணம் வாழ விரும்புபவர்கள், தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளத் துடிப்பவர்கள், ஆழ்ந்து பயின்று நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டிய நூல் ”சத்திய சோதனை” இது ஓர் ஈடு இணையற்ற வாழ்வியல் நூல். வித்தியாசமான சுயசரிதை.
எந்த விதத்தில் இணையற்றது? எந்தவிதத்தில் வித்தியாசமானது? பார்ப்போம்.
சத்தியம்தான் காந்திஜியின் வாழ்க்கை நெறி.  வாழ்வின் வெறி. அவருக்குச் சத்தியம்தான் இறைவன். பிரபஞ்சத்தை இயக்கும் நியதி. அவரது குறிக்கோள் சத்திய தரிசனமே. அவர் எழுதியது, பேசியது, அரசியல் துறையில் அவரது செயல்பாடுகள் அனைத்துமே அந்த இலக்கை நோக்கிய பயணமே.
பிரபஞ்ச நியதியான சத்தியம் ஒரு சூட்சுமமான தத்துவம். இதை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பது என்பது எப்படி? சிக்கலான விஷயம்தான்.  வாழ்வில் நாம் சந்திக்கக்கூடிய  மோதல்களில், முரண்பாடுகளில் ,மிகச் சிறிய நிகழ்வுகளில் கூட தர்மம் எது; அதர்மம் எது; செய்யத்தக்கது எது செய்யத்தகாதது எது  என்பது அவரவர் மன அமைப்புக்கும், மனநிலைக்கும் ஏற்ப வேறுபடும். அர்ஜுனக் குழப்பம் வரும். என்ன செய்வது?
இந்த விஷயத்தில் காந்திஜி தெளிவாக இருந்தார். பூரண உண்மை (Absolute Truth) என்பது இலட்சியம். அதை அடையாதவரையில் நமக்குத் துணையாக நிற்பது ”அன்றாட உண்மை”- சார்பு உண்மை- Relative Truth. அதுவே அவருக்கு வழிகாட்டிய ஒளி விளக்கு; கவசம்; கேடயம். இந்தப்பாதை குறுகலானது; நேரானது; சுலபமானது.  இலட்சியத்தை நோக்கி விரைவில் இட்டுச் செல்லும் பாதையும் இதுவே. தன்முனைப்பின்றி, இறைவனிடம் பூரண நம்பிக்கையுடன், அப்போது கையிலே உள்ள கடமை ஒன்றிலேயே குறியாக இருந்தால், தானாகவே ஒளி கிடைக்கும். இந்த வகையில் காந்திஜியை வழி நடத்தி அழைத்துச் செல்வது “அந்தராத்மாவின் குரல்.”
ஆக, காந்திஜியின் வாழ்க்கை முழுவதுமே சத்தியத்தை வாழ்வில் பரிசோதித்த, நடைமுறைப் படுத்த முயன்று வென்ற, தோற்ற, விழுந்த, எழுந்த, விழ இருந்த தறுவாயில் இறைவனால் காப்பாற்றப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பே. அதனால்தான் அவர் தமது  நூலுக்கு ”சத்தியத்துடனான எனது பரிசோதனைகளின் கதை” என்று தலைப்பிட்டார்.
காந்திஜி தமது பரிசோதனைகளைக் கதவு சார்த்திய அறையில் அல்லாமல் திறந்த வெளியில் நடத்தினார். அவரது பரிசோதனையில் நிகழ்ந்த மாற்றங்கள், பௌதிக மாற்றங்கள், ரசாயன மாற்றங்கள் போலின்றி ரசவாத மாற்றங்கள். இதில் புறப்பொருள்கள், நிகழ்வுகள் மட்டுமின்றி மனமும் சோதனைக்குட்படுகிறது. விஞ்ஞான ரீதியான பரிசோதனை என்னும்போது  அந்த மனம், தூய்மையாக, கறை படியாமல் இருக்க வேண்டும். விருப்பு வெறுப்புகளுக்கு இடமிருக்கக்கூடாது. எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையையும் ஆழ்ந்த சிந்தனைக்கு உட்படுத்த வேண்டும். உளரீதியான ஒவ்வொரு பரிமாணத்தையும் பகுத்தாய்ந்து பார்க்க வேண்டும் அப்போதுதான் சரியான முடிவுக்கு வரமுடியும். காந்திஜி இந்த முறையில்தான் தமது சத்திய சோதனையை நடத்தினார்.
தமது ஆன்ம வளர்ச்சிக்காக காந்திஜி சத்திய சோதனை நிகழ்த்தினார்; இருக்கட்டும். சரி. ஏன் அவர் அவற்றை ஏடுகளில் பதிவிட வேண்டும்?  நோக்கம், செயல்முறைகள், காட்சிப்பதிவுகள் உணர்ந்து கொண்ட முடிவுகள் என்பதாக, ஒரு விஞ்ஞானி பரிசோதனைக் குறிப்புகள் எழுதுவது போல ஏன் எழுதி வைக்க வேண்டும்?
தம்மால் முடிந்தது அனைவருக்கும் முடியும்; சின்ன குழந்தைக்குக் கூட கைவரும்; அனைவரும் சத்தியப் பாதையில் செல்ல வழிகாட்ட வேண்டும்  என்ற நோக்கத்தினாலேயே பிறந்தது சத்திய சோதனை.
இப்படிப் பதிவாக்குவதில் சில விஷயங்கள் முக்கியமானவை. இந்த சோதனைகளில் பரிசோதகனின் மனமும் சம்பந்தப்பட்டதாகையால், அந்த மனத்தில் எழுந்த மகோன்னத, மகா வக்ரமான சிந்தனைகளை, அழுக்குகளை,, ஆசாபாசங்களை ஒளிவுமறைவின்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இதை காந்திஜி செய்தார். அதற்கான, தம்மைப் பூஜ்யமாக்கிக் கொண்ட பணிவும், மெய்த்துணிவும், விஞ்ஞான மனப்பாங்கும் அவரிடம் இருந்தன. செயல்பாடுகளைக் குறித்து வைப்பதில் இம்மியளவும் தவறு ஏர்படக்கூடாது என்பது பற்றிக் கவனமாக இருந்தார். சம்பவங்கள் பற்றிய தமது பார்வையைக் குறித்தார். அவை மூலமாகத் தாம் கொண்ட முடிவுகளையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் குறித்து வைத்தார்.
ஒரு விஞ்ஞானியைப் போலவே, தமது முடிவுகள் இறுதியானவை, தவற்றுக்கே இடமில்லை என்று பிடிவாதமாக இல்லை. உண்மையின் புதிய பர்மாணங்கள் பின்னால் வெளிச்சத்துக்கு வரக்கூடும் என்ற திறந்த மனத்துடனேயே இருந்தார். தமது வாழ்க்கை நிகழ்வுகளைப் படிக்கும் வாசகர்கள், வித்தியாசமான முடிவுகளுக்கு வரக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார். அதுவுமல்லாமல் தாம் எழுதி வைத்துள்ள நிகழ்வுகள் உதாரணங்கள் மட்டுமே ; வாசகர்கள் வாழ்வில் பல்வேறு வித நிகழ்வுகள் ஏற்படலாம். அவற்றைத் தமது எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் அவர்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நடத்திய பரிசோதனைகளின் மூலமாக காந்திஜி உறுதிப் படுத்திக் கொண்ட  உண்மைகள்-சத்தியப் பாதையில் பயணிக்கும் ஒருவன்,மிகவும் கடைப்பட்ட பிறவிகளையும் தன்னைப் போலவே நேசிக்க வேண்டும்; சத்தியம் என்பது எந்தத் துறைக்கும் விலக்கல்ல எதிர்ப்படும் எந்தத் துறையினின்றும் விலகி நிற்கக்கூடாது என்பவையே.


Tuesday 28 November 2017

காந்தியைக்காணோம்!

காந்தியைக் காணோம்!
தென் ஆப்பிரிக்காவில் காந்திஜியின் அறப்போராட்டம் தீவிரமாக இருந்த காலம். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் தென் ஆப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லித் தீர்வு காண்பதற்காக காந்திஜி  லண்டனுக்கு வந்து நான்கு மாதங்கள் தங்கியிருந்தார். ஆண்டு 1909.  அவர் வந்த காரியம் என்னவோ வெற்றியடையவில்லை.  இந்த காலகட்டத்தில் வ.வே.சு.ஐயர், சாவர்க்கர், திருச்சி டாக்டர் தி.சே.சௌ.ராஜன் ஆகியவர்கள் லண்டனில் இருந்தார்கள்.  வன்முறைப்போக்கின் தீவிர ஆதரவாளர்கள் அவர்கள். சில அதிகாரிகள் கொலையுண்டால் பிரிட்டிஷார் அதிர்ச்சி அடைவார்கள்; நிலைகுலைந்து போவார்கள். அதற்குப்பிறகு கொரில்லாப்போரை ஆரம்பிக்கலாம். இதனால் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் இந்தியர்கள் உயிர் துறக்க நேரிடலாம். ஆனால் இந்தியா விடுதலை பெற்று விடுவது சர்வ நிச்சயம். இதுதான் அவர்கள் கருத்து. (இந்த தி.சே.சௌ.ராஜன் தான் பின்னாளில் பழுத்த அஹிம்ஸாவாதியாகி வேதாரண்யம் உப்பு சத்யாக்ரகத்தில் முக்கிய பங்கு வகித்தார்.). தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி நடத்திய அறவழிப்போராட்டத்தை அவர்கள் அறிந்திருந்தார்கள். எப்படியாவது அவரைத் தங்கள் வன்முறைத் தரப்புக்கு இழுத்து விட வேண்டும் என்று விரும்பினார்கள். அவர் லண்டனில் இருப்பதறிந்து அவரைச் சந்திக்க முயன்றார்கள். வழக்கமாக இந்தியர்கள் வந்தால் தங்கும் ஆடம்பர ஹோட்டல்களில் அவரைத் தேடிப்பார்த்தார்கள். பயனில்லை. கடைசியில் அவர் எங்கோ ஒரு கோடியில் ஒரு சாதாரணரின் வீட்டில் தங்கியிருப்பது தெரிய வந்தது. அவரைச் சந்தித்து, தாங்கள் இந்தியா இல்லத்தில் நடத்தும் தீபாவளி விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். காந்தி சரி என்று ஒப்புக்கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனை. சைவ உணவுதான். அதுவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே தயார் செய்ய வேண்டுமே தவிர ஹோட்டலில் இருந்தெல்லாம் வரவழைக்கக்கூடாது. வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்கள். (பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்?) “ நீங்கள் ஒன்றும் வந்து அழைத்துப்போக வேண்டாம்; நானே வந்து விடுகிறேன்! ” என்று விட்டார் காந்திஜி.
16 அக்டோபர், 1909. நிகழ்ச்சி தினம். விழாக்குழுவில் ஆறு பேர் ஒரு அணியாக அமைந்து சமையல் வேலையை ஆரம்பித்தார்கள். பல்சுவை அயிட்டங்கள். திணறிப்போனார்கள். அந்த சமயம் எங்கிருந்தோ வந்தான் என்பது போல பசியால் மெலிந்தாற்போல ஒருவன் அங்கே வந்தான். பரபரவென்று இழுத்துப்போட்டுக் கொண்டு காரியங்களைச் செய்ய ஆரம்பித்தான். .வட்ட வட்ட சப்பாத்திகள் இடுவதென்ன, ரொட்டி சுடுவதென்ன, பாத்திரங்களை உடனுக்குடன் கழுவி வைப்பதென்ன.. அத்தனை பரபரப்பை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை.. பாவம் சாப்பிட்டு நாளாயிருக்கும்போல இருக்கிறது.. வயிற்றுப் பசிக்குத்தானே இவ்வளவும் செய்கிறான்.. விருந்து முடிந்ததும் அவனுக்கு வயிறார சாப்பாடு போட வேண்டும்.. கொஞ்சம் காசு கூடக் கொடுக்கலாம் என்று பேசிக் கொண்டார்கள். அடுக்களை வேலையெல்லாம் முடிந்தது. நேரத்தைப் பார்த்தார்கள். விழா துவக்கக் குறிப்பிட்ட நேரம் வந்தாகி விட்டது. ”காந்தி ஏன் வரவில்லை? நேரம் தவறாமைக்கு உதாரணமாகச் சொல்வார்களே?” என்று புலம்பியபடி வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள். அப்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர்கள் கண்ணில் பட்டது, அந்த ‘எங்கிருந்தோ வந்தவன்’ பிரதம விருந்தாளிக்காகப் போட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான்! “சரியான லூசுப்பய! அவனைக் கிளப்புங்கடா!  காந்தி வந்துடப்போறார்!” என்று அவர்கள் பதறி அடித்துப் பேசிக் கொண்டிருந்தபோது சாவர்க்கர் உள்ளே நுழைந்தார். நாற்காலியில் உட்கார்ந்திருந்த “எங்கிருந்தோ வந்தவனைப்” பார்த்து, “ ஸாரி! காந்தி! நான் கொஞ்சம் வேலையாய் வெளியிலே போயிருந்தேன், வருவதற்கு நேரமயிட்டது” என்று சொல்லிக் கைகுலுக்கினார்.
‘அடடா! இவன்..இவர்தான் காந்தியா?’ என்று  கொஞ்சம் தாமதமாகவே புரிந்துகொண்டு “ஙே” என்று விழித்தார்கள். ” ஸாரி! ஸாரி! உங்களை யாரென்று தெரிந்து கொள்ளாமல் வேலை வாங்கிட்டோம்! மன்னிச்சுக்குங்க!” என்று காலில் விழாத குறையாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.
காந்திஜி புன்னகைத்தார்.


Monday 27 November 2017

காந்திஜியும் சநாதனவாதிகளும்

காந்திஜியும் சநாதனவாதிகளும்
1933  நவம்பர் 7 அன்று காந்திஜி  வார்தாவிலிருந்து தமது ஹரிஜன யாத்திரையைத் தொடங்கினார். தீண்டாமைக் கொடுமையைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஹரிஜன நலனுக்காக நிதி திரட்டுவதுமே அந்த யாத்திரையின் நோக்கம். நாடு முற்றிலும் சுற்றி, காலனிகளுக்குள்ளெல்லாம் புகுந்து புறப்பட்டு, பொதுமக்களுடன், குறிப்பாகப் பெண்களுடனும் மாணவர்களுடனும் நிறையக் கலந்து பேசினார். இந்த யாத்திரை மக்களின்  பெருவாரியான வரவேற்பைப் பெற்றது. மக்கள் தாமாகவே நிதியை வாரி வழங்கினார்கள். நிறைய இடங்களில் மக்களாகவே முன்வந்து, கோவில்கள், கிணறுகள், சாலைகளைத் திறந்து விட்டார்கள். என்றாலும் இந்த யாத்திரைக்கு சில சில தொல்லைகளும் ஏற்பட்டன. பல இடங்களில் லால்நாத் சாஸ்திரி என்பவரின் தலைமையில் சநாதனவாதிகள் திரண்டு வந்து காந்திஜிக்குக் கருப்புக்கொடி காட்டினார்கள். கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் பெரும் இடைஞ்சல்களை ஏற்படுத்தினார்கள்.
ஆஜ்மீர். காந்திஜி இன்னும் கூட்டம் நடக்கும் இடத்துக்கு வரவில்லை. அதற்குள் லால்நாத் அங்கு வந்து, நான் அந்தக்கூட்டத்தில் பேசுவேன் என்று பிடிவாதம் பிடித்தார். இயக்கத்துக்கு எதிராகப் பேசுவதற்கு மேடை தந்துதான் ஆக வேண்டும் என்பது அவரது வாதம். கூட்டத்தில் திரண்டிருந்த மக்களுக்கு ஆத்திரம் வந்து விட்டது. அவரை நையப் புடைத்து விட்டார்கள். அவர் மண்டையில் அடி பட்டு விட்டது. காந்திஜி வந்து நடந்த விவரங்களையும் அறிந்து கொண்டார்..அவர் தாக்கிய மக்களைக் கடிந்து கொண்டது மட்டுமல்லாமல், ,”லால்நாத்! நீங்கள் பேசுங்கள்!” என்று சொல்லி அவருக்குப் பேச வாய்ப்பளித்தார்.. அந்த மேடையிலேயே,”இந்த யாத்திரை முடிந்ததும் நான் ஏழு நாள் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்!” என்று  அறிவித்து விட்டார். எதற்காக? லால்நாத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக! “மதத்தின் பேரால் ஏறத்தாழ 50 லட்சம் மனித ஜீவன்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்..அவர்களின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் ஆன  நமது புனிதப் போராட்டத்தில்  இனி ஒரு புதிய, தூய்மையான அத்தியாயம் தொடங்க வேண்டும். நமது இயக்கத்தில் சேர்ந்திருப்பவர்களுக்கும், இனி சேர இருப்பவர்களுக்கும்  இந்த உண்ணாவிரதம் ஒரு எச்சரிக்கையாக அமையட்டும். அவர்கள் கரங்களும் மனமும் தூய்மை இழக்கவே கூடாது. மனம், வாக்கு,செயல் இவை எவையும் சத்தியத்திலிருந்தும் அகிம்சையிலிருந்தும் பிறழவே கூடாது!”
யாத்திரை ஜூலை 29,1934 அன்று காசியில் நிறைவுற்றது. அந்த தினம் நன்றி அறிவிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. அன்றைக்கு காந்திஜி  பொதுக்கூட்டத்துக்குக் கிளம்ப இருக்கிறார். அப்போது அவருக்கு ஒரு பிடி வாரண்ட் வந்தது. யாரிடமிருந்தாம்? காசி விஸ்வநாதரிடமிருந்து. காந்திஜி சுவாமியின் கொத்தவால் என்ற அதிகாரியின் முன் ஆஜராகி, சநாதன தர்மத்தை மீறிய குற்றத்திற்கான வழக்கைச் சந்திக்க வேண்டுமாம்! இந்த வாரண்ட்டைக் கொண்டு வந்த சநாதனி இளைஞரிடம் காந்திஜி இந்த வாரண்ட்டை யார் உன்னிடம் கொடுத்தனுப்பினார்கள் என்று கேட்டார். “கடவுளே என்னைத் தூண்டி இந்த வாரண்ட்டை உங்களிடம் சேர்ப்பிக்கச் சொன்னார்” என்று கொஞ்சம் கூடக் கூசாமல் சொன்னார். காந்திஜி நிதானமாகப் புன்னகைத்தபடியே, ”பின் ஏன் அவர் அந்த வாரண்ட்டை ஏற்றுக்கொள்ளும்படி உத்தரவு போடவில்லை?” என்று கேட்டார். சளைக்காமல் பதில் சொன்னார் அந்த இளைஞர் ,”ஏன் தெரியுமா? நீங்கள் சநாதன தர்மத்துக்கு எதிரான பாவியாயிற்றே?” இந்த தருணத்தில் லால்நாத்தே வந்து விட்டார். ”காந்தி! உங்கள் இரண்டு புகைப்படம் வேண்டும்.” என்றார். காந்திஜி திட்டவட்டமாகச் சொன்னார், ”நான் புகைப்படங்கள் எதுவும் கையில் வைத்துக்கொள்வதில்லை. அப்படியே இருந்தாலும் நிச்சயமாக உங்களுக்குத் தர மாட்டேன்.” வேறெங்கிருந்தோ காந்திஜியின் படங்களை  வாங்கிக் கொளுத்தி மகிழ்ந்தார்கள் அந்த எதிர்ப்புரட்சியாளர்கள்!
யாத்திரை முடிந்ததும் காந்திஜி திட்டமிட்டபடி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். லால்நாத்தின் செயல்களினால் தமது திட்டத்தை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.
ஏழுநாள் உண்ணாவிரதம் முடிந்து அவர் ஓர் அறிக்கை விடுத்தார்.

“இந்த உண்ணாவிரதத்தை நான் மேற்கொண்ட காரணம், ஆஜ்மீரில் லால்நாத்துக்கும் அவரது நண்பர்களுக்கும் நமது ஆதரவாளர்களால் இழைக்கப்பட்ட  வன்முறைக்குக் கழுவாய் தேடிக்கொள்ளவே. எனினும் உண்மையில் இந்த உண்ணாவிரதத்தின் தலையாய நோக்கம்  எதிரிகளைக் கையாளும்போது முறைதவறாது  நடந்து கொள்ள வேண்டும்  என்று நமது தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் வலியுறுத்துவதே ஆகும். அவர்களீடம் அதிக பட்சப் பரிவுடன் நடந்து கொள்வதே நமது இயக்கத்துக்கு மிகச் சிறந்த பிரசார சாதனமாகும். எதிரிகளை  வெல்லும் முறை அன்பேயன்றி, வெறுப்பு அல்ல. வெறுப்பு என்பது வன்முறையின் மிக நுட்பமான வடிவமே ஆகும், நாம் உண்மையில் அகிம்சாவாதிகள் என்றால்  மனதில் துளிக்கூட வெறுப்பு என்பது இருக்கவே கூடாது

Saturday 18 November 2017

சாரும்மா

சாரும்மா

(கொஞ்ச தினமே என்னுடன் கூட இருந்து கொள்ளை இன்பம் தந்த சாருக்குழந்தை அயல்நாட்டிலுள்ள சொந்த ஊருக்குச் செல்கிறது.)

ததக்காபிதக்கா நடைநடந்து
       தளிர்க்கரம்நீட்டி வருகிறது;
இதமாய்என்றன் தோள்சாய்ந்து
       இன்பம்கொள்ளை தருகிறது!
கதவின்பின்னால் மறைந்திருந்து
       கண்ணாமூச்சி விளையாட்டு!
பதமாய்ச்சோறு பாட்டிதரப்
       படங்கள்பார்த்து ரசிக்கிறது!

உம்மாச்சீபடம் காட்டிடிலோ
       உற்சாகத்தால் துள்ளிடுது!!
அம்மாவுடனே விண்ணேறி
       அயல்நாட்டுக்குச் செல்கிறது!
சும்மாஇருந்தேன்; சுகம்தந்து
       சுமையைவிட்டுச் செல்கிறது;
வெம்மை எனக்குத் தாங்காது;

       விரைவில் வந்திடு,சாரும்மா!