Friday 30 June 2017

மனக்குழந்தை.

மனக்குழந்தை.
அத்துமீறுகிறான்
அடித்துநொறுக்கிடினும்
அடங்க மறுக்கிறான்.
அவன்போக்கில் விட்டுவிட்டு
கவனம் மட்டும் வைத்திருந்தால்
கட்டின பசுப்போல
கிட்டவந்து நிற்கின்றான்.


Monday 26 June 2017

உள்மனதின் சந்நிதியில்..


அத்தனையும் விட்டுவிடு; ஆன்ம விசாரம்செய்;
      அதுவொன்றே உன்றனக்குப் பேரமைதி தந்து விடும்!
அத்துவிதம் சித்திக்கும்; ஆனந்த மோனலயம்!
      ஆங்கேயோர் தத்துவரின் அழுத்தக் குரல்கேட்கும்!
பஜனையொரு நெறியுண்டு; பரவசத்தின் எல்லைக்குப்
      பக்தியினால் சேர்த்துவிடும்; பாவனைகள் மேலோங்கும்!
நிஜமிதுவே பற்றிக்கொள்; நித்தநித்தம் சந்தோஷம்!
      நினைப்பதற்கு வேறேன்ன? நடமிட்டோர் குரலிசைக்கும்!
சந்திஜப தபங்களினும் பிரமயக்ஞம் தினவேள்வி
      சாத்திரங்கள் சொன்னபடி செய்தாயா? அதனோடு
நிந்தையென விலக்கிவைத்த நிஷித்தகர்மம் விட்டாயா?
      நிச்சயமாய் நரகம்தான்; நிலைiகுலைத்தோர் குரல்கேட்கும்!
சுத்தியுள்ள எத்தனைபேர் தத்தளித்துக் கிடக்கின்றார்?
      சிறிதேனும் அவருக்குச் சேவைசெய  நினைத்தாயா?
பித்தாக அலைபவனே! அதுதாண்டா செயல்வேள்வி
      பிடித்துக்கொள்; மோட்சம்தான்; பேசுமிங்கே ஓர்கொள்கை!
மூக்கைத்தான் பிடித்தேநீ மூச்சடக்கக் கற்றாயா?
      மூழ்கியே நெஞ்சுக்குள் முத்துக் குளித்தாயா?
சீக்கிரத்தில் முத்திபெற இதுவன்றோ ஏற்றவழி?
      சிந்தனைதான் கலங்குவதேன்? தொடங்கிடெனும் குரலொன்று!
வாயினால் பாடியே மனத்தினால் சிந்திப்பாய்
      வாழ்நாளில்,முன்பிறப்பில் செய்தபிழை அத்தனையும்
தீயினில் தூசாகும் என்றவளின் பாசுரத்தை
      சிலநூல்கள் எடுத்தோதும்; சின்னமனம் ஏற்பதற்கு!
இறைவனைநாம் நேராகப் பற்றுவதா? இது விந்தை!
      ஏற்றுவிடு குருஒருவர்! அவர்தானே நல்வழியில்
நெறிப்படுத்தி ஈசனிடம் சேர்க்கத் திறம் வாய்ந்தார்?
      நேசமுடன் குரலொன்று மேலுமெனைக் குழப்பிவிடும்!
ஒற்றையாய்க் குரலொன்று உள்மனதின் சந்நிதியில்;  
      உனக்கென்றே ஓர்வழியை உளமாரச் சொன்னேனே?
மற்றவர்கள் சொல்வதனை உள்வாங்கிக் கொண்டாலும்
      மனம்காட்டும் வெளிச்சத்தில் நடைபோடு ஈசனிடம்!
அவரவர்தாம் அறிவகையில் அடைந்திடலாம் பரம்பொருளை!
      ஆயிரமாம் கோடிப்பேர் அத்தனைபேர் இருந்தாலும்
அவரவர்க்குத் தனிவழியே; அவரவர்க்கே ஏற்றபடி!
      ஆரம்பி சாதனையை; ஆண்டவனே துணைநிற்பார்!