Sunday 6 January 2019

எனது தேசம்,எனது தர்மம்-1..


எனது தேசம்,எனது தர்மம்.
இந்து மதம் என்று இப்போது வழங்கி வருவது இந்தியாவின் புனிதமான சனாதன தர்மம்.  இது என்று பிறந்தது என்றுணராத இயல்பினது. உலகெங்கிலும் நமது தர்மம் பரவியிருந்ததற்கான சான்றுகள் விரவிக் கிடக்கின்றன. வேதங்களே இந்த தர்மத்தின் அடிப்படை. எழுத்து வடிவமே தோன்றியிராத காலத்தில் வாய்மொழியாகவே வழி வழியாக ஓதப்பட்டு வந்து உச்சரிப்பும் சுருதிகளின் ஏற்ற இறக்கமும் மாறாமல் இன்று வரை நிலைத்திருப்பவை, சடங்குகளை மட்டும் செய்தால் போதும், கடவுள் வழிபாடே வேண்டாம் என்ற கொள்கை முதல்,எங்கும் நிறைந்தது இறைவனே என்னும் உயரிய தத்துவம் வரை நமது தர்மத்தில் அடங்கியது. எந்த நிலையில் எவர் இருந்தாலும் அவரவர் நிலையிலிருந்து படிப்படியாக ஆன்மிக முன்னேற்றத்துக்கு வழிகாட்டுவது நம் சமயம். கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்,காளிதாசன் கவிதை புனைந்ததும் ,உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும், நம்பரும் திறலோடொரு பாணினி ஞாலமீதில் இலக்கணம் கண்டதும்,இம்பர் வாழ்வின் இறுதி கண்டுண்மையின் இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும்” மேலும் பாரதி சொல்வன எல்லாமும் நமது மரபணுவில் வந்தவைதான். புராணங்கள், இதிகாசங்கள், பாகவதம், பகவத்கீதை இவை எல்லாமே வேதக் கருத்துகளை விளக்க வந்தவைதாம்.. ஆழங்காண முடியாத சமுத்திரம் நமது சமயம்.
எந்த சமயத்திலும் தத்துவங்களும் உண்டு. நடைமுறை சம்பிரதாயங்களும் உண்டு..சமூக சூழ்நிலைகள் மாறும்போது நடைமுறைப்படி அவ்வப்போது ஸ்ம்ருதிகள் வரையப்பட்டுள்ளன. சமயத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளைக் களைந்து சமயத்துக்குள்ளிருந்தே நமது சீர்திருத்தவாதிகள் தோன்றிப் புத்துயிர் ஊட்டியிருக்கிறார்கள். ராஜாராம் மோகன் ராயிலிருந்து, விவேகானந்தர், நாராயண குரு ஈறாகப் பலர் தோன்றியிருக்கிறார்கள். அரும்பணி ஆற்றியிருக்கிறார்கள். நமது சமயத்தில் நாம் என்ன சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று நம் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களோ, புறச் சமயத்துக்கு மாறியவர்களோ, சொல்ல வேண்டாம்.  அவர்கள் பேசுவது துவேஷத்தினாலேயே என்பதை புரிந்துகொள்கிறோம்.
  இதில் பரிதாபத்துக்குரிய  விஷயம் என்னவென்றால், தொலைக்காட்சி விவாதத்தில் நம்ம ஆள் ஒருத்தனை வைத்துக்கொண்டு நாலு- மதம் மாறியவர்கள், நம்பிக்கையற்றவர்கள் கும்மி அடிப்பார்கள். பதிலளிக்க வாயைத் திறக்கும்போது தீநெறியாளர் குறுக்கே குறுக்கே வந்து வாயை அடைத்து விடுவார். தத்துவ சர்ச்சைக்கேற்ற இடமா? நேரமா? மக்களா?
இதைத்தவிர ஒரு வீராங்கனை,”பக்தி என்றால் என்ன, சொல்லுங்கள்!” என்று சவால் விடுவார். அவருக்கு நாம் தெய்வத்தின் குரலை வைத்துக்கொண்டு பாடம் எடுக்க வேண்டும். இன்னொருவர் ஆண்டாள் தாசி என்பார். அவருக்கு நாம் அப்படி இல்லை என்று வாதங்களை வைக்க வேண்டும்.. மகாபாரதம் காம நூல் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போகிற ஒருவருக்கு நாம் பிரவசனம் ஏற்பாடு செய்யவேண்டும் கோவில்கள் எல்லாம் சாத்தானின் கூடாரம் என்பவருக்கு பதில் சொல்ல வேண்டும். பருவப்பெண்கள் வந்தால் ஐயப்பன் எந்திருச்சி ஓடிடுவாரா என்று எகத்தாளம் பேசுபவர்களுக்கு,அவர்கள் பாஷையிலேயே பதில் அடி கொடுக்க வேண்டும்!.. இதெல்லாம் தேவையா? உங்கள் வேலையை, உங்கள் மதத்தை,. நீங்கள் பார்த்துக்கொண்டு போங்கள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
மாற்று மதத்தாரும், அம்மதத்துக்குப் புதிதாகத் தாவியவர்களும் பேசும் இத்தகைய கொச்சைப் பேச்சுகள் இந்துக்களை ஆத்திரம் ஊட்டும் என்பதில் வியப்பில்லை. இதோடுகூட இந்து சமய ஆலய விஷயம் என்றால் ஒரு வன்மத்தோடு உடனடியாக இரவோடு இரவாக எவ்வாற்றானும்  நிறைவேற்றி விடத் துடிப்பவர்கள், மாற்று சமயம் ஒன்று இதே சூழ்நிலையில் இருக்கும்போது, உண்ர்ச்சிபூர்வமான விஷயம் என்றொரு நியாயத்தைச் சொல்லி நீக்குப்போக்காக நடந்து கொள்வது எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் ஆகும். இதெல்லாமே முன் கூட்டித் திட்டமிட்ட ஒரு செயல்பாடாகவே படுகிறது.  எதிர்வினை என்ன ஆகிறது? “எங்களைச் சொல்ல வந்துட்டியே? கிறிஸ்தவத்தைக் கேட்டியா? இஸ்லாமைக் கேட்டியா?” என்கிறார்கள். மாற்று மதத்தையும் அவர்களது பழக்க வழக்கங்களையும் பழிக்கிறார்கள், அவர்கள் வணங்கும் கடவுள்களை இகழ்கிறார்கள். இது காரணமாக நெருங்கிப் பழகிக்கொண்டிருந்த இரு சமயத்தவரிடம் மன வருத்தம், கசப்பு, இறுதியில் துவேஷம் வருகிறது. சமூக நல்லுறவு கெடுகிறது. சமுதாயம் சீர்குலைகிறது. இதுதான் நோக்கமே.
இந்து சமயம் எப்போதும் சர்மதர்ம சமபாவம் கொண்டதே. நானறிந்த எல்லா இடங்களிலும் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் சகோதர பாவத்துடனே பழகி வந்திருக்கிறார்கள். இது கூடாது. இதைக் குலைக்க வேண்டும் என்பதே உள் நோக்கம்.  துவேஷப் பிரசாரம் செய்பவர்களை நிறுத்தி ஒவ்வொருவர் முகமாக டார்ச் அடித்துப் பாருங்கள். தமிழ் நாடு என் நாடு. இந்தியா என்பது இடைக்கால ஏற்பாடு என்பவர்கள்.  இவர்களை ஒத்த மற்ற பிரிவினைவாதிகள்,மற்றும் இவர்களோடு கூடா நட்புக் கொண்டிருப்பவர்கள் பத்வியில் இருக்கும்போது தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் நிறையச் சேர்த்து வைத்துக்கொண்டு, எத்தைத் தின்றால் பித்தம் தீரும், இந்த ஆட்சி போனால்தான் தப்பிக்கலாம் என்ற அவஸ்தையில் இருப்பவர்கள். எப்படியாவது தங்கள் குடும்ப ஆட்சியைக் கொண்டு வந்து விட வேண்டும் என்று துடியாய்த் துடித்துக்கொண்டிருப்பவர்கள். இல்லா விட்டால் இந்திராபேரனும் இம்ரான் கானும் ஒரே குரலில் பேச வேண்டுவதன் காரணம் என்ன?
எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போகட்டும்..
நம்மைப் பொறுத்தவரை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்து துவேஷக்கட்சிகளோ, அரசியல்வாதிகளோ, அவர்களுக்குத் துணை நிற்பவர்களோ ஆட்சிக்கு வந்துவிடாமல் இருக்க முழு முயற்சி முன்னெடுக்க வேண்டும்.
நமது தேசம், நமது சமயம் சம்பந்தமான விஷயங்களைத் தொய்வில்லாமல் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதித்திட வேண்டும் .பாஸிட்டிவ் ஆக காழ்ப்பின்றி உள்ளதை வெளியிட்டால் போதும். விவேகானந்தரிலும், தெய்வத்தின் குரலிலும் நமக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன. தொடர்ந்து  நானும்  நமது தேசம், நமது தர்மம் என்ற தலைப்பில் பதிவிட்டு வர உத்தேசித்திருக்கிறேன்..என்னால் ஆன அணில்பணி.