Saturday 29 October 2016

சுவைக் கலைஞர்

சுவைக் கலைஞர்
(திருச்சி வானொலி-ஜனவரி-64)
சுவை ,ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று ஐம்புல உணர்வுகளைச் சொல்வார்கள். இதில் முதலில் சுவையைச் சொல்லியிருப்பது சிந்திற்கற்பாலது. சுவை என்பது இங்கு நாவின் சுவையைக் குறிக்கிறது. இங்கு சுவையின் மேன்மையைப் பற்றி நான் விவரித்துச் சொல்லிக் கட்சி கட்டப்போவதில்லை.. அது மண் தோன்றிய காலம் முதல்,குழந்தையாக மனிதன் மண்ணைத் தின்னத் தொடங்கிய காலம் முதல் அனைவரும் அறிந்த உண்மை. என்னுடைய கட்சியும் கவலையும் எல்லாம் நாவிற்கு நல்ல சுவையைத் தரும் சமையற் கலைஞர்களைப் (சுவைக் கலைஞர்கள் என்று இவர்களைச் சொல்ல வேண்டும்) பற்றி யாரும் கவனிப்பதில்லை என்பதே.
“இசை விருந்து” சொல் விருந்து” “கலை விருந்து” “இலக்கிய விருந்து” என்றெல்லாம் பேசுகிறார்கள்..அந்த விருந்தளிக்கும் கலைஞர்களுக்கு விருந்தும் அளிக்கிறார்கள். விருதும் அளிக்கிறார்கள். பாராட்டிப் போற்றிப் பொன்னாடை கூடப் போர்த்துகிறார்கள். ஆனால் ஒரிஜினல் விருந்து நாவுக்கு அளிக்கும். கலைஞர்கள் பெயர்களை அறிந்து கொள்ளக்கூட ஏன் முயல்வதில்லை இந்த நன்றி கெட்ட உலகம் என்பதுதான் என் கேள்வி. “தெவீட்டாத சுவை” என்று எல்லாம் பாராட்டுகிறார்கள்,யார் யாரோ எழுதும்,பாடும் பாட்டையும்,பேசும் பேச்சையும். இந்த சுவைக்கலைஞரின் சிருஷ்டியை விடத் தெவிட்டாத விருந்து வேறென்ன இருக்க முடியும்? குப்பு பவான் கடை அக்காரவடிசிலுக்குப் பெயர் பெற்றது. தினம் முப்பது வருஷமாகத் தினம் அக்காரவடிசில்தான் ஸ்பெஷல் ஐட்டமாகப் போடுகிறார்கள் .தினம் எட்டுமணி நேரம் திறந்திருக்கிறது அந்தக் கடை. அப்படியிருந்தும் இன்றைக்கும் அங்கு எவ்வளவு கூட்டம் பாருங்கள்..அந்த அக்காரவடிசிலுக்காக… உங்கள் மஹா மஹாப் பெரிய சங்கீத வித்வான் கச்சேரியைத் தினம் இந்த ஊரில் ஒரே இடத்தில் ஏற்பாடு செய்து விட்டு, ஏழுநாள் போக எட்டாவது நாள் கூட்டத்தைப் பாருங்களேன் எது தெவிட்டாத சுவை என்று புரியும்.
இவ்வளவு கலைத்திறனும் கைவண்ணமும் வாய்ந்த சுவைக்கலைஞர்களின் நிலை என்னவோ பரிதாபமாகவே இருக்கிறது. கைவண்ணம் என்றதும் நினைவுக்கு வருகிறது. “கைவண்ணம் அங்கு கண்டேன்; கால்வண்ணம் இங்கு கண்டேன்” என்பதையே தளிகை ஆராவமுதுவுக்கு இயல்பாக்கிச் சொன்னார் ஒரு நண்பர். வெண்பொங்கல் தயாரித்தபோது அவரது கைவண்ணத்தையும், பெரிய அளவில் புளியோதரை தயாரிப்பதற்காக,காலை நன்றாக அலம்பிக்கொண்டு, மிதித்து மிதித்து, தயாரித்தபோது அவர் கால்வண்ணத்தையும் கண்டாராம்.. நியூ ஆனந்த பவனில் பாதம் அல்வா படு ஜோர்; ஈஸ்ட் எண்ட் ஹோட்டலில் சூரத்காரி பிரமாதம்; காஷ்மீர் சந்திரநிவாஸில் சோன் பப்டி அபாரம்; என்றெல்லாம் பண்டங்கள் விற்பனையாகும் இடங்களின் பெயர்கள்தாம் பெரிதாக முழங்கப்படுகின்றனவே தவிர,அவற்றைத் தயாரிக்கும் கலைஞர்கள் பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு விடுகின்றன. அவர்களின் திறமை, கடை முதலாளிகளால் சுரண்டப்பட்டு, புகழுமில்லாமல், ஏற்ற ஊதியமுமில்லாமல், கலைஞர்கள் சட்டியைச் சுரண்ட வேண்டியதாகி விடுகிறது. இந்த நிலை நீடித்தால் அவர்கள் பைத்தியம் பிடித்துப் பாயைச் சுரண்ட வேண்டிய நிலை வந்தாலும் வந்து விடும். இந்த ஆசிரியரின் கதைகள் அற்புதம்; இந்தக் கவிஞரின் இசைப்பாடல்கள் இனிமை; இன்னாரின் கட்டுரைகள் சுவை மிக்கவை  என்பது போல திருவையாறு நடராஜன் போளி செய்வதில் வல்லவர்; கோபாலன் வெஜிடபிள் போண்டா நிபுணர் என்று பொதுமக்கள் பேசிக் கொள்ளும் அளவுக்குக் கலைஞர்களின் பெருமை பரவ வேண்டும்.
ஆனால் இந்தச் சுவைக்கலைஞர்கள் வெறும் கலைஞர்கள்தாம். கலைஞர்களுக்குள்ள பலமும் பலவீனமும் அவர்களுக்கும் பொது. எனவே தொழிற்சங்கம் அமைத்துத் தங்கள் கோரிக்கைகளைச் சமர்ப்பித்துத் தங்கள் அந்தஸ்தையும் புகழையும் உயர்த்திக்கொள்ள அவர்களால் இயலாது.. எனவே நன்றி அறிதலுள்ள ஒரு சமுதாயத்தின்  பிரதிநிதியாக, நாச்சுவை ரசிகர்களின் சார்பாக, எனது திட்டங்களையும் ஆசைகளையும் முன் வைக்கிறேன். அவை மட்டும் நிறைவேறினால், சுவைக்கும், சுவைக்கலைஞர்களுக்கும் மதிப்புத் தரும் ஒரு இலட்சிய சமுதாயம் உருவாகி விடும்.
என் திட்டப்படி, கலைஞர்கள் ஒரே இடத்தில், ஒரே ஹோட்டலில் வேலை செய்யக் கூடாது. உழைக்கும் பத்திரிகையாளர்களைத் தவிர தனிப்பட்ட எழுத்தாளர்களும் இருப்பதைப்போல,தனிப்பட்ட முறையில் ஏராளமான சுவைக்கலைஞர்கள் இயங்க வேண்டும். அவற்களது திறமை, தக்க ஊதியத்துடன், பல்வேறு ஹோட்டல்களால் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும். இவர்களுடைய திறமையைப் பயன்படுத்திக்கொள்ள பல ஹோட்டல்களிடையே போட்டி இருப்பதால் கலைஞர்கள் முழு உற்சாகத்துடன், முழுத்திறமையும், கலை உணர்வும் மிளிரப் பணி புரிவார்கள். பொது மக்களுக்கு நாவிற்கு இனிய நல்ல சிற்றுண்டி கிடைக்கும். சுருங்கச் சொல்லப்போனால், இன்பகரமான ஒரு இலட்சிய சமுதாயம் அமையும்.
இத்தகையதொரு சமுதாயத்தைக் கற்பனை செய்து பார்ப்பதே,ஒரு கோப்பை பால் பாயசம் சாப்பிடுவதைப் போல பிரம்மானந்தம். ஒரு ஹோட்டல் வழியாகச் செல்லும்போதே, இத்தகைய போர்டுகள் “வா,வா” என்று உங்களை எதிர்கொண்டழைக்கும்.
இன்றைய ஸ்பெஷல்:
அம்மன்குடி கிட்டா-பாசந்தி.
கோவிந்தபுரம் சாமு-குலாப்ஜாமுன்
ஆவுடையார்கோவில் சீமாச்சு-வெஜிடபிள் பிரியாணி.
இந்தூர் நல்லுசாமி-நறுமணக் காப்பி.
அம்மன்குடிக் கிட்டாவின் பாசந்தியைப் பருகுவதெற்கென்றே சுற்றுவட்டாரத்தில் ஐம்பது மைல் தூரத்திலிருந்தும் ஓடி வந்து விட மாட்டார்களா பொது மக்கள்?
இது மட்டுமல்ல, சுவைக்கலைஞர்கள்,தங்கள் சுற்றுப் பிரயாண நிகழ்ச்சிகளையும் ஒவ்வோர் இடத்திலும் எந்தெந்த இடங்களில் தங்கள் கைவண்ணத்தைக் காண்பிக்கப் போகிறார்கள் என்பதையும் அச்சிட்ட நோட்டீஸ்கள் மூலமாகவும் தினசரிப் பத்திரிகைகள் மூலமாகவும் வெளியிட்டு விடுவார்கள். அந்தந்த ஊர்ப் பொதுமக்கள் பிரமாதமான வரவேற்புக்கு ஏற்பாடு செய்து விட மாட்டார்களா? ஆங்கரை கோபாலய்யர் இந்த ஊருக்கு வந்திருக்கிறாராம்.;இன்றைக்கு நியூ சாரதாவிலே பாதுஷாவாம்; நாளைக்குக் காலமே,மங்களாம்பிகாவிலே போளியும்,சாயந்திரம் சரவணாவிலே மெது வடையுமாம், என்று நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு உபன்யாசம் கேட்கும் சிரத்தையுடன் ஜனங்கள் ஓடி வர மாட்டார்களா?
அதோடு சுவைக்கலைக்கும், சுவை தரும் கலைஞர்களுக்காகவுமே அர்ப்பணிக்கப்பட்ட பத்திரிகைகள் வரும். மற்ற பத்திரிகைகளும் ஒரு சில பக்கங்களை ஒதுக்கி வைக்கும். .வாயால் மட்டும் உண்டு ரசித்துவிட்டு, தயார் செய்யும் கலைஞர்களின் பெருமையைக் காதால் கேட்டுச் சுவைக்காத மக்கள் இருந்தென்ன, போயென்ன? என்று செந்நாப்போதார் வள்ளுவரே சொல்லுகிறாரே? அட, அந்தத் திருக்குறளைச் சொன்னால்தான் நம்புவீர்களா? சரி, கேட்டுக்கொள்ளுங்களேன்..

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
திருப்தியா? இருக்கட்டும். இத்தகைய பத்திரிகைகளில் ,இந்தச் சுவைகளை விமர்சனம் செய்வதற்கென்றே, புகை மண்டலம், ஆ..அம், வாயும் வயிறும் என்ற விமர்சனப் பகுதிகள் வரும். உக்கிராணம், திருநாவுக்கடிமை, என்ற புனைபெயர்களுள் புகுந்து கொண்டு பலர் விளாசித் தள்ளுவார்கள். இதோ ஒரு மாதிரி விமர்சனம் படிக்கலாமே?
“ இந்த வாரம் இந்த நகரத்து அயிட்டங்களில் தலை சிறந்து விளங்கியது வார இறுதியில் கிடைத்த கோவத்தகுடி கோண்டுவின் ஜலோபாதான். ஒரே மாதிரி இனிப்புகளைச் சுவைத்து சுவைத்து அலுத்துப் போன நமது நாக்குகளுக்கு இத்தகைய அபூர்வ இனிப்புகளை வழங்குவதில் தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டிருக்கிறார் திரு.கோண்டு. அபூர்வ ராகங்கள் பாடச் சிரமமாகவும், கேட்க இனிமையாகவும் இருப்பது போலத்தான் ஜலோபா போன்ற அபூர்வத் தின்பண்டங்களும் அமைந்துள்ளன. இதைத் தவிர  விசேஷமாகச் சொல்ல வேண்டிய அம்சம், இந்த வாரம் கிருபாநிதி ஹோட்டலில் கிடைத்த ராமன் குட்டியின் ரவா இட்டிலி. ஆனால், அதன் சுவையோடு சட்டினி சரியாகச் சேராததால் களை கட்டவில்லை.
மேலும் அடுப்புக்கு முன்னால், புகை நடுவில், என்ற தலைப்புகளில் ,இந்தக்கலைஞர்கள் சொல்லும் நகைச்சுவையைக் குறிப்பெடுத்துக்கொண்டு பத்திரிகைகளில் வெளியிடுவதற்காக, சட்டுவம் போன்ற நிருபர்கள் சமையலறையைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். வானொலி நிலையங்களும் பத்திரிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு அவர்களைப் பேட்டி காணும்.
பதுர்பேணி மன்னன் அரியூர்க் குப்புசாமி அளிக்கும் பேட்டியில் ஒரு சில பகுதிகள்.
கே:- தங்களைப் பீறவிச் சமையற்கலைஞர் என்கிறார்கள். இது பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன?
ப:- நான் பிறந்து ஆறு மாதங்களுக்கெல்லாம் தவழ்ந்த போதே,சமையலறைக்குள் போய் அஞ்சறைப்பட்டியைத் திறந்தேனாம். ஐந்து வயதில் அனா, ஆவன்னா சொல்லித் தரப் பள்ளிக்கூடத்தில் அப்பா என்ற போது நான் அப்பம் அப்பம் என்றுதான் சொன்னேனாம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகக் கல்வித்துறையை விட்டு சமையல் துறையில் ஈடுபட்டேன்.
கே:- தங்களைப் பதுர்பேணி மன்னன் என்கிறார்கள். தாங்கள் தயாரிக்கும் தின்பண்ட வகைகளில் தங்களுக்குப் பிடித்தது எது?
ப:- எந்தப் பணியாரமான பதுர்பேணியினால் எனக்கு ரசிகப் பெருமக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்ததோ,,அதே பதுர்பேணிதான் எனக்கும் பிடித்தது. என்னையும் என் கலையையும் பொதுமக்கள் பேணி வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
கே:- தங்கள் பல ஆண்டு கலை வாழ்வில் ரசமான சம்பவங்கள் ஏதாவது நிகழ்ந்ததுண்டா?
ப:-  உண்டு .நிறைய ஜாங்கிரி தயாரித்தபோது ஒருமுறை. எப்படி என்றே தெரியவில்லை. நிறைய உப்பும் காரமும் சேர்ந்து விட்டது..கடைசி நிமிஷத்தில் அதை சுவைத்துப் பார்த்து விட்டு அதற்கு கிரிங்ஜா என்று பெயர் வைத்துப் புது வகைப் பணியாரமாக பரிமாறினேன். பெருத்த ஆதரவு கிடைத்தது.
இவ்வளவு ஆதரவு கிடைத்து ,நியாயமான ஒரு சமுதாய அந்தஸ்து கிடைப்பதால்,இந்த சுவைக் கலைஞர்களிடையே ஒரு புதிய விழிப்பும் ஒற்றுமை உணர்ச்சியும் தோன்றும். தொழிற்சங்க ரீதியில் இல்லாவிட்டாலும்,ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு வைத்துக் கொண்டு தொழில் சம்பந்தமான பல பிரச்சினைகளை ஆராய்வது, விவாதங்கள்,கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள் கூட்டுவது இன்னோரன்ன பணிகளும் செய்யமுடியும்.
கேசரிக்கு சுவையூட்டுவது என்ற தலைப்பில் நெய்யா முந்திரிப்பருப்பா என்ற தலைப்பில் பதின்மர் விவாதிப்பார்கள். விவாதச்சூட்டில் சில-ரகசிய-உண்மைகளும் பரிமாறப்படலாம். நெய்த்தரப்புக்காரர் முந்திரிப்பருப்பு இல்லாமலே கேசரி சுவையாக இருக்கும் என்று எடுத்துச் சொல்லி, உதாரணமாக முந்திரிப்பருப்புக்காரர் தாம் தயாரிக்கும் சுவையான கேசரியில் நிலக்கடலைப்பருப்பைத்தான் சேர்க்கிறார்  என்ற தொழில் உண்மையை வெளியிடலாம்.. அதே போல மு.பருப்புக்காரரும், எதிர்த்தரப்புக்காரர் சேர்ப்பது நெய்யா என்ன? அசல் கனா எண்ணெய் அல்லவா,அப்படியும் அவர் செய்யும் கேசரி சுவையாகத்தானே உள்ளது  என்று வாதமிடலாம். தலைமை வகிக்கும் பிரமுகர் பாடுதான் சங்கடம்.  அவர் அசல் நெய்யும், அசல் முந்திரிப்பருப்பும் சேர்த்துச் செய்யும் ரவா கேசரியைச் சாப்பிட்டுப் பார்த்த பிறகே தீர்ப்புச் சொல்ல முடியும் என்று தீர்ப்பை ஒத்தி வைக்கலாம்.
ஜீரா போளியும் ஊறா போளியும்  என்று ஊர் கூடி நான்கு நாள் விழாவில் ஒரு கருத்தரங்கு கூட நடத்தலாம். பாதாம் பூரிப் பந்தலில் பால்மாரி பொழிந்தாற்போல் இருக்கும்.
தகுதி வாய்ந்த சுவைக்கலைஞர்களின் தூதுக்குழுக்கள் அடிக்கடி மேலை நாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும். நம் நாட்டார் திறமான திறமையைப் பிற நாட்டார் வணக்கம் செய்தல் வேண்டும். அங்கு உலக நாடுகள் முழுவதும் கலைவிழாவில் கலந்து கொள்ளட்டுமே? தமது திறமையால் நமது தென்னிந்தியக் கலைஞர்கள் பரிசுகளும் பாராட்டும் பெற்று,அகில உலக சுவைக் கலைஞர் திலகங்களாகத் திரும்புவர் என்பதில் ஐயமில்லை. யதேச்சையாக, இது நமது நாட்டுக்குத் தேவையான அன்னியச் செலாவணியைச் சம்பாதித்துக். கொடுக்கும். நமது நாட்டுத் தின்பண்டங்களுக்காக, கோடி கோடியாகக் கொட்டக் காத்துக் கிடப்பார்களே மேனாட்டார்?
இன்னும் ஒரு யோசனை. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்குப் பரிசளிப்பது போல,தலைசிறந்த சுவைக்கலைஞர்களுக்கும் பரிசளித்து எந்த ஓட்டலுக்காகத் தயாரித்த எந்தத் தின்பண்டத்துக்கான . பரிசு என்பதையும் அறிவித்து விட வேண்டும். ஆனால் இதில் ஒரு சங்கடம்.சினிமா உலகில் 1962ம் ஆண்டுக்கான பரிசுகள் இப்போதுதான் வழங்கப்படுகின்றன. ஆனால், 1962 பண்டங்களை இன்னும் வைத்திருந்து நீதிபதிகளைத் தரம் பார்த்துப் பரிசளிக்கச் சொல்வதென்றால் முடியுமா?

இதோ, முடியும், இதிலென்ன கஷ்டம் என்கிறார்கள் சில ஹோட்டலர்கள்!

Thursday 13 October 2016

இனிய கதை

இனிய கதை
இனிய கதை ஒன்று கேளீரோ
     இன்ஷூரன்ஸ் எனும் புனித கதை;
கனிமொழி மனைவி மக்களுக்காகக்
     காதல் கணவன் சொன்ன கதை (இனிய கதை)
சோதனை இடையில் எது நிகழ்ந்தாலும்
     சொர்க்கம் அளிக்கும் தேவ கதை;
வேதனை நீங்கி வகையினில் உலகில்
     வாழத் தெரிந்தவர் சொன்ன கதை (இனிய கதை)
நாளையை எண்ணி நல்லவர் சொன்ன
     நம்பிக்கை தரும் அம்ருத கதை;
வேளையில் பொழுதில் வருவதை நோக்க
     வல்ல கதை அது த்யாக கதை (இனிய கதை)
(தஞ்சை ஆயுள் காப்பீட்டுக் கழக செய்தி மடல்-ஜனவரி 1964)

    




Sunday 9 October 2016

உனக்காக நான் பாடும் ஒரு பாடல்

உனக்காக நான் பாடும் ஒரு பாடல்
 (சலனமுற்றிருந்த ஒரு வேளையில் சுவாமிஜி குருதேவரை நினைந்து பாடிய பாடலின் ஒரு சிறு பகுதி)
மகனீய,உன்னிடமே என்னுடைய போக்கு
மழலை ஒரு பிஞ்சினுடைப் பிள்ளை விளையாட்டு!
சில நேரம் உன்னிடம் நான் சினந்துமிருக்கின்றேன்;
சில நேரம் உனை விட்டுத் தொலைதூரம் நின்றேன்!
என்றாலும்,
இருள் சூழ்ந்த ராத்திரியின் அதிசோகப்போதில்
இமை நனைந்த கண்ணீரால், பேச்சிழந்த நாவால்
என் முன்னே நிற்கின்றாய்;நின் இனிய முகமோ
அன்பு நிறை பார்வையுடன் எனை நோக்கிக் குனியும்.
கண்டவுடன் சடுதியில் நான் உன்னிடத்தில் வருவேன்
மண்டியிட்டு உன் பாத மலரடியில் வீழ்வேன்!
மென்மை மிகு உன் கரத்தில் மன்னிப்பா கேட்பேன்?
உன் மகன் நான்: என் மீது உனக்கெப்போ கோபம்?
நீயன்றி யார் பொறுப்பார் என் பிள்ளைச் சேஷ்டை?
நீயேதான் என் தலைவன்; ஆன்ம நிஜத் தோழன்!
நீயே நான்! நின்னை நான் பலமுறைகள் பார்த்தேன்!
நீயே நான்! நீயே நான்!! தலைவ நான் நீதான்!