Saturday 29 April 2023

வெற்றியாளன் தோல்வியாளன் பற்றி பாரதி

 

வெற்றியாளன்-தோல்வியாளன்பாரதியார் என்ன சொல்கிறார்?

 

மனதில் எதைப்பற்றித் தீவிரமாகச் சிந்தித்து விரும்புகிறோமோ அது நிச்சயமாக நிறைவேறும். (Intense longing).

வெற்றியாளனின் செயல்பாடு இத்தகையதே.

 

தோல்வியாளன் கதை எப்படி?

 

ஏப்போதும் தாழ்வான சிந்தனை, மனச்சோர்வு, ஒரு நிலையான இலட்சியத்தில் உறுதியில்லாமல் மாறி மாறி அலைபாய்வது, ஒரு வேலையை எடுத்துக்கொள்ள முனையுமுன்னே, இடையூறுகளை எண்ணிக் கைவிட்டு விடுதல்,-இப்படியானவர்கள் குறிக்கோளை அடைய மாட்டார்கள்.

 

அவர்களது செயல்பாடு எப்படி இருக்கும்?

 

என் விதிஎன்று நொந்து கொள்வார்கள். “அவன் பேச்சைக் கேட்டதனால்தான் இப்படி நடந்ததுஎன்று நண்பர்கள் மீது குற்றம் சுமத்துவார்கள்.

 

அவன் எனக்குப் பரம விரோதி. சதி செய்து எனக்குத் தீங்கு செய்து விட்டான்என்று இன்னொரு பலிகடாவைத் தெடுவார்கள்.

 

யாரைக் கெடுத்தாவது தன் வெற்றி பெற வேண்டும் என்று சூழ்ச்சிகளில் இறங்குவார்கள்.

 

வாயால் வடை சுட்டுக்கொண்டு காரியத்தில் இறங்காததற்கு  ஏதாவது நொள்ளை சாஸ்திரத்தை ஆதாரம் சொல்வார்கள்

 

 தினம் தினம் ஜாதகக் கட்டைத் தூக்கிக்கொண்டு எந்த நேரத்தில் தொடங்கினால் காரியம் வெற்றி பெறும் என்று ஆராய்ந்து கொண்……..டே,,,,, இருப்பார்கள்.

 

 

 கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை. நான் மூன்று வேளை ஸ்நானம் செய்கிறேன்; நாலு வேளை பூஜை செய்கிறேன்;அபிஷேகம் பூஜை என்று வாரி இறைக்கிறேன்; ஒரு பலனும் இல்லை. அவனைப் பாருங்கள் ;ஸ்வாமி நினைப்பே இல்லை. வெற்றி மீது வெற்றியாக வாரிக் குவிக்கிறான் என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள்.

 

ஒன்றை மட்டும் அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

 

ஒருமித்த சிந்தனை ,சோர்வு வாராத மனத்திட்பம்தான் வெற்றிக்கனியைத் தரும் என்பது புரியாமல் கண்ணிழந்தவன் காட்டில் திரிவதுபோல,அலைந்து அலமருகிறார்கள்.

 

பாரதியார் பாடலைப் பார்ப்போம்;

 

..சூழு மாய வுலகினிற் காணுறும்

                தோற்றம் யாவையும் மானத மாகுமால்

ஆழு நெஞ்சகத் தாசையின் றுள்ளதேல்,

                அதனு டைப்பொருள் நாளை விளைந்திடும்.

தாழு முள்ளத்தர், சோர்வினர், ஆடுபோல்

                தாவித் தாவி பலபொருள் நாடுவோர்

வீழு மோரிடை யூற்றினிக் கஞ்சுவோர்

                விரும்பும் யாவும் பெறாரிவர் தாமன்றே.

 

விதியை நோவர்,தம் நண்பரைத் தூற்றுவர்,

                வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர்,

சதிகள் செய்வர்,பொய்ச் சாத்திரம் பேசுவர்

                சாத கங்கள் புரட்டுவர் பொய்ம்மைசேர்

மதி யினிற்புலை நாத்திகங் கூறுவர்   ;

                மாய்ந்திடாத நிறைந்த விருப்பமே

கதிகள் யாவும் தருமென லோர்ந்திடார்;

                கண்ணி லாதவர் போலத் திகைப்பர்காண்!

 

(கனவு-12,13)