Tuesday 8 June 2021

ராஜேந்திர பிரசாத் காந்தியிடம் கற்றதும் பெற்றதும்

 

 

 

ராஜேந்திர பிரசாத் காந்தியிடம் கற்றதும் பெற்றதும்

 

பாபு ராஜேந்திர பிரசாத் காந்தியுடனான தமது அனுபவங்களையும், அவரிடமிருந்து  கற்றுக்கொண்டவற்றையும் தமது At the Feet of Mahatma  என்ற புத்தகத்தில் விவரிக்கிறார். அந்த புத்தகத்திலிருந்து ஒரு பகுதியின் சாரம்..

 

சம்பரானில் தீன் கதியா முறையால் கொடுமைக்குள்ளான விவசாயிகளுள் ராஜ்குமார் சுக்லா என்பவர் ஒருவர்.  தென் ஆப்பிரிக்காவில் அறப்போர் நடத்தி வெற்றி கண்டிருந்த காந்தியைப் பற்றி அவர் அறிந்திருந்தார். தங்கள் போராட்டத்தை அவர் கையிலெடுத்து முன் நின்று நடத்த வேண்டும் என்பது அவர் விருப்பம். இது சம்பந்தமாக காந்தியைத் தொடர்பு கொண்டிருந்த அவர்,1916 நவம்பரில் நடந்த லக்னோ காங்கிரசில் யைச் சந்தித்து, தங்கள் பிரச்சினை தொடர்பாக, ஒரு தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உண்மையான தகவல்களை அறிந்து கொள்ளாமல் தம்மால் அப்படி ஒரு தீர்மானத்தை முன்மொழிய முடியாது என்று காந்தி மறுத்து விட்டார். என்றாலும் வேறு ஒருவர் முன்மொழிய அந்தத் தீர்மானம் நிறைவேறியது. காந்தி வாய்ப்புக் கிடைக்கும்போது தாமே நேரில் வந்து நிலைமையை ஆய்வதாக வாக்குறுதி தந்தார். விடாக்கண்டர் ராஜ்குமார் சுக்லா, 1917ல் நடந்த கல்கத்தா காங்கிரசில் காந்தியை நேரில் சந்தித்து அவரை சம்பரானுக்கு இழுத்துக்கொண்டு போய்விட்டார். 

 

அந்த காங்கிரசுக்கு ராஜேந்திர பிரசாதும் வந்திருந்தார். அப்போது அவருக்கு காந்தியுடன் அவ்வளவாக நேரடி பரிச்சயம் இல்லை. அவர் பாட்னாவில் பிரபல வக்கீல். ராஜ்குமார் சுக்லாவும் அவரது கட்சிக்காரர்தான். பிரசாதுக்கு பாட்னாவில் ஒரு பெரிய வீடு இருந்தது. அது ஒரு சத்திரம் என்றுதான் சொல்ல வேண்டும். அடையா நெடுங்கதவம் என்பார்களே அப்படி.

 அங்குதான் ராஜ்குமார் சுக்லா காந்தியை அழைத்துக்கொண்டு போய்த் தங்கினார். ராஜேந்திர பிரசாத் வேறெங்கோ போய் விட்டு சில நாட்கள் பிடித்தே பாட்னா வந்தார். இதற்கிடையில் பாட்னா இல்ல ஏவலாளியிடம் காந்திக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. முழங்கால் வரை வேட்டியும் முண்டாசுமாக இருந்த அவரை கர்மவீர்ர் காந்தி என்று அவன் கண்டுகொள்ளவில்லை. அதற்கும் மேலாக என்ன ஜாதி என்று தெரியாததால் கழிப்பறையைப் பன்படுத்திக்கொள்ளக்கூட அனுமதிக்கவில்லை.ராஜ்குமார் சுக்லா செய்வதற்கு ஒன்றுமில்லை. காந்திக்கோ இமைப்பொழுதும் சோராது உழைப்பதே இயல்பு. அங்கிருந்தால் வேலைக்காகாது என்று புரிந்து கொண்டு, சம்பரானின் டிவிஷன் தலை நகர் அமைந்துள்ள முஜபர்பூருக்குப் புறப்பட்டுவிட்டார். புறப்படுவதற்கு முன், அவர் முஜபர்பூரில் அரசுக்கல்லூரி தலைவராக இருந்த ஆசார்ய கிருபளானிக்கு தகவல் அனுப்பினார்.

 

முஜாபர்பூர் ரயில் நிலையத்தில்,தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்துள்ள கம்பீரமான பாரிஸ்டரை எதிர்பார்த்து, முதல் வகுப்புப் பெட்டியில் தேடி அலுத்துப்போய், கிருபளானியின் மாணவர்கள் தவித்துக்கொண்டிருந்தார்கள். விஷயம் ராஜ்குமார் சுக்லாவுக்குப் புரிந்து போயிற்று.

நீங்கள் கர்ம வீர்ர் காந்தியைத் தேடி வந்திருக்கிறீர்களா?”

ஆமாம்என்றவர்களுக்கு, அரை வேட்டியும் ஆடம்பரமற்ற குர்த்தாவும், கக்கத்தில் இடுக்கிய படுக்கைச்சுருளும், நிலக்கடலைப் பொட்டலமும் ஏந்தியிருந்த  கர்மவீரரைப் பார்த்ததும் நம்பவே முடியவில்லை.  அடுத்து, காந்தியை எங்கே தங்க வைப்பது? கிருபளானி, தாம் தலைவராய் இருந்த அரசுக்கல்லூரி ஹாஸ்டலில் தங்க வைத்து விட்டு வீட்டுக்குப் புறப்பட்டார். ஒரு போராளியை அரசு விடுதியில் தங்க வைத்த காரணத்தால், அவருக்கு வேலை போயிற்று. அவரும் தம்மை சம்பரான் போராட்டத்திலும், காந்தியுடனும் தம்மை முழுமையாக இணைத்துக்கொண்டு விட்டார்.

 

முஜபர்பூரில் படிப்பறிவில்லாத ஏழை விவசாயிகள், காந்தியைச் சூழ்ந்துகொண்டு தங்கள் அவலக்கதைகளைக் கொட்டித் தீர்த்தார்கள். காந்தியைப்பற்றி அவர்கள் அவ்வளவாக அறிந்திருக்காவிட்டாலும், தங்களைத் துயரத்திலிருந்து மீட்க வந்த தேவதூதனாகவே அவரை நம்பினார்கள்.

 

காந்தியின் சத்தியாக்கிரக வழிமுறையைப் பற்றி அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். வெளிப்படைத்தன்மை. எதிர்த்தரப்பைச் சந்தித்து அவர்கள் தரப்பு நியாயத்தையும் கேட்டறிவது. இதற்காக அவர் திர்ஹட் டிவிஷன் அதிகாரிகளையும், தோட்ட முதலாளிகள் சங்க செயலாளரையும் சந்தித்துப் பேசினார். உண்மை நிலவரத்தைக் கண்டறிவதற்காகத் தாம் களத்தில் சென்று ஆய்வு நடத்தப்போவதாகச் சொன்னார். அவர் அலட்சியப்படுத்தப்பட்டார். “எங்களுக்கு மனுக்கள் வந்திருக்கின்றன. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் குட்டையைக் குழப்பாமல் ஊருக்குப் போய்ச் சேருங்கள்.” என்று விட்டார்கள். தமது பணியிலான காந்தியின் தீர்மானம் உறுதி ஆயிற்று.

காந்தி நேராக சம்பரான் சென்று விட்டார். அவரும் அவருக்குத் துணையாக வந்த தோழர்களும் கோரக் பிரசாத் என்ற வழக்கறிஞரின் வீட்டில் தங்கினார்கள். மக்களை நேரில் சந்திக்கும் பணி துவங்கி விட்டது. இதில் ஒரு சிக்கல். காந்திக்கு போஜ்புரி மொழி தெரியாததால், இரண்டு ஆர்வ மிக்க இளம் வழக்கறிஞர்கள், அவருக்கு உதவியாக மொழிபெயர்ப்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

சம்பரான் மாவட்டத்தின் தலை நகரம் மோதிஹரி. அங்குதான் காந்தி தம் சகாக்களுடன் இருந்தது. இந்த நிலையில் காந்தி மோதிஹரியிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், மறு நாள் கோர்ட்டில் ஆஜரக வேண்டும் என்றும் தாக்கீது வந்தது.

 

அன்று இரவு பூரா ஓய்ச்சல் ஒழிச்சல் இல்லாத வேலை. காந்திக்கும் அவருடன் கூட இருந்த ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட சகாக்களுக்கும். இவ்வளவு விறுவிறுப்பான செயல்பாட்டை அந்தப்பகுதி இதுவரை கண்டதில்லை. பலருக்கும் தகவல்கள்; தந்திகள்; தம் மீது பிரிட்டிஷ் அரசு நம்பிக்கை வைக்காததால், அவர்கள் அளித்திருந்த கெய்ஸரி ஹிந்த் விருதைத் திருப்பி அளிப்பதாக வைஸ்ராய்க்கு மடல். இப்படி பரபரப்பு நிறைந்த இரவாக அது அமைந்தது.

 

மறு நாள் கோர்ட் வளாகத்தில் ஒரே கூட்டம். “சிப்பாயைக் கண்டு அஞ்சுவார்என்ற நிலையிலிருந்த கிராமப்புற விவசாயிகள், எழுச்சி கொண்டு அரங்கை நிறைத்திருந்தார்கள். கண்கொள்ளாக்காட்சி.

 

நீதிபதியும், அரசு வக்கீல்களும் , காந்தி சட்ட நுணுக்கங்களையெல்லாம் எடுத்துப்போட்டுப் பந்தாடி, சாமர்த்தியமாக வாதாடுவார்  என்று எதிர்பார்த்து வந்திருந்தார்கள். தடி தடி புத்தகங்களின் பக்கங்கள் சிவப்பு, கறுப்பு அடிக்கோடுகளால் நிறைந்திருந்தன. அவர்களது எதிர்பார்ப்பில் தவறில்லை. இதுவரை அதுதான் வழக்கம். அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள், சாமர்த்தியமாக, பாம்பையும் அடிக்கணும் தடியும் உடையக்கூடாது என்ற வகையில்தான் பேசுவார்கள். சட்டத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்துகொண்டு தாங்கள் குற்றமே செய்யவில்லை என்று நிரூபிக்க முயல்வார்கள்.

 

காந்தி எந்தவித ஆரவாரமும் இல்லாமல் கையில் ஒற்றைத் தாளுடன் வந்திருந்தார். அனைவருக்கும் வியப்பு. அவர் நீதிபதியையும், அரசுதரப்பு வக்கீல்களையும் பார்த்துக் கேட்ட்து.: ஏன் இத்தனை அமர்க்களம்? உங்கள் நேரமும் என் நேரமும் ஏன் வீணாக வேண்டும்? எனக்கு சம்மன் வந்தது வாஸ்தவம்தான். அதை நான் மீறத் தீர்மானித்திருப்பதும் உண்மைதான்என்று சொல்லிவிட்டு ஓர் அறிக்கையை வாசித்தார். “எனக்கு அரசாங்கத்தின் சட்ட்த்தைவிட மனச்சாட்சியின் குரல்தான் முக்கியம். நான் வந்திருப்பது, உண்மையை ஆய்வு செய்து அரசுக்கும் மக்களுக்கும் அறிவிக்கவே. இது உண்மையில் மனிதாபிமான, சமூக உணர்வுள்ள செயல். அரசுக்கு உதவியானதே  என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

 

நீதிபதி கேட்டார்: “திட்டவட்டமாகச் சொல்லுங்கள். நீங்கள் குற்றத்தை ஒத்துக்கொள்கிறிர்களா?”

காந்தி ,”நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். புரிந்து கொள்ள வேண்டியது உங்கள் வேலைஎன்று விட்டார்.

நீதிபதி விளக்கினார்: நீங்கள் ஒத்துக்கொள்ளாவில்லை என்றால், சாட்சிகளை அழைப்பது, விசாரணை என்றெல்லாம் நடைமுறைகள் உள்ளன. காலம் அதிகமாகும்

காந்திக்கு வந்த வேலை சீக்கிரமாக முடிய வேண்டும். குற்றத்தை ஒத்துக்கொள்கிறேன் என்று விட்டார்.   ஜாமீனுக்கு தாமாக மனுச் செய்யவும் மனுச் செய்யவும் மறுத்து விட்டார். சிலதினங்களில் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காந்தி கைதாவார் என்பது அனேகமாக நிச்சயமாய் விட்டது

 

அன்று இரவு முழுவதும் மீண்டும் பரபரப்பு. காந்தி கைதானால் யார் விட்டுப்போகும் பணியைச் செய்வது? பணியை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் கைதாவது உறுதி. எனவே தன்னார்வலர்களின் பட்டியலை தயார் செய்து, அடுத்தடுத்து யார் யார் பணி மேற்கொண்டு கைதாவது, பணி எப்படி தொடர்வது என்றெல்லாம் திட்டமிடப்பட்டுவிட்டது. மொழிபெயர்ப்புக்காக வந்த இளம் வக்கீல்கள், “வீடுவாசல், குழந்தை குட்டிகளையெல்லாம் விட்டு நாங்கள் எப்படி ஜெயிலுக்குப் போவது?  ஏதோ மொழிபெயர்ப்பு என்பதற்காக வந்தோம்என்றார்கள்.. பிறகு என்ன தோன்றிற்றோ என்னவோ, “எங்கிருந்தோ வந்த நீங்கள் இவ்வளவு பொறுப்பை மேற்கொள்ளும்போது, உள்ளூர்க்காரர்களான நாங்கள் ஒதுங்கியிருப்பது சுய நலம். சிறைவாசத்துக்கும் நாங்கள் தயார் என்ரு உற்சாகமாகச் சொன்னர்கள். காந்தி புளகாங்கிதம் அடைந்தார்.

எதிர்பாராதவிதமாக, அரசு காந்தி மீதிருந்த வழக்கை ரத்து செய்து நிலைமையைக் கண்டறிய ஒரு கமிட்டியை அமைத்தது. அதில் காந்தியையும் ஓர் உறுப்பினராக அமைத்தது. கமிட்டி முடிவு விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்தது. பிரச்சினை நல்லபடியாக முடிந்தது.

 

இதில் சில உபரித் தகவல்களைச் சொல்ல வேண்டும். விரிவான விசாரணை என்பதால்  கோரக் பிரசாத் வீடு போதாது. ஒரு பெரிய வீடு பார்க்கப்பட்டது. மறு நாள் போகலாம் என்று எல்லாரும் சற்று ஓய்வாக இருந்தார்கள்.. “  நோ;நோ; வேலை ஆகணும் எல்லாரும் உடனே புறப்படுங்கள்.” என்று பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டார் காந்தி. மற்றவர்களுக்கு வேறு வழியில்லை. தொடர வேண்டியதாயிற்று. அந்த வீடு குப்பை கூளமாக இருந்தது. துப்புரவுத் தொழிலாளிகள் காலையில்தான் வருவார்கள்; காலையில் முதல் வேலையாக பெருக்கிச் சுத்தம் செய்ய வைத்து விட்டு வேலையைத் துவங்கலாம்என்றிருந்தார்கள். காந்தி விடுவதாக இல்லை. தானே விளக்குமாற்றைத் தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டார். அனைவரும் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இரவோடு இரவாக வீடு வேலைக்குத் தயராகிவிட்டது.

இன்னொரு விஷயம். சாதி வித்தியாசம் மறையவில்லை. ஒவ்வொரு தொண்டரும் தனித்தனியாக சமையற்காரர்களை வைத்துக்கொண்டிருந்தார்கள். பிரசாத் உள்பட.  காந்தி,’ஜாதி வித்தியாசம் எல்லாம் பார்க்கக்கூடாது. ஒரே பந்தி. நாமேதான் சமைத்துக்கொள்ள வேண்டும் என்று விட்டார்.

எடுத்துக்கொண்ட வேலையோடு நிற்கவில்லை காந்தி. அங்குள்ள மக்களில் வறுமை, அறியாமை இவற்றைக்கண்டு மனம் உருகி, முழு வீச்சில் ஆக்கபூர்வமான பணிகளைத் தொடங்கி விட்டார்.

இந்த சம்பவங்களின் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் முக்கிய பாடம்.

·        எந்த விஷயத்தை மேற்கொண்டாலும் முதலில் முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

·        சத்தியாக்கிரகி வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும்.எதிராளியிடம் நேரிடையாகப் பேசி அவர் கோணத்தையும் அறிந்துகொள்ள வேண்டும்.

·        சட்ட்த்தை மீறினால் வெளிப்படையாக ஒத்துக்கொண்டு அதற்குரிய தண்டனையை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும்.

·        காலம் தாழ்த்துதல் உதவவே உதவாது.

·        தன் கையே தனக்குதவி.

·        சாதிப்பாகுபாடுகளை அறவே களைய வேண்டும்.

·        ஈட்உபட்டு நாம் ஒரு பணியில் இறங்கும்போது நமது உற்சாகம் உடன்பணிஆற்றுபவர்களையும் தொற்றிக்கொள்ளும்.

·        பிரச்சினையைக் கவனித்துக்கொள்வதோடு நிற்காமல், அடிப்படைக் காரணங்களைக் களையவும் முயல வேண்டும்.

·        இவற்றைத்தான் ராஜேந்திர பிரசாதும் காந்தியிடம் கற்றுக்கொண்டிருக்கிறார்.