Thursday 12 January 2017

துறவினிலே புதியநெறி மலரும்!

துறவினிலே புதியநெறி மலரும்!
பரமாத்மப் பெருவெளியில் நிரந்தரமாய் லயிப்பதற்குப்
      பரமஹம்ஸர் நாள்குறித்த வேளை!
நரேந்திரச் சீடரவர் நண்பர்களைத் தானழைத்து
      நடைபயிலத் தோளிணைந்து சென்றார்!
உரைசெய்வார்: சோதரரே! உணர்வீர்கள் குருநாதர்
      உடல்நிலையோ மிகமோச மாச்சு!
பருவுடலைத் தான்விடுத்துப் பெருமகனார் ஏகியபின்
      பரிதவிக்கும் நேரம்வந் தாச்சு!

இருக்கின்ற பொழுதுகளை வீணாகப் போக்காமல்
      இறையுணர்வை தியானத்தைக் கொள்வோம்!
சுருக்கென்று அவர்சென்ற அந்நொடியின் பின்னாலே
      சிந்தைமிக நொந்துபயன் என்ன?
கருத்தெல்லாம் உலகியலின் காரியங்களின்மேல் வைத்துக்
      கடவுளைத்தான் பின்வணங்க எண்ணம்!
சுருக்கிட்டுச் சங்கிலியாய்ப் பிணைக்கின்ற இச்சைகளைச்
      சீக்கிரமே நாம்அறுக்க வேண்டும்!

நட்சத்திரம் வான்வெளியில்; நடுக்குகின்ற குளிர்வேறு!
      நடுவினிலே சருகுசத்தை காணும்!
”பற்றற்ற முனிவரெலாம் துனியென்னும் அக்கினியைப்
      பற்றவைத்துத் தாம்வணங்கும் நேரம்!
உற்றவரே1 நாமுமிங்கு உணர்வொன்றித் தூயோமாய்
      உறுதிபடச் சங்கல்பம் செய்வோம்!”
சுற்றிஅவர் தீமூட்டிச் சுட்டெரித்தார் மாசுகளை!
      துறவினிலே புதியநெறி மலரும்!


Saturday 7 January 2017

நாகரத்னத்தின் கபடம்.

நாகரத்னத்தின் கபடம். (1960ல் சுதேசமித்திரனில் வந்தது. கொஞ்சம் தூசுதட்டிப் புதுப்பித்திருக்கிறேன்.)
நான் திருச்சி எல்.ஐ.சியில்  குமாஸ்தாவாகப்பணியாற்றிக்கொண்டிருந்தேன்.
அப்போது நாகரத்னம் என்றொரு அதிகாரி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) அந்தக் காலத்தில் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரையாக, நான் தமிழில் நன்கு எழுதுவேன்,பேசுவேன் என்றெல்லாம் பெயர் பெற்றிருந்தேன். அதிகாரிகளுக்கு சொற்பொழிவு எழுதிக்கொடுக்கும் பேய் எழுத்தாளர். நான் தான். இப்படி இருக்க எனக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காகவோ என்னவோ, நாகரத்னம், அவர் காரியதரிசியாகப் பதவி வகித்த கல்லுக்குழிப் பிள்ளையார் கோவில் சத்சங்கத்துக்குப் பேச வரவேண்டும் என்று என்னை அழைத்தார். கொஞ்ச நேரம் பிகு செய்து கொண்டபின், அவர் மேலும். வற்புறுத்தமாட்டார் என்ற நிலையில்”அரை மனத்துடன்” சம்மதித்தேன்.
தத்துவார்த்தமாகப் பேச வேண்டும் என்றார். என்ன தலைப்பு என்று கேட்டதற்கு ‘பேசாத பேச்சு” என்ற தலைப்பில் பேசுகிறேனே என்றேன்.(தட்சிணாமூர்த்தியைப் பற்றிக் கைவசம் குறிப்புகள் இருந்தன.) அதெல்லாம் சரிவராதுப்பா! எல்லாருக்கும் புரியறமாதிரி தலைப்பு வேணும் என்றார். நெடுநேர ஆலோசனைக்குப் பிறகு ”வள்ளி திருமணம்’ என்ற தலைப்பில் பேசேன்” என்று அவரே தலைப்புக் கொடுத்து விட்டார் நான் என்ன பாகவதரா, வள்ளி திருமணம் கதாகாலக்‌ஷேபம் பண்ண?. ”கந்தசாமியைக் காதலித்தவள்” என்று புதுமையாகத் தலைப்புக் கொடுக்கலாம் என்ற என் யோசனையை  நிர்த்தாட்சண்ணியமாக நிராகரித்துவிட்டார். நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. என் பிரமோஷன் அவர் கையில்.
”சிவ.வேங்கடரமணி என்று போடுங்கள். எம்.ஏ. ”செஞ்சொற்செம்மல்” என்ற என் பட்டம் எல்லாம் போட வேண்டும் என்பது அவ்வளவு அவசியமில்லை. தேவை என்று பட்டால் போட்டுக் கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபணை இல்லை” என்று சொல்லி வைத்தேன்.
சம்பவ நாளைக்கு மூன்றே நாட்கள்தான் இருந்தன. ஆபீசுக்கு லீவு போட்டு விட்டு, வாரியாரிலிருந்து வாண்டுமாமா வரை அத்தனை பேரும் வள்ளி முருகன் என்று எங்கு எழுதி இருந்தாலும் அதை எல்லாம் வாங்கிப் படித்தேன். (அந்த நாளில் இண்டெர்நெட் எல்லாம் கிடையாது.) “வள்ளிக் கணவன் பேரை” (’க்’ உண்டோ?) என்று யாராவது பாடிக்கொண்டு போனாலோ, வள்ளிக் கிழங்கு என்று யாராவது கூவி விற்றுக்கொண்டு போனாலோ கூட நின்று குறிப்பு எடுத்துக் கொள்வேன்.(அந்த அளவுக்கு முற்றிவிட்டது.)
வள்ளி திருமணம் பற்றி இதுவரை யாருமே பேசியிருக்காத அளவு விஷயங்களைச்  சேகரித்துக் கொண்டு போனேன் . ஒருமணி நேரப் பேச்சுக்கான சரக்கு என்னிடம் இருந்தது.(நாகரத்னம் தந்த கால அளவு அதுதான்.) என் பேச்சைக் கேட்டுவிட்டு எல்லாரும் எங்கள் சங்கத்துக்கு வாருங்கள் எங்கள் சங்கத்துக்கு வாருங்கள் என்று வருந்தி அழைக்க வேண்டாமோ?
சம்பவதினம் வந்தது. முதலில் கடவுள் வாழ்த்து. ஒரு மாமி தலைப்பை இழுத்துப் போர்த்துக்கொண்டு எம்.எஸ். என்ற நினைப்பில் ராக ஆலாபனை,பல்லவி,ஸ்வரம்,நிரவல் ஐந்தாறு சரணங்கள் என்று அரைமணி நிரப்பி விட்டார். ஏதோ போட்டியில் பரிசு பெற்ற குழந்தைகள் பரிசு வழங்கல் தாமதமாகிறதே என்று சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பெற்றோர்கள் எழுந்து எழுந்து தவித்தபடி நின்று கொண்டிருந்தார்கள். அடுத்தபடி பரிசு வழங்கல். கல்லுக்குழியில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் பரிசு கொடுத்திருப்பார்கள் போல.
கசமுச என்ற சப்தம் மாண்டபத்தை நிறைத்துக்கொண்டிருந்தது. ஒரு உச்சிக்குடுமி மாமா என்னை அறிமுகம் செய்து வைத்தார். “இன்றைய பேச்சாளரைத் தமிழகத்தில் அறியாதவர்கள் இருக்க முடியாது” (உங்கள் பேர் என்ன சார்?) அடுத்து ’சிறப்பு சொற்பொழிவாளரைப் பேச அழைக்கிறேன்’ என்ற வார்த்தைகள் செவி நுகர் கனிகளாய் விழுந்தன.
பரிசு வழங்கிய குழப்பம் இன்னும் அடங்கவில்லை. மேடைக்குப்போய் மெல்ல நின்றேன். மூலைக்கொருவராக எழுந்து நின்றார்கள். எனக்கு மரியாதை செலுத்துவதற்காக எழுந்து நின்றார்களா, அல்லது வெளியே போகத் தயார் நிலையில் இருந்தார்களா என்று எனக்குப் பிடிபடவில்லை. ”ஆராவமுது பிள்ளை ப்ரைஸ் வாங்கியிருக்கானே? என்ன, புஸ்தகமா? எட்டணாத்தான் இருக்கும்! மணி ஒம்பதாச்சுடீ, மாமா கோச்சுப்பார்” என்ற ஒலிக் கலவைகளில் அரங்கம் மூழ்கியிருந்தது.
கர்மவீரனாக ‘மெய்யன்பர்களே!” என்று என் உரையைத் துவக்கினேன் .தலைவர் கல்குழி சுப்ரஹ்மண்ய சாஸ்திரிகளைப் பற்றி நாலு வார்த்தை புகழ்ச்சியாகப் பேசி வைப்போமே !”கல்லும் குழியும் நிறைந்த நெடுஞ்சாலை இவ்வாழ்க்கை. இதைக் கடக்க தலைவரைப் போன்ற….”  வார்த்தையை நான் முடிக்கவில்லை .”முதலில் இதில் உள்ள கல்லை எண்ணிக்கொள்ளுங்கள்” என்று ‘எங்கிருந்தோ ஒரு குரல்’ வந்தது. தொடர்ந்து ஏழெட்டுக்கற்கள் வந்து விழுந்தன.
அந்தப் பேச்சை அப்படியே விட்டு விட்டேன். “பெரியவர்கள், அனுபவம் நிறைந்தவர்களுக்கு  நான் என்ன சொல்லப்போகிறேன்? லௌட் திங்க்கிங்  என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே, அதுபோல சில கருத்துகளை உரக்கச் சிந்திக்கப்போகிறேன்” என்றேன். முன் வரிசையிலிருந்து ஒரு (அழகான) பெண் “மனசுக்குள்ளேயே சிந்தியுங்களேன் மாமா!” என்று வெடுக்கென்று கூறினாள்.
இதற்குள் பிள்ளைகள் சப்தம் அதிகமாயிற்று .”பிள்ளைகளே! சப்தம் போடாதீர்கள்” என்றேன் .விளைவு: சப்தம் அதைவிட அதிகமாயிற்று. “குழந்தைகளே! சப்தம் போடாதீர்கள். நான் மேஜிக் வித்தைக்காரன். சப்தம் போடாமல் இருந்தால் கடைசியில் மேஜிக் வித்தை காட்டுவேன். சப்தம் போட்டீர்களோ, வால் முளைத்து விடும்” என்றேன். “ நீங்கள் மட்டும் சப்தம் போடுகிறீர்களே? உங்களுக்கு வால் முளைத்திருக்கிறதோ?” என்றான் ஒரு குட்டிச்சுட்டி.
மேஜிக் மேஜிக் என்று குழந்தைகள் அலறின. அஜந்தாக்கொண்டை பற்றியும் அசோக சக்ரம் பார்டர் புடவை பற்றியுமான பெண்களின் உரையாடலும் என் குரலோடு சேர்ந்து ஒலி பரவியதாகப் பின்னர் கேள்விப்பட்டேன்.
“அன்பர்களே! வள்ளி ஜீவாத்மா.முருகன் பரமாத்மா” என்று ஆரம்பித்தேன். “இந்த இரண்டு சீட்டை மட்டும் படித்து விடுங்களேன்” என்று தந்தார் செக்ரட்டரி.
“ஆண்டார் வீதியைச் சேர்ந்த அலமேலு அம்மாள் கூட்டத்தில் இருந்தால் உடனே வீட்டுக்குப் போகவும். உறவினர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” இதுபோல நான்கைந்து சீட்டுகள் வந்து விட்டன. கடைசியாக வந்த சீட்டுத்தான் என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது ”சிவ.வேங்கட ரமணீ! தயவு செய்து கூட்டத்துக்கு வெளியே வரவும்.” கூட்டத்திலிருந்து வெடிச்சிரிப்புக் கிளம்பியது. தொடர்ந்து செயலாளர் வந்து,”கொஞ்சம் ஷார்ட்டா முடிச்சுக்குங்க!” என்றார். நான் ஆரம்பிக்கவே இல்லையே!  என்பதை எப்படி அவரிடம் சொல்வது?
”சரி” என்று சொல்லிவிட்டு ,’வள்ளீதேவசேனாகாந்தஸ்மரணம்” என்றேன் பஜனை பாணியில். “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !ஹரஹர மஹாதேவா ஜேஜே சுப்ரம்மண்யம்! ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர வாழ்க, ஒழிக என்ற குரல்கள் நாலாபக்கத்திலிருந்தும் வந்தன.
வேதனையோடு மேடையை விட்டு நகர்ந்தேன். ஐம்பது குழந்தைகள் “மாமா! மேஜிக் !மாமா மேஜிக் என்று பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

இதில் நாகரத்னத்தின் கபடமென்ன இருக்கிறது என்கிறீர்களா? சொல்கிறேன் .இவ்வளவும் ஆன பிறகு மறுநாள் காலை ஆபீசுக்கு வந்ததும் கொஞ்சம் கூடச் சிரிக்காமல்,”நேத்திக்கு ரொம்பப் பிரமாதமாப் பேசிட்டேப்பா!” என்கிறாரே! இவரை விடக் கபடஸ்தர் யார் இருக்க முடியும்?