துறவினிலே புதியநெறி
மலரும்!
பரமாத்மப் பெருவெளியில்
நிரந்தரமாய் லயிப்பதற்குப்
பரமஹம்ஸர் நாள்குறித்த வேளை!
நரேந்திரச் சீடரவர்
நண்பர்களைத் தானழைத்து
நடைபயிலத் தோளிணைந்து சென்றார்!
உரைசெய்வார்: சோதரரே!
உணர்வீர்கள் குருநாதர்
உடல்நிலையோ மிகமோச மாச்சு!
பருவுடலைத் தான்விடுத்துப்
பெருமகனார் ஏகியபின்
பரிதவிக்கும் நேரம்வந் தாச்சு!
இருக்கின்ற பொழுதுகளை
வீணாகப் போக்காமல்
இறையுணர்வை தியானத்தைக் கொள்வோம்!
சுருக்கென்று அவர்சென்ற
அந்நொடியின் பின்னாலே
சிந்தைமிக நொந்துபயன் என்ன?
கருத்தெல்லாம்
உலகியலின் காரியங்களின்மேல் வைத்துக்
கடவுளைத்தான் பின்வணங்க எண்ணம்!
சுருக்கிட்டுச்
சங்கிலியாய்ப் பிணைக்கின்ற இச்சைகளைச்
சீக்கிரமே நாம்அறுக்க வேண்டும்!
நட்சத்திரம் வான்வெளியில்;
நடுக்குகின்ற குளிர்வேறு!
நடுவினிலே சருகுசத்தை காணும்!
”பற்றற்ற முனிவரெலாம்
துனியென்னும் அக்கினியைப்
பற்றவைத்துத் தாம்வணங்கும் நேரம்!
உற்றவரே1 நாமுமிங்கு
உணர்வொன்றித் தூயோமாய்
உறுதிபடச் சங்கல்பம் செய்வோம்!”
சுற்றிஅவர் தீமூட்டிச்
சுட்டெரித்தார் மாசுகளை!
துறவினிலே புதியநெறி மலரும்!
No comments:
Post a Comment