Friday 29 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--13

ஒரு சாமான்யனின் கீதை—13
குணங்களை என் சொல்வது?
அனைத்துமே அறுதியில் பரமாத்மன்தான் என்கிறோம். அப்படியிருக்க எத்தனை விதமான மனிதர்களைப் பார்க்கிறோம்?  ஏன் இத்தனை வேறுபாடுகள் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
இதற்குக் கீதையில் விடை இருக்கிறது. அதற்கும் மேலாக, நாம் இப்போது பார்க்கப்போகும் பகுதி, முழுமையான ஒரு சுய முன்னேற்ற இயல் என்று சொல்ல வேண்டும்.
வேறுபாடுகள் குணங்களின் அடிப்படையில் எழுகின்றன. ஸத்வம், ரஜஸ்,தமஸ் என்று மூன்று வகையான குணங்கள். செயல் அடங்கிய நிலை; செயல்துடிப்பு நிறைந்த நிலை; செயலற்ற நிலை. இந்த குணங்கள் நம் ஒவ்வொருவரிடமுமே வேறுவேறு பட்ட அளவில் உள்ளன. ஒருவரிடமே ஒவ்வொரு சமயத்தில் வித்தியாசமான கலவை அமைகிறது.
ஸத்வம் ரஜஸ்,- தமஸையும், ரஜஸ்,தமஸ்-ஸத்வத்தையும், தமஸ்,ஸத்வம் ,ரஜஸையும் மிஞ்சி மேலெழும்ப முயலும் தன்மை படைத்தன. எந்தக் குணம் மேலோங்கியிருக்கிறதோ, அதுவே அந்த மனிதனுக்கு, அல்லது அந்த சந்தர்ப்பத்தில் அவனுடைய குணமாகக் கொள்ளலாம்.
இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொன்னால், ஸத்வ குணம், அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம் என்னும் நிலையாகும். ரஜஸ் பரபரப்பு, குழப்ப சிந்தனைகள்,தெளிவான நோக்கம் இல்லாமல் எதையோ இழுத்துப்போட்டுக்கொண்டு அலமந்து கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும். தமஸ்-அறியாமை, அலட்சியப்போக்கு, இவை என்று சொல்லலாம்.
ஏன் இப்படி குணங்கள் வேறுபடுகின்றன?
 மரணத் தறுவாயில் எந்த குணம் மேலோங்கியிருந்ததோ அதற்கேற்ப பிறவி வாய்க்கும் என்பார்கள்.  தவிரவும் முன் ஜன்ம எண்ணங்கள், அனுபவங்கள், வினைகளின் பதிவுகளும், அடுத்தடுத்த பிறவிகளில் இழுத்துக்கொண்டு வரப்படுகின்றன என்பதும் கூட. நாம் செய்ய வேண்டியது, நமது குணங்களைக் கவனித்து ஆராய்ந்து, தமஸை ரஜஸாகவும், ரஜஸை ஸத்வமாகவும் உயர்த்திக் கொள்ள வேண்டியது.

இப்போது நம் முன் உள்ள கேள்வி, நமக்கு இந்த குணங்கள் இயல்பாக அமைந்தவை என்றால், நாம் எப்படி மாற்றிக்கொள்ள முடியும்?
திருவள்ளுவரே இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கிறார்.” ஊழிற் பெருவலி யாவுள?” என்றார். மறுமொழியையும் அவரே சொல்லி விட்டார்
“ஊழையும் உப்பக்கம் காண்பர்-உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
கடந்தகாலப் பதிவுகள் நம் குணங்களை நிர்ணயிக்கின்றன. குணங்களே நமது சூழ்நிலையை வகுக்கின்றன. இந்தக் கருத்து நமக்கு ஒரு வெள்ளிக்கீற்றைத் தருகிறது. நமது கடந்தகாலச் செயல்பாடுகள் நமது இன்றைய விதியை அமைக்கின்றன என்றால், நமது இன்றைய செயல்பாடுகளைச் சீரமைத்துக்கொள்வதன் மூலம் நமது எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். நமது விதியைச் செதுக்கும் சிற்பி நாமே.
குணங்களை நேரடியாக மாற்ற முடியாது. எனினும் மன உறுதியுடன் நமது செயல்களை அமைத்துக்கொள்ளலாம். பிறருக்கு உதவுவது, நல்ல காரியங்களைச் செய்வது போன்ற நற்செயல்களைச் செய்து வரும்போது குணங்களில் முன்னேற்றம் ஏற்படும். இது ஒரு சக்கரச் சுழற்சி.
செயல்கள்-> பழக்கம்-> குணம்;> எண்ணம்-> செயல்கள்->பழக்கம்->குணம்->……..
சுவாமி சின்மயானந்தர் இதை ஒட்டி இன்னுமொரு நல்ல கருத்தைச் சொல்லியுள்ளார்கள்.
நமது குழந்தைகளுக்கு, ஆரம்ப முதலே,பெரியவர்களுக்கு மரியாதை-தலைமையிடம் பணிவு-பொய் கூறாமை-.நல்ல புத்தகங்களைப் படித்தல்-போன்ற செயல்பாடுகளைப் போதித்து  நல்ல குணங்களை உருவாக்கினால் எதிர்காலத் தலைமுறை சிறக்குமே?
தமஸை ரஜஸாகவும், ரஜஸை ஸத்வமாகவும் உயர்த்திக் கொள்ளலாம். எனினும் ஸத்வகுணமும் ஒரு தளையே. அதினின்றும் கூட விடுபட்டால்தான், ஆன்மிக நிறைவை எய்த முடியும்.
அஸதோமா ஸத்கமய,
தமஸோமா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோமா அம்ருதம்கமய
என்று அந்த ஆதிப் பரம்பொருளையே பிரார்த்திப்போமாக!

,

Thursday 28 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--12

ஒரு சாமான்யனின் கீதை—12
இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?
பருப்பொருள்களும் ,மனிதனின் புலன்களும்,  மனமும், புத்தியும், நான் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய entity யும் களம் எனலாம். கீதா வாசகப்படி க்ஷேத்ரம்.
உடலுள் உறைந்து அசைவற்ற களத்தை அறிந்து, இயக்கி ஆட்சி செலுத்தும்  ஜீவ சக்தியே கள நாயகன்; க்ஷேத்ரக்ஞன்.
வேறுவிதமாகச் சொல்வதானால், அறியப்படும் அனைத்தும் க்ஷேத்ரம். அறிகின்ற தத்துவம் க்ஷேத்ரக்ஞன்.
க்ஷேத்ரக்ஞன் இல்லாத க்ஷேத்ரம் வெறும் ஜடமே. அதே போல, க்ஷேத்ரம் என்ற கருவிகள் இல்லாமல் க்ஷேத்ரக்ஞனுக்கு இயக்கம் இல்லை.
ஜீவாத்மா என்னும் க்ஷேத்ரத்தின் மூலம் இன்பம் ,துன்பம், கோபம், மோகம், பொறாமை, அமைதி, படபடப்பு அச்சம் , இன்னும் ஆயிரமாயிரம் புயல்களை அகவெளியிலும் புற வெளியிலும்  மனிதன் அனுபவிக்கிறான்.
தனித்தனி ஜீவாத்மாக்களாகி அவற்றின் மூலம் செயல்படுவது வாலறிவன் என்னும் சுத்த சைதன்யமே. இந்தக் குறி குணமற்ற பரம்பொருள் ஜீவனை நமக்குள்ளே உறைந்து பற்பல அனுபவங்களையும் அனுபவிக்கச் செய்யும் பரமதத்துவம்..
ஜீவாத்மா உலகாயதத்தில் தன்னை ஒன்றுபடுத்திக்கொண்டு, தனது பரமாத்ம நிலையை மறந்து விடுகிறது.
ஜீவன் தன் தெய்வத்தன்மையை உணர்ந்து கொள்வதுதான் அறுதிக் குறிக்கோள்.
தன்னில் தான் லயித்து ஒருமைப்படும்போது இந்த ஞான வெளிச்சம் சித்திக்கும்.
இந்த நிலையை அடைய சாதகம் புரிய வேண்டும். இந்த சாதகம்-பயிற்சிக்கான அடிப்படைத் தகுதிகள் என்ன?
கண்ணபிரான் பல  பல பண்புகளை அடுக்கிக் கொண்டே போகிறான்.. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால்- மனத்துக்கண் மாசிலன் ஆதல். நல்லவனாய் இருத்தல்; நல்லதே செய்தல். பகவான் பிரியத்துக்கு ஏற்றவர்களாக நடந்து கொள்ளுதல்!
இந்த அடிப்படைத் தகுதியை வளர்த்துக்கொண்டு ஆன்ம ஞானம் பெற- இறை நிலையை நோக்கி முன்னேறுவதற்கான- வழிமுறைகள் என்ன?
·         புறப்பொருள்களிலிருந்து , அனுபவங்களிலிருந்து விலகி நின்று தனித்திருந்து பார்க்கும் தன்மை. இதற்கான மன ஒருமைப்பாட்டுக்கு வழி-தியானம்.
·          ஆத்ம விசாரம். சான்றோர் தொடர்பு, ஆன்மிக நூல்கள் படித்தல், சிந்தித்தல்.
·         ஊருக்கு உபகாரமான காரியங்களை, பலனில் பற்று வைக்காமல் ஆற்றும் கடமை வேள்வி.
·         நம்பிக்கையோடு கூடிய பிரார்த்தனை.
இந்த வழிமுறைகள் ஒன்றோ, பலவோ அனைத்துமோ ஏற்ற வழிமுறைகள். இன்னும் சொல்லப்போனால், இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. பல வழிகளி.ல் ஒன்றின் மீது ஒன்று மீதூர்பவை.
இவ்வழிகளில் கிடைக்கக்கூடிய ஆனந்தம் விண்டுரைக்க முடியாதது. .”ஒன்று பரம்பொருள்; நாமதன் மக்கள்; உலகின்பக்கேணி” என்ற அனுபூதியினால் வரும் பரமானந்தம்.

இந்த நிலை வரும்போது-பந்தமில்லை,பந்தமில்லை,பந்தமில்லை, பயமே இல்லை. இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?

Monday 25 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--11

ஒரு சாமான்யனின் கீதை—11

பகவானுக்குப் பிரியமானவர்கள்.

இறைவனைக் குணங்கள் அற்றவனாகவும் வழிபடலாம்.  குணங்கள் உடையவனாகக் கருதியும் வழிபடலாம்.
குணங்கள் இல்லாதவனாக வழிபடுபவன், அவனை, வாயினால் விண்டுரைக்க ஒண்ணாதவன்;  தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாதவன்: எங்கும் நிறைந்தவன்; சிந்தனைக்கு அப்பாற்பட்டவன்; மாறுதலுக்கு உட்படாதவன்; சலனம் அற்றவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன் என்ற சத்தியத்தை மனத்தில் நிறுத்தி வழிபடுகிறான்.
இங்ஙனம் வழிபடுபவன் பக்குவம் அடைந்தவன். மனத்தைக் கட்டியாள்கிறான். அனைத்து உயிர்களிலும் வியாபித்திருப்பது இறைவனே என்று உணர்ந்து பிறர் நலம் பேணும் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான்.
பக்தியின் உயர்நிலையில் உள்ளவன் அஹம் ப்ரஹ்மாஸ்மி  என்று உணர்ந்து அந்த நிலையில் இறைவனை வழிபடுவது சிறந்ததே. எனினும்,பாதைகள் பலவாயினும் சேரும் இடம் ஒன்றே என்பதால் உருவ வழிபாடு செய்பவர்களைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர்களது நம்பிக்கையைக் குலைக்கவும் கூடாது.
அதே போல உடல் பிரக்ஞை விலகாதவன், தனக்கும் நான் பிரம்மன் என்ற ஞானம் வந்து விட்டதாக நினைத்துக்கொண்டு இயங்குவது ஆபத்தானது. தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதுடன் இந்த உலகத்தையும் ஏமாற்றுவதாகும்.
சாதகன் எப்படி பக்தி செய்ய வேண்டும்?
மனதை இறைவனில் நிலை நிறுத்தி  அவனைப் பற்றிய நினைவிலேயே ஆழ்ந்திருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட மன ஒருமை இல்லையென்றால் என்ன செய்வது?
கடவுளுக்கும் உலக நினைப்புகளுக்கும் இடையே மனது ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும்போது,  மனதைக் கவனித்து,  கடவுள் நினைப்புக்குத் திருப்ப வேண்டும். ‘நான்’ என்பது வேறு, நினைப்பு என்பது வேறு என்ற விழிப்புணர்வு இருந்தால் இது சாத்தியமாகும். இந்தப் பயிற்சிதான் அப்யாஸ யோகம் என்பது.
இல்லை; அதுவெல்லாம் கஷ்டமான சமாசாரம். இன்னும் கொஞ்சம் சுலபமான வழி இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டால்—

ஒவ்வொரு காரியத்தைத் துவங்கும்போதும்,
“கண்ணா! (அல்லது கந்தா/அம்மா/ குருநாதா!/) இது உனது காரியம். என் மூலம் செய்து கொள்கிறாய். நான்தான் காரியம் செய்கிறேன் என்று நினைத்துக் கொள்வது என் அறியாமை. உன் காரியத்துக்கு நான் ஒரு கருவி மாத்திரமே.”  என்று கூறிக்கொள்ளலாம்.
நான் செய்வது எனக்கு ஏற்பட்ட வேலை. இதில் போய் இப்படி எல்லாம் வசனம் பேசுவது எனக்கு தோதாக இல்லை என்பவர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணர் வார்த்தையைக் கேட்கலாம்.
“வேலை செய்யாமல் உன்னால் இருக்கவே முடியாது.  ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பதுதான் உன் சுபாவம். செய்கிற வேலையை நன்றாகச் செய். ஆனால் பற்று இல்லாமல் செய். அப்படிச் செய்கிற காரியங்கள் உன்னைக் கடவுளை நோக்கி இட்டுச் செல்கின்றன. செய்கிற வேலையால் வருகிற இன்பத்திலும் துன்பத்திலும் பாதிக்கப்படாமல் இரு. அனைத்தையும் ஈஸ்வரனுடன் சம்பந்தப்படுத்திக் கொள்”
, பயிற்சியை விட ஞானம் உயர்ந்தது ஞானத்தை விட தியானம் சிறந்தது. தியானத்தை விட வினையின் பயனை அர்ப்பணிப்பது சிறந்தது.  செயலின் பயன்களைத் துறப்பதன் மூலம் இங்கே, இப்போதே அமைதி கிடைக்கிறது.
இறை நம்பிக்கையில் நிறைநிலை அடைந்தவர்கள்—
எவரையும் வெறுக்க மாட்டார்கள். அனவரிடமும் சினேகமாயும் கருண்ய மனோபாவத்துடனும் இருப்பார்கள். “நான், எனது” என்ற உணர்வுகளை விலக்கியிருப்பார்கள்..இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் மனதின் சமநிலை மாறாதிருப்பார்கள். எப்போதும் மனத் திருப்தியுடன் இருப்பார்கள். தியானத்தில் நிலைபெற்றிருப்பார்கள். தன்னைத்தான் அடக்கியாளும் திறம் பெற்ரிருப்பார்கள். தீர்மானமான மனம் படைத்திருப்பார்கள். அவர்களது மனமும் புத்தியும் சதா சர்வதா கடவுளிடமே நிலைத்திருக்கும்.
அத்தகையவர்களே பகவானுக்குப் பிரியமானவர்கள்.

நாமும் அப்படிப் பகவானுக்குப் பிரியமானவர்களாக விளங்கப் பிரார்த்தித்துக் கொள்வோம்! 

Tuesday 19 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--10

ஒரு சாமான்யனின் கீதை—10
குறையொன்றுமில்லாத கோவிந்தா!
கண்ணபிரான், அர்ஜுனனின் நலன் கருதி, அவன் தகுதியையும் கருதி தனது மகிமைகளை அவனிடம் விரித்துரைக்கிறான்,
அவன் பிறவா யாக்கைப் பெரியோன். உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும் நிலை பெறுத்தலும் ,நீக்கலும், நீங்கலா இயல்புடையவன். மயர்வறு மதியுடன் இதை உணர்ந்து கொள்பவன் தன் பாவங்கள் எல்லாம் நீங்கப் பெறுகிறான்.
புத்தி, ஞானம், மயக்கமின்மை, பொறை, சத்தியம், சாந்தம், இன்பம், துன்பம்,பிறப்பு, இறப்பு ,அச்சம்,  அஞ்சாமை, அஹிம்சை, மனதின் சமநிலை, திருப்தி, விரதம், புகழ்ச்சி, இகழ்ச்சி, இத்தனை குணங்களும் அவனிடமிருந்தே பிறக்கின்றன. அவன் மனதிலிருந்து தோன்றிப் பிறந்தனவே அத்தனை உயிரிகளும்.
சரி, இவை எல்லாம் தெரிந்து கொள்வதினால் என்ன பயன்?
இவற்றை நன்கு உணர்ந்து கொண்டவன், தான் இறைவனிலிருந்தும் வேறானவன் இல்லை என்று உணரும் விவேகம் பெறுகிறான். பக்தியில் அவன் தடுமாறுவதில்லை. மனம் நிறைந்து இறைவனை வழிபடுகிறான். இறை பக்தியில் ஊறித் திளைக்கிறான். இறைவனின் பெருமைகளை ஒத்த மனமுடைய பக்தர்களுடன் பேசிக் களித்து உறவாடுகிறான். நிறைந்த மனத்தோடு ஆனந்தமாக இருக்கிறான்.
இவனுடைய பக்திக்கு இறைவனுடைய எதிர்வினை?
தன்னை நன்கு உணரும் விவேகத்தைத் தருகிறான். தனது மகிமைகளை அவன் மேலும் மேலும் அறிந்து பரவசமாக வைக்கிறான். ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்லுவார். இருட்டறையில் ஒரு சின்ன துவாரம் வழியாக வெளிச்சம் வருகிறது. துவாரம் பெரிதாகப் பெரிதாக, வெளிச்சம் அதிகரிக்கிறது. திரை முற்றுமாக விலகியதும் முழு வெளிச்சம் தான். பக்தனின் சாதனை முன்னேற முன்னேற, அவனுக்கு இறைப் பிரகாசம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அறியாமை இருள் நீங்கி அவன் விவேக வெளிச்சம் அடையப் பெறுகிறான்.
தொடர்ந்து இறைவன் தனது மகிமைகளை விஸ்தாரமாகச் சொல்லிக்கொண்டே போகிறான். ஒட்டுமொத்தமாகவும் தனித்தனி நிலையிலும் அடுக்கிக் கொண்டே போகிறான்.
கடைசியில் ,முத்தாய்ப்பாகச் சொல்கிறான், “ இவ்வளவு விரிவாகத் தெரிந்து கொள்வதனால் என்ன பயன் அர்ஜுனா? என்னில் ஒரு சிறு பகுதியாலேயே இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் நான் தாங்குகிறேன் என்பதை மட்டும் புரிந்துகொள்!”
அர்ஜுனனுக்கு இத்தனையும் பூரணப் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. மனத்தின் எல்லை கடந்து விரிந்த விபூதி இது. “இத்தனை சொல்கிறாயே கண்ணா! அத்தனையையும் நான் கண்ணாரக் காணும்படிக் காட்டித்தான் விடேன்!”
கண்ணன் கருணை கூர்ந்து அவனுக்கு ஞானக்கண்ணைக் கொடுத்துத் தனது விஸ்வ ரூப தரிசனத்தைக் காட்டுகிறான் .தெய்வங்கள், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மா, ரிஷிகள், தேவ நாகங்கள், இறைவனின் பல்வேறு வடிவங்கள்,புஜங்கள், வயிறு, அடியும் நடுவும் முடியும் காண முடியாத பிரம்மாண்டமான பிரபஞ்ச வடிவு, சங்கு சக்ரம், கிரீடம், கதை, ஜாஜ்வல்யமான நெருப்பு, சூரியன், இத்தனையும் கண்டு இறைவனின் பூரணத் தன்மையைத் தெரிந்துகொள்கிறான் அர்ஜுனன். இன்னும் பல பல காட்சிகளைக் காண்கிறான். ஆனாலும் இந்தக் காட்சி, அவனை விதிர்விதிர்க்க வைக்கிறது. ஆச்சர்யத்தோடு அச்சம் பற்றிக்கொள்கிறது.. கண்ணனிடம் கைகூப்பிச் சொல்கிறான். ‘கண்ணா! உன் மகிமையைப் பூரணமாகப் புரிந்து கொண்டேன். உன்னை முன்புறமும், பின்புறமும் அனைத்துத் திக்குகளிலும் நமஸ்கரிக்கின்றேன்.  உன்னை மிகச் சாதாரணனாக நினைத்து, விளையாட்டாகப் பலமுறை கிண்டல் செய்திருக்கிறேன். சர்வ சாதாரணமாக “ஏ! கிருஷ்ணா என்றெல்லாம் கூப்பிட்டிருக்கிறேன். அறியாமை! மன்னித்து விடு”
கறவைகள் பின்சென்று கானஞ்சேர்ந் துண்போம்
     அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
     குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க வொழியாது
     அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே
     இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்,
என்று பாடிய பாவைநாச்சியார் நம் கண்முன் வருகிறார்!
 அர்ஜுனன் தொடர்கிறான்: கண்டறியாதன கண்டு மகிழ்ந்து விட்டேன். அச்சமாகவும் இருக்கிறது. எனக்கு சங்கு சக்ர கதாபாணியான அந்த சௌந்தர்ய வடிவைக்காட்டு! அடுத்து,  நண்பனாய்ப் பழகிய அந்த சௌஜன்ய ரூபத்தைக்காட்டு!
இறைவன் கருணையுடன் தன் இயல்பான வடிவைக் காட்டி அருள்கிறான்!’!”
நிறைவாகக் கண்ணன் சொன்னது நமக்கும் பாடம்..
ரொம்பக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
செய்கிற பணியைக் கண்ணனுக்காகச் செய்வோம்; அவனே பரமாத்மா என்று கொள்ளுவோம். பக்தி செலுத்துவோம்; பற்றுகளை விலக்குவோம் எவரிடமும் வெறுப்புக் காட்டாமல் இருப்போம்!

பரமபதம் நமக்குச் சொந்தம்!

Saturday 16 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--9.

அவரவர் தமதமர் அறிவறி வகைவகை.....

பரம்பொருளைப் பற்றிய அறிவு, தூய மனத்தினருக்கே கிட்டக்கூடியது. மற்றவர்களுக்கு அது பூட்டி வைத்திருக்கும்  பொக்கிஷப் பேழை .”தூய மனத்தினர் பேறு பெற்றோர் எனத் தேவ மகன் சொன்னான்” என்று கண்ணதாசன் இயேசு காவியத்தில் சொன்னார். இது ஒருபுறம் இருக்க, இந்த அறிவு அனைத்து ஜீவன்களுக்கும் பிறப்புரிமை. அனைவரும் அவரவர் தகுதி நிலைக்கேற்ப, அவரவர்க்கு உரிய காலத்தில் பெற்றுத்தான் ஆக வேண்டும். பாவி அல்லது புண்ணியவான், குலம்,  பாலினம் என்ற வேறுபாடு கிடையாது. இந்தத் தகுதியை அடைய மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் .சிரத்தை வேண்டும். அவ்வளவே.
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இறைவன் நிறைந்திருக்கிறான். அனைத்தும் அவனுள் அடக்கம். எனினும் அவன் அவற்றுள் அடங்கி விடுவதில்லை. .அலைகளுக்குள் கடல் அடங்கி விடுவதில்லை என்பது போல. அவன் பிரபஞ்சத்தைப் பிறப்பிக்கிறான் ;காக்கிறான்; அழிக்கிறான்; மீண்டும் பிறப்பிக்கிறான். அவை அநித்யமானவை. அவன் நித்ய வஸ்து..
தோன்றா நிலையிலுள்ள இறைவன், மானுட வடிவிலும் அவதரிக்கிறான். எனினும் அறிவிலிகள் அவதாரங்களின் தெய்விகத்தைப் புரிந்துகொள்வதில்லை.  ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லுவார், யானைக்கு புறத்தில் தந்தமும், உள்ளே ஒரு பல்வரிசையும் உள்ளது போல் இறைவனின் அவதாரங்களும் புறத்தே மானுட வேஷம் தரித்தும், அகத்துள், உலகாயதத்தைத் தாண்டியவர்களாகவும், கர்மச் சுழலில் சிக்கிக் கொள்ளாதவர்களாகவுமே இருக்கிறார்கள். “லீலா மானுஷ வேஷதாரி” என்பது வழக்கு.
சான்றோர்கள் ,இறைவனை அனைத்துக்கும் மூலம், அழிவே இல்லாதவன் என்று அறிந்து. ஒரே சிந்தையாக, அவனை வழிபடுகிறார்கள். அவன் புகழ் பாடிக் களிக்கிறார்கள்; உறுதியாக விரதங்கள் மேற்கொள்கிறார்கள்; அடிபணிகிறார்கள்; துளியும் தொய்வில்லாமல் பக்தி செலுத்துகிறார்கள்.

மற்றும் சிலர், இறைவன் வேறு, இந்த உலகமும், ஜீவாத்மர்களும் அவனின்று வேறானவை என்ற கொள்கையில் நின்று வழிபடுகிறார்கள்..
வேறு சிலர் இந்திர லோகம் ஆளும் அச்சுவைக்காகவே அவனை வழிபடுகிறார்கள்; அதனை அடையவும் பெறுகிறார்கள். ஆனால், தக்க காலம் முடிந்ததும் பிறவிச் சுழலுக்கு வந்து விடுகிறார்கள்.
வேறு நோக்கமே இன்றி ,இறைவனிடத்தில் அந்நியமற்ற பக்தி செலுத்துபவர்களுக்குத் தேவையானவற்றை அளிப்பதும், பெற்றதைக் காத்துக் கொடுப்பதும் இறைவன் தன் பொறுப்பாக எடுத்துக்கொள்கிறான். உலகாயதத்திலும் சரி;ஆன்மிகத்திலும் சரி.
யார் எவ்வாறு வழிபட்டாலும் அவ்வாறே அவர்களை ஏற்றுக்கொள்கிறான் இறைவன். அவரவர் தமதமதறிவகை வகை அடைய நின்றனரே!
இறைவனை வழிபடுவது என்பது அவ்வளவு கஷ்டமான விஷயம் இல்லை. மனத்தூய்மையுடனும் பக்தியுடனும் ஓர் இலை,பூ ,கனி, நீர் எதை அளித்தாலும் அவன் அங்கீகரிக்கிறான்… செய்கிற காரியம் அத்தனையையும் அவனுக்கு அர்ப்பணம் என்ற உணர்வோடு செய்ய வேண்டும்.. அத்தனையும் அவன் செயல் என்ற பிரக்ஞை இருக்க வேண்டும்
“உந்தினால் அசைகிறேன்;
உதறினால் விழுகிறேன்;
ஊதினால் உயிர் கொள்கிறேன்”
என்பார் இசைக்கவி ரமணன்.
இந்த மனோபாவத்துடன் செயல்கள் ஆற்றும்போது, பாவ புண்ணியங்கள் நம்மமைப் பாதிக்கா.. கர்ம வாசனைகள் சேரா. செயல்கள் நம்மைப் பந்தப்படுத்தா. இத்தகைய துறவு நிலையில் செயல்புரிபவர்கள் இறை நிலையை அடைவது திண்ணம்.
பக்தியுடன் இறைவனை வழிபடுபவர்களில் இறைவன் இருக்கிறான். அவனில் அவர்களும், அவர்களில் அவனுமாக.
”என்றும்நான் உன்னவன் என்றும்நீ என்னவள் என்பதே இதமானது”-மீண்டும் இசைக்கவி.
மகாபாவியாக இருந்தவனும் மாறாத பக்தியுடன் இறைவனை வணங்க ஆரம்பித்து விட்டால் அவனும் உய்வடைகிறான். .  முன்னால் சொன்னாற்போல, இறையருள் என்பது அனைவருக்கும் பிறப்புரிமை. இறைவனிடம் சரணடைந்தவர்கள், நிச்சயம் அடைந்தே தீருவார்கள். பிறப்பு, பாலினம் என்ற பேதங்கள் எதுவும் தடையில்லை.

 நிறைவாக,இறைவனைத் திடமாக மனத்தில் நிறுத்தி, அவனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு வழிபடுபவன் அவனை அடைந்தே தீருவது திண்ணம். இது இறைவன் தரும் உறுதிமொழி.

Thursday 14 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--8

ஒரு சாமான்யனின் கீதை—8
சாகும்பொழுதெனக்குச் சங்கரனே துணையாவான்!
இறைவனை அடைய ஒரே நிச்சய வழி, மரணத் தறுவாயில் அவனை நினைத்துக் கொண்டே இருப்பதுதான். வாழ்நாள் முழுதும்,ஒன்றிய மனத்துடன் இடைவிடாமல் தியானம் செய்து பழகினால்தான் இறுதிக் கணத்தில் இறை நினைப்பு வரும். இல்லாவிட்டால் நமது உலகாயத பந்தங்கள் பாசங்கள், காரியங்கள் எல்லாம்தான் மனத்தில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். அதற்கேற்ற பிறவிதான் வரும். இந்த சந்தர்ப்பத்தில் ஜடபரதர் கதைதான் நினைவுக்கு வருகிறது. முற்றும் துறந்தவர். பற்று நீங்கியவர். இறுதி நாட்களில் ஒரு மானின் மீது பாசம் வைத்தார். மானாய் மறுபிறவி வாய்த்தது.
உலகக் கடமைகளைச் செவ்வனே செய்யும்போதே இறை நினைப்பையும் விடாமல் இருப்போம்.”கரத்திலே கடமை: கருத்திலே கடவுள்” என்பார் என் அன்புக்குரிய பேராசிரியர் அமரர் ரம்போலா மாஸ்கரேனஸ்..
இறைவன் எண்குணத்தான் என்கிறார்கள். சர்வவ்யாபி; புராதனன்; அனைத்தையும் ஆள்பவன் ;அணுவினும் நுண்ணியன்; அனைத்தையும் தாங்குபவன்; எண்ணுதற்கரிய வடிவினன் ஸ்வயம்பிரகாசி; அறியாமை இருள் நீங்கியவன். இந்த குணங்களைத் தியானிப்போம்.
புலன்களை அடக்குவோம். மனத்தை இறைவனில் நிலை பெறச் செய்வோம்.
ஓம் என்னும் பிரணவத்தை உச்சரித்துக் கொண்டிருப்போம்.
இந்த முயற்சிகளல் நாம் வெளிச்சப்பாதையில் இறைவனை அடைவோம்.  வேறு உலக நினைப்புகளிலேயே உழன்று கொண்டிருந்தால், மீண்டும் மீண்டும் பிறவிச் சுழலில் சிக்க வேண்டியதுதான்.
தனிப்பட்ட முறையில் நான் ஒரு பரிசோதனை செய்து பார்த்தேன். பகிர்ந்து கொள்ளத் துணிகிறேன்.
உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்றார் வள்ளுவர். கீதை, இறக்கும் தறுவாயில் எதை நினைக்கிறோமோ அதையே அடைகிறோம்  என்கிறது.
சிலநாட்களாக, உறங்கப்போகும்போது ராம நாமத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அப்படியே உறங்கி விடுகிறேன். மறுநாள் காலை விழிக்கும்போது என்னை அறியாமல் ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டிருப்பதை உணர்கிறேன்.  (கீதை சொலவது சரிதான் போல இருக்கிறது!!!)  


Monday 11 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--7

ஒரு சாமான்யனின் கீதை—7

அறிவும் அனுபூதியும்

ஆயிரத்தில் ஒருவரே இறை அறிவு பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்களில் சிலரே அறிந்துகொள்வதில் வெற்றியும் பெறுகிறார்கள். ஆனால் உள்வாங்கி அனுபவிப்பவர் எங்கோ யாரோ ஒருவர். இந்த அனுபவத்தை அனுபூதி என்று சொல்லலாம். இதனைப் பெற நூலறிவு போதாது. உள்முகப்பயணம் தேவை.
நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகாசம் என்ற பஞ்ச பூதங்களும்
மனம், புத்தி,நான் எனும் உணர்வு ஆகிய மூன்று உட்புலன்களும் ஆகிய எட்டும்  இறைவனின் அடிநிலை இயற்கை. இவற்றில் ஜீவாத்மா உறைந்து நடத்தி செல்கிறது. .அனைத்து ஜீவாத்மாக்களும் பரமாத்மாவில் ஒன்றியுள்ளன. கடலில் அலைகள் போல.
உடல் தலம் என்றால் ஜீவன் தலத்தில் உறைந்து செயல்படுத்தும் தலைவன். அனைத்து ஜீவன்களும் தலம் என்றால் பரமாத்மா, அவற்றுள் உறைந்து செயல்படுத்தும் தலைவன்.
இறைவன் எங்கும் நிறைந்தவன்.. அகத்தகத்துள்ளே உள்நின்றான். உலகம் யாவையும்  தாம் உளவாக்கலும்,நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையான் என்றெல்லாம் சொல்லும்போது புரிந்து கொள்வது கஷ்டமாகத்தான் இருக்கிறது. தெரிந்ததிலிருந்து தெரியாததற்கு இட்டுச் செல்வது போல, கண்ணன் இதுவெல்லாம் இறைவன் என்று பலவற்றைச் சொல்கிறான். அவன் சொல்லும் பட்டியல் விளக்கத்துக்கேயன்றி  அனைத்தையும் உள்ளடக்கியது அல்ல.Illustrative,not exhaustive. எனினும் அவன் வரிகள் கவித்துவமாக அமைந்துள்ளன.
”நீரில் சுவை; சந்திர சூரியர்களின் பிரகாசம்; அனைத்து வேதங்களிலும் ஓம் எனும் பிரணவம்;ஆகாசத்தில் ஓசை; மனிதனில் ஆண்மை; மண்ணில் வாசனை; தீயில் ஜாஜ்வல்யம்; வாழ்வனவற்றில் உயிர்; துறவிகளில் துறவு மாண்புற்றவற்றில் எல்லாம் மாண்பு ஆசாபாசம் நீங்கிய பலவான்களின் வலிமை; அறத்துக்குப் புறம்பில்லாத ஆசை.”
தூய்மை, செயல்துடிப்பு, செயலின்மை இம்மூன்று பண்புகளும் அவனிடமிருந்தே உதிக்கின்றன. மாயை எனப்படும் இம்மூன்று குணங்களினால்  அறிவு மறைக்கப்படுவதனாலேயே மனிதர்கள் இறைவனை உணர்ந்துகொள்வதில்லை. இந்த மாயை அகல ஒரே வழி இறைவனிடம் பரிபூரணமாகச் சரணாகதி ஆவதுதான்.
இறைவனை வழிபடுவோர் நான்கு வகைப்படுவோர். துன்பம் நீங்க வழிபடுவோர், செல்வம் சேர்க்க வழிபடுவோர், இறை நாட்டத்துடன் வழிபடுவோர், ஏற்கெனவே ஞானம் எய்தியவர்கள்.
ஞானிகள் திட மனத்துடன், இறை நினைப்பில் திளைப்பவர்கள். இவர்களே பக்தர்களுள் சிறந்தவர்கள் என்று இறைவன் நேசிக்கிறான்.
கீழ் நிலையில் உள்ளவர்கள் தங்கள் தங்கள் நோக்கத்துக்காக, அததற்குரிய தெய்வங்களை வழிபடுகிறார்கள். சடங்குகள் செய்கிறார்கள். பலன்களும் பெறுகிறார்கள், உண்மையில் அவர்கள் செய்யும் வழிபாடு பரமாத்மனான அந்தப் பேரிறைவனையே சென்றடைகிறது. பலன் தருபவனும் அவனே, இறைவன் அவர்களது நம்பிக்கை குலைய விடுவதில்லை. அவர்களும் முன்னேற்றப் பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
உலக வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டு, தத்தம் கடமைகளை ஆற்றியபடியே இறைவனை அடைய உண்மையாக முயற்சி செய்பவர்களுக்கு என்ன ஆகும்?  சரியான முயற்சியில் ஈடுபட்டு  இறைவனைப் பற்றி,,தன்னைப் பற்றி, கடமைகள் பற்றி, எல்லாம் நன்கு உணர்ந்து செயல்படுவார்கள். வையத்தில் வாழ்வாங்கு வாழ்வார்கள், அவர்கள் மரணம் குறித்து அஞ்சுவதில்லை. விடைபெறும் காலத்தில் அவர்களுக்கு இறை அருள் சித்திக்கும்.


Saturday 9 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--6

ஒரு சாமான்யனின் கீதை—6.
தியானம்  பழகுவோம்!
துறவறம் என்பது காவி உடையையும் கற்றைச் சடையையும் பொருத்தது அல்ல. தன்னல நோக்கின்றி, பலனில் பற்று வைக்காமல் கடமையைச் செய்து கொண்டிருக்கிறவனும் யோகியே; சன்னியாசியே. கர்ம சன்னியாசி. இத்தகைய மனோபாவம் அவனுக்கு ”நெஞ்சிலே உறுதி”யை வளர்த்துத் தருகிறது. இதுவே தியானத்துக்கு ஏற்ற மன நிலை.
தியானத்தின் மூலம் பெறப்படுவது ”அறிவிலே தெளிவு.” ஆடாது அசங்காத மனம். இந்தத் தெளிவு கடமைகளைச் சிறப்பாகச் செய்யும் வல்லமையையும், தியானத்தில் இன்புற்று லயிக்கும் பெற்றியையும் தருகிறது. மனிதனை மேம்படச் செய்யும் உயர்குணங்கள் இயல்பாகக் கைவருகின்றன. யோகத்தில் இவ்வாறு நிலை பெறும்போது புலன்கள் வசப்படுகின்றன. “பொறிகளின் மீது தனி அரசாணை.”
இந்த நிலையை அடைவதற்கு இடைவிடாத,தொய்வில்லாத முயற்சியே தேவை. வரப்பிரசாதமாக எங்கிருந்தோ பெற்று விடலாமென்று நினைப்பதற்கில்லை.  மனிதனிடம் கயமையும், தெய்வத்தன்மையும் இரண்டுமே இருக்கின்றன. கீழ்மையை நோக்கிச் செலுத்தும் எண்ணங்களையும் செயல்களையும் ஒதுக்கித் தள்ளி, தெய்விகத்தை நோக்கிச் செலுத்திடும் எண்ணங்களில் செயல்களில் ஈடுபடுவதிலேயே நமது ஆன்மிக வெற்றி இருக்கிறது. இந்த வகையில் நாமே நமக்குப் பகைவனாகவும் இருக்கலாம். நண்பனாகவும் இருக்கலாம்.  விருப்பத்தேர்வு நம் கையில்தான். தீதும் நன்றும் பிறர் தர வாரா.
இந்த நிலை கைவரப்பெற்றவன் இன்பம்-துன்பம்,குளிர்ச்சி-வெப்பம், புகழ்-இகழ் போன்ற இருமை நிலைகளால் மனம் பாதிக்கப்படுவதில்லை. நண்பர்கள், பகைவர்கள் போன்ற வேறுபாடுகள் தோன்றுவதில்லை. ஒடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குகிறான். அனைத்து உயிர்களிலும் தன்னையே காண்கிறான்.
இந்த நிலையை அடைய தியானம் பயிலவேண்டும். தியானத்துக்கு உகந்த செயல்முறைகள் இருக்கின்றன. குறிப்பாக, தனிமையில், திடமானதும் வசதியானதுமான ஆசனத்தில் அமர்ந்து,கவனத்தை நாசி முனையில் நிலை நிறுத்தி ஒருமுகப்படுத்தவேண்டும். இறைவனிலும் இறை நினைப்பிலும் மனது குவித்து ஆடாது அசங்காத தீபச்சுடர் போல நிலை நிறுத்தலாம்.
இந்த தியானம் என்பது இத்தனை நாள் செய்தோம்; தேர்ச்சி அடைந்து விட்டோ.ம். கோர்ஸ் முடித்தாயிற்று, அடுத்த வேலையைப் பார்க்கப்போகலாம்,  என்று போகிற விஷயம் இல்லை .உடலைத் தூய்மைப் படுத்திக் கொள்ளும் அன்றாட நிகழ்வு போல, அனுதினமும் செய்ய வேண்டிய கடமை இது.
இந்த நிலையில் கிடைக்கக்கூடியது ஓர் ஆனந்த அனுபவம்.”Peace that passeth understanding.
பொதுவாக இந்தப் பயிற்சிகளை ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் செய்ய ஆரம்பிப்போம். ஆனால் கீழ்நிலை மனச்சு, இடைஞ்சல்களையும், கவனச் சிதறல்களையும்  கொண்டு நம்மைத் தடுத்து நிறுத்த முயல்வது சகஜம். திட உறுதியுடன் வெற்றிகொண்டு முன்னேறுவதில்தான்  நம் சமர்த்து இருக்கிறது.

நம்பிக்கை இருக்கிறது. ஏதோ காரணத்தால் பாதியிலே நின்று விடுகிறது; பாதகமில்லை. முயற்சி வீண்போவதில்லை. மறுபிறவியில் நம் வளர்ச்சி கணக்குக்கு வரும். தொடர்முன்னேற்றத்துக்கான சூழ்நிலையில் பிறவி கிட்டும் என்று கண்ணபிரான் உறுதி தருகிறார்!

Friday 8 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--5

ஒரு சாமான்யனின் கீதை—5
கர்மமும் துறவே!

முக்தி, மோட்சம், வீடுபேறு என்பதெல்லாம் விட்டு விடுதலையாகிப் பரமானந்தம் எய்தும் அந்த நிறைநிலையைக் குறிக்கும்.. இந்த நிலையை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று துறவு நிலை. மற்றது செயலாற்றல். இரண்டும் ஒன்றையேதான் குறிக்கும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். எப்படி?
துறவு என்பது பிரச்சினைகளுக்குப் பயந்துபோய் ஓடிப்போகிற செயலைக் குறிப்பதில்லை. அது அனைத்தையும் தியாகம் செய்து இறைவனையே குறிக்கோளாய்க் கொண்டுள்ள நிலை. அதே போல  வீடுபேற்றுக்கு இட்டுச் செய்யும் செயல்புரிதல் என்பது விருப்பு வெறுப்பின்றி, பலனில் பற்று வைத்து அலமராமல், தன்னலம் கருதாமல் பணி புரிவதாகும். சுருங்கச் சொன்னால் இதுதான் கர்ம யோகம் என்பது. இதுவும் சன்யாசமே. கர்ம சன்யாசம்.
இவ்விரண்டில் உயர்ந்தது கர்ம யோகம். இரண்டும் ஒன்றே என்னும்போது, இரண்டும் ஒரே இலக்குக்கு இட்டுச் செல்லும் என்னும்போது, கர்ம யோகம் அப்படி என்ன உசத்தி?
கர்மயோகம் இல்லாமல் சன்யாச நிலையை அடைவது அவ்வளவு சுலபமில்லை. கர்ம யோகத்தின் மூலம் மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டு தியானம் புரிபவன் இறைநிலையை எய்துகிறான் .தன் முனைப்பு இல்லாமல், பிறர்நலம் பேணிப் பணி புரிபவன் மனத்தூய்மை அடைகிறான். தியானம் அவனுக்கு எளிதில் கை வருகிறது.
கர்ம யோகத்தினால் மனதைத் தூய்மைப்படுத்திக்கொண்டு,,புலன்களை வசமாக்கித் தன்னை ஆளும் சமர்த்து எய்தியவனை, அறிவிலே தெளிவு பெற்று அனைத்து உயிர்களையும் தானாகவே காண்பவனைச் செயல்கள் கட்டுப்படுத்துவதில்லை.,
இந்த நிலையை பாரதியார் பாடுகிறார்:
அறிவிலே தெளிவு; நெஞ்சிலே உறுதி,
     அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின்மீது தனியர சாணை,
     பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
     நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!
இத்தகைய நிலையில் பாவங்கள் சுட்டெரிக்கப்படுகின்றன .செயலின் பதிவுகள் ஏற்பட்டு பந்தங்கள் சேர்வதில்லை.
கர்மத்தைக் கர்ம யோகமாகமாகச் செய்வது நம்மைப்போன்ற சாமான்யர்களுக்குக் கூடுவதில்லை. “”நம்மால் ஆகாது” என்று விட்டுவிட வேண்டியதுதானா?
சுவாமி விவேகானந்தர் வழி சொல்லித் தருகிறார்.

“”ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அவ்வப்போது வருகிற வேலையைச் செய்வோம். ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னலம் அற்றவராக ஆகப் பயில்வோம். வேலையைச் செய்வோம்; நம்மை வேலை செய்யத்தூண்டும் சக்தி எது என்று கண்டறிவோம். ஆரம்ப வருஷங்களில் விதிவிலக்கில்லாமல்,நமது நோக்கங்கள் எல்லாமே தன்னலமாக இருப்பதைக் காண்போம். ஆனால் சிறிது சிறிதாக, விடாமுயற்சியினால்,இந்தத் தன்னலம் கரைந்து போகும். நிறைவாக, உண்மையிலேயே தன்னலக் கலப்பில்லாமல் நாம் தன்னலக் கலப்பே இல்லாமல் பணிபுரியக்கூடிய அந்த தினம் வரும். ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள், வாழ்க்கைப் பாதையில் முட்டி மோதிக்கொண்டு செல்கையில் நாம் துளிக்கூட சுயநலக்கலப்பே இல்லதவராக மாறும் அந்த நாள் வரும் என்று நம்புவோம். அந்த நிலை வரும் தருணம், நமது அத்தனை ஆற்றல்களும்  ஒருமுகப்படும். நமக்கே சொந்தமான ஞானம் புலனாகும்.” .

Saturday 2 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--4

ஒரு சாமான்யனின் கீதை—4
அல்லலை அகற்றி அமரவாழ்வு எய்துவோம்!
சமுதாயம் பாழ்பட்டு, தவறிக் கெட்டு, இருளடைந்திருக்கும் வேளையில், நிலைமையைப் புரட்டிப்போட்டுச் சரிசெய்து ஒளியேற்ற கண்டிப்பும் கனிவும் மிக்க தலைவனைக் காலம் நமக்களிப்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறோ.ம். அஃதொப்பவே,மீட்கமுடியாதென்று அச்சப்படும்படி, அதர்மம் மேலோங்கி, தர்மம் அழிவெய்தி சத்தியமும் பொய்யாகும் வேளையில், இறைவன் அவதரித்துத் தீமையை விலக்கி நல்லவர்களைக் காக்கிறான். இது இறைவனின் சத்திய வாக்கு. நாம் சந்தேகப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை.
குறிக்கோளிலாது கெடக்கூடாது. மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதும் நமக்கே சொந்தமான இறைநிலையை அடைவதுமே வாழ்க்கையின் குறிக்கோள். அடைவது என்று சொல்வதுகூடத் தவறு. உணர்ந்துகொள்வது என்று சொல்ல வேண்டும்.
இது எப்படி?
உழைப்பது,அல்லது செயல்புரிவது என்று சொல்லும்போது சில சுவையான சிந்தனைகள்.
செயல்புரியாமல் செயல்புரிவது.
செயல்புரிந்து செயல் புரிவது.
செயல்புரிந்து செயல்புரியாமல் இருப்பது.
என்று செயலை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
நான் செயல்களையெல்லாம் துறந்துவிட்டேன் என்று குகையிலோ கோவில் மூலையிலோ இமயமலைச் சாரலிலோ அமர்ந்து கொண்டிருந்தாலும், மனதுக்குள் பாசம், பந்தம், காமம், கோபம், ஆசைவேகங்கள் என்று மெளனப்புயல் வீசிக்கொண்டே இருக்கும். இது முதல் வகை.
இரண்டாவது வகை, பயனில் ஆசையும் பற்றும் வைத்துச் செயல் புரிவது.
 மூன்றாவது வகையே, தீவிரமாகச் செயல் புரிந்தாலும், மனம் சமநிலை மாறாமல், அமைதியுடன் இறைவனில் ஆழ்ந்திருப்பது. இதுவே ஞானநெறியில் செலுத்தும் செயல்பாடு.
இறைவனை வழிபடுவது ஒரு வழி. அவரவர் இயல்புக்கேற்ப உருவமாகவோ, அருவமாகவோ வழிபடலாம். அவரவருக்கு விருப்பமான தெய்வ வடிவில் வழிபடலாம். அவரவர் தமதமதறிவறி வகை வழிபட்டு இறைவனை அடைய நிற்பர். பலன் கருதி வழிபட்டாலும் கூட, இறைவன் அவர்களைப் புறக்கணிப்பதில்லை. அவரவர் நிலைக்கேற்ப இரங்கி வந்து அருள் புரிகிறான்.
இவற்றைத் தவிர தான தருமங்கள்,ஆன்மிகப் பெரியவர்களை அணுகிப் பணிந்து அவர்கள் மூலம் ஆன்மிக அறிவு பெறுதல், ஆன்மிக நூல்களைப் படித்தல், மூச்சுப்பயிற்சி, மக்கள் பணி இப்படிப் பலவகையிலும் ஞான முயற்சிகள் மேற்கொள்ளலாம்.
ஒன்று தெளிவாக்கிக்கொள்வோம். இவை அனைத்தும் வழிகளே தவிர இலக்கு அல்ல.,
நம்பிக்கையுடனும் சிரத்தையுடனும், இந்த வழிகளில் ஏதொன்றாவதையாவது, பலவற்றையாவது அனுஷ்டித்தால், நமது தகுதி நிலைக்கும் முயற்சிக்கும் ஏற்ப காலக்கிரமத்தில் முக்தி, விடுதலை என்று பலபடியும் சொல்லப்படுகிற இறை நிலையை அடையலாம். இந்த நிலையை அடையும்போது, செயல்கள் நம்மைப் பந்தப்படுத்தா. போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்.
ஒரு சந்தேகம் வரலாம். இறைநிலை என்கிறோம். இறைவனை அடைவது என்கிறோம்.. இரண்டும் ஒன்றா?
இறைவன் என்பது அனைத்திலும் ஊடுருவியிருக்கும், அழிவே இல்லாத, ஆதியும் அந்தமுமில்லாத தத்துவம். இறை நிலை எய்துவது என்பதும், இறைவனை அடைவது என்பதும் ஒன்றே.
கண்னன் என்று சொன்னாலும், கந்தன் என்று சொன்னாலும்,. அன்னை என்று சொன்னாலும் அப்பன் என்று சொன்னாலும் குறிப்பிடுவது அந்தப் பரம்பொருள் தத்துவத்தையே.
எனக்குப் புரிந்தது இதுதான். ஆழ்ந்த தத்துவார்த்த சமாசாரங்கள் எல்லாம் என் சின்ன மூளைக்கு அப்பாற்பட்டவை..
இந்த சந்தர்ப்பத்தில் பாரதியின் பாடல் ஒன்றை நினைவு கூர்கிறேன்.
ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்
கருநிறம் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்!