ஒரு
சாமான்யனின் கீதை—10
குறையொன்றுமில்லாத
கோவிந்தா!
கண்ணபிரான்,
அர்ஜுனனின் நலன் கருதி, அவன் தகுதியையும் கருதி தனது மகிமைகளை அவனிடம் விரித்துரைக்கிறான்,
அவன்
பிறவா யாக்கைப் பெரியோன். உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும் நிலை பெறுத்தலும் ,நீக்கலும்,
நீங்கலா இயல்புடையவன். மயர்வறு மதியுடன் இதை உணர்ந்து கொள்பவன் தன் பாவங்கள் எல்லாம்
நீங்கப் பெறுகிறான்.
புத்தி,
ஞானம், மயக்கமின்மை, பொறை, சத்தியம், சாந்தம், இன்பம், துன்பம்,பிறப்பு, இறப்பு ,அச்சம், அஞ்சாமை, அஹிம்சை, மனதின் சமநிலை, திருப்தி, விரதம்,
புகழ்ச்சி, இகழ்ச்சி, இத்தனை குணங்களும் அவனிடமிருந்தே பிறக்கின்றன. அவன் மனதிலிருந்து
தோன்றிப் பிறந்தனவே அத்தனை உயிரிகளும்.
சரி,
இவை எல்லாம் தெரிந்து கொள்வதினால் என்ன பயன்?
இவற்றை
நன்கு உணர்ந்து கொண்டவன், தான் இறைவனிலிருந்தும் வேறானவன் இல்லை என்று உணரும் விவேகம்
பெறுகிறான். பக்தியில் அவன் தடுமாறுவதில்லை. மனம் நிறைந்து இறைவனை வழிபடுகிறான். இறை
பக்தியில் ஊறித் திளைக்கிறான். இறைவனின் பெருமைகளை ஒத்த மனமுடைய பக்தர்களுடன் பேசிக்
களித்து உறவாடுகிறான். நிறைந்த மனத்தோடு ஆனந்தமாக இருக்கிறான்.
இவனுடைய
பக்திக்கு இறைவனுடைய எதிர்வினை?
தன்னை
நன்கு உணரும் விவேகத்தைத் தருகிறான். தனது மகிமைகளை அவன் மேலும் மேலும் அறிந்து
பரவசமாக வைக்கிறான். ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்லுவார். இருட்டறையில் ஒரு சின்ன துவாரம்
வழியாக வெளிச்சம் வருகிறது. துவாரம் பெரிதாகப் பெரிதாக, வெளிச்சம் அதிகரிக்கிறது. திரை
முற்றுமாக விலகியதும் முழு வெளிச்சம் தான். பக்தனின் சாதனை முன்னேற முன்னேற, அவனுக்கு
இறைப் பிரகாசம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அறியாமை இருள் நீங்கி அவன் விவேக வெளிச்சம்
அடையப் பெறுகிறான்.
தொடர்ந்து
இறைவன் தனது மகிமைகளை விஸ்தாரமாகச் சொல்லிக்கொண்டே போகிறான். ஒட்டுமொத்தமாகவும் தனித்தனி
நிலையிலும் அடுக்கிக் கொண்டே போகிறான்.
கடைசியில்
,முத்தாய்ப்பாகச் சொல்கிறான், “ இவ்வளவு விரிவாகத் தெரிந்து கொள்வதனால் என்ன பயன் அர்ஜுனா?
என்னில் ஒரு சிறு பகுதியாலேயே இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் நான் தாங்குகிறேன் என்பதை
மட்டும் புரிந்துகொள்!”
அர்ஜுனனுக்கு
இத்தனையும் பூரணப் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. மனத்தின் எல்லை கடந்து விரிந்த
விபூதி இது. “இத்தனை சொல்கிறாயே கண்ணா! அத்தனையையும் நான் கண்ணாரக் காணும்படிக் காட்டித்தான்
விடேன்!”
கண்ணன்
கருணை கூர்ந்து அவனுக்கு ஞானக்கண்ணைக் கொடுத்துத் தனது விஸ்வ ரூப தரிசனத்தைக் காட்டுகிறான்
.தெய்வங்கள், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மா, ரிஷிகள், தேவ நாகங்கள், இறைவனின்
பல்வேறு வடிவங்கள்,புஜங்கள், வயிறு, அடியும் நடுவும் முடியும் காண முடியாத பிரம்மாண்டமான
பிரபஞ்ச வடிவு, சங்கு சக்ரம், கிரீடம், கதை, ஜாஜ்வல்யமான நெருப்பு, சூரியன், இத்தனையும்
கண்டு இறைவனின் பூரணத் தன்மையைத் தெரிந்துகொள்கிறான் அர்ஜுனன். இன்னும் பல பல காட்சிகளைக்
காண்கிறான். ஆனாலும் இந்தக் காட்சி, அவனை விதிர்விதிர்க்க வைக்கிறது. ஆச்சர்யத்தோடு
அச்சம் பற்றிக்கொள்கிறது.. கண்ணனிடம் கைகூப்பிச் சொல்கிறான். ‘கண்ணா! உன் மகிமையைப்
பூரணமாகப் புரிந்து கொண்டேன். உன்னை முன்புறமும், பின்புறமும் அனைத்துத் திக்குகளிலும்
நமஸ்கரிக்கின்றேன். உன்னை மிகச் சாதாரணனாக
நினைத்து, விளையாட்டாகப் பலமுறை கிண்டல் செய்திருக்கிறேன். சர்வ சாதாரணமாக “ஏ! கிருஷ்ணா
என்றெல்லாம் கூப்பிட்டிருக்கிறேன். அறியாமை! மன்னித்து விடு”
கறவைகள்
பின்சென்று கானஞ்சேர்ந் துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப்
பிறவி
பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு
உறவேல்
நமக்கிங் கொழிக்க வொழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச்
சிறுபே
ரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்,
என்று
பாடிய பாவைநாச்சியார் நம் கண்முன் வருகிறார்!
அர்ஜுனன் தொடர்கிறான்: கண்டறியாதன கண்டு மகிழ்ந்து
விட்டேன். அச்சமாகவும் இருக்கிறது. எனக்கு சங்கு சக்ர கதாபாணியான அந்த சௌந்தர்ய வடிவைக்காட்டு!
அடுத்து, நண்பனாய்ப் பழகிய அந்த சௌஜன்ய ரூபத்தைக்காட்டு!
இறைவன்
கருணையுடன் தன் இயல்பான வடிவைக் காட்டி அருள்கிறான்!’!”
நிறைவாகக்
கண்ணன் சொன்னது நமக்கும் பாடம்..
ரொம்பக்
குழப்பிக்கொள்ள வேண்டாம்.
செய்கிற
பணியைக் கண்ணனுக்காகச் செய்வோம்; அவனே பரமாத்மா என்று கொள்ளுவோம். பக்தி செலுத்துவோம்;
பற்றுகளை விலக்குவோம் எவரிடமும் வெறுப்புக் காட்டாமல் இருப்போம்!
பரமபதம்
நமக்குச் சொந்தம்!
No comments:
Post a Comment