Saturday 2 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--4

ஒரு சாமான்யனின் கீதை—4
அல்லலை அகற்றி அமரவாழ்வு எய்துவோம்!
சமுதாயம் பாழ்பட்டு, தவறிக் கெட்டு, இருளடைந்திருக்கும் வேளையில், நிலைமையைப் புரட்டிப்போட்டுச் சரிசெய்து ஒளியேற்ற கண்டிப்பும் கனிவும் மிக்க தலைவனைக் காலம் நமக்களிப்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறோ.ம். அஃதொப்பவே,மீட்கமுடியாதென்று அச்சப்படும்படி, அதர்மம் மேலோங்கி, தர்மம் அழிவெய்தி சத்தியமும் பொய்யாகும் வேளையில், இறைவன் அவதரித்துத் தீமையை விலக்கி நல்லவர்களைக் காக்கிறான். இது இறைவனின் சத்திய வாக்கு. நாம் சந்தேகப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை.
குறிக்கோளிலாது கெடக்கூடாது. மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதும் நமக்கே சொந்தமான இறைநிலையை அடைவதுமே வாழ்க்கையின் குறிக்கோள். அடைவது என்று சொல்வதுகூடத் தவறு. உணர்ந்துகொள்வது என்று சொல்ல வேண்டும்.
இது எப்படி?
உழைப்பது,அல்லது செயல்புரிவது என்று சொல்லும்போது சில சுவையான சிந்தனைகள்.
செயல்புரியாமல் செயல்புரிவது.
செயல்புரிந்து செயல் புரிவது.
செயல்புரிந்து செயல்புரியாமல் இருப்பது.
என்று செயலை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
நான் செயல்களையெல்லாம் துறந்துவிட்டேன் என்று குகையிலோ கோவில் மூலையிலோ இமயமலைச் சாரலிலோ அமர்ந்து கொண்டிருந்தாலும், மனதுக்குள் பாசம், பந்தம், காமம், கோபம், ஆசைவேகங்கள் என்று மெளனப்புயல் வீசிக்கொண்டே இருக்கும். இது முதல் வகை.
இரண்டாவது வகை, பயனில் ஆசையும் பற்றும் வைத்துச் செயல் புரிவது.
 மூன்றாவது வகையே, தீவிரமாகச் செயல் புரிந்தாலும், மனம் சமநிலை மாறாமல், அமைதியுடன் இறைவனில் ஆழ்ந்திருப்பது. இதுவே ஞானநெறியில் செலுத்தும் செயல்பாடு.
இறைவனை வழிபடுவது ஒரு வழி. அவரவர் இயல்புக்கேற்ப உருவமாகவோ, அருவமாகவோ வழிபடலாம். அவரவருக்கு விருப்பமான தெய்வ வடிவில் வழிபடலாம். அவரவர் தமதமதறிவறி வகை வழிபட்டு இறைவனை அடைய நிற்பர். பலன் கருதி வழிபட்டாலும் கூட, இறைவன் அவர்களைப் புறக்கணிப்பதில்லை. அவரவர் நிலைக்கேற்ப இரங்கி வந்து அருள் புரிகிறான்.
இவற்றைத் தவிர தான தருமங்கள்,ஆன்மிகப் பெரியவர்களை அணுகிப் பணிந்து அவர்கள் மூலம் ஆன்மிக அறிவு பெறுதல், ஆன்மிக நூல்களைப் படித்தல், மூச்சுப்பயிற்சி, மக்கள் பணி இப்படிப் பலவகையிலும் ஞான முயற்சிகள் மேற்கொள்ளலாம்.
ஒன்று தெளிவாக்கிக்கொள்வோம். இவை அனைத்தும் வழிகளே தவிர இலக்கு அல்ல.,
நம்பிக்கையுடனும் சிரத்தையுடனும், இந்த வழிகளில் ஏதொன்றாவதையாவது, பலவற்றையாவது அனுஷ்டித்தால், நமது தகுதி நிலைக்கும் முயற்சிக்கும் ஏற்ப காலக்கிரமத்தில் முக்தி, விடுதலை என்று பலபடியும் சொல்லப்படுகிற இறை நிலையை அடையலாம். இந்த நிலையை அடையும்போது, செயல்கள் நம்மைப் பந்தப்படுத்தா. போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்.
ஒரு சந்தேகம் வரலாம். இறைநிலை என்கிறோம். இறைவனை அடைவது என்கிறோம்.. இரண்டும் ஒன்றா?
இறைவன் என்பது அனைத்திலும் ஊடுருவியிருக்கும், அழிவே இல்லாத, ஆதியும் அந்தமுமில்லாத தத்துவம். இறை நிலை எய்துவது என்பதும், இறைவனை அடைவது என்பதும் ஒன்றே.
கண்னன் என்று சொன்னாலும், கந்தன் என்று சொன்னாலும்,. அன்னை என்று சொன்னாலும் அப்பன் என்று சொன்னாலும் குறிப்பிடுவது அந்தப் பரம்பொருள் தத்துவத்தையே.
எனக்குப் புரிந்தது இதுதான். ஆழ்ந்த தத்துவார்த்த சமாசாரங்கள் எல்லாம் என் சின்ன மூளைக்கு அப்பாற்பட்டவை..
இந்த சந்தர்ப்பத்தில் பாரதியின் பாடல் ஒன்றை நினைவு கூர்கிறேன்.
ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்
கருநிறம் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்! 

No comments:

Post a Comment