ஒரு
சாமான்யனின் கீதை—6.
தியானம் பழகுவோம்!
துறவறம்
என்பது காவி உடையையும் கற்றைச் சடையையும் பொருத்தது அல்ல. தன்னல நோக்கின்றி, பலனில்
பற்று வைக்காமல் கடமையைச் செய்து கொண்டிருக்கிறவனும் யோகியே; சன்னியாசியே. கர்ம சன்னியாசி.
இத்தகைய மனோபாவம் அவனுக்கு ”நெஞ்சிலே உறுதி”யை வளர்த்துத் தருகிறது. இதுவே தியானத்துக்கு
ஏற்ற மன நிலை.
தியானத்தின்
மூலம் பெறப்படுவது ”அறிவிலே தெளிவு.” ஆடாது அசங்காத மனம். இந்தத் தெளிவு கடமைகளைச்
சிறப்பாகச் செய்யும் வல்லமையையும், தியானத்தில் இன்புற்று லயிக்கும் பெற்றியையும் தருகிறது.
மனிதனை மேம்படச் செய்யும் உயர்குணங்கள் இயல்பாகக் கைவருகின்றன. யோகத்தில் இவ்வாறு நிலை
பெறும்போது புலன்கள் வசப்படுகின்றன. “பொறிகளின் மீது தனி அரசாணை.”
இந்த
நிலையை அடைவதற்கு இடைவிடாத,தொய்வில்லாத முயற்சியே தேவை. வரப்பிரசாதமாக எங்கிருந்தோ
பெற்று விடலாமென்று நினைப்பதற்கில்லை. மனிதனிடம்
கயமையும், தெய்வத்தன்மையும் இரண்டுமே இருக்கின்றன. கீழ்மையை நோக்கிச் செலுத்தும் எண்ணங்களையும்
செயல்களையும் ஒதுக்கித் தள்ளி, தெய்விகத்தை நோக்கிச் செலுத்திடும் எண்ணங்களில் செயல்களில்
ஈடுபடுவதிலேயே நமது ஆன்மிக வெற்றி இருக்கிறது. இந்த வகையில் நாமே நமக்குப் பகைவனாகவும்
இருக்கலாம். நண்பனாகவும் இருக்கலாம். விருப்பத்தேர்வு
நம் கையில்தான். தீதும் நன்றும் பிறர் தர வாரா.
இந்த
நிலை கைவரப்பெற்றவன் இன்பம்-துன்பம்,குளிர்ச்சி-வெப்பம், புகழ்-இகழ் போன்ற இருமை நிலைகளால்
மனம் பாதிக்கப்படுவதில்லை. நண்பர்கள், பகைவர்கள் போன்ற வேறுபாடுகள் தோன்றுவதில்லை.
ஒடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குகிறான். அனைத்து உயிர்களிலும் தன்னையே காண்கிறான்.
இந்த
நிலையை அடைய தியானம் பயிலவேண்டும். தியானத்துக்கு உகந்த செயல்முறைகள் இருக்கின்றன.
குறிப்பாக, தனிமையில், திடமானதும் வசதியானதுமான ஆசனத்தில் அமர்ந்து,கவனத்தை நாசி முனையில்
நிலை நிறுத்தி ஒருமுகப்படுத்தவேண்டும். இறைவனிலும் இறை நினைப்பிலும் மனது குவித்து
ஆடாது அசங்காத தீபச்சுடர் போல நிலை நிறுத்தலாம்.
இந்த
தியானம் என்பது இத்தனை நாள் செய்தோம்; தேர்ச்சி அடைந்து விட்டோ.ம். கோர்ஸ் முடித்தாயிற்று,
அடுத்த வேலையைப் பார்க்கப்போகலாம், என்று போகிற
விஷயம் இல்லை .உடலைத் தூய்மைப் படுத்திக் கொள்ளும் அன்றாட நிகழ்வு போல, அனுதினமும்
செய்ய வேண்டிய கடமை இது.
இந்த
நிலையில் கிடைக்கக்கூடியது ஓர் ஆனந்த அனுபவம்.”Peace that passeth understanding.
பொதுவாக
இந்தப் பயிற்சிகளை ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் செய்ய ஆரம்பிப்போம். ஆனால் கீழ்நிலை
மனச்சு, இடைஞ்சல்களையும், கவனச் சிதறல்களையும்
கொண்டு நம்மைத் தடுத்து நிறுத்த முயல்வது சகஜம். திட உறுதியுடன் வெற்றிகொண்டு
முன்னேறுவதில்தான் நம் சமர்த்து இருக்கிறது.
நம்பிக்கை
இருக்கிறது. ஏதோ காரணத்தால் பாதியிலே நின்று விடுகிறது; பாதகமில்லை. முயற்சி வீண்போவதில்லை.
மறுபிறவியில் நம் வளர்ச்சி கணக்குக்கு வரும். தொடர்முன்னேற்றத்துக்கான சூழ்நிலையில்
பிறவி கிட்டும் என்று கண்ணபிரான் உறுதி தருகிறார்!
யோக ப்ரஷ்டன் அடுத்த பிறவியில் தியானத்திற்கேற்ற சூழலில் பிறப்பானாம்.
ReplyDelete