அவரவர் தமதமர் அறிவறி வகைவகை.....
பரம்பொருளைப் பற்றிய அறிவு, தூய மனத்தினருக்கே கிட்டக்கூடியது. மற்றவர்களுக்கு அது பூட்டி வைத்திருக்கும்
பொக்கிஷப் பேழை .”தூய மனத்தினர் பேறு பெற்றோர்
எனத் தேவ மகன் சொன்னான்” என்று கண்ணதாசன் இயேசு காவியத்தில் சொன்னார். இது ஒருபுறம்
இருக்க, இந்த அறிவு அனைத்து ஜீவன்களுக்கும் பிறப்புரிமை. அனைவரும் அவரவர் தகுதி நிலைக்கேற்ப,
அவரவர்க்கு உரிய காலத்தில் பெற்றுத்தான் ஆக வேண்டும். பாவி அல்லது புண்ணியவான், குலம்,
பாலினம் என்ற வேறுபாடு கிடையாது. இந்தத் தகுதியை
அடைய மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் .சிரத்தை வேண்டும். அவ்வளவே.
இந்தப்
பிரபஞ்சம் முழுவதும் இறைவன் நிறைந்திருக்கிறான். அனைத்தும் அவனுள் அடக்கம். எனினும்
அவன் அவற்றுள் அடங்கி விடுவதில்லை. .அலைகளுக்குள் கடல் அடங்கி விடுவதில்லை என்பது போல.
அவன் பிரபஞ்சத்தைப் பிறப்பிக்கிறான் ;காக்கிறான்; அழிக்கிறான்; மீண்டும் பிறப்பிக்கிறான்.
அவை அநித்யமானவை. அவன் நித்ய வஸ்து..
தோன்றா
நிலையிலுள்ள இறைவன், மானுட வடிவிலும் அவதரிக்கிறான். எனினும் அறிவிலிகள் அவதாரங்களின்
தெய்விகத்தைப் புரிந்துகொள்வதில்லை. ஸ்ரீராமகிருஷ்ணர்
சொல்லுவார், யானைக்கு புறத்தில் தந்தமும், உள்ளே ஒரு பல்வரிசையும் உள்ளது போல் இறைவனின்
அவதாரங்களும் புறத்தே மானுட வேஷம் தரித்தும், அகத்துள், உலகாயதத்தைத் தாண்டியவர்களாகவும்,
கர்மச் சுழலில் சிக்கிக் கொள்ளாதவர்களாகவுமே இருக்கிறார்கள். “லீலா மானுஷ வேஷதாரி”
என்பது வழக்கு.
சான்றோர்கள்
,இறைவனை அனைத்துக்கும் மூலம், அழிவே இல்லாதவன் என்று அறிந்து. ஒரே சிந்தையாக, அவனை
வழிபடுகிறார்கள். அவன் புகழ் பாடிக் களிக்கிறார்கள்; உறுதியாக விரதங்கள் மேற்கொள்கிறார்கள்;
அடிபணிகிறார்கள்; துளியும் தொய்வில்லாமல் பக்தி செலுத்துகிறார்கள்.
மற்றும்
சிலர், இறைவன் வேறு, இந்த உலகமும், ஜீவாத்மர்களும் அவனின்று வேறானவை என்ற கொள்கையில்
நின்று வழிபடுகிறார்கள்..
வேறு
சிலர் இந்திர லோகம் ஆளும் அச்சுவைக்காகவே அவனை வழிபடுகிறார்கள்; அதனை அடையவும் பெறுகிறார்கள்.
ஆனால், தக்க காலம் முடிந்ததும் பிறவிச் சுழலுக்கு வந்து விடுகிறார்கள்.
வேறு
நோக்கமே இன்றி ,இறைவனிடத்தில் அந்நியமற்ற பக்தி செலுத்துபவர்களுக்குத் தேவையானவற்றை
அளிப்பதும், பெற்றதைக் காத்துக் கொடுப்பதும் இறைவன் தன் பொறுப்பாக எடுத்துக்கொள்கிறான்.
உலகாயதத்திலும் சரி;ஆன்மிகத்திலும் சரி.
யார்
எவ்வாறு வழிபட்டாலும் அவ்வாறே அவர்களை ஏற்றுக்கொள்கிறான் இறைவன். அவரவர் தமதமதறிவகை
வகை அடைய நின்றனரே!
இறைவனை
வழிபடுவது என்பது அவ்வளவு கஷ்டமான விஷயம் இல்லை. மனத்தூய்மையுடனும் பக்தியுடனும் ஓர்
இலை,பூ ,கனி, நீர் எதை அளித்தாலும் அவன் அங்கீகரிக்கிறான்… செய்கிற காரியம் அத்தனையையும்
அவனுக்கு அர்ப்பணம் என்ற உணர்வோடு செய்ய வேண்டும்.. அத்தனையும் அவன் செயல் என்ற பிரக்ஞை
இருக்க வேண்டும்
“உந்தினால்
அசைகிறேன்;
உதறினால்
விழுகிறேன்;
ஊதினால்
உயிர் கொள்கிறேன்”
என்பார்
இசைக்கவி ரமணன்.
இந்த
மனோபாவத்துடன் செயல்கள் ஆற்றும்போது, பாவ புண்ணியங்கள் நம்மமைப் பாதிக்கா.. கர்ம வாசனைகள்
சேரா. செயல்கள் நம்மைப் பந்தப்படுத்தா. இத்தகைய துறவு நிலையில் செயல்புரிபவர்கள் இறை
நிலையை அடைவது திண்ணம்.
பக்தியுடன்
இறைவனை வழிபடுபவர்களில் இறைவன் இருக்கிறான். அவனில் அவர்களும், அவர்களில் அவனுமாக.
”என்றும்நான்
உன்னவன் என்றும்நீ என்னவள் என்பதே இதமானது”-மீண்டும் இசைக்கவி.
மகாபாவியாக
இருந்தவனும் மாறாத பக்தியுடன் இறைவனை வணங்க ஆரம்பித்து விட்டால் அவனும் உய்வடைகிறான்.
. முன்னால் சொன்னாற்போல, இறையருள் என்பது அனைவருக்கும்
பிறப்புரிமை. இறைவனிடம் சரணடைந்தவர்கள், நிச்சயம் அடைந்தே தீருவார்கள். பிறப்பு, பாலினம்
என்ற பேதங்கள் எதுவும் தடையில்லை.
நிறைவாக,இறைவனைத் திடமாக மனத்தில் நிறுத்தி, அவனையே
ஒரே குறிக்கோளாகக் கொண்டு வழிபடுபவன் அவனை அடைந்தே தீருவது திண்ணம். இது இறைவன் தரும்
உறுதிமொழி.
நின்னைச் சரண் அடைந்தேன் கண்ணம்மா
ReplyDeleteநின்னைச் சரண் அடைந்தேன்!
பொன்னைப் பொருளை புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத்த த்காதென்று
நின்னைச்சரண் அடைந்தேன் !!