Wednesday 30 August 2017

ஒரு சாமான்யனின் கீதை--3.

ஒரு சாமான்யனின் கீதை—3.
வேள்வி.
நமக்கு வாய்த்த கடமைகளைச் சிரத்தையுடன் செய்யவேண்டும். பிறரையும் அவர்கள் செய்கிற பணிகளையும் பார்த்து ஒப்பிட்டுக்கொண்டு மனத்தைச் சிதறவிடவேண்டாம். நமது பணியை  முழுக் கவனத்தையும்  செலுத்தி. முழுத் திறமையையும் கொண்டு சிறப்பாகச் செய்வோம்.
இன்னொரு முக்கிய விஷயம் இருக்கிறது அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி ஆற்ற வேண்டும். .சமுதாய நலனுக்கான அர்ப்பணிப்பு. இதுவே ஒரு வேள்வி. ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்கிறோம்; வேள்வி .நமது அறிவையும் அனுபவத்தையும் பிறருக்குப் பயன்படும் வகையில் பகிர்ந்து கொள்கிறோம்; வேள்வி. செல்வத்தை வறியவர்களுக்குப் பயன்படும் வகையில் கொடுக்கிறோம்; வேள்வி.. . பேரறிவாளன் திருவாக நமது செல்வம், ஊருணி நீர் நிறைந்தாற்போல் பலருக்கும் பயன்படுகிறது. இரைக்கிற கிணறு மேலும் மேலும் சுரக்கிறது. நம்மிடமுள்ள செல்வத்தையும்,ஆதாரங்களையும் கொண்டு சமுதாயத்தில் புதிய செல்வம் உருவாக்கப் பணி புரிகிறோம்; வேள்வி. இப்படி முனைந்து செயல்புரிகையில், தெய்வமே நமது பணிகளுக்குத் துணை நிற்கும்  ” மடி செற்றுத் தான் முந்துறும்”.
இப்படி அர்ப்பணிப்புடன் செய்யும் வேள்வியினால், நமக்கு நலம் பெருகுகிறது;. ஈத்துவக்கும் இன்பம் என்னும் பேரின்பம் கிடைக்கிறது. நமது அறிவும், திறமைகளும் வளர்கின்றன. நமது இதயம் புனிதமாகிறது. இறைவனுக்கு நெருங்கி வருகிறோம்  பெறுகிறவனை விடக் கொடுக்கிறவனே பாக்கியவான்.
சமுதாயத்திலிருந்து பலவகையிலும் பலவும் பெற்றுக் கடன் பட்டிருக்கிறோம். பெற்றதற்குமேல் திருப்பிக் கொடுத்தாக வேண்டும் . கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்க்கையில் நாம் சமுதாயத்துக்கு கடனாளியாக இருக்கக்க் கூடாது. கொடையாளியாகத்தான் இருக்க வேண்டும்.

இப்படி இல்லாமல், நான் எனக்கு என்றே நினத்தவாறு எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு தனக்காக மட்டுமே வாழ்கிறவன் சமுதாயத் திருடன். அவன் பிறந்ததும் வாழ்வதும் வீண்.,

No comments:

Post a Comment