Tuesday, 8 August 2017

பணியின் மூலம் பேரானந்தம் (15)


விட்டு விடுதலையாகி நிற்போம்!
இதுவரை நாம் பார்த்து வந்த விஷயங்களைத்தான் நமது மரபில் கர்மயோகம் என்கிறார்கள். ஸ்வதர்மம்,  சமநிலையே யோகம், , கடமையில் செம்மையே யோகம் என்றெல்லாம் கீதை கூறுகிறது.,
சந்தோஷத்தை  நோக்கித்தான் நாம் அனைவரும் பணி புரிந்து கொண்டிருக்கிறோம் .இந்த சந்தோஷம் வெளிப் பொருள்களில், சூழ்நிலையில், பிறரின் நடத்தையில் இருக்கிறது என்று எண்ணிக் கானல் நீரை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான சந்தோஷம்-பரமானந்தம்- பேரானந்தம் என்பதெல்லாம் நமக்குள்ளேயே இருக்கிறது. அதை உணர்ந்து அனுபவிக்க முயல்வதே நமது பணி. இதை எல்லாப் பெரியவர்களும் நூல்களும் சொல்லி இருப்பதால் நாம் மேலும் விரித்துரைக்க முனைவது, தெரிந்த விஷயத்தையே திருப்பிச் சொல்வதாகும்.
பந்தபாசங்கள் என்ற எந்தச் சங்கிலிகளின் பிணைப்பும் இல்லாமல் நாம் ஆனந்தமாக வாழ்வதே முக்தி நிலை. இந்த நிலையை மரணத்துக்குப் பின் தான் வேறு ஏதோ லோகத்துக்குச் சென்றுதான் அடையவேண்டுமென்பதில்லை. இருந்த இடத்திலேயே அனுபவிக்க  வேண்டிய நிலை இது. பாரதியார் இந்த முக்தி நிலையைத்தான் விட்டு விடுதலை ஆகி நிற்றல் என்பார். இந்த நிலையில்தான் “எத்தனை கோடி இன்பம்!” என்று ஆனந்திக்க முடியும்.

நிறைநிலை அடைந்த இலட்சிய மனிதன் எப்படி இருப்பான்? தீவிரமான செயல்பாடுகள் இடையேயும் பாலைவனத்தின் அமைதியையும் ஏகாந்தத்தையும் காண்பான். ஆழ்ந்த அமைதியிலும் ஏகாந்தத்திலும் தீவிரமான செயல்பாட்டைக் காண்பான்.பெரிய நகரத்தின் ஆரவாரமும் சந்தடியும் நிறைந்த வீதிகளில் போய்க்கொண்டிருந்தலும் எந்த சப்தமும் நுழையாத குகைக்குள் அமர்ந்திருப்பது போன்ற பேரமைதியில் அவன் மனம் ஆழ்ந்திருக்கும். அதன் இடையேயும் அவன் தீவிரமான செயலிலும் ஈடுபட்டிருப்பான்.. மனதின் சமநிலை குன்றாமல் இருப்பான். இந்த நிலையை அடைய நமது நூல்கள் மூன்று வழிகளைச் சொல்கின்றன. தத்துவ விசாரம் (ஞான யோகம்),இறைவனிடம் அன்பு (பக்தியோகம்)  கர்ம யோகம் ஆகியன. கர்மயோகத்தைப் பற்றித்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்..

No comments:

Post a Comment