Wednesday 2 August 2017

பணியின் மூலம் பேரானந்தம் (13)


இரண்டு சின்ன, பெரிய விஷயங்கள்.

கடமையில் வெற்றி பெற சுவாமிஜி இரண்டு  “சின்ன” விஷயங்களைச் சொல்வார். அவை மிகவும் முக்கியமானவை.
“நன்றே செய்க; இன்றே செய்க!” என்பது ஒன்று.
நல்லது, சரி, செய்யவேண்டும் என்று நமக்குத் தோன்றுகிற விஷயத்தை உடனே செய்து விட வேண்டும். தள்ளிப்போடல் காலத்திருடன் என்று சொல்லக் கேட்டிருக்கிறோமல்லவா?
இதனால்  என்ன பலன் கி.டைக்கும் என்று யோசித்து யோசித்துச் செயல் படுபவன் ஒரு காரியத்தையும் சாதிக்க மாட்டான். இது நல்லது உண்மையானது என்று ஒரு காரியத்தைப் புரிந்து கொண்டால் அதை உடனே செய்து முடித்து விட வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பதில் என்ன லாபம்? இதை Analysis Paralysis என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் ,நாம் நல்லதொரு பணியை எடுத்துச் செய்யும்போது, எதிர்மறையாகப் பேசி நம்மைத் தடுமாற வைக்கும் சக்திகள் நம்மைச் சுற்றியே நிறைய இருக்கும்.  “வெட்டி வேலை; உன்னால் முடியுமா? ஆழம் தெரியாமல் காலை விடாதே! உன்னை விடப் பெரிய பெரிய பிரஹஸ்பதிகள் எல்லாம் முயன்று தோற்றுப் போன விஷயம்” என்று பலகுரல் மன்னர்களாக இந்த எதிர்மறை உணர்வுகள் வடிவெடுக்கும். முதலில் ஏளனம்; பின்னர் எதிர்ப்பு; காரியம் முடிந்ததும் “செம அதிர்ஷ்டம்” என்று. இவையெல்லாம் வெற்றியாளர்கள் எல்லாரும் சந்திக்கிற விஷயம்தாம். சர்ச்சில் சொன்னது போல,”Never Never Never Give up!” நாமாக சுதந்திரமாகச் சிந்தித்து முடிவெடுத்து ஒரு காரியத்திலிருந்து விடுவித்துக்கொள்வது வேறு விஷயம்.
இதுபோலப் பல தடைகளையும் சந்தித்து, எதிர்ப்புகளையும் கடந்து, நெருப்பாறுகளை நீந்தித்தான் சுவாமிஜி அரும்பணி ஆற்றியிருக்கிறார்.
இந்த தலைப்பை ஒட்டி நான் எழுதிய கவிதை ஒன்றை இங்கே பதிவு செய்யும் சபலத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை
. நாயகன்
கூட இருந்தவர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்,
சுற்றி இருந்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
என்ன விஷயமென்று இவனுக்குப் புரியவில்லை.
முன்னுள்ள பணியொன்றே முக்கியமாய்த்தான் கருதி
முழுமூச்சாய் முனைந்தான்; முடித்து விட்டான் வெற்றியுடன்!
செயல் முடித்த காரணத்தால் ஜெயக்கொடியை ஏந்தி வந்தான்.
பார்த்திருந்தோர் இப்போது பரபரப்பாய்ச் சூழ்ந்தார்கள்!
முடியாத செயலாச்சே? முன்னெவரும் செய்ததில்லை!
எப்படி நீ சாதித்தாய்? என்ன மர்மம் என்றார்கள்.
மந்திரம்தான் அறிவாயா? மாயம் எதும் செய்தாயா?
அரை நிமிஷம் சிந்தித்தான்; அலட்டலின்றித் தான்சொன்னான்.
மந்திரமும் தெரியாது; மாயம் எதும் செய்யவில்லை!
தொடங்கினேன்; தொடர்ந்தேன்; முடித்து விட்டேன் அவ்வளவே!
முடியாது எனும் சேதி முன்பெனக்குத் தெரிந்திருந்தால்
ஒருவேளை தொடங்காமல் ஓய்வாகக் கிடந்திருப்பேன்!
சிரித்துக் கொண்டிருந்தவர்கள் சிலிர்த்தெழுந்து நின்றார்கள்!
நகையாட வந்தவர்கள் நாயகனே என்றார்கள்!



No comments:

Post a Comment