அன்னையேநான் உன்னிடத்தில்
சிலவார்த்தை பேசிடணும்;
அவகாசம் தரமுடியுமா?
அன்னமுடன் சொன்னமுமாய்
அன்புமிக்க சந்ததியும்
அதிலேதும் குறைச்சலில்லை!
சொன்னபடிக் கேட்கின்ற
உடல்நலமும் அறிவுநலம்
சீரான வாழ்க்கையுண்டு!
என்னதுதான் குறையென்று
ஏனிந்தப் பாழ்மனதில்
ஏதேதோ ஆரவாரம்?
சின்னமனச் செருக்காலே
சீற்றத்தால் ஆசையினால்
செய்துவிட்ட பாவமதிகம்!
இன்னொருவ ராயிருந்தால்
இழித்துரைத்துப் போயிருப்பேன்;
இதுஎனக்கு நன்குதெரியும்!
என்னவொரு காரணத்தால்
என்னிடத்தில் சினவாமல்
காருண்யம் காட்டுகின்றாய்?
கன்னல்மொழிக் காஞ்சிமுனி
சொன்னதுபோல் இதுவுன்றன்
அவ்யாஜ கருணையன்றோ?
பட்டகட்டை போலிருக்கப்
பரமனருள் நிறைந்திருக்கப்
பலவழிகள் சொல்லுகின்றார்!
நிட்டையுடன் நியமங்கள்
சாத்திரங்கள் ஜெபதபங்கள்
நேரியதோர் குருபார்வையாய்!
கெட்டமனப் பாவியற்கு
ஒருசிறிதும் இவற்றிலெலாம்
நாட்டமில்லை; என்னசெய்வேன்?
திட்டமிட்டுத்
திடமாக உன்பாதம் சரணடைந்தேன்;
எனைநீதான் ஏற்கவேணும்!
No comments:
Post a Comment