Friday 25 August 2017

பணியின் மூலம் பேரானந்தம் (18)

பணியின் மூலம் பேரானந்தம் (18)
 காரியத்தில் பதறார்…..
 கர்மயோகம் சொல்வது செயல் ஆற்றியே தீர வேண்டும். ஆனால் அதன் பதிவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பற்றற்றுப் பணி புரிந்தால் நமது செயல்கள் நம்மைப் பந்தப் படுத்தா. இந்தக் கருத்தை சுவாமிஜி விரிவாகவே வீளக்குகிறார்.
பற்றற்றுப் பணியாற்றுவது என்ற கருத்து சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சுவாமிஜியிடமும் நிறையப் பேர் கேட்டிருக்கிறார்கள்..பற்றற்றுப் பணி புரிவது என்பது ஏனோ தானோ என்று அசுவாரஸ்யமாகப் பணியாற்றுவதாகாதா? சுவாமிஜி இது பற்றி நிறையவே சிந்தித்திருக்கிறார். அவர் சொல்வதன் சாரம் இதுதான்.
வேலை செய்யும்போது அதில் ஒரு தீவிர வெறி, வேகம் இல்லாவிட்டால் செய்யும் பணி எப்படிச் சிறக்கும் என்ற சந்தேகம் எழும். உண்மையில் வெறியும் வேகமும் எந்த அளவுக்குக் குறைவாக  இருக்கிறதோ அந்த  அளவுக்குச் சிறப்பாக வேலை செய்ய முடியும்..எவ்வளவுக்கு எவ்வளவு அமைதியாக இருக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கும் நல்லது ;நாம் செய்யும் காரியத்துக்கும் நல்லது. அமைதியான மனம் இருந்தால் நிறைய வேலை செய்ய முடியும். நன்றாகவும் செய்ய முடியும். உணர்ச்சிகளுக்கு வழி விடும்போது நமது நரம்பு பதறுகிறது. மனது கிடந்து தவிக்கிறது. ஆற்றல் விரயமாகிறது. காரியத்துக்காகச் செலவிட வேண்டிய ஆற்றல்,பதற்றத்தில் வீணாகிறது. பதறாத காரியம் சிதறாது. நமது பூரண ஆற்றலையும் செய்யும் காரியத்தில் முனைப்பாக்க வேண்டும். உலகின் மிகப் பெரிய தலைவர்களை எல்லாம் பார்த்தீர்களானால் அவர்கள் அசாதாரண அமைதி படைத்தவர்களாக இருப்பார்கள். எதனாலும் அவர்கள் சமநிலை இழக்க மாட்டார்கள். கோப வசப்பட்டவன்  அதிக வேலைகள் செய்ய முடியாது. சீற்றமே அடையாமல் இருப்பவர்கள் நிறைய சாதனை புரிவார்கள். அமைதியான சமநிலை கொண்ட மனதே நிறைந்த பணி செய்ய உகந்தது.
செய்யும் தொழிலில் ஈடுபாடு என்பது வேறு. பற்று என்பது வேறு. என்பது. பற்று வெறியையும் உணர்ச்சிகளையும் கொண்டு வரும். மனதின் சமநிலை இழக்கச் செய்யும்.
மிகத் திறமையான மருத்துவர்கள் கூட, தங்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதென்றால், அந்தப் பணியை வேறு மருத்துவர்களிடம் ஒப்படைக்கிறார்களாமே? ஏன்?
”காரியத்தில் பதறார், …மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச்செய்து பயனடைவார்” என்பான் பாரதி. 

No comments:

Post a Comment