Monday, 21 August 2017

பணியின் மூலம் பேரானந்தம் (16)

பணியின்  மூலம் பேரானந்தம் (16)
கர்மயோகத்தின் அடிப்படைகள்
கர்மயோகத்தின் அடிப்படையான விஷயங்களைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம்.
இன்ப துன்ப அனுபவங்கல் நமக்கு வாழ்க்கையில் பாடம் புகட்டுகின்றன. உண்மையில் இன்பங்களை விடத் துன்பங்களே நமக்கு மேலதிகம் கற்றுத் தருகின்றன. அனுபவங்கள் நம் மீது தாக்கும்போது பதிவுகளை விட்டுச் செல்கின்றன. இந்தப் பதிவுகள் நமது குணங்களை நிர்ணயிக்கும் காரணிகள் ஆகும். அனுபவங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன என்பது கூடச் சரியில்லை. பிரபஞ்ச அறிவு நமக்குள் உறங்கிக் கிடக்கிறது. நம்முள் ஏற்கெனவே உள்ளது வெளிப்படப் புற அனுபவங்கள் காரணங்கள் ஆகின்றன. அனுபவங்கள் மட்டுமல்லாது நமது உணர்ச்சிகளும் செயல்களும் உள் உறைவனவே. அந்தந்த தரூணங்களில் வெளிப்படுகின்றன. குழந்தை பிறக்கும்போது காலி சிலேட்டாகப் பிறப்பதில்லை. பல பிறவிகளின் அனுபவங்கள், உணர்ச்சிகள், வினைகளின் பதிவுகளை ஏந்தியே பிறக்கிறது. இதனை வாஸனைகள் என்பார்கள். இந்த வாஸனைகளின் ஒட்டுமொத்தமே ஸம்ஸ்காரம் என்பது. புலன்கள் மூலம் நமக்கு ஏற்படும் நிகழ்வுகள், ஏற்கெனவே நம்முள் உறைந்து கிடக்கும் வாஸனைகளோடு கலந்துகட்டியாகி, நமது எதிர்வினையாக வெளிப்படுகின்றன. அதுமட்டுமல்லாது புதிய அனுபவங்கள், செயல்கள் நமது வாஸனைகளை மேலதிகப் படுத்துகின்றன.
நமது செயல்களுக்கு நம் ஸம்ஸ்காரங்களே காரணம். எண்ணங்கள் செயல்களாகவும், செயல்கள் பழக்கமாகவும் பழக்கம் குணமாகவும் உருவெடுக்கின்றன. இவை அனைத்தின் விளைவுகளே நாம் இன்றிருக்கும் நிலைமை, சூழ்நிலை, நம் விதி என்பது.. இது மீள முடியாததொரு மாயச்சுழல் போலத் தோன்றுகிறது. துரியோதனன் இப்படித்தான் அங்கலாய்த்தான். “எது நல்லது, எது கெட்டது என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனால் என்னால் தீமை செய்யாமல் இருக்க முடியவில்லையே? ஏன் அப்படி?” என்பது அவன் கேள்வி. ஒரே வார்த்தையில் பதில் சொல்ல வேண்டும் என்றால் ஸம்ஸ்காரம் என்பதுதான் பதில்.
சுவாமி விவேகானந்தர் இந்த இடத்தில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றைக் காட்டுகிறார். நமது இன்றைய விதி நமது பழ வினைகளின் காரணமாக அமைந்தது என்றால் இன்று நல்ல வழியில் செயல்படுவதன் மூலம் நமது நாளைய விதியை அமைத்துக்கொள்ளும் சக்தி நம் கையில்தான் இருக்கிறது. நமது எதிர்காலத்தை விரும்பியவண்ணம் செதுக்கிக் கொள்ளும் சிற்பி நாமேதான்.
சுலபமாகத் தெரிகிறது. ஆனால் மெத்தக் கடினம். கீதை காட்டும் பாதை சிரத்தையின் மூலமும் இடைவிடாத பயிற்சியின் மூலமும். இதைச் சாதிக்க முடியும் என்பதே. ஊழிற் பெருவலி  யாவுள என்ற திருவள்ளுவர்தாம் ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர் என்றார்.

.


No comments:

Post a Comment