Thursday 10 August 2017

என் இனிய புறாக்களே! (எல்.ஐ.சியின் தெற்கு மண்டல இதழில் வெளியானது (டிசம்பர்-1994)

என் இனிய புறாக்களே!
(எல்.ஐ.சியின் தெற்கு மண்டல இதழில் வெளியானது (டிசம்பர்-1994)
மாடப்புறாக்களே!
உங்கள் மாடங்களைவிட்டு
 வெளியே வாருங்கள்!
உங்கள் கால்களிலே
கட்டிவிடப்பட்டிருக்கும் சேதிகள்
மாடமாளிகைகளுக்கு மட்டுமல்ல.
மண்குடிசைகளுக்கும்தான்,
அழகிய சிறகுகளை ஆண்டவன் அருளியது
சுற்றிச்சுற்றி வட்டமடிக்க அல்ல.
வானவீதி எங்கும் பறப்பதற்கே.
வெளிச்சத்தை நோக்கியே
படை எடுக்கும் நீங்கள்
இருட்டையும் கொஞ்சம் பாருங்கள்.
காளிதாசன் மட்டும்தான்
காதல் காவியங்கள்
எழுதமுடியும் என்பதில்லை.
கசாப்புக்கடைக்
காதர்பட்சாக்களும் எழுதலாம்.
ஷாஜஹான் மட்டும்தான்
வெண்பளிங்குக் கற்களால்
தாஜ்மஹால் கட்டமுடியுமா?
சர்வர் சங்குண்ணி செய்யமுடியாதா?
எழுதப்படும் பாலிசி
ஒவ்வொன்றுமே
காதல் காவியம்தான்.
எழுதப்படாதவை
சோகமயமானவை.
நட்சத்திரங்களை நோக்கிப்
 படையெடுக்கும் நீங்கள்
வெளிச்சம் ஊட்டுகிற
 லைட்பாயையும் கவனியுங்கள்.
வீட்டுக்கு நாயகனைச்
சந்திக்கப்போகிற நீங்கள்
வாயிலிலே காவல் காக்கிறவனை
அலட்சியம் செய்து விடாதீர்கள்.
அவன் வீட்டுத் தோட்டத்திலும்
ரோஜாப்பூக்கள் உண்டு.
நீரின்றி வாடிவிடும்
அபாயம்
அவற்றுக்கும் உண்டு.
அவன் தேவை அவசரமானது.
ஹிப்பித் தலையர்களே
அதிகமாகி விட்ட காரணத்தால்
”இப்படி” ஒரு தொழிலாளி
இருப்பதையே நாம்
மறந்துவிட்டோம்
தெருவிலே போகிற
பொறிகடலைக்காரனை
ஜவ்வுமிட்டாய் விற்பவனை
சைக்கிள்ரிக்‌ஷாச் சாம்பனை
பூக்காரப் பொன்னம்மாவை
ஹோட்டல் அறை துடைக்கும்
அன்னத்தாயை
எவ்வளவு பேர்
 இன்சூரன்ஸ் கேட்டிருக்கிறீர்கள்?
உங்கள் சேதி
இவர்களை எல்லாம்
எட்ட வேண்டாமா?
சின்னஞ்சிறு சிறகுகள்
சந்து பொந்துகட்கெல்லாம்
உங்களை
இட்டுச் செல்லட்டும்!
குடிசைகுடிசையாக
உங்கள் மந்திரம்
உச்சாடனம் ஆகட்டும்!
துயிலுவதற்கு நேரமில்லை.
உங்கள் சேதியை
நீங்கள் சொல்லாமல் போனால்
காயாமல் இருக்கிற
கண்ணீர்த்தடங்கள்
உங்களுக்குக் கிரிமினல்கள்
என்று பட்டம் சூட்டிவிடும்.
எனவே,
என் இனிய புறாக்களே!
உங்கள் சிறகுகள்
படபடக்கட்டும்!




No comments:

Post a Comment