Thursday 3 August 2017

பணியின் மூலம் பேரானந்தம் (14)

பணியின் மூலம் பேரானந்தம் (14)
 நாமே நமக்கு எஜமானர்!
சுவாமி விவேகானந்தர் சொல்லுவார், எஜமானனைப் போல வேலை செய்ய வேண்டும்; அடிமையைப் போலச் செய்யக்கூடாது என்று.
அதென்ன, எஜமானனைப் போல வேலை செய்வதாவது? அடிமையைப் போல வேலை செய்வதாவது?
ஒரு முதியோர் இல்லம் இருக்கிறது. ஆதரவற்ற முதியவர்களுக்கான இலவச இல்லம். அங்கு பணியாற்றுபவர்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள் .”பெரிசுகள். சரியான ரவுசுகள். இங்கே வந்து மாட்டிக் கொண்டோம். என்ன செய்வது? வயிற்றுப்பாடு இருக்கிறதே?” என்பவர்கள் ஒரு வகை..” நமக்கு இந்த ட்யூட்டி கொடுத்திருக்கிறார்கள்” என்று கொடுத்த வேலையைச் செய்பவர்கள் ஒரு வகை. மூன்றாவது வகையினர் ,”பாவம்! ஆதரவற்ற நிலையில் வந்திருக்கிறார்கள். நம் பொறுப்பில் இருக்கிறார்கள். அவர்களைச்  சந்தோஷமாக  வைத்துக் கொள்வது நம் கடமை” என்று கனிவோடு பணி புரிகிறார்கள். முதல் வகையினர் அடிமையைப் போல் பணி புரிபவர்கள். .கொல்லப் பயன்படும் கீழ். இரண்டாவது வகை சொல்லப் பயன்படும் சான்றோர் என்பதில் தவறில்லை. நல்லபடி உற்சாகப்படுத்தினால் அவர்கள் தாமாகவே பொறுப்புணர்ந்து செயல்படும் வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது வகையினரே எஜமானரைப் போல் பணியாற்றுபவர்கள். பிறர் கண்காணிக்கிறார்கள் என்பதற்காக இல்லாமல்,,கடமை என்பதற்காக மட்டுமே இல்லாமல் பொறுப்பைத் தம் தோள்களில் சுமந்து செயலாற்றுபவர்களே எஜமானர்கள் போல் உழைப்பவர்கள். நிர்வாக இயலில் இதை ownership” என்பார்கள்.
எஜமானரைப் போல் பணி செய்வது  அன்பு கலந்து பணி செய்வது. பொறுப்பைத் தம் தோள்களில் சுமந்து பணி செய்வது. .பிரதிபலன் எதிர்பாராது பணி செய்வது. இது பற்றி சுவாமிஜி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:
“சுதந்திரமாக வேலை பாருங்கள். அன்புடன் வேலை பாருங்கள். அன்பு என்ற வார்த்தை புரிந்துகொள்ளக் கஷ்டமானது. சுதந்திரமானவர்களுக்கன்றி அன்பு வராது. அடிமையிடம் தூய அன்பு இருப்பது சாத்தியமில்லை. ஓர் அடிமையை விலைக்கு வாங்கி சங்கிலியால் பிணைத்து  வேலை செய்யக் கட்டளை இட்டால் மங்குமங்கென வேலை செய்வான். ஆனால் அவனிடம் அன்பு இருக்காது. தன்னலம் கருதிச் செய்யும் எந்த வேலையும் அடிமை வேலையே. நம்மை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். அன்போடு செய்யும் எந்த வேலையும் அமைதியையும் ஆனந்தத்தையும் தராமல் இருக்காது. உண்மை அன்பு கொடுப்பவருக்கோ பெறுபவருக்கோ துன்பம் தராது. ஒரு காதலன். காதலி தனக்கே தனக்காக வாழவேண்டும் என நினைக்கிறான். அவளது ஒவ்வொரு செயலையும் கண்காணிக்க முயல்கிறான். வேறு யாருடனோ பழகினால் பொறாமைப் படுகிறான். தன் பக்கத்திலேயே இருக்க வேண்டும், தான் சொல்லும்போதுதான் சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறான். அவன் அவளுக்கு அடிமை. அவள் தனக்கு அடிமையாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். இது உண்மை அன்பு அல்ல: ஏனெனில் இது உளைச்சல் தருகிறதே? இது அன்பு என்று பெயர் சூட்டிக்கொண்ட ஏதோ ஒன்று.
உங்கள் கணவரை, மனைவியை, குழந்தைகளை, இந்தப் பரந்த உலகத்தை ,ப்ரபஞ்சத்தை எந்தவிதமான துன்பமோ, பொறாமையோ சுயநல சிந்தனையோ இல்லாத வகையில் நேசிப்பதில் வெற்றீ பெற்று  விட்டீர்கள் என்றால் பற்றற்ற நிலைக்கு நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம்.
உண்மை அன்பு பந்தப் படுத்துவதில்லை. எங்கு பந்தம் இருக்கிறதோ,அங்கு நிலவுவது உடலின் வேட்கைதான். உண்மை அன்புடையவர்கள் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் துன்பப்பட மாட்டார்கள். அன்பு நிலைத்திருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது செய்வதற்கு பிரதியாக நீங்கள் எதையும் எதிர்பார்க்கிறீர்களா,என்ன?  தனி நபருக்கு, நகரத்துக்கு, நாட்டுக்கு எது செய்தாலும் இவ்வாறே பிரதிபலன் எதிர்பாராதிருங்கள் .உலகத்துக்காக நீங்கள் செய்வது எதுவும் பலன் கருதாது செவது என்றால் உங்களிடம் பற்று எதுவும் இருக்காது. பலனை எதிர்பார்ப்பதாலேயே பற்று உண்டாகிறது.
அடிமையாய் உழைப்பது, தன்னலத்தையும் பந்தத்தையும் உருவாக்குகிறது என்றால்,நம் மனத்துக்கு நாமே தலைவராக இருந்து கொண்டு பணி புரிவது பற்றின்மை என்னும் பேரானந்தத்தைத் தருகிறது

செய்கிற வேலைக்கு முழுப் பொறுப்பையும் நாமே ஏற்றுக் கொள்கிற போதுதான் நம்மால் சிறப்பாகப் பணி புரிய இயலும். சின்ன குழந்தை ஒன்றை உங்கள் கையில் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வினாடியே உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் காண்பீர்கள். மற்றபடி நீங்கள் எப்படி இருந்தாலும்,அந்த வினாடியில் உங்களிடம் தன்னலம் என்பது எள்ளளவும் இருக்காது. உங்கள் மனத்தில் எந்தக் கிரிமினல் எண்ணங்கள் இருந்தாலும்  அவை மறைந்து விடும். பொறுப்பு உங்கள் மீது சுமத்தப் பட்டவுடன்  உங்கள் குணமே மாறி விடும். இப்படித்தான் முழுப் பொறுப்பையும் நம் தோள்களில் சுமந்து விட்டால் நாம் யாரிடமும் எதுவும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நமது பாரங்களைச் சுமத்தி வைக்க “சாமி” யாரும் இல்லை. நாமேதான் நமது பணிக்கு முழுப் பொறுப்பு என்னும்போது நமது உச்சகட்ட சிறப்பு நிலையில் பணி புரிவோம்!

No comments:

Post a Comment