Monday, 28 August 2017

ஒரு சாமான்யனின் கீதை--2

 ஒரு சாமான்யனின் கீதை—2
(பகவத் கீதையிலிருந்து நான் எடுத்துக் கொண்டவை)
நமக்குப் பிறப்பினாலே, சமுதாயத்தில் வாய்த்திருக்கிற இடத்தினாலே, சந்தர்ப்பத்தினாலே ஏர்பட்டுள்ள கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும். அவற்றைச் செய்வதனால்,போரில் கொலை செய்வதானால் கூட (ஏன் சமூக வாழ்வில் கசாப்புத் தொழிலானாலும் கூட) பாவம் நேராது. கடமையைச் செய்யாமல் விடுவதுதான் பாவம். கடமையைச் செய்யாதவனுக்கு சமூகத்தில் பழிச்சொல்லே  விளையும்
.ஏற்றுக்கொண்ட காரியத்தில்  மன உறுதியோடு இருக்க வேண்டும். வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம். இப்ப்படி மன உறுதியைக் குலைப்பதற்குள்ள காரணிகளில், சுற்றியிருப்பவர்கள், பலவாறாகப் பேசி மனத்தைக் குழப்புவதும் ஒன்றாகும்..
காரியத்தைத் தொடங்கியபின் கருமமே கண்ணாக இருக்கவேண்டும். தோல்விகள் நம்மைத் துவளவிடக்கூடாது. வெற்றிகள்  மிதமிஞ்சிய உணர்ச்சிகளாக நம்மை ஆகாசத்தில் பறக்க விடக்கூடாது. இப்படி சமநிலையுடன் பணி புரிவதைத்தான், எவ்வளவு சாதாரணப் பணியாக இருந்தால் கூட ‘யோகம்’ எனக் கூறுகிறார்கள்.
மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றி நம்மை அலைக்கழிக்கத்தான் செய்யும். அவற்றை மாற்ற என்ன வழி? அவற்றுக்கு எதிரான நேர்மறையாண எண்ணங்களை உருவாக்கிக்கொள்வதுதான். நேர்மறையில் எல்லாம் மிகச் சிறந்த நேர்மறை இறவனைப்பற்றிய சிந்தனைதான். தனியாக அமர்ந்து  இறைச் சிந்தனையில் ஆழ்வது பயனுள்ள பயிற்சியாகும்.
முன்னேற்றத்துக்குப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைவு கொள்ள வேண்டும். அவசரப்பட்டு, முன்னேறி நாம்”ஸ்திதப் பிரக்ஞன்” ஆகிவிட்டோம் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு, மனதை நிலைப்படுத்தாமல் புலனடக்கத்துக்கான கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுவது ஆபத்தானது. பிறர் நம்மைப் பொய்யொழுக்கவாதி என்று பழி சொல்லவே ஏதுவாகும். மனக்கட்டுப்பட்டுக்காக விடாது முயன்றுகொண்டே இருக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாகவே புலனடக்க முயற்சிகள் இருக்க வேண்டும்.

நிறைவாக, அவசியம் தேவைப்படுவது, தன்னைத்தாள் ஆளும் சமர்த்து. இதுவே அமைதி தரும்.. இப்படிக் கஷ்டப்பட்டு அமைதி தேடாவீட்டால் என்ன மோசம்? நிரந்தரமான சுகத்துக்கு, நாம் அனைவரும் நாடும் சந்தோஷத்துக்கு அடிப்படையான தேவை-- அமைதி; சாந்தம். சாந்தமுலேகா சௌக்யமுலேது!.

No comments:

Post a Comment