வெற்றிக்கு வழிகள் நேர்மையும் உண்மையும்
”நிச்சயம்
வெல்லலாம் நேரான பாதையில்”
—சேவாலயா
வெளியிட்டுள்ள புத்தகத்தின் தலைப்பு
-www.sevalaya.org
இணைய தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
சுவாமிஜியின்
கருத்துகள்:
வாழ்க்கையில்
வெற்றி பெற்றவர்களைப் பார்க்கும்போது அவர்கள் அனைவரிடமும் ஒரு தனித்தன்மையைக் காணலாம்.
வெற்றி பெற்ற ஒவ்வொரு தனிமனிதனிடமும் அவனது வெற்றிக்குப் பின்னால் அசாதாரணமான நேர்மை,
அளவிட்டுச் சொல்லமுடியாத உண்மைப்பற்று இருப்பதைக் காண முடியும். அத்தகையவர்கள் வெற்றி
பெறுவதற்குக் காரணம் இந்தத் தனித்தன்மையே.
துளிக்கூடத்
தன்னலமே இல்லாதவர்கள் என்று அவர்களைக் கூற முடியாவிட்டாலும் கூட, அந்தப் பாதையில் அவர்கள்
பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நிச்சயம் சொல்ல முடியும். துளிக்கூடத் தன்னலக்
கலப்பு இல்லாமல் இருந்தால் அவர்கள் புத்தர் அல்லது இயேசுவின் நிலைக்கு உயர்ந்திருக்க
முடியும்.
உண்மையும்
நேர்மையும் நிச்சயம் வெற்றி பெறும் என்றாலும் அதற்குக் காத்திருக்க வேண்டும். பொறுமை
வேண்டும். பொறுமை இல்லாததால் பலரும் குறுக்கு வழியில் வெற்றியைத் தேடி அலைகிறார்கள்.
இதனால் அறநெறியிலிருந்து விலகித் தீயவர்கள் ஆகியவர்கள் பலர். இது நமது பலவீனம்; சக்தியின்மை..
வணிகத்தில்,தொழிலில்,நேர்மையாக
இருந்தால் “கதைக்காகாது” என்று நம்மில் பலரும் நினைக்கிறோம். சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
காந்திஜியின்
வாழ்க்கையிலிருந்து ஒரு பக்கத்தைப் புரட்டிப் பார்ப்போம்.
அவர்
தென்னாப்பிரிக்காவில் மிக அதிக வருவாய் ஈட்டிய வெற்றிகரமான பாரிஸ்டர். இந்த வெற்றிக்குக்
காரணம், அவர் திறமை மட்டுமல்லாது,அவர் கடைப்பிடித்த நேர்மையும் உண்மையும் கூட. கட்சிக்காரர்
பக்கம் நியாயம் இருக்கிறது என்று தெரிந்தால் ஒழிய அவர் எந்த வழக்கையும் எடுத்துக் கொள்ள
மாட்டார் பொய்ச்சாட்சி அழைக்கும் வழக்கமே கிடையாது. சாட்சிகளுக்கு இப்படிச் சொல்லு
அப்படிச் சொல்லு என்று சொல்லிக் கொடுப்பதில்லை. தமது அத்யந்த நண்பரானாலும் தவற்றை ஒத்துக்கொண்டு
தண்டனையை ஏற்றுக்கொள்ளும்படிச் சொல்வார்; என்றாலும் முழு முயற்சி எடுத்து மன்னிப்போ
குறைந்த தண்டனையோ பெற முனைந்து செயல்படுவார். ஒருமுறை வழக்கு பாதி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது
தமது கட்சிக்காரர் பொய் சொல்லுகிறார் என்று தெரிய வந்ததும் வழக்கிலிருந்து விடுவித்துக்
கொண்டு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார். இப்படி பைத்தியக்காரனாய் ஒரு
வக்கீல் இருந்தால் யார் அவரிடம் கேஸ் கொண்டு வருவார்கள்?
“தவறான வழக்கை ஏன் எடுத்த்க்கொண்டு வாதாடுகிறீர்கள்?”
என்று அண்மையில் தொலைக்காட்சிப் பேட்டியில் ஒரு வழக்கறிஞரைக் கேட்டார்கள். அதற்கு அவர்
சொன்ன பதில்: “என்ன செய்வது? இல்லாவிட்டால் அவர் வேறு வக்கீலிடம் போய் விடுவாரே?” நீயாயமாகத்தான்
படுகிறது.
ஆனால்
காந்திஜியின் விஷயத்தில் நடந்தது வேறு. நியாயமான கட்சிக்காரர்கள் அனைவரும் காந்திஜியை
நாடி வந்தார்கள். நீத்பதிகளுக்கும் காந்திஜி ஏற்று நடத்தும் வழக்குகள் நேர்மையானவை
என்று தெரிய வந்ததால் அவரது வெற்றி விகிதம் அபரிமிதமானது. வழக்குகள் மேலும் தேடி வந்தன.
வருவாய் கொழித்தது.
No comments:
Post a Comment