Tuesday, 22 August 2017

பணியின் மூலம் பேரானந்தம் (17)

பணியின் மூலம் பேரானந்தம்  (17)

முப்பது நாளும் ஞாயிற்றுக்கிழமை!

நல்ல எண்ணங்கள், செயல்களின் மூலம் நல்ல பதிவுகளை உருவாக்கிக் கொள்ளலாம்.  நம் எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக்கொள்ளலாம்; மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்..சரிதான்.
நாம் இப்போது பணியின் மூலம் பேரானந்தம் பெறுவது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்..
நல்ல பதிவோ, கெட்ட பதிவோ இரண்டும் விலங்குதான்; பந்தத்தை உருவாக்குபவைதாம். . பேரானந்தம் பெற, பந்தங்கள் நீங்க, விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவியைப்போல வானில் பறக்க வேண்டும்; பதிவுகள் கூடாது. பணியாற்றாமல்  சும்மா இருந்தால், இமய மலையில் ஒரு குகையில் ஒண்டிக்கொண்டிருந்தால் கூட பதிவுகள் இல்லாமல் போகாது… மனம் எண்ண அலைகளை உருவாக்கிக் கொண்டிருக்குமே? அவற்றின் பதிவுகள்/?
பணியாற்ற வேண்டும். பற்றுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும்..
பணியாற்றுகிறேன் பேர்வழி என்று கடமைக்கே அடிமையாகிவிடும் பலரைப் பார்க்கிறோம். கடமை என்பதே பல பேருக்கு மன உளைச்சல் தரும் காரியம்  ஆகி விடுகிறது. நம்மை அது பிடித்து இழுத்துக்கொண்டு சென்று வாழ்க்கை முழுவதையுமே ஒரு தவிப்பாக மாற்றி விடுகிறது. கோடைகால வெயில் மாதிரி நம்மைச் சுட்டெரிக்கிறது. கடமையின் பரம அடிமைகளைக் கவனியுங்கள். குளிக்க நேரமில்லை. சாமி கும்பிட நேரமில்லை. எப்பவும் ட்யூட்டிதான். வெளியே போய் வேலை பார்க்கிறார்கள். வீட்டுக்கு வந்ததும் அடுத்த நாள் வேலையைப் பற்றி யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.. கடமை அவர்கள் மீது ஏறி உட்கார்ந்துகொண்டு பிசாசு போல அமுக்குகிறது. அவர்கள் கடமைக்கு அடிமை. ஓடிக் களைத்த குதிரை தெருவில் விழுந்து மடிவதுபோல வேலையிலேயே மரித்தும் விடுகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடமை என்பதைப் புரிந்து கொண்டிருப்பது இந்த லட்சணத்தில்தான்.
கர்ம யோகத்தின் அடிப்படை நோக்கம் சுதந்திரமாக இருப்பதே. அதற்குத்தான் கடமை உணர்வு துணை புரிகிறது. ஆனால் தவறான புரிதலால், பலர் அதற்கு நேர்மாறாக அடிமைகளாய் மாறி விடுகிறார்கள். அந்தோ பரிதாபம்!
சுவாமிஜி குறிப்பிடுவது போன்ற இது போன்ற “கடமைக் குடியர்களை” நிறையவே சந்திக்கிறோம்! அவர்களுக்காக ”வாழ்க்கை- வேலை சமநிலை பெறுவது எப்படி?”  என்று பயிற்சி வகுப்புகள் கூட நடத்துகிறார்கள்.
மனதில் சமநிலை இருந்தால் இதற்கெல்லாம் அவசியமே இல்லை .” ஏன்  எப்போதும்  வேலை பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்? ஞாயிற்றுக்கிழமைகளிலாவது ஓய்வு எடுத்துக் கொள்ளக்கூடாதா?”” என்று கேட்டதற்கு நடைமுறைக் கர்மயோகியான என் நண்பர் சொன்னார்: “ எனக்கு முப்பது நாளும் ஞாயிற்றுக்கிழமைதான்!”
சோர்வும் தளர்ச்சியும் ஏற்படுவது பணியினால் அல்ல பணியின் மீதுள்ள பற்றினால்..

No comments:

Post a Comment