வெற்றி கொள்வீர்!
(ஆனந்தி மனமகிழ்
மன்ற விழா மலர்-1968)
தேனந்த வியாசமுனி
திருவாயில் மலர்ந்தமொழி இன்பம்கேட்டு
ஞானம்தன் தந்தத்தால்
நமக்கறியத் தந்தபிரான் உமையின் மைந்தன்
ஆனந்தி கலைஞர்குழு
வாழ்கவென அருள்கூறி ஆசிநல்க
வானம்தன் எல்லையென
வளரட்டும் வளரட்டும் கலைஞர் கூட்டம்.
கூட்டத்தில் ஒன்றென்று
நில்லாமல் நுமதுகுழு முதன்மைஎய்தி
நாட்டினிலே முத்தமிழில்
நாடகத்தில் வளர்ச்சியிலை என்பார்கொண்ட
வாட்டத்தைப் போக்குகிற
விதத்தினில்நீர் நல்லபணி ஆற்றல்வேண்டும்!
ஆட்டத்தால் ஆளுபவன்
ஆடகச்செம் பாதங்கள் போற்றிபோற்றி!
போற்றுமொரு பேரார்வம்;
கலைத்திறமை; துடிப்போடு புதுமைநாட்டம்
ஏற்றதொரு வேடத்தில்
இணைந்தொன்றி நடிப்பதுவே இயல்பாய்க்கொண்டோர்
ஆற்றலொடும் அன்போடும்
உழைப்பதுவே முழுமூச்சாய்ப் பேணும் தொண்டர்
மாற்றறியா முழுவெற்றி
காண்பார்கள்; மாசக்தி மீதில்ஆணை!
ஆணோடு பெண்புரியும்
’அது’வொன்றே கதையென்று அறிந்தபேர்கள்
நாணும்விதம் நாடகத்தில்
காட்டுகிறார்; நீவிர்சற்று விலகிநின்று
வேணமட்டும் புதுச்சிந்தை;
புதுக்கருத்து;ஏற்கவேண்டும்!
வேணியரன் ;உமைபங்கன்
வேதமுதல் அருள்கிட்டும்; வெற்றிகொள்வீர்!:
No comments:
Post a Comment