Tuesday 8 August 2017

விதி

விதி
(திருச்சி தேசியக்கல்லூரி ஆண்டுமலர்-1957)
(மொழிபெயர்ப்புக் கவிதை)
பிறவி உயர் பதவி தரும் பெருமிதங்கள் யாவும்
மறைந்து விடா உண்மையல; மாயை எனும் சாயை;
விதியிதனை வெல்லுபடை வையகத்தில் ஏது?
நிதிமிகுந்த செல்வரெனின் நின்றிடுமோ காலன்?
     மன்னர்முடித் தலையும் மண்ணில் விழுந்துருளும்!
     உன்னதங்கள் யாவும் உயிர்விலகின் ஏது?
நிலம் உழுது நீர்பாய்ச்சும் நல்லுழவரேனும்
விலைகூறிப் பொருள்விற்கும் வாணிகர்களெனும்
இலமென்று மனம்நொந்து இரப்பார்களேனும்
குலம்சாதி உயர்பெருமை கூறுபவரேனும்
     சரணுற்று விதியைச் சார்ந்திடுதல் திண்ணம்;
     மரணத்தில் ஒன்றாய் மங்கிடுதல் உண்மை!

எனதெனது;நான் என்று ஏதேதோ பேசி
மனதிந்த மண்வெளியில் மயங்கியதன்பின்னர்
தனதென்று சொல்வதெல்லாம் தானெடுத்தேகாதும்
கனவிந்தப் பாழ்வெளியைக் கைவிடுவர் அம்ம!

     வாடிடினும் வாசம் வீசுமலர் போல
     நாடிஅவர் செய்த நன்மை மணம் வீசும்!


No comments:

Post a Comment