Sunday, 9 October 2016

உனக்காக நான் பாடும் ஒரு பாடல்

உனக்காக நான் பாடும் ஒரு பாடல்
 (சலனமுற்றிருந்த ஒரு வேளையில் சுவாமிஜி குருதேவரை நினைந்து பாடிய பாடலின் ஒரு சிறு பகுதி)
மகனீய,உன்னிடமே என்னுடைய போக்கு
மழலை ஒரு பிஞ்சினுடைப் பிள்ளை விளையாட்டு!
சில நேரம் உன்னிடம் நான் சினந்துமிருக்கின்றேன்;
சில நேரம் உனை விட்டுத் தொலைதூரம் நின்றேன்!
என்றாலும்,
இருள் சூழ்ந்த ராத்திரியின் அதிசோகப்போதில்
இமை நனைந்த கண்ணீரால், பேச்சிழந்த நாவால்
என் முன்னே நிற்கின்றாய்;நின் இனிய முகமோ
அன்பு நிறை பார்வையுடன் எனை நோக்கிக் குனியும்.
கண்டவுடன் சடுதியில் நான் உன்னிடத்தில் வருவேன்
மண்டியிட்டு உன் பாத மலரடியில் வீழ்வேன்!
மென்மை மிகு உன் கரத்தில் மன்னிப்பா கேட்பேன்?
உன் மகன் நான்: என் மீது உனக்கெப்போ கோபம்?
நீயன்றி யார் பொறுப்பார் என் பிள்ளைச் சேஷ்டை?
நீயேதான் என் தலைவன்; ஆன்ம நிஜத் தோழன்!
நீயே நான்! நின்னை நான் பலமுறைகள் பார்த்தேன்!
நீயே நான்! நீயே நான்!! தலைவ நான் நீதான்!


No comments:

Post a Comment