Wednesday 29 November 2017

சத்திய சோதனை

சத்திய சோதனை.
மண்ணில் நல்ல வண்ணம் வாழ விரும்புபவர்கள், தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளத் துடிப்பவர்கள், ஆழ்ந்து பயின்று நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டிய நூல் ”சத்திய சோதனை” இது ஓர் ஈடு இணையற்ற வாழ்வியல் நூல். வித்தியாசமான சுயசரிதை.
எந்த விதத்தில் இணையற்றது? எந்தவிதத்தில் வித்தியாசமானது? பார்ப்போம்.
சத்தியம்தான் காந்திஜியின் வாழ்க்கை நெறி.  வாழ்வின் வெறி. அவருக்குச் சத்தியம்தான் இறைவன். பிரபஞ்சத்தை இயக்கும் நியதி. அவரது குறிக்கோள் சத்திய தரிசனமே. அவர் எழுதியது, பேசியது, அரசியல் துறையில் அவரது செயல்பாடுகள் அனைத்துமே அந்த இலக்கை நோக்கிய பயணமே.
பிரபஞ்ச நியதியான சத்தியம் ஒரு சூட்சுமமான தத்துவம். இதை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பது என்பது எப்படி? சிக்கலான விஷயம்தான்.  வாழ்வில் நாம் சந்திக்கக்கூடிய  மோதல்களில், முரண்பாடுகளில் ,மிகச் சிறிய நிகழ்வுகளில் கூட தர்மம் எது; அதர்மம் எது; செய்யத்தக்கது எது செய்யத்தகாதது எது  என்பது அவரவர் மன அமைப்புக்கும், மனநிலைக்கும் ஏற்ப வேறுபடும். அர்ஜுனக் குழப்பம் வரும். என்ன செய்வது?
இந்த விஷயத்தில் காந்திஜி தெளிவாக இருந்தார். பூரண உண்மை (Absolute Truth) என்பது இலட்சியம். அதை அடையாதவரையில் நமக்குத் துணையாக நிற்பது ”அன்றாட உண்மை”- சார்பு உண்மை- Relative Truth. அதுவே அவருக்கு வழிகாட்டிய ஒளி விளக்கு; கவசம்; கேடயம். இந்தப்பாதை குறுகலானது; நேரானது; சுலபமானது.  இலட்சியத்தை நோக்கி விரைவில் இட்டுச் செல்லும் பாதையும் இதுவே. தன்முனைப்பின்றி, இறைவனிடம் பூரண நம்பிக்கையுடன், அப்போது கையிலே உள்ள கடமை ஒன்றிலேயே குறியாக இருந்தால், தானாகவே ஒளி கிடைக்கும். இந்த வகையில் காந்திஜியை வழி நடத்தி அழைத்துச் செல்வது “அந்தராத்மாவின் குரல்.”
ஆக, காந்திஜியின் வாழ்க்கை முழுவதுமே சத்தியத்தை வாழ்வில் பரிசோதித்த, நடைமுறைப் படுத்த முயன்று வென்ற, தோற்ற, விழுந்த, எழுந்த, விழ இருந்த தறுவாயில் இறைவனால் காப்பாற்றப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பே. அதனால்தான் அவர் தமது  நூலுக்கு ”சத்தியத்துடனான எனது பரிசோதனைகளின் கதை” என்று தலைப்பிட்டார்.
காந்திஜி தமது பரிசோதனைகளைக் கதவு சார்த்திய அறையில் அல்லாமல் திறந்த வெளியில் நடத்தினார். அவரது பரிசோதனையில் நிகழ்ந்த மாற்றங்கள், பௌதிக மாற்றங்கள், ரசாயன மாற்றங்கள் போலின்றி ரசவாத மாற்றங்கள். இதில் புறப்பொருள்கள், நிகழ்வுகள் மட்டுமின்றி மனமும் சோதனைக்குட்படுகிறது. விஞ்ஞான ரீதியான பரிசோதனை என்னும்போது  அந்த மனம், தூய்மையாக, கறை படியாமல் இருக்க வேண்டும். விருப்பு வெறுப்புகளுக்கு இடமிருக்கக்கூடாது. எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையையும் ஆழ்ந்த சிந்தனைக்கு உட்படுத்த வேண்டும். உளரீதியான ஒவ்வொரு பரிமாணத்தையும் பகுத்தாய்ந்து பார்க்க வேண்டும் அப்போதுதான் சரியான முடிவுக்கு வரமுடியும். காந்திஜி இந்த முறையில்தான் தமது சத்திய சோதனையை நடத்தினார்.
தமது ஆன்ம வளர்ச்சிக்காக காந்திஜி சத்திய சோதனை நிகழ்த்தினார்; இருக்கட்டும். சரி. ஏன் அவர் அவற்றை ஏடுகளில் பதிவிட வேண்டும்?  நோக்கம், செயல்முறைகள், காட்சிப்பதிவுகள் உணர்ந்து கொண்ட முடிவுகள் என்பதாக, ஒரு விஞ்ஞானி பரிசோதனைக் குறிப்புகள் எழுதுவது போல ஏன் எழுதி வைக்க வேண்டும்?
தம்மால் முடிந்தது அனைவருக்கும் முடியும்; சின்ன குழந்தைக்குக் கூட கைவரும்; அனைவரும் சத்தியப் பாதையில் செல்ல வழிகாட்ட வேண்டும்  என்ற நோக்கத்தினாலேயே பிறந்தது சத்திய சோதனை.
இப்படிப் பதிவாக்குவதில் சில விஷயங்கள் முக்கியமானவை. இந்த சோதனைகளில் பரிசோதகனின் மனமும் சம்பந்தப்பட்டதாகையால், அந்த மனத்தில் எழுந்த மகோன்னத, மகா வக்ரமான சிந்தனைகளை, அழுக்குகளை,, ஆசாபாசங்களை ஒளிவுமறைவின்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இதை காந்திஜி செய்தார். அதற்கான, தம்மைப் பூஜ்யமாக்கிக் கொண்ட பணிவும், மெய்த்துணிவும், விஞ்ஞான மனப்பாங்கும் அவரிடம் இருந்தன. செயல்பாடுகளைக் குறித்து வைப்பதில் இம்மியளவும் தவறு ஏர்படக்கூடாது என்பது பற்றிக் கவனமாக இருந்தார். சம்பவங்கள் பற்றிய தமது பார்வையைக் குறித்தார். அவை மூலமாகத் தாம் கொண்ட முடிவுகளையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் குறித்து வைத்தார்.
ஒரு விஞ்ஞானியைப் போலவே, தமது முடிவுகள் இறுதியானவை, தவற்றுக்கே இடமில்லை என்று பிடிவாதமாக இல்லை. உண்மையின் புதிய பர்மாணங்கள் பின்னால் வெளிச்சத்துக்கு வரக்கூடும் என்ற திறந்த மனத்துடனேயே இருந்தார். தமது வாழ்க்கை நிகழ்வுகளைப் படிக்கும் வாசகர்கள், வித்தியாசமான முடிவுகளுக்கு வரக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார். அதுவுமல்லாமல் தாம் எழுதி வைத்துள்ள நிகழ்வுகள் உதாரணங்கள் மட்டுமே ; வாசகர்கள் வாழ்வில் பல்வேறு வித நிகழ்வுகள் ஏற்படலாம். அவற்றைத் தமது எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் அவர்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நடத்திய பரிசோதனைகளின் மூலமாக காந்திஜி உறுதிப் படுத்திக் கொண்ட  உண்மைகள்-சத்தியப் பாதையில் பயணிக்கும் ஒருவன்,மிகவும் கடைப்பட்ட பிறவிகளையும் தன்னைப் போலவே நேசிக்க வேண்டும்; சத்தியம் என்பது எந்தத் துறைக்கும் விலக்கல்ல எதிர்ப்படும் எந்தத் துறையினின்றும் விலகி நிற்கக்கூடாது என்பவையே.


No comments:

Post a Comment