காந்தியைக் காணோம்!
தென் ஆப்பிரிக்காவில் காந்திஜியின்
அறப்போராட்டம் தீவிரமாக இருந்த காலம். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் தென் ஆப்பிரிக்கா
வாழ் இந்தியர்களின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லித் தீர்வு காண்பதற்காக காந்திஜி லண்டனுக்கு வந்து நான்கு மாதங்கள் தங்கியிருந்தார்.
ஆண்டு 1909. அவர் வந்த காரியம் என்னவோ வெற்றியடையவில்லை.
இந்த காலகட்டத்தில் வ.வே.சு.ஐயர், சாவர்க்கர்,
திருச்சி டாக்டர் தி.சே.சௌ.ராஜன் ஆகியவர்கள் லண்டனில் இருந்தார்கள். வன்முறைப்போக்கின் தீவிர ஆதரவாளர்கள் அவர்கள். சில
அதிகாரிகள் கொலையுண்டால் பிரிட்டிஷார் அதிர்ச்சி அடைவார்கள்; நிலைகுலைந்து போவார்கள்.
அதற்குப்பிறகு கொரில்லாப்போரை ஆரம்பிக்கலாம். இதனால் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் இந்தியர்கள்
உயிர் துறக்க நேரிடலாம். ஆனால் இந்தியா விடுதலை பெற்று விடுவது சர்வ நிச்சயம். இதுதான்
அவர்கள் கருத்து. (இந்த தி.சே.சௌ.ராஜன் தான் பின்னாளில் பழுத்த அஹிம்ஸாவாதியாகி வேதாரண்யம்
உப்பு சத்யாக்ரகத்தில் முக்கிய பங்கு வகித்தார்.). தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி நடத்திய
அறவழிப்போராட்டத்தை அவர்கள் அறிந்திருந்தார்கள். எப்படியாவது அவரைத் தங்கள் வன்முறைத்
தரப்புக்கு இழுத்து விட வேண்டும் என்று விரும்பினார்கள். அவர் லண்டனில் இருப்பதறிந்து
அவரைச் சந்திக்க முயன்றார்கள். வழக்கமாக இந்தியர்கள் வந்தால் தங்கும் ஆடம்பர ஹோட்டல்களில்
அவரைத் தேடிப்பார்த்தார்கள். பயனில்லை. கடைசியில் அவர் எங்கோ ஒரு கோடியில் ஒரு சாதாரணரின்
வீட்டில் தங்கியிருப்பது தெரிய வந்தது. அவரைச் சந்தித்து, தாங்கள் இந்தியா இல்லத்தில்
நடத்தும் தீபாவளி விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
காந்தி சரி என்று ஒப்புக்கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனை. சைவ உணவுதான். அதுவும் நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர்களே தயார் செய்ய வேண்டுமே தவிர ஹோட்டலில் இருந்தெல்லாம் வரவழைக்கக்கூடாது.
வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்கள். (பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்?) “ நீங்கள் ஒன்றும்
வந்து அழைத்துப்போக வேண்டாம்; நானே வந்து விடுகிறேன்! ” என்று விட்டார் காந்திஜி.
16 அக்டோபர், 1909. நிகழ்ச்சி
தினம். விழாக்குழுவில் ஆறு பேர் ஒரு அணியாக அமைந்து சமையல் வேலையை ஆரம்பித்தார்கள்.
பல்சுவை அயிட்டங்கள். திணறிப்போனார்கள். அந்த சமயம் எங்கிருந்தோ வந்தான் என்பது போல
பசியால் மெலிந்தாற்போல ஒருவன் அங்கே வந்தான். பரபரவென்று இழுத்துப்போட்டுக் கொண்டு
காரியங்களைச் செய்ய ஆரம்பித்தான். .வட்ட வட்ட சப்பாத்திகள் இடுவதென்ன, ரொட்டி சுடுவதென்ன,
பாத்திரங்களை உடனுக்குடன் கழுவி வைப்பதென்ன.. அத்தனை பரபரப்பை அவர்கள் அதுவரை பார்த்ததே
இல்லை.. பாவம் சாப்பிட்டு நாளாயிருக்கும்போல இருக்கிறது.. வயிற்றுப் பசிக்குத்தானே
இவ்வளவும் செய்கிறான்.. விருந்து முடிந்ததும் அவனுக்கு வயிறார சாப்பாடு போட வேண்டும்..
கொஞ்சம் காசு கூடக் கொடுக்கலாம் என்று பேசிக் கொண்டார்கள். அடுக்களை வேலையெல்லாம் முடிந்தது.
நேரத்தைப் பார்த்தார்கள். விழா துவக்கக் குறிப்பிட்ட நேரம் வந்தாகி விட்டது. ”காந்தி
ஏன் வரவில்லை? நேரம் தவறாமைக்கு உதாரணமாகச் சொல்வார்களே?” என்று புலம்பியபடி வாசலுக்கும்
உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள். அப்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர்கள்
கண்ணில் பட்டது, அந்த ‘எங்கிருந்தோ வந்தவன்’ பிரதம விருந்தாளிக்காகப் போட்டிருந்த இருக்கையில்
அமர்ந்திருந்தான்! “சரியான லூசுப்பய! அவனைக் கிளப்புங்கடா! காந்தி வந்துடப்போறார்!” என்று அவர்கள் பதறி அடித்துப்
பேசிக் கொண்டிருந்தபோது சாவர்க்கர் உள்ளே நுழைந்தார். நாற்காலியில் உட்கார்ந்திருந்த
“எங்கிருந்தோ வந்தவனைப்” பார்த்து, “ ஸாரி! காந்தி! நான் கொஞ்சம் வேலையாய் வெளியிலே
போயிருந்தேன், வருவதற்கு நேரமயிட்டது” என்று சொல்லிக் கைகுலுக்கினார்.
‘அடடா! இவன்..இவர்தான் காந்தியா?’
என்று கொஞ்சம் தாமதமாகவே புரிந்துகொண்டு “ஙே”
என்று விழித்தார்கள். ” ஸாரி! ஸாரி! உங்களை யாரென்று தெரிந்து கொள்ளாமல் வேலை வாங்கிட்டோம்!
மன்னிச்சுக்குங்க!” என்று காலில் விழாத குறையாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.
காந்திஜி புன்னகைத்தார்.
No comments:
Post a Comment