காந்திஜியும் சநாதனவாதிகளும்
1933 நவம்பர் 7 அன்று காந்திஜி வார்தாவிலிருந்து தமது ஹரிஜன யாத்திரையைத் தொடங்கினார்.
தீண்டாமைக் கொடுமையைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஹரிஜன நலனுக்காக
நிதி திரட்டுவதுமே அந்த யாத்திரையின் நோக்கம். நாடு முற்றிலும் சுற்றி, காலனிகளுக்குள்ளெல்லாம்
புகுந்து புறப்பட்டு, பொதுமக்களுடன், குறிப்பாகப் பெண்களுடனும் மாணவர்களுடனும் நிறையக்
கலந்து பேசினார். இந்த யாத்திரை மக்களின் பெருவாரியான
வரவேற்பைப் பெற்றது. மக்கள் தாமாகவே நிதியை வாரி வழங்கினார்கள். நிறைய இடங்களில் மக்களாகவே
முன்வந்து, கோவில்கள், கிணறுகள், சாலைகளைத் திறந்து விட்டார்கள். என்றாலும் இந்த யாத்திரைக்கு
சில சில தொல்லைகளும் ஏற்பட்டன. பல இடங்களில் லால்நாத் சாஸ்திரி என்பவரின் தலைமையில்
சநாதனவாதிகள் திரண்டு வந்து காந்திஜிக்குக் கருப்புக்கொடி காட்டினார்கள். கூட்டங்களுக்கும்
ஊர்வலங்களுக்கும் பெரும் இடைஞ்சல்களை ஏற்படுத்தினார்கள்.
ஆஜ்மீர். காந்திஜி இன்னும் கூட்டம்
நடக்கும் இடத்துக்கு வரவில்லை. அதற்குள் லால்நாத் அங்கு வந்து, நான் அந்தக்கூட்டத்தில்
பேசுவேன் என்று பிடிவாதம் பிடித்தார். இயக்கத்துக்கு எதிராகப் பேசுவதற்கு மேடை தந்துதான்
ஆக வேண்டும் என்பது அவரது வாதம். கூட்டத்தில் திரண்டிருந்த மக்களுக்கு ஆத்திரம் வந்து
விட்டது. அவரை நையப் புடைத்து விட்டார்கள். அவர் மண்டையில் அடி பட்டு விட்டது. காந்திஜி
வந்து நடந்த விவரங்களையும் அறிந்து கொண்டார்..அவர் தாக்கிய மக்களைக் கடிந்து கொண்டது
மட்டுமல்லாமல், ,”லால்நாத்! நீங்கள் பேசுங்கள்!” என்று சொல்லி அவருக்குப் பேச வாய்ப்பளித்தார்..
அந்த மேடையிலேயே,”இந்த யாத்திரை முடிந்ததும் நான் ஏழு நாள் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்!”
என்று அறிவித்து விட்டார். எதற்காக? லால்நாத்துக்கு
இழைக்கப்பட்ட கொடுமைக்காக! “மதத்தின் பேரால் ஏறத்தாழ 50 லட்சம் மனித ஜீவன்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்..அவர்களின்
விடுதலைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் ஆன நமது புனிதப் போராட்டத்தில் இனி ஒரு புதிய, தூய்மையான அத்தியாயம் தொடங்க வேண்டும்.
நமது இயக்கத்தில் சேர்ந்திருப்பவர்களுக்கும், இனி சேர இருப்பவர்களுக்கும் இந்த உண்ணாவிரதம் ஒரு எச்சரிக்கையாக அமையட்டும்.
அவர்கள் கரங்களும் மனமும் தூய்மை இழக்கவே கூடாது. மனம், வாக்கு,செயல் இவை எவையும் சத்தியத்திலிருந்தும்
அகிம்சையிலிருந்தும் பிறழவே கூடாது!”
யாத்திரை ஜூலை 29,1934 அன்று காசியில்
நிறைவுற்றது. அந்த தினம் நன்றி அறிவிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. அன்றைக்கு காந்திஜி
பொதுக்கூட்டத்துக்குக் கிளம்ப இருக்கிறார்.
அப்போது அவருக்கு ஒரு பிடி வாரண்ட் வந்தது. யாரிடமிருந்தாம்? காசி விஸ்வநாதரிடமிருந்து.
காந்திஜி சுவாமியின் கொத்தவால் என்ற அதிகாரியின் முன் ஆஜராகி, சநாதன தர்மத்தை மீறிய
குற்றத்திற்கான வழக்கைச் சந்திக்க வேண்டுமாம்! இந்த வாரண்ட்டைக் கொண்டு வந்த சநாதனி
இளைஞரிடம் காந்திஜி இந்த வாரண்ட்டை யார் உன்னிடம் கொடுத்தனுப்பினார்கள் என்று கேட்டார்.
“கடவுளே என்னைத் தூண்டி இந்த வாரண்ட்டை உங்களிடம் சேர்ப்பிக்கச் சொன்னார்” என்று கொஞ்சம்
கூடக் கூசாமல் சொன்னார். காந்திஜி நிதானமாகப் புன்னகைத்தபடியே, ”பின் ஏன் அவர் அந்த
வாரண்ட்டை ஏற்றுக்கொள்ளும்படி உத்தரவு போடவில்லை?” என்று கேட்டார். சளைக்காமல் பதில்
சொன்னார் அந்த இளைஞர் ,”ஏன் தெரியுமா? நீங்கள் சநாதன தர்மத்துக்கு எதிரான பாவியாயிற்றே?”
இந்த தருணத்தில் லால்நாத்தே வந்து விட்டார். ”காந்தி! உங்கள் இரண்டு புகைப்படம் வேண்டும்.”
என்றார். காந்திஜி திட்டவட்டமாகச் சொன்னார், ”நான் புகைப்படங்கள் எதுவும் கையில் வைத்துக்கொள்வதில்லை.
அப்படியே இருந்தாலும் நிச்சயமாக உங்களுக்குத் தர மாட்டேன்.” வேறெங்கிருந்தோ காந்திஜியின்
படங்களை வாங்கிக் கொளுத்தி மகிழ்ந்தார்கள்
அந்த எதிர்ப்புரட்சியாளர்கள்!
யாத்திரை முடிந்ததும் காந்திஜி
திட்டமிட்டபடி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். லால்நாத்தின் செயல்களினால் தமது திட்டத்தை
அவர் மாற்றிக்கொள்ளவில்லை.
ஏழுநாள் உண்ணாவிரதம் முடிந்து
அவர் ஓர் அறிக்கை விடுத்தார்.
“இந்த உண்ணாவிரதத்தை நான் மேற்கொண்ட
காரணம், ஆஜ்மீரில் லால்நாத்துக்கும் அவரது நண்பர்களுக்கும் நமது ஆதரவாளர்களால் இழைக்கப்பட்ட வன்முறைக்குக் கழுவாய் தேடிக்கொள்ளவே. எனினும் உண்மையில்
இந்த உண்ணாவிரதத்தின் தலையாய நோக்கம் எதிரிகளைக்
கையாளும்போது முறைதவறாது நடந்து கொள்ள வேண்டும் என்று நமது தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் வலியுறுத்துவதே
ஆகும். அவர்களீடம் அதிக பட்சப் பரிவுடன் நடந்து கொள்வதே நமது இயக்கத்துக்கு மிகச் சிறந்த
பிரசார சாதனமாகும். எதிரிகளை வெல்லும் முறை
அன்பேயன்றி, வெறுப்பு அல்ல. வெறுப்பு என்பது வன்முறையின் மிக நுட்பமான வடிவமே ஆகும்,
நாம் உண்மையில் அகிம்சாவாதிகள் என்றால் மனதில்
துளிக்கூட வெறுப்பு என்பது இருக்கவே கூடாது
No comments:
Post a Comment