Sunday, 27 May 2018

அறப்போரில் அராஜகம் புகுந்தபோது...


அறவழிப்போராட்டத்தில் அராஜகம் புகுந்தபோது…
.
 ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தொடர்ந்து நாட்டில் எதேச்சாதிகாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. போராட்ட வீர்ர்கள், கும்பல் கும்பலாய்ச் சிறைக்குத் தள்ளப்பட்டார்கள். திட்டமிட்டு அவமானப்படுத்துவது, சாட்டையடி, கடின வேலைகள் என்று துன்புறுத்தப்பட்டார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவை அரதப்பழசான, ரத்தக்கறையும், ஈரும் பேனும் நிறைந்த,  வேறு கைதிகள் உடுத்திக் களைந்த பழைய ஆடைகள். சட்டத்தை மீறி தண்டனை என்று ஏற்றுக்கொள்ள முன்வந்து விட்டபோது இவற்றைப் பற்றியெல்லாம் குறை கூறிக் கொண்டிருப்பதில் பொருள் இல்லை என்பது காந்திஜியின் கருத்து. என்றாலும், இத்தகைய கொடுமைகள், நாலு சுவர்களுக்குள் நடத்தப்படுபவை, அதேபோல உள்ளடங்கிய கிராமங்களில் நடக்கும் கொடுமைகள்  ஜாலியன்வாலாபாகை விடப் பயங்கரமானவை  என்கிறார் காந்திஜி. பின்னது வெளிப்படையாக, உலகறியச் செய்தவை. அதிர்ச்சி அடையச் செய்தவை. மக்களின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பியவை. இப்போது நடக்கும் வன்முறைகள் கமுக்கமாக  ஜனசமூகத்தை சென்றடையாமல் நடப்பவை.
காந்திஜி சுதந்திரத்துக்காகப் போராடுவதை விட முக்கியம் என்று பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், சுதந்திரமாகக் கூடும் உரிமை ஆகியவற்றைக் கூறினார். இவை போனால் எல்லாம் போச்சு! எனவே இவற்றை மீட்டெடுப்பது என்ற குறிப்பிட்ட, திட்டவட்டமான, குறிக்கோளை மட்டுமே முன்வைத்துப் போராட்டம் நடத்த வேண்டும். அந்தப் போராட்டத்தில் வன்முறை சிறிதும் இருக்கக்கூடாது.  எதிரியின்பால் காழ்ப்புணர்ச்சி இருக்கக்கூடாது. துப்பாக்கிக் குண்டுக்கு எதிர் நின்றாலும் மார்பைத் திறந்து காட்டும் தைரியம் இருக்க வேண்டும். அடிப்படை சுதந்திரங்களை இழந்து உயிர்வாழ்வதில் பொருளில்லை,
இப்படிப்பட்ட போருக்குத் தயாராக உள்ள தொண்டர்கள் எளிதில் கிடைப்பார்களா?  பம்பாய் ராஜதானியில் சூரத் பகுதியைச் சேர்ந்த பர்தோலி என்ற சிற்றூரின் மக்கள், ”நாங்கள் தயார்!” என்று கரம் உயர்த்தினார்கள். கதர் உடுத்திய 4000 தொண்டர்கள்- அவர்களில் 500 பெண்கள்- உறுதி ஏற்றார்கள். சிறைக்குச் செல்லத் தயார்! மரணத்தையும் எதிர்கொள்ளத் தயார்! எங்கள் போரில் வன்முறைக்கோ காழ்ப்புணர்ச்சிக்கோ இடம் கொடுக்க மாட்டோம்!
பர்தோலி என்ற குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே முதல் கட்டமாக இந்த அறப்போரைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது..
காங்கிரசின் இந்த முடிவினால் நாடே எழுச்சி பெற்றது. உற்சாகம் கரை புரண்டது.
இந்த நேரத்தில் வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்தது, என்பது போல ஒரு பத்திரிகைச் செய்தி.
ஐக்கிய மாகாணத்தில் (இன்றைய உத்தரப்பிரதேஷ்) கோரக்பூர் மாவட்டத்தில் சௌரி சௌரா என்ற கிராமத்தில் நடந்தது அது. ஊர்வலம் ஒன்று நடந்து முடிந்த பிறகு, பின்னால் சென்று கொண்டிருந்த சிலரை போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்திக் கண்டபடி ஏசினார்கள். பிரச்சினை முற்றியது. போலீஸ்காரர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். ரவை எல்லாம் தீர்ந்து போனதும் அவர்கள் காவல் நிலையத்துக்குத் திரும்பி விட்டார்கள். ஓர் அராஜகக் கும்பல் காவல் நிலையத்துக்குத் தீ வைத்து விட்டது.. 22 போலீஸ்காரர்கள் கூண்டோடு கைலாசம்.
காந்திஜிக்குப் பயங்கர அதிர்ச்சி. உடனடியாக  போராட்டத்தை நிறுத்தி விட்டேன் என்று அறிவித்து விட்டார். சற்று முன்தான் வைஸ்ராய்க்கு அவர் வீராவேசமாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். இப்போது போராட்டத்தை நிறுத்தி விட்டால் என்ன மானக்கேடு! கூடாது என்ற சாத்தானின் குரலை உதறித் தள்ளி விட்டு அத்தகையதொரு முடிவை எடுத்தேன் என்கிறார் காந்திஜி.
காரியக்கமிட்டி உறுப்பினர்கள் அவரை வறுத்தெடுத்து விட்டார்கள். காலம் கனிந்து வருகிற நேரத்தில் காலை வாரி விட்டாரே காந்திஜி என்பது அவர்கள் ஆதங்கம். அதுவும் பர்தோலிக்கு சம்பந்தமே இல்லாத எங்கோ ஓர் ஊரில் நடந்த வன்முறைக்காக நன்கு தயாராக இருந்த போராட்டத்தைக் கைவிடுவது சாதுர்யமாக இல்லையே!
நாடு அறப்போருக்குத் தயராகவில்லை என்பது அவரது கருத்து. தமது இமாலயத் தவற்றுக்காக அவர் வருத்தப்பட்டு  5 நாட்கள் உபவாசமிருந்தார்.. ”அகிம்சையின்” நெடி என் நாசித்துவாரத்தைத் துளைக்கிறது” என்றார் அவர்.
அவரது அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:
‘சௌரி சௌரா மூலம் கடவுள் என்னிடம் தெளிவாகப் பேசி விட்டார். வதைத்துக் கொல்லப்பட்ட அந்த போலீஸ்காரர்கள், ரொம்பவுமே  ஆத்திரம் ஊட்டியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. .ஏற்கெனவே இன்ஸ்பெக்டர்,  தொந்தரவுபடுத்த மாட்டோம் என்று ஊர்வலக்காரர்களிடம் சொல்லியிருக்கிறார். அதையும் மீறி, ஊர்வலம் கடந்து சென்றவுடன் பின்னால் நடந்து சென்றவர்களை ஆத்திரமூட்டி இம்சைப் படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் ஐயோ ஐயோ என்று அலறியதும்  கும்பல் திரும்பி வந்திருக்கிறது.. போலீஸ்காரர்கள் துப்பாக்கிச் சூடு நட்த்தியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்த ரவை தீர்ந்துபோய் விட்டது. காவல் நிலையத்துக்குள் புகுந்து விட்டார்கள்.  கும்பல் காவல் நிலையத்துக்குத் தீ வைத்து விட்டது.. போலீஸ்காரர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்த்தும் அவர்களைக் கண்டதுண்டமாக வெட்டித் தீக்குள் எறிந்துவிட்டார்கள். இதுவே எனக்குக் கிடைத்த தகவல். இதை செய்தது தொண்டர்கள் இல்லை என்கிறார்கள். கும்பலுக்கு போலீசார் ஆத்திரமூட்டியது வாஸ்தவம்தான், என்றும் அந்த போலீஸ்காரர்கள் அடாவடிக்குப் பேர் போனவர்கள் என்றும் சொல்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் இப்படிப்பட்ட கொடூர வன்முறைக்கு நியாயமே கிடையாது. ஒரு வேளை இது நடக்காமல் பர்தோலி சத்தியாக்கிரகம்  வெற்றி பெற்றிருந்தால், தலைதூக்கும் வன்முறையாளர்களை யாரால் கட்டுப்படுத்த முடியும்? போக்கிரிகளையும் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டால்தான் அறவழிப் போராளிகள் வெற்றி பெறுகிறார்கள் என்று அர்த்தம்.
.பிரிட்டிஷ் அரசு கொக்கரித்தது. காந்தி ஆட்டம் குளோஸ் என்று கணக்குப் போட்டது. கொஞ்ச நாளில் காந்திஜியைக் கைது செய்தது.
(1922 நிகழ்வு- ஆதாரம்  D.G.Tendulkar எழுதிய  Mahatma-Vol.II)