Sunday, 8 March 2020

மனமும் மகாகவியும்-1 உபசாந்தி லோகம்


மனம் என்னும் மோஹினியிடத்து பாரதிக்குத் தீராக் காதல். ,தான் வேறு தன் மனம் வேறு என்ற துவைத சிந்தனை மேலோங்கியவன் அவன்.. ஓயாத கவலையினால் அவள் படும் வேதனையைக் கண்டு பொறுக்காமல்,கவலையே இல்லாத உபசாந்தி லோகத்துக்குப் போக முனைகிறான் அவன். ஆனல் மனமோ,கவலையற்ற பூமி  என்றதுமே நடுங்குகிறது. அங்கு போக ஒட்டாமல் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்க்கிறது. பாரதி மனத்தின் எண்ணத்தை நிராகரிக்கிறான். “சீச்சீ ! பேதை மனமே!. உனக்கு ஓயாமல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேதனைகளையும் உளைச்சல்களையும் கண்டு இரங்கி,நான் உன்னைச் சிறிது நேரம் அமைதி உலகத்துக்குக் கொண்டு போய் வைத்துத் திரும்பலாம் என்று உத்தேசிக்கிறேன்.அதற்கு நீயே ஆக்ஷேபம்.சொல்ல வருகிறாயா?” என்று கண்டிக்கிறான்.
உபசாந்திக் கோட்டை வாயிலிலேதான் உண்மை தெரிய வருகிறது மனம் என்னும் வஸ்து அங்கு உள்ளே செல்லுமானால் அக்கினி லோகத்திலே பிரவேசித்த பஞ்சுப் பொம்மை மாதிரிப் பொசுங்கி நாசமடைந்து விடுமாம்.
உபசாந்தி லோகம் என்ரதும் மனம் நடுங்கியதற்கும், போக வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்ததற்கும் காரணம் பாரதிக்குப் புரிந்தது. மனத்தைக் கொன்று விட்டுத் தான் இன்பம் அடைவதில் பாரதிக்குப் பிரியமில்லை.
மனத்தின் கவலைகளையும் உளைச்சல்களையும் பற்றி யோசித்தேனே தவிர,அதன் மூலமாக்க் கிடைத்திருக்கும் பெரிய பெரிய நன்மைகளைச் சிந்தித்தேனில்லை. இந்த உலக வாழ்க்கை மனத்தினால்தானே எய்திற்று? எத்தனை கோடிக் கவலைகள் இருப்பினும் பெரிதில்லை. மனம் செத்து நான் தனியே வாழ்வதாகிய உபசாந்திலோகம் எத்தனை அரியதாக இருப்பினும் இது வேண்டாம் என்று தீர்மானம் செய்துகொண்டேன்.” என்கிறான் பாரதி.
                                                          

Saturday, 1 February 2020

ஜடபரதர்


அவரை நான் முதலில் பார்த்தது சுவாமி பரமார்த்தானந்தாவின் பகவத்கீதை வகுப்பின்போது.  வெள்ளை வேளேர் அரைக்கைச் சட்டை. அதற்கு ஈடான வேட்டி, நல்ல உயரம். கம்பீரமான வழுக்கை. கீற்று விபூதி. குங்குமம்.

கூர்ந்து கேட்டுக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். வகுப்பில் கொஞ்சம் தனித்துவமாகத் தெரிந்தார். என்னவோ, அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஓர் உந்துதல். எனக்கே இயல்பான கூச்ச சுபாவத்தால் பேசாமல் வந்து விட்டேன்.
யி மந்திரில். காலணிகளை வாங்கி வைத்துக்கொண்டு எடுத்துக் கொடுக்கும் பணியைக் கர்ம சிரத்தையாகச் செய்து வந்தார்
.
இப்படியாக ஆன்மிகச் சூழலில் அடிக்கடி சந்திக்கும்படியாக ஆயிற்று. அறிமுகம் செய்து கொண்டு விட்டேன். பிரசித்தி பெற்ற பெருநிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றுகிறார். அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்வதுண்டு. அறிமுகம் நட்பாக மலர்ந்தது.

அலுவலகம் முடிந்ததும் பரமார்த்தானந்தா, ஓங்காரானந்தா,  விமூர்த்தானந்தா இவையே அவரது நித்திய நியமங்கள் என்று புரிந்துகொண்டேன்.  ஆகக்கூடி, ஆனந்தமான மனிதர்!
அவரிடம்,பழக்கம் அதிகமாக ஆக ,எனக்கு சுதந்திரம் அதிகரித்து விட்டது.
அவர் பிரம்மச்சாரி. ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டுவிட்டேன். எனக்கே கொஞ்சம் இங்கிதக் குறைவாகத் தோன்றினாலும் அவர் ஒன்றும் கோபித்துக்கொள்ளவில்லை.
சுவமி விவேகானந்தரைப்போல் அவர் கண் முன்னும் இரண்டு வாழ்க்கை நெறிகள் விரிந்தனவாம். ஒன்று, மனைவி, குழந்தைகள், குடும்பம், என சௌகர்யமான இல்லற வாழ்க்கை, மற்றது இறை நெறியும் பொதுத்தொண்டும் கூடிய துறவு வாழ்க்கை. இரண்டில் அவர் மனம் உறுதியாகத் துறவு நெறியையே பற்றிக்கொண்டது. கர்ம சன்னியாசம். குடும்பத்தில் புழங்கிக்கொண்டே துறவு மனப்பான்மை.

அவருடன் உரையாடுவதே நம்மை மேம்படுத்துவதாக இருக்கும். காமினி, காஞ்சனம், என்பார். அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் பற்றி எல்லாம் விரித்துரைப்பார்.  நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்க்கரணே என்பார். பக்தியைப் பற்றியும் சொல்லுவார்;பிரபத்தியைப் பற்றியும் பேசுவார். சுவாமி விவேகானந்தரின் நடை முறை வேதாந்தத்தை ஒட்டி, ஒரு சபையில்  அன்றாட வாழ்வில் அஹம் ப்ரம்மாஸ்மிஎன்று ஓர் உரை நிகழ்த்தினார். விவேகானந்தரின் கருத்துகளைச் சாறு பிழிந்து, சர்க்கரை தேன்பாகு கலந்து கொடுத்தாற்போல் இருந்தது என்று எல்லோருமே பாராட்டினார்கள்.

இவ்வளவு ஆன்மிகவாதியாக இருந்தபோதும் உலக ஞானம் அதிகம். நரேந்திரமோடியின் சாதனைகளைப்பற்றி வியந்து பேசுவார். கிரிக்கெட் மேட்ச்  பருவங்களில் உற்சாகம் கரை புரளும். இது ஏனோ எனக்கு ஒரு முரண் தொடையாகப்பட்டது. கேட்டே விட்டேன்.
நகைத்துக்கொண்டே சொன்னார். ஆன்மிகவாதி உற்சாகமாகத்தான் இருக்கணும். அப்படி இல்லை என்றால், அது ஆன்மிகம் இல்லை; அஜீரணம்! (சுவாமிஜியின் கருத்து.)
ஒரு முறை பரத நாட்டியக்கச்சேரிக்கு அழைப்பின்பேரில் சென்றிருந்தோம். ராசக்கிரீடை பற்றிய அபிநயம். புனிதமானது. ரசமானது என்பதில் எனக்கொன்றும் அபிப்பிராய பேதமில்லை. என்றாலும் என் மனதில் கொஞ்சம் சலனம் ஏற்பட்டது உண்மையே. அருகிலிருந்த நைஷ்டிகரின் எதிர்வினையை அறியத் திரும்பிப் பார்த்தேன். திறந்த வாய் மூடாமல் ஆனந்தமாய் ரசித்துக்கொண்டிருந்தார். துளிக்கூட அவர் மனசில் சலனம் இல்லாமலா இருந்திருக்கும்?
 நான்தான் மனசுக்குள் கொஞ்சம் கூட வைத்துக்கொள்ளாமல் கேள்வி கேட்கிறவன் ஆயிற்றே? எப்படி ஓர் அழகான பெண்ணின் நடனத்தை ரசிக்கப் போயிற்று?
அவர் எல்லாரும் இறைவனின் அம்சங்கள். இதில் ஆணென்ன பெண்ணென்ன  என்றவர், சுவாமி விவேகானந்தரின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார். அரச சபையில் ஒரு மங்கையின் நடனத்தைப் பார்க்க மறுத்து அவர் தமது அறைக்குள் சென்று விட்டார்.  அந்த மங்கையின் உருக்கமான பாடல் அவரை ஈர்க்க, அவைக்கு வந்து அமர்ந்து கொண்டார். தமது செய்கை தவறு என்று உணர்ந்து கொண்டார். எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே பேதம் பார்க்கிற சன்னியாசம் என்ன சன்னியாசம்! என்று கூறிக்கொண்டார்.  அன்று என் பார்வையின் கோளாறு அகன்றது  என்றாராம் சுவாமிஜி
!
அவரது அலுவலகத்தில் பணி புரிந்த பெண் ஒருவரை ஒரு நிகழ்ச்சியில் சந்திக்க வாய்த்தது.  அவர் சொன்ன தகவல் அதிர்ச்சி தருவதாக இருந்தது. பாஸிட்டிவ் அதிர்ச்சி.
அவர்கள் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு பெண்மணி. பேரழகி. அலுவலகத்தில் பணிபுரியும் ஆண்கள், இளைஞர்கள், முதியவர்கள் அத்தனை பேருக்கும் அவள் மீது ஒரு சபலம். அவளுக்கோ நம் நண்பர் மீது ஒரேயடியாக மோகம். எப்படியாவது அவரை வீழ்த்திவிட வேண்டும் என்ற உறுதி. இவரோ வீழ்வேன் என்று நினைத்தாயோ வர்க்கம். ஒரு நாள் இவர் தம் அறையிலிருந்து வந்து கொண்டிருக்கிறார். அவள் ஏதோ யதேச்சையாக வருவது போல் அவர் வழியில் குறுக்கிட்டு, கீழே விழுவதுபோல் நடித்து, பிடிப்புக்கு என்பது போல் அவர் மீது சரிந்து விட்டாள். மேலாடை குலைவுற்று நிற்கிறாள். இவர் என்ன செய்தார் தெரியுமோ? “அம்மா, அம்மாஎன்று  கூவியபடி அவள் காலடியில் தடாலென்று விழுந்து விட்டார்! கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர்!
ஐன்ஸ்டீன் காந்தியைப்பற்றிச் சொன்னது போல, ரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதர் இருப்பார் என்றால் யார் நம்ப முடியும்?

அவர் குடும்ப வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவரது தாயார் மரணமடைந்தபோது போயிருந்தேன். அப்போதுதான் அவரது குடும்பம் பற்றித் தெரிந்து கொள்ள வாய்த்தது. தாயாருக்கான வைதிக காரியங்கள் அத்தனையையும் சிரத்தையுடன் செய்தார். ஆனால் கண்ணில் பொட்டுக்கூட நீர் வரவில்லை. பெற்ற அம்மா செத்ததற்குக்கூட அழாமல் அப்படி என்ன வறட்டு வேதாந்தம்? வழக்கம் போலக் கேட்டே விட்டேன். அவர் சொன்னது:  மரணம் என்பது என்ன? ஓர் அறையிலிருந்து இன்னோர் அறைக்குப் போவது போலத்தானே? இதற்கேன் வருந்த வேண்டும்?”
இப்போது அவரது குடும்பத்தில், அவர், அவரது வயதான தந்தை, வேலைக்குச் செல்லும் அ
வரது தங்கையும், அவரது கணவரும். தந்தையை யார் கவனித்துக் கொள்வார்கள்? திடும்மென்று வேலையை ராஜினாமா செய்து விட்டு, முழு நேரப்பணியாக அப்பாவின் பணிவிடையில் இறங்கி விட்டார்; கர்மயோகி!
இது இப்படி இருக்க, ஒரு சுப நட்சத்திரத்தில் தங்கைக்கு ஆண்குழந்தை பிறந்தது.  கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தையைப் பார்த்துக்கொள்வதையும் நமது கர்மயோகி ஏற்றுக்கொண்டார்!

  அன்று முதல்,”வினீத்,வினீத்தான் அவரது மூச்சு!! உபன்யாஸம், உரையாடல் எல்லாம் போச்சு! அதைச் சொல்வானேன்?  போனில் கூட அவருடன் பேச முடியாது! பின்னணியில் குழந்தையின் அழுகுரலும்.  கிட்டத்தட்டஉளு உளு உளாயீஎன்று எழுத்தில் வடிக்க முடியாத அவரது குரலும்தான் கேட்கக் கொடுத்து வைக்கும்!
குழந்தைக்கு இரண்டரை வயதாயிற்று. நண்பரின் பொறுப்புகள் கூடின. குழந்தைக்கு டிரெஸ் போட்டு, டிஃபன் அடைத்து வைத்து, பஸ்ஸில் ஏற்றி விட்டு, திரும்பி வரும் வரையில் ஆவலோடு காத்துக் கிடந்து..
லொக் என்று ஒரு இருமல் வினீத்திடமிருந்து வந்தால்கூட தவித்துப் போவார்!

அன்று ஒரு நாள் மாலை. அவசரமாக அவரிடமிருந்து ஒரு போன் வந்தது. திணறித் திணறிப் பேசுகிறார். “பயமாயிருக்கு; உடனே வாங்க!” உடனே சென்றதும் அவர் 
முகத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை.
வினீத்..வினீத்ஸ்கூல்லேருந்து வரல்லே. எல்லா பஸ்சும் வந்தாச்சு…”
 விம்மலாக வெடித்தது அழுகை.
தாத்தா!” என்று கூவியபடி அவரை வந்து கட்டிக்கொண்டான் குழந்தை. ஸ்கூல் டீச்சர் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.
 வினீத்..வினீத்.. எங்கேடா போயிட்டே?” என்று விக்கி விக்கி அழுகிறார். அவனைக்கட்டி ஆரத் தழுவிக்கொள்கிறார்.
பார்ப்பதற்கே நெகிழ்ச்சியாக இருந்தது.
ஜடபரதர் கதைதான் நினைவுக்கு வந்தது.