ஜில்காட்டுச் செம்மல்களே!
எல்.ஐ.சி. திருச்சி
கிளையில் பணி ஆற்றியபோது இளம் நண்பர்கள் ஒன்று
சேர்ந்து JILLKOT SOCIETY என்று முறைப்படுத்தப் படாத ஒரு அமைப்பை இயக்கி வந்தோம்.
(Jollity,Integrity,Liveliness,liberality,kindliness,Optimism Team spirit என்பதன் Acronym) இது.எஸ்.செளந்தரராஜன், ஏ,குப்புஸ்வாமி என்ற நண்பர்கள்
மதுரைக்கு மாற்றலாகிச் சென்றபோது(ஜூலை1959) வாசித்த கவிதை.
தெய்வநகர் மீனாட்சித்
திருமதுரைப் பதியிருந்து
செய்தவத்தின் மேன்மையினால்
சீலத்தால் அன்பினுடன்
சிலகாலம் எங்களுடன்
சிரித்து மகிழ்ந்துறவாடி
பலநாளின் கேண்மையினைப்
பயிர்செய்த பேரன்பீர்!
உற்சாகம்,நேர்மை,
உயிர்த்துடிப்பு,தாராளம்,
நற்கனிவு, எதிர்நோக்கும்
நம்பிக்கை,ஒத்துழைப்பு
எல்லாமாய் இணைந்திருக்கும்
இங்கிதத்துச் செல்வர்காள்!
ஜில்காட்டுச் செம்மல்களே!
சிந்தனையின் தூய்மையரே!
சீலத்தைக் கேண்மையினைச்
சிதைத்து இரு உருவாக்கி
மேலுக்கு இரண்டான
மெய்யாக்கி ஒன்றிவிட்ட
உயிர் உண்டு என்றுவிடில்
உண்மையென நம்பிடுவோம்!
உயர்குப்பு ஸ்வாமியுடன்
உத்தமராம் செளந்தரராஜ்!
இரவெல்லாம் தண்மதியம்
இருளகற்றிப் பகல் வரவும்
இரவிக்கு வழிவிட்டு
ஏகுதல்போல் செல்கின்றிர்!
அன்பாலிவ் வையகத்தில்
அத்தனையும் ஆகுமெனில்
வன்கடமைக் கட்டளையை
உடைக்கமட்டும் ஆவதில்லை!
கண்ணறியா இடமொன்றில்
கவின்மலரை வைத்தாலும்
வண்ணப்பூ வாசனையை
மறைத்திட யார் வல்லவர்கள்?
நெடுந்தொலைவில்
நின்றாலும்
நினைவுக்குள் நீர் இருப்பீர்!
தடைசெய்ய இதயத்தைத்
தொலைவுக்குச் சக்தியிலை!
எந்தநகர் சென்றாலும்
எப்பதவி ஏற்றிடினும்
செந்தூர்வேல் துணையிருக்கும்;
சேமமுறப் போய்வாரும்!
(செளந்தரராஜன்
இளவயதிலேயே மறைந்துவிட்டார்; குப்புஸ்வாமி நான் தொலைத்த நண்பர்களில் ஒருவர்.)