எங்கள் ஊர்!
(சிவாஜி-1954)
காவிரி பாயுமூர்;
கன்னலாம் செந்தமிழின்
காவலர்கள் பல்லோர்
செறிந்தஊர்;-தாவினொடு
தீதிலார் சேர்ந்தவூர்;
திண்மை மிகுந்தவூர்
ஓதுமூர் எம்திருச்சி
யூர்.
குன்றம் விளங்குமூர்;
குன்றா எழிலுடைய
இன்றமிழர் நற்கலைகள்
காணுமூர்;-பொன்னியாள்
சீரங்கன் பொன்னடியைப்
போற்றுமூர்; ஈசனுறை
சீரியவூர் நற்றிருச்சி
யூர்.
பாரசம் தோய்ந்தவூர்;
பண்பார்ந்த செந்தமிழின்
சீரதிகம் பெற்றுச்
சிறந்தவூர்;-கண்டறிந்தார்
காவியத்தில் போற்றும்
கவினுறுமூர்; சீரென்றும்
மேவியவூர் எம்திருச்சி
யூர்.
“சோழ வளநாடு சோறுடைத்து”
அந்நாட்டில்
வேழக் கரும்பினொடு
செந்நெல்லும்;-மற்றெல்லா
நல்லனவும் ஓங்கச்
செழித்த பெருந் திருவூர்
தொல்பெருமை நற்றிருச்சி
யூர்.
கல்வி கமழும் ஊர்;
காண்கின்ற திக்கெல்லாம்
சொல்லும் எழுத்தும்
செழிக்குமூர்-நாவிலுறை
சொல்மகளே சோதிதரப்
பாங்குடனே சீரியநற்
கல்வி ஒளி பெறுமூர்
காண்.
.
No comments:
Post a Comment