எல்லாரும் சமமென்பதுறுதியாச்சு!
பதவி உயர்வு கொடுத்து அந்த அலுவலகத்துக்கு தலைமைப் பொறுப்பேற்க என்னைப் பணித்த போதே எல்லாரும் என்னை எச்சரித்தார்கள். ‘ரவுசு பிடித்தஆபீசாயிற்றே! நிறைய க்ரூப்! எல்லாரும் தலைவர்கள்! எல்லாரும் புத்திசாலிகள்!” என்று. என் நேர்மையின் மேல் எனக்கு நல்ல நம்பிக்கை. “ Do the right thing! Be fair to all!”அப்புறம் என்ன பிரச்சினை வரப்போகிறது?
நான் பதவி ஏற்றுக்கொண்ட அன்றைய தினமே, மனமகிழ் மன்றக் காரியதரிசி என்று ஓர் இளைஞன் வந்தான். அறிமுகம் செய்து கொண்டு,”சார்! மன்ற ஆண்டு விழா (பத்து நாட்கள் கழித்து ஒரு நாளைக் குறிப்பிட்டு) அன்று வருகிறது. Ex-officio தலைவர் என்ற முறையில் நீங்கள் தலைமை வகித்து நடத்தித் தரவேண்டும்” என்று வினயமாகக் கேட்டுக்கொண்டான். .முகத்தில் தொலைக்காட்சிப் புன்னகையை வரவழைத்துக்கொண்டு, “ஆஹா! ரொம்ப சந்தோஷம்!~ எனக்கும் கலை இலக்கியம் எல்லாவற்றிலும் ரொம்ப ஆர்வம். இன்னும் நிறைய நிகழ்ச்சிகள் நடத்துவோம்” என்று உற்சாகமாகச் சொன்னேன். ‘” அன்று நான் ஜாய்னிங் டைம் முடிந்து வந்து சேர்ந்து விடுவேன்” பாத்ரூம் போகும் அவசரம். எழுந்திருந்தேன். “ இல்லை சார்! நீங்களும் ஏற்பாடுகளின் போது கூட இருந்தால் நல்லது” என்றான். “அதெல்லாம் வேண்டாம். உன்னால் முடியும் தம்பி! நீ சிறப்பாகச் செய்வாய்” என்று விட்டு அவசரத்தின் நிமித்தம் எழுந்தேன். “இல்லை சார்! போன வருஷம் ஒரு சிக்கல் வந்து விட்டது” என்றவனை அடக்கி, மன்மோகன்சிங் ராஜாவைத் தட்டிக்கொடுத்தது போல் தட்டிக்கொடுத்து, ‘ஜமாய் ராஜா!’(Not intended usage!) என்று நகர்ந்தேன். அப்போதுதான் Management Training centreல் பயிற்சி பெற்று வந்திருந்தேன், ( Leadership, delegation, authority and responsibility, A leader is one who develops leaders என்றெல்லாம் சொல்லிக்கொடுத்திருந்தார்கள். தவிர கொஞ்சம் உதயமூர்த்தியையும் படித்து வைத்திருந்தேன்!) அவனை மேற்கொண்டு பேச விடவில்லை. முட்டிக்கொண்டு வந்த அவசரத்தில் உள்ளே பாய்ந்துவிட்டேன்.
நிகழ்ச்சி தினத்தன்று வந்து சேர்ந்து விட்டேன். தலைமைப் பீடம். அருகில் காரியதரிசி இளைஞன்.
முதலில் ஒரு பெண் வந்து ‘கஜவதனா கஜானனா” என்று ஒரு பஜனைப்பாட்டை மெள்ள, நிதானமாக, துரிதகதி என்று மூன்று முறையும் ஒவ்வொரு அடியையும் பாடி முடித்தார். மரியாதைக்கோசரம் கைதட்டி வைத்தேன் .”நிகழ்ச்சி ஆரம்பிக்கலாமா?” என்று காரியதரிசியைக் கேட்க அவன் சமிக்ஞையாகக் கை காட்டினான். அடுத்து ஒரு பெண் “வெள்ளைத்தாமரை” என்ற பாரதியார் பாடலை ,80 வரிகளையும் ஆலாபனையோடு பாடி முடித்தாள். பரிதாபமாக காரியதரிசியைப் பார்த்தேன். அவர் ”பொறுமை” என்று எச்சரித்தார். பிறகு சிவன், விஷ்ணு ,லக்ஷ்மி, முருகன், இப்படி சைவ-வஷ்ணவ பேதமில்லாமல் எல்லாக்கடவுளர்களின் மீதும் பாடல்கள் பாடப்பட்டன. நான் அத்தனை கடவுளர்களின் மேலும் பாரத்தைப் போட்டு விட்டு உட்கார்ந்திருந்தேன். கூட்ட நேரத்தில் பாதிக்குமேல் ஆகி விட்டது. எல்லாம் ஓய்ந்தது என்று நான் நினத்த நேரத்தில் ஒரு கோஷ்டி ‘சாமியேய் ஐயப்பா!” என்று குரல் எழுப்பியபடி மேடையை நிறைத்தது. “ தொடர்ந்து,”இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை” என்ற நாகூர் ஹனீஃபா பாடலும் (நம்ம விட்டல்தாஸ் கூடப் பாடியிருக்கார்!) “இயேசுராஜன் வருவான் இன்னும் கொஞ்சம் நேரத்தில்” என்ற கிறிஸ்தவப் பாடலும் ஒலித்தன. “ஏன்ப்பா! இந்த ஆஃபீசில்,”புத்தமதம்,சமணமதம்,பார்ஸிமார்க்கம்,யூதம்,சீனத்துத் தாவு மார்க்கம் கண்பூசி மதம் எல்லாம் இல்லையே?” என்று கேட்டு நிச்சயப்படுத்திக்கொண்டு , பிரதான நிகழ்ச்சிக்காக ஆவலுடன் காத்திருந்த போதுதான் அது நிகழ்ந்தது. கஞ்சி மடிப்புக் கலையாத கறுப்புச்சட்டையுடன் நாலு பேர் மேடையில் வந்து நின்று, ‘கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி” என்று முழக்கம் எழுப்பி விட்டுக் கீழிறங்கினார்கள்.
தொடர்ந்து சில நிமிஷங்கள் ஆண்டுவிழா பிரதான நிகழ்ச்சி இனிதே நடந் முடிந்தது.. இவ்வாறாக யாருக்கும் மனக்கசப்பில்லாமல் நிகழ்ச்சியை நடத்தி முடித்து விட்டோம்.. “ The Most secular Branch office of the country” என்று எங்கள் ஆஃபீசுக்கு ஏதோ விருது தரப்போவதாகப் பேசிக்கொள்கிறார்கள்.