Sunday, 3 February 2019

எனது தேசம், எனது தர்மம்-2.


 நமது தேசம்,நமது சமயம்!
பல தெய்வ வழிபாடு இந்தியாவில் இல்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். ஆலயங்களில் வழிபடுபவர்கள், அங்கிருக்கின்ற திருவுருவங்களை, தெய்வத்தின் எல்லா குணங்களும்-எங்கும் நிறைந்த தன்மை உட்படத்தான் இருப்பதாகக் கூறி வழிபடுவதை அருகிலிருந்து கவனித்தால் அறியலாம். அது பல தெய்வ வழிபாடு ஆகாது (.polytheism) பல தெய்வங்களுள் ஒருவரை ஆற்றல் மிக்கவராகக் கருதி,அவரை வழிபடுகின்ற கோட்பாடு(Henotheism) என்றும் இதனை விளக்க முடியாது. ‘ரோஜா மலரை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதே நறுமணம்தான் கமழும்’. பெயர்கள் விளக்கங்கள் ஆக மாட்டா.
நான் சிறுவனாயிருந்தபோது, கிறிஸ்தவப் பாதிரி ஒருவர்,ஒரு கூட்டத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. பல சுவையான செய்திகளைச் சொல்லிக்கொண்டே வந்த அவர் இடையில்,”நான் உங்கள் விக்கிரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்துவிடும்?” என்று கேட்டார். அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல்,”உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்?” என்று கேட்டார். “இறந்ததும் நீ தண்டிக்கப்படுவாய்” என்று பதிலளித்தார் பாதிரி. “அப்படியே எங்கள் விக்கிரகமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்.” என்று திருப்பிச் சொன்னார் அந்த இந்து.
பழத்தைக்கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுபவர்களுள், ஒழுக்கத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, ”பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா?” என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.
மூட நம்பிக்கை மனிதனின் பெரும் பகைவன்தான்.  அனால் மதவெறி அதைவிட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சுக்குப் போகிறான்? சிலுவை ஏன் புனிதமானது? பிரார்த்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும்? கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்த்தனை செய்யும்போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன?
என் சகோதரர்களே! சுவாசிக்காமல் உயிர் வாழ முடியாதது போல், உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி நாம் எதையும் நினைத்துப் பார்க்க முடியாது .தொடர்பு விதியின் படி, (Law of Association) புற உருவம் அகக் கருத்தையும், அகக்கருத்து புற உருவத்தையும் நினைவுபடுத்துகிறது. அதனால்தான் இந்து வழிபடும்போது, ஒரு புறச்சின்னத்தைப் பயன்படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின்மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப்போல் அவனுக்கும் தெரியும். ”எங்கும் நிறைந்தது” என்று சொல்லும்போது பெரிதாக என்னதான் புரிந்துகொள்ள முடியும்? அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்கமுடியுமா என்ன? ”எங்கும் நிறைந்தவர்” என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்லும்போது,மிஞ்சிப்போனால்,விரிந்த வானையும்,பரந்த வெளியையும் நினைக்கலாம். அவ்வளவுதான்.
“விவேகானந்தர் பார்வையில் இந்து மதம்”(-ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்)
(தொடர்ந்து கற்போம்.)

No comments:

Post a Comment