Friday, 8 July 2016

அறிமுகம்
 அண்மையில் புவனா(என் மகள்) என் சகோதரர் ரஜனாவின்நகைச்சுவைக் குறுங்கவிதை ஒன்றைமுகநூலில் வெளியிட்டாள்.’ள்’ விகுதி அவள் என் மகள் என்ற உரிமையினாலே அன்றி ஆண் ஆதிக்க மனப்பான்மையினால் அல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவளே ஒரு கவிதாயினி என்பது இப்போது பலபேருக்குத் தெரியாது.”சின்ன வயதினிலே ஜெகம் வெல்லப் புறப்பட்டாய்; என்ன இன்பம் காண் இனிய உன்றன் பாட்டினிலே” என்று கவிஞர் இளந்தேவனால் பாராட்டப்பட்டவள். இது ஒருபுறம் இருக்க.
இந்த வலைப்பூவுக்கான சமாதானம் சொல்ல முனைந்தேன். ” அப்பா,நீங்களும் நிறையக் கவிதைகள் எல்லாம் எழுதி இருக்கிறீர்களே? அவற்றையும் ஒவ்வொன்றாய் எடுத்து விடுகிறேன்” என்றாள். ஒரு நோட்டுப்புத்தகம் முழுக்க எழுதி வைத்திருந்ததை நினைவு படுத்தினாள்.அவளிடம் அந்த சோகக் கதையைச் சொன்னேன்.(சோகம் எனக்கு; ஆனந்தம் தமிழ் கூறும் நல் உலகுக்கு.) அத்தனையும் எனது கணிணி டிரைவ் ”டி”யில் பதிவு செய்து விட்டு,நோட்டுப்புத்தகத்தை வீடு மாறுகையில் காணாமல் போக்கி விட்டேன். கணினிகாவியங்களைக் கிருமி தின்று விட்டது. புவனா ரொம்பவே அங்கலாய்த்தாள்.ஆயிரக்கணக்கான பாசுரங்கள் காணாமல் போனதற்காக வைணவர்களோ, பாரதி பற்றிய அத்தனை குறிப்புகளும் தொலைந்ததற்காகசீனி.விசுவநாதனோ, நூலகமே முழுகிப்போனதற்காக காந்தி கல்வி மைய அண்ணாமலையோ கூட அவ்வளவு வருத்தப்பட்டிருக்க மாட்டார்கள். சமாதானப் படுத்திக்கொண்டு, பரவாயில்லை, அச்சில் வந்த படைப்புகள் வைத்திருக்கிறீர்களே, அவற்றையாவது ஒவ்வொன்றாக வெளியிடலாம் என்றாள். அவளுக்கு அந்த சிரமம் வேண்டாம் என்பதற்காக நானே இந்த வலைப்பூவைத் தொடங்கி விட்டேன்.
 ஒருகாலத்தில் நான் நிறையவே எழுதிக் கொண்டிருந்தேன்.வானொலி நாடகங்கள்,தினமணி கதிர், சுதேச மித்திரன்,குமுதம், கலைமகள் தவிர மற்றும் சில லோட்டா பத்திரிகைகளிலும் என் எழுத்துகள் பிரசுரமாகியுள்ளன. என் சந்ததிகள் அவ்வளவாக சங்கடப்படக்கூடாது என்பதற்காக சிலவற்றை என் கருவூலத்திலிருந்து நீக்கி விட்டேன். எனக்கே பரவாயில்லை என்பவற்றை அவ்வப்போது வெளியிடுகிறேன். மற்றவர்கள் படிப்பதற்காக இல்லவிட்டாலும்,  அமர இலக்கியங்கள் வலை உலகில் பரவி நின்று நீடிக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தினால்தான்.
 ஏன் இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லை என்று நிறையப் பேர் கேட்கிறார்கள்.(யார் யார் கேட்டார்கள் என்று விரலை மடக்கிச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றெல்லாம் சவால் விடக்கூடாது; சொன்னால் கேட்டுக்கணும், அவ்வளவுதான்.)

எழுதுவது எனோ தானாக நின்று போய் விட்டது. அண்மையில் ஜெயமோகன் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறார். ”எழுதுவதை மட்டும் நிறுத்தவே கூடாது; வீடு கட்டுவதற்காகவோ,  அலுவலகத் தேர்வுக்காகவோ எழுத்தை விட்டவர்கள் அப்புறம் திரும்பவே வரவில்லை” “They never come back,they say”.
 என் கதை அப்படி இல்லை. எனக்கு ரொம்ப நாள் கழித்து எழுத ஆரம்பித்த பத்து, என் தம்பி பத்து(டி.எஸ்.பத்மநாபன்)நிலாச்சாரல் இணைய ஏட்டில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்த பொறாமையில் (ஏன்? அண்ணா ஜம்பு-ரஜனாவும்தான்) நிலாச்சாரலில் இடைக்காலத்தில் எழுத ஆரம்பித்தேன். வாழ்க்கை வரலாற்றுத்தொடர்கள், சிறுகதைகள், காந்தி பாரதி விவேகானந்தர் வாழ்க்கை நினைவுகள், அரசியல் அலசல், கண்டது,கேட்டது படித்தது ரசித்தது  இப்படி. அவையும் ஒரு காலத்தில் ஓய்ந்து விட்டன.
 பழையதை நினைவு படுத்திக்கொண்டு மறு வாசிப்பின் மூலம் ”மூடை” உருவாக்கிக்கொள்ளலாமா என்று ஒரு நப்பாசை. அப்படி ஏதாவது விபரீதம் நடந்தால் புதிய எழுத்துகளும் இந்தப் பதிவில் வரும்.எச்சரிக்கை!
இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.

2 comments: