Wednesday, 18 July 2018

மற்றொரு பிறவி


மற்றொரு பிறவி..
சின்னச்செப்பு வாய்முலை கவ்வும்;
இன்னொருமுலையை ஒருகரம்வருடும்;
கன்னம்இழைக்கும் கரங்களின் நேசம்
அன்னையின்மடியில் அதிசுகவாசம்!

பிள்ளைப்பருவம் பிரிவினைஎன்பதும்
கள்ளமும்துரோகமும் அறியாக்காலம்;
துள்ளி ஆடிடும் தோழமையோகம்
பள்ளிப்பருவம் பரவசகாலம்!

காலம்தனது கடமையைச்செய்யும்
மேலுதட்டின்மேல் குறுமயிர் அரும்பும்;
சேலையைக்கண்டால் சிலிர்ப்புத்தோணும்
நாலுபேரிடம் சொல்லிடநாணும்!

பதவியும்பணமும் பவிசும்சேர்ந்தபின்
அதிகாரத்தின் ஆணவம்ஓங்கும்
அதற்கும்மேலே அதற்கும்மேலே
அதிகமதிகம் குவிக்கத்தோன்றும்!

சொற்கள் குழறும்;சொள்ளுகளொழுகும்
லொக்கெனுமிருமல்;கட்புலன்மங்கும்
பக்கத்திருந்தவர் பதறிவிலகுவார்!
அக்கணம் நமக்கு யார்துணைவருவார்?

பற்றும்பாசமும் விட்டேவிலகப்
பற்றிக்கொள்ளெனும் பஜகோவிந்தம்
கற்றிருந்தாலும் கருத்துறவில்லை!
சற்றொருகணம்தான்-மற்றொருபிறவி!  



No comments:

Post a Comment