Tuesday, 18 December 2018

வீர சுதந்திரம்


வீர சுதந்திரம்
நூற்றாண் டிருபதில் ஆண்டு முப்பதில்
      நேசப் புரட்சி துவங்கியது!
காற்றின் திசையிங்கு மாறியது
      ககனமும் புவனமும் குலுங்கியது1
நோற்றுப் பாரத அன்னை பயந்த
      நிர்மலப் புதல்வன் தலைமையிலே
சாற்றிடும் சத்தியச் சூளூரை பூண்ட
      தொண்டர்கள் படையின் பீடு நடை!
சபர்மதியிருந்து தண்டியங் கரைவரை
      சத்திய சேனையின் அணிவகுப்பு!
உவரியிலிருந்து ஒரு பிடி உப்பில்
      உவகையின் கடலில் அலைபொங்கும்!
கவிக்குயில் ஆங்கே ரட்சகரே எனக்
      களிப்பில் மிஞ்சிக் கூவலுறும்!
தவச்சிறை எனும்எர வாடாவுக்குத்
      தலைவனைத் தள்ளிச் செல்கின்றார்!
முட்டி உடைந்தது;மண்டை பிளந்தது;
      மூர்க்கத்தனத்தின் உச்சநிலை!
விட்டுவிடாமல் கைப்பிடி உப்பை
      வீரப்படையினர் இறுக்குகிறார்!
கட்டிய தலைஉடை கையிலெடுத்துக்
      கவிழ்ந்தவர் நெஞ்சு நிமிர்ந்தார்கள்!
எட்டையபுரத்தான் வீரசுதந்திரம்
      எழுதிய கவிதை விதைத்தாச்சு!    

     



 ;
.

Saturday, 1 December 2018

வாழ்க்கையில் எனக்கிது இசைகிறது....


வாழ்க்கையில் எனக்கிது இசைகிறது!

அஹம் ப்ரம்மாஸ்மி என்றார்கள்!
அதுதான் மோட்சம் என்றார்கள்!
வார்த்தை எனக்குப் புரிகிறது!
வாழ்க்கையில் அதுதான் கூடவில்லை!

தாமரை இலையின் தண்ணீராய்த்
தனித்திரு என்று சொன்னார்கள்!
வார்த்தை புரிந்து என்ன பயன்?
வழிதான் எதுவெனத் தெரியவில்லை!

ஆரவாரம் புறத்தெனினும்
அகத்துள் சாந்தி என்றார்கள்!
இதுவும் நன்கு புரிந்தாலும்
இயல்பில் நடைமுறைக்காகவிலை!

சரணாகதி என விட்டுவிடு!
சஞ்சலம் உனக்கிலை என்றார்கள்!
சத்தியம் இதுவெனப் புரிகிறது!
சாத்தியம் ஏனோ ஆகவிலை!

நல்லவனாக இருந்துவிடு!
நல்லது செய்திடு என்றார்கள்!
வாய்மை விளக்கம் புரிகிறது!
வாழ்க்கையில் எனக்கிது இசைகிறது!