Tuesday, 9 May 2023

மனமும் மகாகவியும்

 

மனமும் மகாகவியும்-1 உபசாந்தி லோகம்

மனம் என்னும் மோஹினியிடத்து பாரதிக்குத் தீராக் காதல். ,தான் வேறு தன் மனம் வேறு என்ற துவைத சிந்தனை மேலோங்கியவன் அவன்.. ஓயாத கவலையினால் அவள் படும் வேதனையைக் கண்டு பொறுக்காமல்,கவலையே இல்லாத உபசாந்தி லோகத்துக்குப் போக முனைகிறான் அவன். ஆனல் மனமோ,கவலையற்ற பூமி  என்றதுமே நடுங்குகிறது. அங்கு போக ஒட்டாமல் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்க்கிறது. பாரதி மனத்தின் எண்ணத்தை நிராகரிக்கிறான். “சீச்சீ ! பேதை மனமே!. உனக்கு ஓயாமல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேதனைகளையும் உளைச்சல்களையும் கண்டு இரங்கி,நான் உன்னைச் சிறிது நேரம் அமைதி உலகத்துக்குக் கொண்டு போய் வைத்துத் திரும்பலாம் என்று உத்தேசிக்கிறேன்.அதற்கு நீயே ஆக்ஷேபம்.சொல்ல வருகிறாயா?” என்று கண்டிக்கிறான்.

உபசாந்திக் கோட்டை வாயிலிலேதான் உண்மை தெரிய வருகிறது மனம் என்னும் வஸ்து அங்கு உள்ளே செல்லுமானால் அக்கினி லோகத்திலே பிரவேசித்த பஞ்சுப் பொம்மை மாதிரிப் பொசுங்கி நாசமடைந்து விடுமாம்.

உபசாந்தி லோகம் என்ரதும் மனம் நடுங்கியதற்கும், போக வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்ததற்கும் காரணம் பாரதிக்குப் புரிந்தது. மனத்தைக் கொன்று விட்டுத் தான் இன்பம் அடைவதில் பாரதிக்குப் பிரியமில்லை.

மனத்தின் கவலைகளையும் உளைச்சல்களையும் பற்றி யோசித்தேனே தவிர,அதன் மூலமாக்க் கிடைத்திருக்கும் பெரிய பெரிய நன்மைகளைச் சிந்தித்தேனில்லை. இந்த உலக வாழ்க்கை மனத்தினால்தானே எய்திற்று? எத்தனை கோடிக் கவலைகள் இருப்பினும் பெரிதில்லை. மனம் செத்து நான் தனியே வாழ்வதாகிய உபசாந்திலோகம் எத்தனை அரியதாக இருப்பினும் இது வேண்டாம் என்று தீர்மானம் செய்துகொண்டேன்.” என்கிறான் பாரதி.

                                                                                                                                           

Monday, 8 May 2023

பாரதி இடறிய காதல் கவிதை

 

பாரதி இடறிய காதல் கவிதை

 

 

தண்ணீர் எடுத்துவரத் தங்கக்குடமேந்தி, அசைந்தாடும் மயில் போல ஒசிந்து நடையிட்டு வருவாள் காதலி, நட்சத்திரம் போல ஜொலிக்கும் புன்னகை. அவளுக்கு முன்னாலே, கண்டவர் மனதில் தைக்கும்பொருட்டு, மலர்க்கணையைக் கையிலேந்தி மன்மதன் பாராக் கொடுத்துக்கொண்டு வருகிறான்.

 

பாரதி அவள் வருகைக்காகாக் காத்துக் கொண்டிருக்கிறான். காத்திருக்கும் தன் நிலையை வருணிக்கப் போகிறான். கிளுகிளுப்பாக ஏதாவது எழுதுவான் என்று நாமும் காத்திருக்கிறோம். ஊஹூம், வேறு modeக்கு மாறி விட்டான், சுதந்திரப் போராட்ட mode.

 

எப்ப்படிக் காத்திருக்கிறானாம்? அரசுச் சேவகர்கள், எப்படா சுதந்திரப் போராட்ட வீர்ர்கள் வருவார்கள்? லபக்கென்று அமுக்கிப் பிடிக்கலாம் என்று காத்திருப்பது போல் காத்திருக்கிறானாம்.

 

நீரெ டுத்து வருதற் கவள்மணி

                நித்தி லப்புன் னகைசுடர் வீசிடப்

போரெ டுத்து வருமதன் முன்செலப்

                போகும் வேளை யதற்குத் தினந்தொறும்

வேரெ டுத்துச் சுதந்திர நற்பயிர்

                வீழ்ந்தி டச்செய்தல் வேண்டிய மன்னர்தம்

சீரெ டுத்த புலையுயிர்ச் சாரர்கள்

                தேச பக்தர் வரவினைக் காத்தல்போல்…..

 

இடறி விட்டாய் பாரதி, சுதந்திரப் போராட்டத்துக்குள் நுழையாமல் ஒரு காதல் கவிதை எழுதத் தெரியாதா உனக்கு?

 

நொந்தபடியே கவிதையைத் தொடர்ந்து வாசிக்கிறோம்!

 

மீண்டெழுந்து விட்டாய் பாரதி! காதல் சுவை நனி சொட்டச் சொட்ட எழுதி விட்டாய்!

 

காத்தி ருந்தவள் போம்வழி முற்றிலும்

                கண்கள் பின்னழ கார்ந்து களித்திட

யாத்த தேருரு ளைப்படு மேழைதான்

                யாண்டு தேர்செலு மாங்கிழுப் புற்றெனக்

கோத்த சிந்தையோ டேகி யதில்மகிழ்

                கொண்டு நாள்கள் பலகழித் திட்டனன்;

பூத்த ஜோதி வதனம் திரும்புமேல்

                புலன ழிந்தொரு புத்துயி ரெய்துவேன்!

 

சபாஷ் பாண்டியா! காதற்கவிஞனாக வெற்றிக்கொடி நாட்டி விட்டாய்!!

Saturday, 6 May 2023

செல்லம்மா கல்யாணமே வைபோகமே...

 

செல்லம்மா கல்யாணமே வைபோகமே!

பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயருக்கு இரண்டு லட்சியங்கள். ஒன்று, பாரதி ஆங்கிலப் படிப்புப் படித்து வாழ்க்கையில் உயர் நிலையை அடைய வேண்டும். இரண்டாவது, பாரதிக்கும், தமது புதல்வி லட்சுமிக்கும் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைத்து விட வேண்டும்.

அவரது இலட்சியம் நிறைவேறும் வகையில் பாரதியைத் திருநெல்வேலியில் ஆங்கிலப் படிப்புப் படிக்க வைத்து விட்டார். பாரதி அப்போது ஐந்தாம் படிவம் (தற்போதைய பத்தாம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்தார். வயது 14 வருஷம் 6 மாதம் 16 நாள்.

இந்தத் தருணத்தில் பாரதிக்கு நல்ல சம்பந்தம் வாய்த்தது. கடையத்தைச் சேர்ந்த செல்லப்பா ஐயரின் மூன்றாம் திருமகள்தான் செல்லம்மா. அப்போது வயது ஏழு. 1897ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி முகூர்த்தம் குறிக்கப்பட்டது. இதே முகூர்த்தத்தில் இதே மேடையில் மூன்று திருமணங்கள் நடந்தன. பாரதியின் தங்கை லட்சுமிக்கும், பாரதியின் அத்தை குப்பம்மாவின் மகன் இளைய மகன் கேதாரத்துக்கும்;(வயது 11) செல்லம்மாவின் அக்கா பார்வதிக்கும்  (10 வயது) குப்பம்மாவின் மூத்த மகன் விசுவநாதனுக்கும் (16 வயது) அதே மேடையில் திருமணம் நடந்தது.

நாலு நாள் கல்யாணம். தெரு அடைத்துப் பந்தல். காசியிலிருந்து  குப்பம்மாள்- கிருஷ்ண சிவன் குடும்பம், எட்டயபுரத்திலிருந்து சின்னச்சாமி ஐயர் குடும்பம், பாரதியின் தாய்வழிப் பாட்டனார் குடும்பம், எனப் பலரும் வந்து அங்கே இருந்த ஒரு பெரிய வீட்டில் தங்கினர். சின்னக்குட்டி செல்லம்மா, ஜடை பின்னலை அசைத்து அசைத்துக்கொண்டி உற்சாகமாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள்.

பிரபல வித்துவான்களின் கச்சேரிகள் நாலு நாளும். கிருஷ்ண சிவனுக்குப் பல ஜமீந்தார்களிடம் பரிச்சயம் இருந்ததால் அவர்களிடமிருந்து வெகுமதிகளும் அணிமணிகளும் பொருள்களும் வந்து குவிந்திருந்தன. (பாஞ்சாலி சபதத்தில் யுதிஷ்டிரனுக்கு வந்து குவிந்திருந்த பரிசுகளைப் பாரதி பாடியதற்கு இதுவும் ஓர் உத்வேகமாக இருந்திருக்குமோ?) புதுக்கோட்டை மன்னர் அந்தக்காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த தங்க நாதஸ்வர வித்வான் ரத்னசாமியை அவரது குழுவோடு அனுப்பியிருந்தார். அந்தக்காலத்தில் பிரபலமாயிருந்த திருநெல்வேலி அம்மணி சதிர்..

பாரதி கலக்கிக் கொண்டிருந்தார். குறும்புப் பேச்சு. கலகல நகைச்சுவை; பாட்டு; இசைக்கவி இப்படி! ஊர்வலம் முடிந்து ஊஞ்சல் படு விமரிசை! அந்த இடத்திலேயே ஓர் ஆசு கவி! கல்யாண விமரிசையையும் அதை நடத்தியவ்ர்களின் சலிக்காத உழைப்பையும் செல்லப்பா ஐயர் தாராளமாகச் செலவு செய்து திருமணம் நடத்தியதையும் வாயாரவும் மனமாரவும் புகழ்ந்து பாடினான். (அந்தப் பாடல்கள் கிடைக்குமோ எங்காவது?)

செல்லம்மாவைப் பார்த்து  பாரதி பாடியதாகச் சொல்லப்படும் பாடல் பிரசித்தம்:

தேடக் கிடையாத அன்னமே-உயிர்ச்

சித்திரமே மட அன்னமே-எனைக்

கட்டி அணைத்தொரு முத்தமே-தந்தால்

கைதொழுவேன் உன்னை நித்தமே!

கடையத்தில் செல்லம்மா ஆம்படையான் பிரபலமாகி விட்டார்.. (பாட்டுப் பாடற மாப்பிளை போறார்டீ!)

திருமணமான பின் செல்லம்மா அவள் வீட்டில் தங்கி விட்டாள். பாரதி பள்ளிக்குச் சென்று விட்டார்.

நன்றீ:ஈலந்தை சு. ராமசாமி-மகாகவி பாரதி

சீனி.விசுவ நாதன்-மகாகவி பாரதி வரலாறு