Saturday 6 May 2023

செல்லம்மா கல்யாணமே வைபோகமே...

 

செல்லம்மா கல்யாணமே வைபோகமே!

பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயருக்கு இரண்டு லட்சியங்கள். ஒன்று, பாரதி ஆங்கிலப் படிப்புப் படித்து வாழ்க்கையில் உயர் நிலையை அடைய வேண்டும். இரண்டாவது, பாரதிக்கும், தமது புதல்வி லட்சுமிக்கும் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைத்து விட வேண்டும்.

அவரது இலட்சியம் நிறைவேறும் வகையில் பாரதியைத் திருநெல்வேலியில் ஆங்கிலப் படிப்புப் படிக்க வைத்து விட்டார். பாரதி அப்போது ஐந்தாம் படிவம் (தற்போதைய பத்தாம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்தார். வயது 14 வருஷம் 6 மாதம் 16 நாள்.

இந்தத் தருணத்தில் பாரதிக்கு நல்ல சம்பந்தம் வாய்த்தது. கடையத்தைச் சேர்ந்த செல்லப்பா ஐயரின் மூன்றாம் திருமகள்தான் செல்லம்மா. அப்போது வயது ஏழு. 1897ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி முகூர்த்தம் குறிக்கப்பட்டது. இதே முகூர்த்தத்தில் இதே மேடையில் மூன்று திருமணங்கள் நடந்தன. பாரதியின் தங்கை லட்சுமிக்கும், பாரதியின் அத்தை குப்பம்மாவின் மகன் இளைய மகன் கேதாரத்துக்கும்;(வயது 11) செல்லம்மாவின் அக்கா பார்வதிக்கும்  (10 வயது) குப்பம்மாவின் மூத்த மகன் விசுவநாதனுக்கும் (16 வயது) அதே மேடையில் திருமணம் நடந்தது.

நாலு நாள் கல்யாணம். தெரு அடைத்துப் பந்தல். காசியிலிருந்து  குப்பம்மாள்- கிருஷ்ண சிவன் குடும்பம், எட்டயபுரத்திலிருந்து சின்னச்சாமி ஐயர் குடும்பம், பாரதியின் தாய்வழிப் பாட்டனார் குடும்பம், எனப் பலரும் வந்து அங்கே இருந்த ஒரு பெரிய வீட்டில் தங்கினர். சின்னக்குட்டி செல்லம்மா, ஜடை பின்னலை அசைத்து அசைத்துக்கொண்டி உற்சாகமாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள்.

பிரபல வித்துவான்களின் கச்சேரிகள் நாலு நாளும். கிருஷ்ண சிவனுக்குப் பல ஜமீந்தார்களிடம் பரிச்சயம் இருந்ததால் அவர்களிடமிருந்து வெகுமதிகளும் அணிமணிகளும் பொருள்களும் வந்து குவிந்திருந்தன. (பாஞ்சாலி சபதத்தில் யுதிஷ்டிரனுக்கு வந்து குவிந்திருந்த பரிசுகளைப் பாரதி பாடியதற்கு இதுவும் ஓர் உத்வேகமாக இருந்திருக்குமோ?) புதுக்கோட்டை மன்னர் அந்தக்காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த தங்க நாதஸ்வர வித்வான் ரத்னசாமியை அவரது குழுவோடு அனுப்பியிருந்தார். அந்தக்காலத்தில் பிரபலமாயிருந்த திருநெல்வேலி அம்மணி சதிர்..

பாரதி கலக்கிக் கொண்டிருந்தார். குறும்புப் பேச்சு. கலகல நகைச்சுவை; பாட்டு; இசைக்கவி இப்படி! ஊர்வலம் முடிந்து ஊஞ்சல் படு விமரிசை! அந்த இடத்திலேயே ஓர் ஆசு கவி! கல்யாண விமரிசையையும் அதை நடத்தியவ்ர்களின் சலிக்காத உழைப்பையும் செல்லப்பா ஐயர் தாராளமாகச் செலவு செய்து திருமணம் நடத்தியதையும் வாயாரவும் மனமாரவும் புகழ்ந்து பாடினான். (அந்தப் பாடல்கள் கிடைக்குமோ எங்காவது?)

செல்லம்மாவைப் பார்த்து  பாரதி பாடியதாகச் சொல்லப்படும் பாடல் பிரசித்தம்:

தேடக் கிடையாத அன்னமே-உயிர்ச்

சித்திரமே மட அன்னமே-எனைக்

கட்டி அணைத்தொரு முத்தமே-தந்தால்

கைதொழுவேன் உன்னை நித்தமே!

கடையத்தில் செல்லம்மா ஆம்படையான் பிரபலமாகி விட்டார்.. (பாட்டுப் பாடற மாப்பிளை போறார்டீ!)

திருமணமான பின் செல்லம்மா அவள் வீட்டில் தங்கி விட்டாள். பாரதி பள்ளிக்குச் சென்று விட்டார்.

நன்றீ:ஈலந்தை சு. ராமசாமி-மகாகவி பாரதி

சீனி.விசுவ நாதன்-மகாகவி பாரதி வரலாறு

No comments:

Post a Comment