Tuesday, 18 December 2018

வீர சுதந்திரம்


வீர சுதந்திரம்
நூற்றாண் டிருபதில் ஆண்டு முப்பதில்
      நேசப் புரட்சி துவங்கியது!
காற்றின் திசையிங்கு மாறியது
      ககனமும் புவனமும் குலுங்கியது1
நோற்றுப் பாரத அன்னை பயந்த
      நிர்மலப் புதல்வன் தலைமையிலே
சாற்றிடும் சத்தியச் சூளூரை பூண்ட
      தொண்டர்கள் படையின் பீடு நடை!
சபர்மதியிருந்து தண்டியங் கரைவரை
      சத்திய சேனையின் அணிவகுப்பு!
உவரியிலிருந்து ஒரு பிடி உப்பில்
      உவகையின் கடலில் அலைபொங்கும்!
கவிக்குயில் ஆங்கே ரட்சகரே எனக்
      களிப்பில் மிஞ்சிக் கூவலுறும்!
தவச்சிறை எனும்எர வாடாவுக்குத்
      தலைவனைத் தள்ளிச் செல்கின்றார்!
முட்டி உடைந்தது;மண்டை பிளந்தது;
      மூர்க்கத்தனத்தின் உச்சநிலை!
விட்டுவிடாமல் கைப்பிடி உப்பை
      வீரப்படையினர் இறுக்குகிறார்!
கட்டிய தலைஉடை கையிலெடுத்துக்
      கவிழ்ந்தவர் நெஞ்சு நிமிர்ந்தார்கள்!
எட்டையபுரத்தான் வீரசுதந்திரம்
      எழுதிய கவிதை விதைத்தாச்சு!    

     



 ;
.

Saturday, 1 December 2018

வாழ்க்கையில் எனக்கிது இசைகிறது....


வாழ்க்கையில் எனக்கிது இசைகிறது!

அஹம் ப்ரம்மாஸ்மி என்றார்கள்!
அதுதான் மோட்சம் என்றார்கள்!
வார்த்தை எனக்குப் புரிகிறது!
வாழ்க்கையில் அதுதான் கூடவில்லை!

தாமரை இலையின் தண்ணீராய்த்
தனித்திரு என்று சொன்னார்கள்!
வார்த்தை புரிந்து என்ன பயன்?
வழிதான் எதுவெனத் தெரியவில்லை!

ஆரவாரம் புறத்தெனினும்
அகத்துள் சாந்தி என்றார்கள்!
இதுவும் நன்கு புரிந்தாலும்
இயல்பில் நடைமுறைக்காகவிலை!

சரணாகதி என விட்டுவிடு!
சஞ்சலம் உனக்கிலை என்றார்கள்!
சத்தியம் இதுவெனப் புரிகிறது!
சாத்தியம் ஏனோ ஆகவிலை!

நல்லவனாக இருந்துவிடு!
நல்லது செய்திடு என்றார்கள்!
வாய்மை விளக்கம் புரிகிறது!
வாழ்க்கையில் எனக்கிது இசைகிறது!

Friday, 8 June 2018

ஜகத்தை உலுக்கிய ஜாலியன்வாலாபாக் படுகொலை



ஜகத்தை உலுக்கிய ஜாலியன்வாலாபாக் படுகொலை.
1919 ஆண்டு. பிரிட்டிஷ் அரசாங்கம் ரௌலட் சட்டம் என்ற ஓர் ஆள் தூக்கிச் சட்டத்தைக் கொண்டு வந்தது.  மேலும் பல கொடுமைகளும் நிகழ்ந்த வண்ண.ம் இருந்தன. இவற்றை எதிர்த்து ஒரு போராட்டம் தொடங்க வேண்டும். என்ன செய்வது என்று ஒரு முடிவுக்கும் வராமல் காந்திஜி குழம்பிக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் சென்னையில் கஸ்தூரிரங்க ஐயங்கார் இல்லத்தில் தங்கியிருந்தபோது, புலர்ந்து, புலராப்பொழுதில், அவரது உட்குரல் ஒரு திட்டத்தை நவின்றது. ஹர்த்தால். அவர் மனத்தில் உதித்த ஹர்த்தால் வன்முறையற்றது. நாடு முழுதும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் விரதமும் பிரார்த்தனையுமாக முழுநாளையும் கழிக்க வேண்டும், ராஜாஜி இந்த யோசனையை வரவேற்றார். மார்ச் 30 என்று நாள் குறிக்கப்பட்டு அனைத்து மாகாணங்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டது. சில மாகாணங்களுக்கு உரிய காலத்தில் செய்தி போய்ச் சேர இயலாது என்ற காரணத்தால் தேதியை ஏப்ரல் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சேதி அனுப்பப்பட்டது, பஞ்சாப் மாநிலத்தவர்கள் இரண்டு தினங்களுமே ஹர்த்தாலை ஒழுங்கமைதியுடன் அனுசரித்தார்கள்.
மக்களின் ஒற்றுமையைத் தாங்கிக்கொள்ள முடியாத பஞ்சாப் அரசாங்கம்,  ஏப்ரல் 9ஆம் தேதி அன்று இரண்டு காங்கிரஸ் தலைவர்களை, மாகாணத்தை விட்டுக் கடத்தியது. ஒருவர் கிச்லூ என்ற இஸ்லாமியர். மற்றவர் சத்யபால் என்ற ஹிந்து. இது மாநிலம் முழுதும் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது ஹிந்துக்களும், இஸ்லாமியரும் தோளோடு தோளிணைந்து போராடினார்கள். “மகாத்மா காந்திக்கு ஜே!” ”ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை ஓங்குகஎன்ற குரல்கள் வானைப் பிளந்தன. மத ஒற்றுமையின் அடையாளமாக, ஹிந்துக்களும் இஸ்லாமியரும் ஒரே பாத்திரத்தில் நீர் பருகினார்கள். இந்தப் போராட்டத்தில் வன்முறை சேர்ந்தது. நெறிப்படுத்தி வழி நடத்தக்கூடிய இரண்டு தலைவர்களும் இல்லாத நிலையில், ஆத்திரமூட்டியதன் காரணமாக, இரண்டு வங்கி அதிகாரிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
இரண்டு தினங்களில் ஜெனரல் டயர் என்ற ராணுவ அதிகாரியை, அமைதியை நிலை நாட்டும் பொருட்டு பஞ்சாபுக்கு அனுப்பி வைத்தது பிரிட்டிஷ் அரசாங்கம்..  ஏப்ரல் 11ம் தேதி இந்த அதிகாரி பொறுப்பேற்றுக்கொண்டான்.. 12ம் தேதி இந்த அதிகாரி பஞ்சாபில் ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்தத் தடை விதித்து உத்தரவில் கையெழுத்துப்போட்டு போலீஸ் அதிகாரிகளிடம் கொடுத்து விட்டான். போலீசார் இதைப் பிரகடனப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
ஏப்ரல் 13ஆம் தேதி ராமநவமி தினம். அன்று ஜாலியன்வாலாபாக் என்ற மைதானத்தில் மக்கள் பிரார்த்தனைக்காகக் கூடியிருந்தார்கள். தடை உத்தரவு பற்றிப் பெரும் அளவில் மக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஜெனரல் டயர் குதிரை மேல் ஏறிக்கொண்டு அன்று தெருத்தெருவாக அந்த உத்தரவை உரக்க வாசித்துக்கொண்டே சென்றிருக்கிறான்.. நகரின் பல பகுதிகளுக்கு இந்த வழியிலும் செய்தி சென்றடையவில்லை.
பகல் ஒரு மணி சுமாருக்கு ,ஜெனரல் டயருக்கு, மாலை 4.30க்கு மைதானத்தில் மக்கள் ஒரு பொதுக்கூட்டம் நடத்த உத்தேசித்திருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.
ஜாலியன்வாலாபாக் என்பது, அதிகப் புழக்கத்திலில்லாத நீள்சதுர வடிவமான ஒரு நிலப்பரப்பு.. நான்கு புறங்களிலும், சுற்றியுள்ள மாளிகைகளின் நெடுஞ்சுவர்கள். உள்ளே போவதற்கும் வெளியே வருவதற்கும் குறுகலான ஒரே வழி.. இதன் வழியே ஜெனரல் டயர் உள்ளே பிரவேசிக்கிறான். அவன் வரும் வழியில் இரு புறமும்  நிற்பதற்கு வாகான மேட்டுப்பகுதி இருக்கிறது, வாகனங்கள் உள்ளே வர வழியில்லை. காரை அவன் வெளியே நிறுத்தி விட்டான். அவனுக்கு நேர் எதிர்ப்புறத்தில் 150 கஜ தூரத்தில் ஒரு பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கிறார். 10000த்திலிருந்து 20000 வரை மதிப்பிடக்கூடிய அளவிலான கூட்டம் மைதானத்தில் இருக்கிறது. டயர் 25 கூர்க்காக்கள், 25 பலுச்சி வீரட்கள்,, தவிர துப்பாக்கிகளும் கத்திகளும் ஏந்திய வீர்ர்கள், ஆயுதம் தாங்கிய இரண்டு வாகனங்களை அழைத்து வந்திருந்தான். குறுகிய வழியில் உட்புறமாக 25 வீர்ர்களும், வெளிப்புறத்தில் 25 வீர்ர்களும்.. எந்த வித எச்சரிக்கையும் இல்லாமல் அந்தக்கூட்டத்தை நோக்கி 10 நிமிஷங்கள் சரமாரியாகச் சுட்டிருக்கிறான். 1650 ரண்டுகள். அரசாங்கக் கணக்குப்படி 379 பேர் மரணம். 1140 பேர் படுகாயம்.  இறந்த சவங்களை அப்புறப்படுத்தவோ, காயமுற்றவர்களைச் சிகிச்சைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனையோ இல்லாமல் அவன் புறப்பட்டுச் சென்று விட்டான்
 பிரிட்டிஷ் அரசாங்கம் 4 ஆங்கிலேயர்களும் 3 இந்தியர்களும் அடங்கிய ஹண்டர் குழுவை அமைத்து விசாரணை த்தியது. டயர், கமிட்டியில் சொன்ன பதில்கள் திமிரானவை. என் நோக்கம் கூட்டத்தைக் கலைக்க வேண்டும் என்பதில்லை. அத்தனை பேரையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என்பதே. நான் ஏன் முன்னெச்சரிக்கை தர வேண்டும்? அது சட்ட விரோதமாகக் கூடிய கூட்டமாயிற்றே/ என்  கண்டிப்பான நடவடிக்கை மூலம் இந்தியர்கள் அனைவரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்..  குண்டுகள் தீர்ந்திராவிட்டால் அத்தனை பேரையும் காலியாக்கியிருப்பேன்!
இதை விடக் கொடுமை. போராட்டத்தின் போது ஓர் ஆங்கில மாதை அவமானப்படுத்தியதற்காக, அவள் வசித்த வீதியில் செல்லும் அனைவரும் தவழ்ந்து செல்ல வேண்டும் என்று ஓர் ஆணை. பெரியவர்கள் சிறுவர்கள் யாராயினும் சரி. எதிரில் ஆங்கிலேயர்கள் யாரும் வந்தால் இந்தியர்கள் தாங்கள் வரும் வாகனம் அல்லது குதிரையிலிருந்து இறங்கி நின்று சல்யூட் பண்ண வேண்டும், இல்லாவிட்டால் சவுக்கடி.
 இந்த அவமானங்கள் ஜாலியன்வாலாபாக் படுகொலையைவிடக் கொடுமையானவை என்றார் காந்திஜி. ஹண்டர் கமிஷனும், பிரிட்டிஷ் அமைச்சரும் டயருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துப் பதவியை ராஜிநாமாச் செய்ய வைத்தனர்..
என்றாலும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் அவரைப் பாராட்டித் தீர்மானம் போட்டது, அவருக்கு வெகுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொடுங்கோலன் பிரிஸ்டல் என்ற இடத்தில் 1927 ஜூலை 23 மரணம் அடைந்தான்
இதையெல்லாம் இப்போது எதற்கு நினைவு கூர்கிறேன்?/.
தூத்துக்குடித் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் அஞ்சலிக்கு உரியவர்கள். துப்பாக்கிச் சூடு ஓர் துன்பியல் நிகழ்ச்சி. என்றாலும், இதை ஜாலியன்வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிடுகையில் நாம் தவறான வரலாற்றைப் பதிவு செய்கிறோம்.. விவரம் அறியாதவர்கள், “ஜாலியவாலாபாக் அப்படி என்ன பயங்கரம்? நம்ம தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போலத்தானே? ஜெனரல் டயர் அப்படி என்ன பயங்கரக் கொடியவன்? நம்ம எடப்பாடி போலத்தானே?  (கல்கியார் கவனத்துக்கு.) என்று சொல்லும் நிலை வந்து விடக்கூடாது.
காதுள்ளவர்கள் கேட்கட்டும்!