நாயகன்
கூட இருந்தவர்கள்
கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்,
சுற்றி இருந்தவர்கள்
சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
என்ன விஷயமென்று
இவனுக்குப் புரியவில்லை.
முன்னுள்ள பணியொன்றே
முக்கியமாய்த்தான் கருதி
முழுமூச்சாய் முனைந்தான்;
முடித்து விட்டான் வெற்றியுடன்!
செயல் முடித்த
காரணத்தால் ஜெயக்கொடியை ஏந்தி வந்தான்.
பார்த்திருந்தோர்
இப்போது பரபரப்பாய்ச் சூழ்ந்தார்கள்!
முடியாத செயலாச்சே?
முன்னெவரும் செய்ததில்லை!
எப்படி நீ சாதித்தாய்?
என்ன மர்மம் என்றார்கள்.
மந்திரம்தான் அறிவாயா?
மாயம் எதும் செய்தாயா?
அரை நிமிஷம் சிந்தித்தான்;
அலட்டலின்றித் தான்சொன்னான்.
மந்திரமும் தெரியாது;
மாயம் எதும் செய்யவில்லை!
தொடங்கினேன்; தொடர்ந்தேன்;
முடித்து விட்டேன் அவ்வளவே!
முடியாது எனும்
சேதி முன்பெனக்குத் தெரிந்திருந்தால்
ஒருவேளை தொடங்காமல்
ஓய்வாகக் கிடந்திருப்பேன்!
சிரித்துக் கொண்டிருந்தவர்கள்
சிலிர்த்தெழுந்து நின்றார்கள்!
நகையாட வந்தவர்கள்
நாயகனே என்றார்கள்!
No comments:
Post a Comment