புதியதாக
ஒரு கருத்தை முன்வைக்கிறோம். முதலில் மக்கள் அதை அலட்சியப்படுத்துவார்கள்; அடுத்து
அதை எள்ளி நகையாடுவார்கள்; அடுத்த கட்டத்தில் அதைத் தீவிரமாக எதிர்ப்பார்கள். நிறைவுக்
கட்டத்தில் நம்மை வியந்து பாராட்டி நம்மோடு
சேர்ந்து கொள்வதில் பெருமைப் படுவார்கள். அத்தகைய கருத்தைத்தான் முன்வைக்கத் துணிகிறேன்.
மனித
உரிமைக்காரர்கள் மிகத் தீவிரமாக, மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்கள். என்னதான்
மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்திருக்கட்டுமே, ரயில்களைக் கவிழ்த்திருக்கட்டுமே,
வெடி வைத்திருக்கட்டுமே, குற்றம் இழைத்தவர்களுடைய
மனித உரிமைதான் முக்கியம் என்று செயல்படுகிறார்கள். பாராட்டத் தக்கதுதான். அதே
போல், விலங்குகள் நல அமைப்புகள் இருக்கின்றன. தெருநாய்கள் நூற்றுக் கணக்கானவர்களைக் குதறி சதையைப்
பிடுங்கி, ஏன், கொல்லவேதான் செய்யட்டுமே, அவற்றினுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
என்பது “நாய”மானதே.
எனது
பிரச்சினை எல்லாம் ஏன் இந்தக் கரிசனம் பூச்சிகளுக்குக் காட்டப்படுவதில்லை என்பதே. பொழுது
விடிந்தால் பொழுது போனால் அரசாங்கம் கொசுக்களின் பிறப்பையே தடுப்பதற்காகப் பிரசாரம்
செய்கிறது. நமக்கு டெங்கு வருமாம். காய்ச்சல் வருமாம். நமது நலத்துக்காக பூச்சிகளின்
நலத்தைக் காற்றில் பறக்கவிடுவது என்ன நியாயம்? டி.வி.விளம்பரங்களைப் பாருங்களேன்.”ஏன்
ச்சுன்ன ச்சுன்ன கொசுவெல்லாம் உன்னைக்கண்டு பயப்படமாட்டேங்குது?” என்று ஒரு சிறுவன்
தந்தையைக் கேட்கிறான். இன்னொரு சிறுவனுக்கு கணக்குப் போட கஷ்டமாக இருக்கிறதாம். அதற்காக
கொசு கொல்லி அட்டையை வைக்கிறாள்.தாய். இளம் வயதிலிருந்தே,”பூச்சி விரோத” மனோபாவத்தை
சிறுவர்களிடையே வளர்த்து விடுகிறார்கள்? என்ன சுயநலம்? என்ன கொடுமை? அவை வாயில்லாப்பூச்சிகள்
என்பதால்தானே இப்படி எல்லாம் நடக்கிறது? கொசு, மூட்டைப்பூச்சி, கரப்பான் பூச்சி எல்லாம்
உடன் உறை உயிரிகள்தாமே? இதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்?
என்னுடைய
கோரிக்கை உடனடியாக பூச்சிகள் நல வாரியம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். பூச்சிகள் நலத்துக்கான
சட்டம் இயற்றப்பட வேண்டும். பூச்சி வதை, அல்லது வன்கொடுமை மிகக் கடுமையாகக் கருதப்பட்டு
புகாருக்குள்ளானவர்கள் உடனடியாகச் சிறையில் அடைக்கப்பட வேண்டும்-விசாரணை ஏதும் இல்லாமல்.
அந்தச் சிறைகளில் பூச்சிகள் ஏராளமாக வளர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் யாரும் ’”பாளையங்கோட்டை
சிறையிலே பாம்புகளுக்கும் பல்லிகளுக்கும் துணையாக என்று பெருமையாகப் பேசிக்கொள்ள முடியாது.
பூச்சிகள் நலத்துக்காக 15000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் இதில் பெருச்சாளி நலன்களும்
அடங்கும். இங்கே எங்கே பெருச்சாளி வந்தது என்று கேட்காதீர்கள். வேண்டுமானால் இலாக்காவின்
பெயரை பூச்சி மற்றும் எலி, பெருச்சாளி நல இலாக்கா என்று வைத்துக்கொள்ளலாம். பெருச்சாளி
மந்திரி என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளப்போவதில்லை. இந்த 15000 கோடி ரூபாயில்
பெருச்சாளி வளர்ப்பு மற்றும் நலனுக்காக கணிசமான தொகை ஒதுக்கப்பட வேண்டும்.. (இதில்
ஊழல் பெருச்சாளிகள் தங்களுக்குப் பங்கு கேட்காமல் கவனமாக இருக்க வேண்டும்.) எலிகளின்
பாதுகாப்பைப் பொருத்தவரை, அவை முன்னெச்சரிக்கையாக இருப்பதற்காக, நாட்டில் உள்ள அத்தனை
பூனைகளுக்கும் மணி கட்ட வேண்டும். (Jobless barber shaving the cat என்ற பழமொழி உங்களுக்கு நினைவுக்கு வந்தால் நான்
என்ன செய்யமுடியும்?) இதற்கான பணியாளர்கள் தனியாக நியமிக்கப்பட வேண்டும் 100 நாள் திட்ட
பணியாளர்களை இதற்குப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. (அது வேறு; இது வேறு!)
இதற்கான
ஒரு பெட்டிஷனை இணையத்தின் மூலம் பிரதமருக்கு அனுப்பலாம் என்று இருக்கிறேன். 1கோடி கையெழுத்துகள்
தேவை. ஆதரவு தருவீர்கள்தானே? பூச்சி பூச்சி என்றால் யாரும் பயப்பட மாட்டார்கள். நமது
ஒன்றுபட்ட வலிமையைக்காட்டியே ஆக வேண்டும்.
பேணி
வளர்ப்போம் பூச்சிகளை!
நாணி
ஒளிக மதிகெட்டோர்!
No comments:
Post a Comment