உண்ணாவிரத அறிவியல்
இன்றைய தினம் போராட்ட வழிமுறைகளில்
உண்ணாவிரதம் ஓர் உத்தியாக மலிந்து விட்டது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், ஏன்,
தனி நபர்களும் கூடத் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
மூன்று
மணி நேர உண்ணாவிரதங்களும் எதிரான உண்ணும் விரதங்களும் சமயங்களில் நகைச்சுவையை இலவச
இணைப்பாகத் தருகின்றன.
இத்தகைய போராட்டங்களை காந்திய
வழியிலான அறப் போராட்டங்களாகக் கருதலாமா என்றே கேள்வி. காந்திஜி வடிவமைத்துக் கொடுத்த
சத்தியாக்கிரக உண்ணாவிரதங்களின் இலக்கணங்களைத் தொகுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
“ என்னோடு சமகாலத்தில் வாழ்பவர்கள்
எவரும் என்னைப்போல உண்ணாவிரதத்தையும் பிரார்த்தனையையும் ஒரு துல்லியமான அறிவியலாக்கி
இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. “ என்று காந்திஜி சொன்னார். உண்ணாவிரதத்தின் அடிப்படையே
எடுத்துக் கொண்டுள்ள காரியத்திலும் மேற்கொண்டுள்ள வழிமுறையிலும் நம்பிக்கைதான்.
தூய்மையான உண்ணாவிரதத்தில் சுயநலம்,
கோபம், நம்பிக்கையின்மை, பொறுமையின்மை இவற்றுக்கு இடமே இல்லை. உண்ணாவிரதம் உடல், மனம்,
மற்றும் ஆன்மாவையும் தூய்மைப் படுத்துகிறது. தசையினை (சிலுவையில் அறைந்தது போல) வதைக்கிறது.
அதன் மூலம் ஆன்ம சக்த்யை உருவாக்குகிறது. ஆன்மிக உண்ணாவிரதம் ஒரு தவமே. அது உண்ணாவிரதி,
அவர் யார் சார்பில் உண்ணாவிரதம் இருக்கிறாரோ அவர், இருவரையுமே தூய்மைப் படுத்துகிறது.
உண்ணாவிரதம் கொழுந்து விட்டு எரியும்
தீயினைப் போன்றதோர் ஆயுதமே. அதற்கென்று ஓர் அறிவியல் இருக்கிறது. அதனைக் குருட்டுப்
போக்கில் கையாண்டால், அது உண்ணாவிரதிக்கும் எடுத்துக்கொண்ட காரியத்துக்கும் தீங்கே
விளைக்கும்.
உண்ணாவிரதம்
மேற்கொள்ள வேண்டியவருக்கு வேண்டிய தகுதிகள்
சத்தியத் தேடலுக்கான முயற்சியில்
ஈடுபட்டுள்ளவர்கள், எதிராளியிடம் கூட அன்பு கொண்டவர்கள், மிருக இச்சைக்கு இடம் கொடாதவர்கள்
மட்டுமே உண்ணாவிரதம் இருக்க உரிமை உண்டு. இத்தனையும் ஒருசேர ஒருவரிடம் இருப்பது கஷ்டம்.
எல்லையற்ற பொறுமை, திடமான தீர்மானம்,மேற்கொண்ட காரியத்தில் ஒருமுக நோக்கு, பூரண அமைதி
,கோபமின்மை ஆகியவை முக்கியத் தகுதிகளாகும்.
நமக்குத் தேவையான வலிமையைக் கடவுள்
தருவார் என்ற நம்பிக்கை வேண்டும், துன்பத்தையும் பொருள் நஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ளச் சித்தமாக இருக்க வேண்டும். பலனை
இறைவனிடம் விட்டுவிட்டு,தமது நோக்கில் வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ,விரதத்தில்
உறுதியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் உண்ணாவிரதத்தில் சிறிதளவு களங்கம் நேர்ந்தால்கூட அதை கைவிடத் தயங்கக்கூடாது. மற்றவர் யாரோ இருக்கிறார்
என்பதற்காக அவரைப் பின்பற்றி உண்ணாவிரதம் இருக்கக்கூடாது. ஆன்ம பலம் இல்லாதவர்கள் உண்ணாவிரதம்
இருக்கவே கூடாது!
உண்ணாவிரதத்தின் நோக்கங்கள்
உண்ணாவிரதத்தின் நோக்கம் மற்றவர்களின்
நன்மைக்காகவே இருக்க வேண்டும். சுயநல நோக்கம் கூடவே கூடாது. தன்னைத் தூய்மைப் படுத்திக்
கொள்வது, தீய வழியிலிருந்து திருத்துவது, ஆகியவை
உண்ணாவிரத நோக்கங்களாக இருக்கலாம். சொந்த லாப நோக்குடன் உண்ணாவிரதம் இருப்பது சரியல்ல.
வற்புறுத்திச் சலுகை பெற முயலக்கூடாது.
இறுதியாக, ஆனால் முக்கியமாக, உண்ணாவிரதம்
இருப்பவருக்கு உண்ணாவிரதத்துக்கான நோக்கத்துடன் நேரடித் தொடர்பு இருக்க வேண்டும். ஓர்
உதாரணத்தைக் காந்திஜி சொல்கிறார். பகத் புல் சிங் என்பவர் மாத் கிராமத்திலுள்ள மக்களுடன்
நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அந்த இடத்திலிருந்த ஹரிஜனங்களுக்கு அவர் தொண்டு செய்துள்ளார். அந்த கிராமவாசிகள் ஹரிஜனங்களுக்குத்
தவறு இழைத்து வந்தனர். அவர்களுக்கு நீதி கிடைக்குபடி செய்வதற்கான எல்லா முறைகளையும்
கைக்கொண்டு தோல்வி அடைந்த பிறகே புல்சிங்ஜி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். வெற்றியும் பெற்றார்.
யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கலாம்?
உங்களிடம் அன்பு கொண்டவர், பரிவு
காட்டுபவர், நெருங்கியவர்கள் ஆகியோருக்கு எதிராக மட்டுமே உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால்,
அந்த உண்ணாவிரதம் அவரைத் தீய வழியிலிருந்து திருத்துவதற்காக இருக்கலாமே தவிர, சொத்தை
எழுதி வாங்கிக் கொள்வது போன்ற காரணங்களுக்காக இருக்கக்கூடாது.
யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறோமோ,
அவருக்கு உண்ணாவிரதத்துக்குக் காரணமான விஷயத்துடன் தொடர்பு இருக்க வேண்டும் என்பதும்
முக்கியம்.
எப்போது உண்ணாவிரதம் இருக்கலாம்?
உண்ணாவிரதம் என்பது சத்தியாக்கிரகப்
போர்முனையின் கடைசி ஆயுதம். தீர்வு காண்பதற்கான மற்ற அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு,
அவை அத்தனையும் பலனளிக்காமல் போனால் மட்டுமே உண்ணாவிரதம் இருக்கலாம்.
தவறான உண்ணாவிரதங்கள்
நிறைய நேரங்களில் உண்ணாவிரதங்கள்
பலவந்தப்படுத்துவனவாக அமைவதுண்டு. உண்ணாவிரதம் சுயநலக் காரியங்களுக்காகப் பயன்படுத்தப்
படுகிறது. அதற்கு மசிய மறுத்துவிட வேண்டும். உண்ணாவிரதத்தில் மரணம் அடைய நேர்ந்தாலும்
பரவாயில்லை. நமது அபிப்பிராயத்தில் தகுதியற்ற காரணங்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று தோன்றினால்
அந்த உண்ணாவிரதம் புறக்கணிக்கப்பட வேண்டியதே. இந்த வழக்கத்தை மக்கள் மேற்கொள்வார்களேயானால்,
, பலவந்தப்படுத்துதல், மற்றும் நியாயமற்ற செல்வாக்கு அடைதல் ஆகிய கறைகள் நீங்கப்பெறும்.
என்ன செய்ய? அநேக உண்ணாவிரதங்கள்
சத்தியாக்கிரக உண்ணாவிரதங்கள் என்ற பிரிவில் அடங்குவன அல்ல. அவை பட்டினிப் போர்களே
போதுமான அடிக்கடி மேற்கொண்டால் அவற்றுக்கு
ஓரளவு இருக்கக்கூடிய பலனும் போய்விடும். கேலிக்கூத்தாகி விடும்!
தவறான காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும்
உண்ணாவிரதங்கள் சிலநேரம் வெற்றியைத் தரலாம்.
ஆனால்,,அந்த வெற்றி சத்தியாக்கிரகத்தின் வெற்றி அல்ல. துராக்கிரகத்தின் வெற்றியே ஆகும்!