Monday, 9 October 2017

ஒரு சாமான்யனின் கீதை--19

ஒரு சாமான்யனின் கீதை—19
நிறைவுரை
பகவத்கீதையின் நிறைவு  18 வது அத்தியாயம், பெரும்பாலும் ஏற்கெனவே சொன்னவற்றையே வேறுவேறு விதத்தில் சொல்வதாக இருக்கிறது. எனவே இந்த அத்தியாயத்தின் குறிப்பு எடுத்துக்கொள்ள நான் மெனக்கெடவில்லை.
இந்தத் தொடரை நான் எழுத ஆரம்பித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
முதலாவதாக, கீதையின் பல உரைகளைப் படித்திருக்கிறேன். சில தொடர் சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். அவ்வப்பொழுது மனதைக் கவர்ந்தன. நன்கு புரிந்துகொண்டாற்போல்தான் இருந்தது. எனினும் மனதுக்குள் தொகுத்துச் சொல்லிக்கொள்ளப் பார்க்கையில், கோவையாக நினைவுபடுத்திப் பார்க்க வரவில்லை. எனவே படித்த காலத்தில் செய்ததைப்போல ஒவ்வொரு அத்தியாயத்திலும் முக்கியமான, என்னைக் கவர்ந்த கருத்துகளைக் குறிப்பெடுத்து சின்ன சின்ன கட்டுரைகளாக எழுதிக்கொண்டேன். எனக்கு அவசியமில்லை என்று தோன்றியவற்றையும், சிரமப்பட்டுப் படித்தால்தான் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றிய பகுதிகளையும் சௌகரியமாக விட்டு விட்டேன். இருந்தாலும் சாராம்சத்தைப் பிடித்து வைத்து விட்டேன் என்ற திருப்தி இருக்கிறது.
படிப்பதைப்போலவே இன்பம் தருவது படித்ததைப் பகிர்ந்து கொள்வது. பகிர்ந்துகொள்ள எந்த ஊடகம் கிடைக்கும்? இருக்கவே இருக்கிறது முகநூல். பொறுமையுடன் என்னுடன் பயணித்த முகநூல் நண்பர்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள். தவிரவும் எனது வலைப்பூவான “மறுவாசிப்பில் வேணி” யிலும் இதைப் பதிந்து வைத்திருக்கிறேன். உள்நுழையவேண்டிய முகவரி:veniyinpookkoodai.blogspot.in. இதை விளம்பரப்படுத்த இதுவரை முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. அன்பர்கள் வருகை தந்தால் மகிழ்வேன்.

இரண்டாவது காரணம் :”அஹம் ப்ரம்மாஸ்மி” போன்றவற்றை எல்லாம் என்னால் அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்ள முடிகிறதே தவிர உணர்வுபூர்வமாக ஒன்றும் அனுபூதி எதுவும் சித்திக்கவில்லை. எனக்கு, இன்றைய பக்குவ நிலையில் அதில் எல்லாம் அவ்வளவாக நாட்டம் இல்லை. அதே போல பிறவிகள், வாஸனைகள், சம்ஸ்காரங்கள் இவை அனைத்தையும் நான் நம்புகிறேன். அவை சாஸ்திரங்கள் சொன்னவை என்பதாலும் நான் தெய்வமாக மதிக்கிற காஞ்சிப் பெரியவர்கள், சுவாமி விவேகானந்தர் ஆகியோர் சொல்வதாலும். அவர்கள் சொல்வது எனக்கு வேதவாக்கே. என்ராலும் செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்பதிலோ,மோட்சம் அடைய வேண்டும் என்பதிலோ எல்லாம் எனக்கு இயல்பாக நாட்டம் வரவில்லை. சாமான்யனான எனது அக்கறை எல்லாம் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும். வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுகிறேனா இல்லையா என்பதெல்லாம் எனக்கு முக்கியமில்லை.
நல்லபடி வாழ கீதை என்ன சொல்கிறது? அது என்னால் கடைப்பிடிக்கக் கூடியதா என்பதே எனது இந்த முயற்சியின் காரணம். இதற்காக நான் குறிப்பாகப் படித்த நூல்கள்:
1.    The Bhagavad Gita- Commentary by Swami Chidbhavananda.
2.    The Holy Geetha-Commentary by Swami Chinmayananda
3.    Sadhanas in Bhagavad Gita bySri Swami Shantananda Puri.
4.    ஸ்ரீமத் பகவத்கீதை-உரையாசிரியர்”அண்ணா”
5.    கண்ணன் காட்டிய வழி-ராஜாஜி
இப்போது நான் படித்தவற்றில் எனக்கான “Take-aways”  என்னென்ன என்று தொகுத்துப் பார்க்க முனைந்தபோது எனக்காக ராஜாஜி ஏற்கெனவே இதைச் செய்து வைத்திருப்பது தெரிந்தது.
அதைத்தான் முந்திய இயலில் தந்துள்ளேன்

.இறையருள் இருந்தால் வேறு சில நல்ல சிந்தனைகளுடன் சந்திப்போம்.

ஒரு சாமான்யனின் கீதை-18

ஒரு சாமான்யனின் கீதை—18
 A few takeaways from the Gita
(ராஜாஜிக்குப் பணிவான நமஸ்காரங்கள்)
கீதையில் சொல்லப்பட்ட யோகத்தின் அங்கங்களாவன:
(1)  இந்திரியங்களைக் காத்தல், சுத்தமான வாழ்க்கை ,தினசரி ஆசாரம்; அதாவது உபாஸனை, வேலை, ஆகாரம், ஓய்வு தூக்கம் முதலியவைகளில் திட்டப்படி நடந்துகொள்வது.
(2)  சுபாவத்தாலோ ,சமுதாயத்தில் தான் அடைந்த ஸ்தானத்தினாலோ, சந்தர்ப்பத்தாலோ, தனக்கு ஏற்பட்ட கடமைகளைச் சுயநலப் பற்றின்றி, ஆனால், கண்ணுங்கருத்துமாய்ச் செய்து முடித்தல்.
(3)  ஜயாபஜயங்களை சமபுத்தியுடன் அனுபவித்தல், கஷ்டங்களைக் கண்டு மனங்கலங்காமல்,துயரமோ மகிழ்ச்சியோ எதுவரினும் தைரியமும் அமைதியும் இழக்காமலிருக்க மனதைப் பழக்கிக் கொள்ளுதல்
(4)  மனதை இடைவிடாமல்  காத்து, காமம், குரோதம், ஆசை என்ற வேகங்களுக்கு இடங்கொடாமல் இருத்தல்
(5)  இப்படி உள்ளும் புறமும் சுத்தமாய் வைத்து மனதை ஸ்திரப்படுத்திக் கொண்டு, அவ்வப்போது அத்யாத்ம தியானம் செய்தல்
(6)  பகவானிடம் பூரணமாய்ச் சரணாகதி புகுதல்.


Saturday, 7 October 2017

ஒரு சாமான்யனின் கீதை--17

ஒரு சாமான்யனின் கீதை-17
சக்கனி ராஜமார்கமு!.
ஒவ்வொருவருக்கும் அவரவர் சேர்த்து வைத்த பழவினைகளுக்கேற்பவே குணங்கள் அமைகின்றன. சத்வம், ரஜஸ், தமஸ். இந்த குணங்களை ஒட்டியே அவரவர் சிரத்தை அமைகிறது. அதற்கிசையவே அவர்தம் செயல்பாடுகளும் அமைகின்றன.  நாம் விரும்பி உண்ணும் உணவு, , நமது உள்ளத்து உணர்ச்சிகள், வாழ்க்கையைப் பற்றிய நமது கண்ணோட்டம் இவற்றைக் கொண்டு நம்மை நாமே பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளலாம் .இந்தப் பரிசோதனை நமது குணமேம்பாட்டுக்கு உதவும் உளவியல்காரர்கள், “Egogram” என்றொரு கோட்பாட்டைச் சொல்வார்கள். நாமும் நமது குணங்கள் பற்றிய ஒரு வரைபடத்தை வரைந்து பார்த்துக் கொள்ளலாம்.(Character-o-gram). இதுவே ஆன்மிக முன்னேற்றத்துக்கான “சக்கனி ராஜ:மார்கமு”
வழிபாடு:
இறை வழிபாட்டில், சத்வ குணம் படைத்தவர்கள் இறைவனை நற்குண நாயகனாகவும் வாலறிவனாகவும் வழிபடுகிறார்கள். ரஜோகுணத்தவர்கள் தங்கள் ஆசைகள் நிறைவேறுவதற்காக,ம்அததற்கு உண்டான தேவதைகளை வழிபடுகிறார்கள். (குபேர யக்ஞம் போல!) தமோகுணம் படைத்தவர்கள், தங்கள் முறையற்ற ஆசைகள் நிறைவேறுவதற்காகவும், பிறரை அழிப்பதற்காகவும் பூத பிரேத பைசாசங்களை வழிபடுகிறார்கள் சாத்திர விதிகளிலிருந்து மாறுபட்டு வழிபடுபவர்கள் தங்கள் உடலை வருத்திக்கொள்கிறார்கள். காமமும் அகங்காரமும் நிறைந்த வழிமுறைகளில் ஈடுபடுகிறார்கள்.
உணவு:
ஆயுள், தூய்மை, வலிமை, ஆரோக்யம், உற்சாகம் இவற்றை வளர்க்கக்கூடிய ரஸமுடைய, பிசினுள்ள, கெட்டியான  உணவுகள் சத்வ குணத்தவர்க்குப் ப்ரீதியானவை.
வேதனை, துன்பம், நோய் இவற்றை விளைவிக்கக்கூடிய கசப்பு, புளிப்பு, உப்பு, அதிக உறைப்பு, அதிகச் சூடு கொண்டவை, உலர்ந்துபோனவை, எரிச்சல் உண்டாக்குபவை ஆகிய உணவுகளை ரஜோ குணத்தினர் விரும்புவர்.
பழையது, ரஸம் போனது, அழுகியது, கெட்டுப்போனது, பிறர் உண்டு மிஞ்சிய எச்சில்,அசுத்தமானது ஆகிய உணவுகளை ரஜோ குணத்தவர் நாடுவர்.
தவம்
:தவம் என்பது வாக்காலும், மனத்தாலும் உடலாலும் செய்யக்கூடியது. நேர்மை, தூய்மை, பெரியோரிடம் வணக்கம், புலனடக்கம், உயிர்களிடத்தில் அன்பு –இவை உடல் தவம்.
சத்தியமானதும் அன்பானதும் இதமானதுமான பேச்சு, நல்ல அறநூல்கள் படித்தல் ஆகியன வாக்கினால் செய்யும் தவம்..
மனதை அமைதியாக வைத்திருப்பதும், ,தூய எண்ணங்கள் கொண்டிருப்பதும், போக எண்ணங்களை விலக்குவதும் மனத்தினால் செய்யும் தவமாகும்.
இவை சத்வ குணத்தினருக்கு உரியன.
பிறருடைய நன்மதிப்புக்காகவும், லாபம் கருதியும்   இவற்றைச் செய்வது ரஜோ குணத்தினரின் இயல்பு.
பிறருக்குத் துன்பம் விளைவிப்பதற்காகவோ, பிடிவாத புத்தியாலோ நோற்பது-தமோகுணத்தினரின் செயல்.
தானம்:
கொடுப்பது கடமை என்றறிந்து கைம்மாறு கருதாமல்,தகுந்த காலமும்,இடமும் பாத்திரமும் அறிந்து செய்யப்படும் தானம் சாத்விக தானமாகும்.
கைம்மாறு கருதியோ பயனை எதிர்பார்த்தோ மனத்தில் வருத்தத்துடனோ கொடுக்கப்படும் தானம் ராஜசமாகும்.
தகாத இடத்தில், தகாத காலத்தில்,தகாதவருக்குச் செய்யப்படுவதும் இகழ்ச்சியுடனும் செய்யப்படும் தனம் தாமச தானமாகும்.
சாத்விக குணத்தை வளர்த்துக் கொள்வதும் செய்கிற செயல்கள் அத்தனையையும் இறைவனை மனத்தில் நினைந்தவாறு செய்வதுமே உயர் நெறி என்று உணர்ந்து செயல்படுவோமாக!


Thursday, 5 October 2017

ஒரு சாமான்யனின் கீதை--16

ஒரு சாமான்யனின் கீதை—16

கடையனுக்கும் கடைத்தேற்றம்!

‘கயமை’ என்கிறார் திருவள்ளுவர். அதைத்தான் அசுர ஸம்பத் என்கிறான் கீதாசார்யன். அதைப்பற்றிக் கொஞ்சம் நாமெல்லாம் புரிந்து கொள்கிற மாதிரி விஸ்தாரமாகவே சொல்கிறான்.
கயவர்களுக்கு எது தர்மம், எது அதர்மம் என்கிற விவஸ்தையே கிடையாது. அவர்கள் மனத்தில் எழுவதெல்லாம் அழுக்கு எண்ணங்களே. இவர்கள் பழக்கவழக்கங்கள் ,காரியங்கள் எல்லாமே அசுத்தமானவை. வாயிலிருந்து வரும் வார்த்தைகளோ, பொய், புனைசுருட்டு, குதர்க்கம்! இறைவன் ஒருவன் இருக்கிறான், ஒரு நியதிக்கு உட்பட்டுத்தான் இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. உலகத்தில் நடைபெறும் அத்தனைக்கும் அடிப்படைக் காரணம் காம இச்சைதான் என்ற அசையாத நம்பிக்கை உடையவர்கள் இவர்கள்.
இப்படிப்பட்ட சின்னபுத்திக்காரர்கள் எந்தக் கொடிய செயல்களுக்கும் அஞ்சுவதில்லை. இவர்கள் சமூக விரோதிகள்.,
ஒன்று கிடைத்தால் இன்னொன்று என்று இவர்கள் ஆசைக்கு முடிவே இல்லை. நல்லவர்கள் போல் நடிக்கும் பொய்யொழுக்கக்காரர்களான இவர்கள் செய்யும் எந்தக் காரியமும் நல்ல நோக்கத்துடன் அல்ல. தானம் தர்மம், ஹோமம் என்றெல்லாம் செய்தாலும் அத்தனையும் வெளி வேஷம் ,” பார்த்தாயா? எனக்கு எவ்வளவு செல்வம் இருக்கிறது? என்னைப்போல தர்மிஷ்டர்கள் யாருண்டு?” என்று பெருமை பீற்றிக் கொள்ளத்தான்!
காமத்தாலும்  விரோதத்தாலும் பேராசையாலும் இவர்கள் பண்ணாத அக்கிரமங்கள் இல்லை. அதர்ம வழியில் சொத்து சேர்த்துக் குவிக்கிறார்கள். தினம் தினம் இவர்களது தியானம், இன்றையக் கணக்குக்கு எனது செல்வம் இவ்வளவு, நாளைக்கு இவ்வளவு சேர்த்து விட வேண்டும்; இத்தனை விரோதிகளை அழித்துத் தரைமட்டம் ஆக்கி விட்டேன்; இன்னும் அழிக்க வேண்டியவர்கள் இன்னின்னார் பாக்கி இருக்கிறார்கள். அவர்களை அழிக்க என்ன சூழ்ச்சி செய்யலாம் என்பதுதான்! இதில் எதுவுமே சாஸ்வதம் இல்லை என்பதை அவர்கள் துளிக்கூடச் சிந்தித்துப் பார்க்காததுதான் வேடிக்கை.
இவர்கள் வேலை கடவுளை நிந்திப்பதே! அகங்காரம், அதிகாரம், அலட்சியம் ஆசைகள், ஆத்திரம் இவற்றின் வரிவடிவங்கள் இவர்கள்! இவர்களைத்தான்,”பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்” என்று அபிராமிபட்டர் சொன்னார் போலும்!
இத்தகைய மனோபாவத்துடன் இவர்கள் பிறந்து பிறந்து இளைக்கிறார்கள். பிறவிக்குப் பிறவி இவர்கள் கீழ்நிலையை அடைகிறார்கள்!
இத்தனைக்கும் அடிப்படைக்காரணங்கள் என்ன?
காமம், குரோதம், பேராசை. இவைதான் ”கெடுநீரார் காமக்கலன்.”
இதற்கும் மூல காரணம் அறியாமையே. இதை நீக்கி விட்டால் இவர்களுக்கும் வெளிச்சம் கிட்டும். மிக விரைவாகவே கிட்டும்.
முரண்பாடாக இருக்கிறதே என்கிறீர்களா? இறைவனின் விளையாட்டு நமக்குப் புரியாதது. காரணம் புரியாத சில நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கின்றன. எப்போதோ செய்த ஒரு சின்ன நல்ல காரியமாக இருக்குமோ? திடீரென்று ஏதோ ஒரு நிகழ்ச்சி, ஒரு வார்த்தை, மழைக்கு ஒதுங்கி இருந்த நேரத்தில் உபன்யாசகர் சொன்ன ஒரு தத்துவம், இப்படி ஏதாவது காதில்பட்டு வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறாற்போல் நடப்பது உண்டு.. இறைவனின் அவ்யாஜ கருணை (காரணமற்ற-அல்லது காரணம் நமக்குப் புரியாத-) கருணை என்பது இதுதான். . இத்தகைய நிலையைத்தான் தன்மேல் ஏற்றுக்கொண்டு அபிராமி பட்டர் பாடியிருக்கிறார்:
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என்சொல்வேன் ஈசர்பாகத்து நேரிழையே
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இப்படி மனம் திரும்பி வருபவர்களுக்கு சீக்கிரமே உய்வு கிடைத்து விடுகிறது! சமர்த்தாக இருக்கிற பிள்ளையைவிட மனம் திருந்தி வருகிற Prodigal Sonக்குத்தான் விருந்துபசாரம்!
அறநூல்களை நமது வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்கிறது கீதை. அறநூல்கள் அத்தனையின் சாரமே கீதை. வையத்துள் வாழ்வாங்கு வாழ விரும்பும் ஒவ்வொருவரும் கீதையைப் படிக்க வேண்டும்; சிந்திக்க வேண்டும். அதன்படி நிற்க இடைவிடாது முயற்சி செய்ய வேண்டும்.
நம்மிடமுள்ள அசுர குணங்கள் நீங்கவும், தெய்வ குணங்கள் ஓங்கவும்- .
எத்தனை முறை விழுந்தாலும், மீண்டும் மீண்டும் எழுந்து, இறைவனை நோக்கிய பாதையில் நடை போடவுமான-ஒரே வழி-
அவனிடம் பிரார்த்தித்துக் கொள்வதுதான்!


Tuesday, 3 October 2017

ஒரு சாமான்யனின் கீதை--15

ஒரு சாமான்யனின் கீதை-15
ஏற்கவேண்டிய இருபத்தாறு
பண்பட்ட மனிதன். உலகத்தோடு ஒட்ட வாழ்கிறான். ஆன்மிகப்பாதையிலே நடைபோடுகிறான். அவன் ஏற்றுக்கொண்டு கடைப்பிடிக்கும் விழுமியங்கள் என்னென்ன? சொல்கிறான் கீதாசிரியன்.
அச்சமின்மை:
மனத்தூய்மை
ஞானத் தேடல்:
தானம்:
 புலனடக்கம்:
வேள்வி
அறநூல்களைக் கற்றல்
தவம்
நேர்மை
அகிம்சை
சத்தியம்
சினமின்மை
துறவு
அமைதி
புறங்கூறாமை
உயிர்களிடத்துக் கருணை
பிறன்பொருள் நயவாமை.
மென்மை
பழியஞ்சாமை
மன உறுதி
தைரியம்
பொறை
தளர்வின்மை
தூய்மை
வஞ்சகம் இன்மை
செருக்கின்மை
நல்லவண்ணம் வாழவேண்டும் என்று முனைபவன் ஒவ்வொருவனுக்கும் இந்தப்  பண்புகள் வழிகாட்டு நெறிமுறையாக அமையும்.
நம்மை நாமே சோதித்துப் பார்த்துக்கொண்டு நம் பாதையைச் சீரமைத்துக்
கொள்வதற்கு இந்த நெறிமுறைகள் உதவும்.

எப்படி வாழக்கூடாது என்பதற்கான எதிர்மறைப் பண்புகளையும் குணங்களையும்  கண்ணபிரான் விரித்துரைக்கிறான். அவற்றை அடுத்த இயலில் காண்போம்.



.



Monday, 2 October 2017

ஒரு சாமான்யனின் கீதை--14


ஒரு சாமான்யனின் கீதை—14
அறிந்தவனே அறிந்தவன்!
விசித்திரமானதோர் அரசமரத்தைக் கற்பனை செய்து கொள்வோம். தலைகீழான அரசமரம். வேர் எங்கோ மேலிருந்து வருகிறது. ஆரம்பம் அறியக்கூடவில்லை. கிளைகளும் இலைகளும் கீழ்நோக்கிப் படர்ந்துள்ளன. இந்த மரம் ஆழமாக வேரூன்றி உள்ளது. அழிவே இல்லாதது போலத் தோன்றுகிறது.
இந்த மரம் போன்றதுதான் நம் உலகியல் வாழ்க்கை. கிளைகளும் இலைகளும்,நமது குணங்கள், அவற்றின் மூலம் ஏற்படும் நமது வினைகள், புறப்பொருள்கள், புலன்கள் மனம், புத்தி, நான் என்று நினைத்துக்கொள்ளும் அந்தப் பொருள் அனைத்தும். இவை அனைத்துக்கும் ஆதாரமாக, புலன்களுக்கும் அறிவுக்கும் புலப்படாமல் இருப்பவனே பரமாத்மன். உடலின் உள்ளுறைந்து அதனை இயக்கும் ஜீவனுக்கும், ஜீவ சாக்ஷியாய் இருதயத்துக்குள் இருக்கும் ஈஸ்வரனுக்கும் மேற்பட்டவன் அவனே
பரம்பொருளின் மாய சக்தியால் ஜீவன் இயங்குகிறது. வினைகளும் அனுபவங்களுமாகிய வாஸனைகளைச் சேர்த்துக்கொள்கிறது. காற்றில் கலந்த வாசம், காற்றோடு கூடவே செல்வது போல, நமது சம்ஸ்காரமாகிய வாஸனைகள், ஜீவனோடு சேர்ந்து அடுத்தடுத்த பிறவிகளில் சேர்ந்து கொள்கின்றன. வாஸனைகளைத் தீர்க்க மற்றுமொரு பிறவி. அதனில் சேரும் வாஸனைகள். புனரபி ஜனனம் புனரபி மரணம். இதிலிருந்து எப்போது எப்படித்தான் விடுபடுவது?. ஸம்ஸாரமாகிய விருட்சத்தை வலுவான கோடரி கொண்டு வேரோடு வெட்டி வீழ்த்த வேண்டும். அப்போதுதான் இறைவனுக்கும் இறைவனான அந்த ஆதிமூலத்தை, பேரிறைவனை, புருஷோத்தமனை உணர்ந்து கொள்ள முடியும்.
வெட்டி வீழ்த்தக்கூடிய அந்த வலுவான கோடரி என்பது என்ன? ஞானமென்னும் கோடரி அது.செருக்கும் மோகமும் இல்லாமை..பற்றுகள் நீங்கப் பெறுதல். ஆத்ம விசாரம். இன்பதுன்பம் வேண்டுதல் வேண்டாமை என்ற இருமைகளிலிருந்து விடுபட்ட நிலை.

ஞானக்கோடரியால் ஸம்ஸார பந்தங்களை நீக்கியவனே புருஷோத்தமனை அறிகிறான். அவனை அறிந்தவனே “அறிந்தவன்”