Thursday 5 October 2017

ஒரு சாமான்யனின் கீதை--16

ஒரு சாமான்யனின் கீதை—16

கடையனுக்கும் கடைத்தேற்றம்!

‘கயமை’ என்கிறார் திருவள்ளுவர். அதைத்தான் அசுர ஸம்பத் என்கிறான் கீதாசார்யன். அதைப்பற்றிக் கொஞ்சம் நாமெல்லாம் புரிந்து கொள்கிற மாதிரி விஸ்தாரமாகவே சொல்கிறான்.
கயவர்களுக்கு எது தர்மம், எது அதர்மம் என்கிற விவஸ்தையே கிடையாது. அவர்கள் மனத்தில் எழுவதெல்லாம் அழுக்கு எண்ணங்களே. இவர்கள் பழக்கவழக்கங்கள் ,காரியங்கள் எல்லாமே அசுத்தமானவை. வாயிலிருந்து வரும் வார்த்தைகளோ, பொய், புனைசுருட்டு, குதர்க்கம்! இறைவன் ஒருவன் இருக்கிறான், ஒரு நியதிக்கு உட்பட்டுத்தான் இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. உலகத்தில் நடைபெறும் அத்தனைக்கும் அடிப்படைக் காரணம் காம இச்சைதான் என்ற அசையாத நம்பிக்கை உடையவர்கள் இவர்கள்.
இப்படிப்பட்ட சின்னபுத்திக்காரர்கள் எந்தக் கொடிய செயல்களுக்கும் அஞ்சுவதில்லை. இவர்கள் சமூக விரோதிகள்.,
ஒன்று கிடைத்தால் இன்னொன்று என்று இவர்கள் ஆசைக்கு முடிவே இல்லை. நல்லவர்கள் போல் நடிக்கும் பொய்யொழுக்கக்காரர்களான இவர்கள் செய்யும் எந்தக் காரியமும் நல்ல நோக்கத்துடன் அல்ல. தானம் தர்மம், ஹோமம் என்றெல்லாம் செய்தாலும் அத்தனையும் வெளி வேஷம் ,” பார்த்தாயா? எனக்கு எவ்வளவு செல்வம் இருக்கிறது? என்னைப்போல தர்மிஷ்டர்கள் யாருண்டு?” என்று பெருமை பீற்றிக் கொள்ளத்தான்!
காமத்தாலும்  விரோதத்தாலும் பேராசையாலும் இவர்கள் பண்ணாத அக்கிரமங்கள் இல்லை. அதர்ம வழியில் சொத்து சேர்த்துக் குவிக்கிறார்கள். தினம் தினம் இவர்களது தியானம், இன்றையக் கணக்குக்கு எனது செல்வம் இவ்வளவு, நாளைக்கு இவ்வளவு சேர்த்து விட வேண்டும்; இத்தனை விரோதிகளை அழித்துத் தரைமட்டம் ஆக்கி விட்டேன்; இன்னும் அழிக்க வேண்டியவர்கள் இன்னின்னார் பாக்கி இருக்கிறார்கள். அவர்களை அழிக்க என்ன சூழ்ச்சி செய்யலாம் என்பதுதான்! இதில் எதுவுமே சாஸ்வதம் இல்லை என்பதை அவர்கள் துளிக்கூடச் சிந்தித்துப் பார்க்காததுதான் வேடிக்கை.
இவர்கள் வேலை கடவுளை நிந்திப்பதே! அகங்காரம், அதிகாரம், அலட்சியம் ஆசைகள், ஆத்திரம் இவற்றின் வரிவடிவங்கள் இவர்கள்! இவர்களைத்தான்,”பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்” என்று அபிராமிபட்டர் சொன்னார் போலும்!
இத்தகைய மனோபாவத்துடன் இவர்கள் பிறந்து பிறந்து இளைக்கிறார்கள். பிறவிக்குப் பிறவி இவர்கள் கீழ்நிலையை அடைகிறார்கள்!
இத்தனைக்கும் அடிப்படைக்காரணங்கள் என்ன?
காமம், குரோதம், பேராசை. இவைதான் ”கெடுநீரார் காமக்கலன்.”
இதற்கும் மூல காரணம் அறியாமையே. இதை நீக்கி விட்டால் இவர்களுக்கும் வெளிச்சம் கிட்டும். மிக விரைவாகவே கிட்டும்.
முரண்பாடாக இருக்கிறதே என்கிறீர்களா? இறைவனின் விளையாட்டு நமக்குப் புரியாதது. காரணம் புரியாத சில நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கின்றன. எப்போதோ செய்த ஒரு சின்ன நல்ல காரியமாக இருக்குமோ? திடீரென்று ஏதோ ஒரு நிகழ்ச்சி, ஒரு வார்த்தை, மழைக்கு ஒதுங்கி இருந்த நேரத்தில் உபன்யாசகர் சொன்ன ஒரு தத்துவம், இப்படி ஏதாவது காதில்பட்டு வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறாற்போல் நடப்பது உண்டு.. இறைவனின் அவ்யாஜ கருணை (காரணமற்ற-அல்லது காரணம் நமக்குப் புரியாத-) கருணை என்பது இதுதான். . இத்தகைய நிலையைத்தான் தன்மேல் ஏற்றுக்கொண்டு அபிராமி பட்டர் பாடியிருக்கிறார்:
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என்சொல்வேன் ஈசர்பாகத்து நேரிழையே
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இப்படி மனம் திரும்பி வருபவர்களுக்கு சீக்கிரமே உய்வு கிடைத்து விடுகிறது! சமர்த்தாக இருக்கிற பிள்ளையைவிட மனம் திருந்தி வருகிற Prodigal Sonக்குத்தான் விருந்துபசாரம்!
அறநூல்களை நமது வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்கிறது கீதை. அறநூல்கள் அத்தனையின் சாரமே கீதை. வையத்துள் வாழ்வாங்கு வாழ விரும்பும் ஒவ்வொருவரும் கீதையைப் படிக்க வேண்டும்; சிந்திக்க வேண்டும். அதன்படி நிற்க இடைவிடாது முயற்சி செய்ய வேண்டும்.
நம்மிடமுள்ள அசுர குணங்கள் நீங்கவும், தெய்வ குணங்கள் ஓங்கவும்- .
எத்தனை முறை விழுந்தாலும், மீண்டும் மீண்டும் எழுந்து, இறைவனை நோக்கிய பாதையில் நடை போடவுமான-ஒரே வழி-
அவனிடம் பிரார்த்தித்துக் கொள்வதுதான்!


No comments:

Post a Comment