Thursday, 21 December 2017

தெய்வத்தின் குரல்

தெய்வத்தின் குரல்
கஷ்டம் வந்தது; இறைவனிடத்தில்
கண்ணீர் விட்டுக் கதறி அழுதேன்.
துன்பம் தீர்ந்தது; எனினும் அந்தோ!
தொடர்கதையாகப் புதுப்புதுத் துன்பம்!
தொழுதேன்;அழுதேன்: துடைத்தனன் இறைவன்!
சொல்லி அழுது சலித்துப்போச்சு!
தெளிவு பிறந்தது; எதிர்மறைப் பிரார்த்தனை
தேவை இல்லாதது; சுருங்கச் சொன்னால்
சந்தோஷம்தான் தேவை; அதற்குத்
திட்டம் தீட்டினேன்,இதுஇது வேண்டும்
பட்டியலிட்டுப் பிரார்த்தனை புரிந்தேன்
சட்டென அனைத்தும் தந்தான் இறைவன்
எனினும் ஏதோ நிம்மதி இல்லை
என்ன்ன செய்வது நிம்மதி பெற்றிட?
இப்படி இப்படி நடந்துகொள் என்று
இறைவன் எனக்குக் குருமுகம் சொன்னான்.
சத்சங் பிரார்த்தனை தியானம் நற்செயல்
புத்தகம் மூலம்,பிரவசனமாக
பஜனை என்று பலப்பல சொன்னான்.
அட்டவணைபோல் அடுக்கி எழுதினேன்
இதுவே எனக்கொரு தளை என ஆச்சு!
இறைவன்கூட மீட்பதற்கில்லை!
என்னை உன்னிடம் ஒப்படைத்திட்டேன்!
எதுவும் நானினி முயலவே மாட்டேன்!
சொன்னது நாவு; நெஞ்சம் மட்டும்
என்னவோ இதனை ஏற்றிடவில்லை.
அவன்பாடென்று அக்கடாவென்று
சிவனே என்று சோம்பலே மிச்சம்!
’தெய்வத்தின் குரல்’  திருவாசகமாய்த்
தெளிவைத் தந்தது!நச்சென ஒருசொல்!
பக்தி வேணுமெனப் பிரார்த்தித்துக்கொள்;
மத்தவை எல்லாம் அவன் பொறுப்பாகும்!





Monday, 11 December 2017

காந்திஜியின் உண்ணாவிரதங்கள்-தன்னைத்தான் கட்டுதல்

காந்திஜியின் உண்ணாவிரதங்கள்-
தன்னைத்தான் கட்டுதல்.
காந்திஜி உண்ணாவிரதங்களை ஓர் அறிவியல் தத்துவமாக வகுத்ததை முன்னொரு பதிவில் பார்த்தோம். அந்த வெளிச்சத்தில் அவரது உண்ணாவிரதங்களை நிகழ்வு -ஆய்வு செய்வோம். அறிவுபூர்வமான ஆய்விலிருந்து அவருக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டாம்.
காந்திஜியின் உண்ணாவிரதங்கள், சத்தியாக்கிரக வரலாற்றுக் காலத்துக்கு முன்பே துவங்கிவிட்டன.. சின்ன வயதில் அன்னை புத்லிபாயுடன் சேர்ந்து ஏகாதசி மற்றும் சமயரீதியான உண்ணாவிரதங்கள் இருந்திருக்கிறார். டால்ஸ்டாய் பண்ணை  காலத்தில், ரம்ஜான் நோன்பின்போது இஸ்லாமியருடன் சேர்ந்து இந்து, கிறிஸ்துவ, பார்சி நண்பர்களும் நோன்பு இருந்திருக்கிறார்கள்.  இது பண்ணையில் வசித்த அனைத்துச்  சமயத்தினரிடமும் தோழமை உணர்வை உருவாக்கியது..
சரியான புரிதலுடனும், அந்தரங்க சுத்தியுடனும் இருக்கும் உண்ணாவிரதம், புலனடக்கத்துக்குத் துணை நிற்கும் என்பது காந்திஜியின் கருத்து.. பாரதி சொன்ன ”தன்னைத்தான் கட்டுத”லுக்கு உண்ணாவிரதம் ஒரு சாதனம்.
1913 முதல் 1948 வரை காந்திஜி 17 உண்ணாவிரதங்கள்-140 நாட்கள் இருந்திருக்கிறார். 10 நாட்கள் இருந்த 8 உண்ணாவிரதங்கள் குறித்து சரியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

அவர் மேற்கொண்ட உண்ணாவிரதங்கள் பெரும்பாலும்-அன்பு கொண்டவர்களின் மன மாற்றத்துக்காக, செய்த தவற்றுக்கு பிராயச்சித்தமாக, வன்முறைக்கு எதிராக, ,கோரிக்கைகளை முன்வைத்து, அமைந்தவை. அவற்றைக் கால வரிசைப்படி தொடர்ந்து பார்ப்போம்

Sunday, 10 December 2017

மன்னார்குடியில் சுந்தரராமையர்

மன்னார்குடியில் சுந்தரராமையர்.
 வ.வே.சு.ஐயர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி விட்டார். தலைமறைவு வாழ்க்கைக்காக புதுச்சேரியை நோக்கி ரயிலில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார். அவருடன் அதே பெட்டியில் சில துப்பறியும் அதிகாரிகள் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். சீக்கியத் தலைப்பாகையுடனும் தாடியுடனும் கறுப்புக்கண்ணாடியுடனும் இருக்கும் வ.வே.சு. மீது அவர்களுக்கு ஒரு கண். பெட்டியில் இருக்கும்  V.V.S என்ற முன்னெழுத்துகளைப் பார்த்து விட்டார்கள். அவரும் இதைக் கவனித்து விட்டார். யதேச்சையாய்க் கேட்பது போல் “உங்கள் பெயர் என்ன சார்?” என்று கேட்டார்கள், சமயோசிதமாக Vir Vikram Singh என்று சொல்லித் தப்பித்துக்கொண்டு புதுச்சேரி வந்தடைந்து விட்டார் ஐயர்.
இது குறித்து கொடியாலம் ரங்கசாமி ஐயங்காருக்கு அவர் மீது அபார மரியாதை. ஐயங்கார் புதுச்செரியில் வசித்து வந்தார்.  . சிறந்த தேச பக்தர்.. பாரதியாரிடம் அவருக்கு நிறைந்த அன்பு உண்டு. ஆனால் கவிதை கிவிதை சமாசாரம் எல்லாம் அவருக்கு விளங்காத விஷயங்கள். தவிரவும் அவருக்கு பாரதியார், வ,வே.சு போல சாமர்த்தியமும் துணிச்சலும் உடையவரில்லை என்று ஓர் அபிப்பிராயம் இருந்தது.
அவருக்கு மன்னார்குடியில் ஒரு பெரிய வீடு இருந்தது. அங்கு அடிக்கடி சென்று ஓய்வெடுத்துக் கொண்டு விடுவார். அப்படித்தான் ஒருநாள். மன்னார்குடியில் வெற்றிலை பாக்கு குதப்பியபடி திண்ணையில் உட்கார்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். பகல் 11 மணி. அப்போது ஜல் ஜல் என்று ஒரு குதிரை வண்டி அவர் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது. அப்போது, கோட்டும் பஞ்சகச்சமும், தலைப்பாகையும் மழுங்கச் சிரைத்த பளபள முகமுமாக  ஒருவர் வந்து இறங்குகிறார். ”யாரது?” என்று பார்க்க, திண்ணையிலிருந்து இறங்கி, வண்டியை நெருங்கி விட்டார், உற்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது-அடட!  நம்ம பாரதி!. தனியாக அழைத்துச் சென்று விளக்கினார் பாரதி. ”புதுச்சேரியில் கூட்டுக்குள் அடைபட்டதுபோல் இருந்து சலித்து விட்டது. வெளிக்காற்றை சுவாசிக்க விரும்பினேன்! உங்களோடு கொஞ்ச நாள் இருக்கப்போகிறேன்”. கொடியாலம் ரங்கசாமி ஐயங்காருக்கு ரொம்ப சந்தோஷம். தம் நண்பர்களுக்கெல்லாம், ”இவர் என் நெடுநாள் சிநேகிதர். சுந்தரராமையர் என்று பேர். ஒரு வாரம் என்னோடு தங்கியிருப்பதற்காக வந்திருக்கிறார்.” என்று அறிமுகம் செய்து வைத்தார். ஒரு வாரம் வேகமாகக் கழிந்து விட்டது. பாட்டும் கூத்தும் அரட்டையும்தான். கடைசிவரை யாராலும் அவர் பாரதியார் என்று கண்டு பிடிக்க முடியவே இல்லை. பிரியாவிடை பெற்று புதுச்சேரி சென்றார் பாரதி.
கொடியாலம் ஐயங்கார் தம் கருத்தை மாற்றிக்கொண்டார். வ.வே.சு ஐயரை விடக்கூட சாமர்த்தியமும் துணிச்சலும் உடையவர்தான் பாரதியார் என்று ஏற்றுக்கொண்டார்.
(ஆதாரம்: வ.ரா.எழுதிய “மகாகவி பாரதியார்”)

டிசம்பர் 11 பாரதி பிறந்ததினம்

Saturday, 9 December 2017

குறையொன்றுமில்லை

குறையொன்றுமில்லை!
அவர்  கோவிந்தன் மீது மாறாக் காதல் கொண்டவர். வாழ்நாளில் ஒருமுறையாவது திருமாலைத் தரிசித்துவிட வேண்டுமென்பது அவரது வாழ்வின் குறிக்கோள். அதற்குத் தடையாக நின்றது ஆங்கில அரசின் சட்டம். அவர் ஆலயத்துக்குள் நுழைந்தால் புனிதத்தன்மை  கெட்டு விட்டதென்று சொல்லி கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள். என்ன ஆனாலும் சரி, ஒருமுறை இறைவனைத் தரிசித்து விடுவது என்று தீர்மானித்து விட்டார். புலால் உணவை விலக்கினார். தூய நீரில் முழுக்காடினார். திருமண் தரித்துக்கொண்டார். நன்கு துவைத்த ஆடையை உடுத்திக்கொண்டார். கோவிலுக்குள் நுழைந்து இறைவனைக் கண்குளிரத் தரிசித்துக்கொண்டிருந்தார். அவரது யோக நிலையைக் கலைப்பதுபோல் ஓர் இரும்புக்கரம் அவர் கழுத்தைப் பற்றியது. ”நடடா, ஸ்டேஷனுக்கு!” என்று அங்கிருந்த பக்தி அலையை மிஞ்சி நாராசமாக ஒலித்தது.
அவரது நண்பர்கள் .”சட்டம் அப்படி இருக்கிறது. நல்ல வக்கீலை வைத்து வாதாடினால் நீ விடுவிக்கப்படலாம்” என்றார்கள். அங்கேதான் சிக்கல். அந்த ஊரில் இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் சாதிப்பற்றாளர்கள். ”தீண்டாதவனுக்கு வாதாடினால் தெய்வ குத்தம் ஆகாதோ?”” எஞ்சியிருந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள். காந்திஜியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நீதிமன்றப் புறக்கணிப்பில் இருந்தார்கள்.
இந்த நிலையில் ஒரு வக்கீல் அவருக்காக இலவசமாக வாதாட முன்வந்தார். இதில் வேடிக்கை என்ன என்றால், அவர் பழுத்த ஆசாரசீலர். தீவிர காங்கிரஸ்காரரும் கூட..
நீதிமன்றம். அன்பர் நடுங்கி விதிர்விதிர்த்துக் கொண்டிருந்தார். வக்கீல் கேள்விகளைத் தொடுத்தார்.
“நீ கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டது உண்மையா?”
“ஆமாம்.”
“என்ன உணவு உட்கொண்டாய்?”
“கொஞ்சம் கஞ்சி மட்டுமே குடித்தேன், அரிசிக்கஞ்சி.”
கோவிலுக்குப் போகுமுன் என்னவெல்லாம் செய்தாய்?”
”நீரில் முழுகிக் குளித்தேன். துவைத்து வைத்திருந்த உடைகளைப் போட்டுக் கொண்டேன். நெற்றியில் திருமண் தரித்துக்கொண்டேன்.”
சரி. எவ்வாறு சாமி கும்பிட்டாய்? உனக்கு திவ்யப் பிரபந்தம் தெரியுமா? வேறு ஏதாவது பாசுரங்கள் தெரியுமா?’
“அதெல்லாம் தெரியாதுங்க!.. கோவிந்தா1கோவிந்தா!” என்று சொல்லியபடியே சாமியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்”
வக்கீல் நீதிபதியின் பக்கம் திரும்பினார். “கனம் கோர்ட்டார் அவர்களே! கைது செய்யப்பட்டவரின் வாக்குமூலத்தின்படி எந்த வகையிலும் அவர் கோவிலின் புனிதத்துவத்தைக் கெடுக்கவில்லை” என்று சொல்லி முடித்தார். நீதிபதி வக்கீலின் வாதத்தை ஏற்று கட்சிக்காரரை விடுதலை செய்தார்.
அப்படி வாதாடிய வக்கீல் வேறு யாரும் இல்லை. ராஜாஜி அவர்கள். இன்று, டிசம்பர் 10 அவரது பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது.
கதை இதோடு முடியவில்லை. உள்ளூர் காங்கிரஸ்காரர்களுக்குப் படுகோபம். கட்சிக்கட்டுப்பாட்டை மீறிவிட்டாரே இந்த வக்கீல்? விஷயம் காந்திஜியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. காந்திஜி  ராஜாஜியின் செயலைப் பராட்டினார். எந்த விஷயத்தையும் வார்த்தை அளவில் எடுத்துக்கொள்ளாமல், அதனது உட்கருத்தைப் புரிந்து கொண்டு செயல்படவேண்டும். ராஜாஜி அந்த அன்பருக்காக வாதாடாமல் இருந்திருந்தால் அவர் சிறைக்குப் போயிருப்பார். அப்போது நாம் ஆங்கிலேயரின் அக்கிரம சட்டத்துக்கு ஒத்துழைப்புக் கொடுத்ததாக ஆகும். ஒத்துழையாமை இயக்கத்துடன் அது எப்படிப் பொருந்தும்?
ராஜாஜி “குறையொன்றுமில்லை’ என்று ஒரு பாட்டு எழுதினார். எம்.எஸ். அம்மாவால் பிரபலமானது அது.
“திரைக்குப்பின் நிற்கின்றாய் கண்ணா. மறையோதும் ஞானியர்கள் மட்டுமே காண்பார்கள் என்றாலும்.. குறையொன்றும் இல்லை கண்ணா” என்று வரும். ராஜாஜி இந்த நிகழ்வை மனத்தில் வைத்துக்கொண்டுதான் அந்தப் பாட்டை எழுதினார் என்கிறார்கள். நமக்குத் தெரியவில்லை.. நாமென்ன, ராஜாஜியின் ஆன்மாவிடமா சென்று விளக்கம் கேட்க முடியும்?

(இந்த நிகழ்ச்சியை விரிவாக எழுத எனக்கு விளக்கம் தந்து உதவியவர் நண்பர்-ராஜாஜியின் அன்புக்குப் பாத்திரமான கே.வேதமூர்த்தி.) :‘

Friday, 8 December 2017

ஒரு நம்ப முடியாத கதை

ஒரு நம்ப முடியாத கதை
தென் ஆப்பிரிக்காவில் பார்ஸி ருஸ்தம்ஜி என்று ஒரு தொழிலதிபர். காந்திஜிக்கு நெருங்கிய நண்பர். காந்திஜிக்கு இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்டபோது உதவியிருக்கிறார். அவரது போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். அவர் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு விட்டார். காந்திஜிதான் பிரபல வக்கீல் ஆயிற்றே , அவர் காப்பாற்றுவார் என்று ஒடோடி வந்தார். காந்திஜி முன்னுரிமை தந்தது நட்புக்கா? நீதிக்கா?  ஒரு சுவையான நிகழ்வாய்வு.
தமது விவகாரங்கள் அத்தனையையும் காந்திஜியிடம் பகிர்ந்துகொள்வார் ருஸ்தம்ஜி. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் மறைத்து விட்டார். ரொம்ப நாளாகவே அவர் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இது பற்றி காந்திஜியிடம் சொல்லவே இல்லை. ஏன் சொல்லவில்லை? ”வியாபார தந்திரங்களையெல்லாம் சொல்லி உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை” என்பது அவர் சொன்ன சாக்கு. இப்போது சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டதும் காந்திஜியிடம் ஓடோடி வந்து விட்டார்: காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! எப்படியாவது காப்பாற்றுங்கள்! என்று மன்றாடினார்.
காந்திஜியின் மறுமொழி: உங்களைக் காப்பாற்றுவதும் காப்பாற்றாததும் கடவுள் கையில் இருக்கிறது. நீங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு ஒரு வாக்குமூலம் கொடுத்துவிடுங்கள். நான் என்னால் இயன்றதைச் செய்கிறேன்!” இந்த அரிச்சந்திரர்  இப்படிச் சொல்வாரென்று ருஸ்தம்ஜி எதிர்பார்க்கவில்லை. பேயறைந்தது போலானார். “ ஒப்புதல் வாக்குமூலம் தருகிறேன். உங்களிடம் ஒப்புக்கொண்டு சொல்வது போதாதா?” பிடிவாதக்கார காந்திஜி சொன்னார்: நீங்கள் தவறு இழைத்தது எனக்கு எதிராக இல்லையே? அரசாங்கத்துக்கு எதிராகத்தானே?”
தீர விசாரித்ததில் போலீஸார் பிடித்தது இக்குணியூண்டுதான். ருஸ்தம்ஜி மலைமுழுங்கியாக இருந்திருக்கிறார்.    காந்திஜி அவருக்கு எடுத்துச் சொன்னார்: உங்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் மன்னித்து விடுவதும் சுங்க அதிகாரியின்  கையில் இருக்கிறது. அவருக்கு அறிவுறுத்த வேண்டியவர் அட்டார்னி ஜெனரல். நான் இருவரையும் சந்தித்துப் பேசுகிறேன். ஆனால் நீங்கள் அவர்கள் விதிக்கும் அபராதத் தொகையை சுணங்காமல் கட்டிவிட வேண்டும். அப்படியும் அவர்கள் உங்களை ஜெயிலுக்கு அனுப்பினால் போகத்தான் வேண்டும். வேறு வழியில்லை.” காந்திஜி தொடர்ந்தார்:” வெட்கப்பட வேண்டிய விஷயம் ஜெயிலுக்குப் போவது இல்லை. குற்றம் பண்ணியதுதான்;. ஜெயிலுக்குப் போவது அதற்கான பரிகாரம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். ருஸ்தம்ஜி நிலகுலைந்து போனார்.  அவருக்கு சமுதாயத்தில் இருந்த மதிப்பு, மரியாதை எல்லாம் என்னாவது? என்றாலும் வேறு வழி இல்லாமல் காந்திஜி சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டார்.
காந்திஜி சுங்க அதிகாரியைச் சந்தித்து ஆதியோடந்தமாக அத்தனை விஷயத்தையும் சொன்னார். அவர் ஏமாற்றியுள்ள முழுத்தொகை பற்றிய விவரத்தையும் அவர் மனம் திருந்தி வருந்துவதையும் எடுத்துச் சொன்னார். காந்திஜியின் அணுகுமுறை அதிகாரிக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. அவரது அறிவுரையின்  பேரில் அட்டார்னி ஜெனரலுடனும் தொடர்புகொண்டு விலாவாரியாக அத்தனையையும் எடுத்துச் சொன்னார். அவருக்கும் காந்திஜி நேர்மையானவர் என்பதும் துளிக்கூட மறைக்காமல் அத்தனை விவரங்களையும் சொல்லிவிட்டார் என்பதும் புரிந்து போயிற்று. ருஸ்தம்ஜியின் வழக்கு சமரசத்தில் முடிந்தது. அவர் மறைத்த மொத்தத் தொகையைப்போல இரண்டு மடங்கு அபராதமாக விதிக்கப்பட்டது. சிறை செல்வதினின்றும் அவர் தப்பினார்.
இத்தனையையும் விவரமாக எழுதி சட்டம்போட்டு தமது அறையில் பளிச்சென்று தெரியும் வகையில் மாட்டி வைத்தார் ருஸ்தம்ஜி... “இது என் சக வணிகர்களுக்கும், என் வருங்கால சந்ததியினருக்கும் மறக்கமுடியாத பாடமாக இருக்கட்டும்.”

நமப் முடியவில்லை அல்லவா? அதனால்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காந்திஜியைப்பற்றி இப்படிச் சொன்னார்: ”இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக இந்த பூமியில் உலவினார் என்பதை வரவிருக்கும் சந்ததியினர் நம்ப மாட்டார்கள்.”

Tuesday, 5 December 2017

சரியா? தப்பா?

சரியா, தப்பா?
 Don’t say yes when you want to say No.-
இது ஒரு புத்தகத்தின் தலைப்பு. இது assertivenesss பற்றிய புத்தகம் என்கிறார்கள். காந்திஜி  இத்தகைய-மனதில் ஒன்று-வெளியில் ஒன்று என்ற நடத்தையை உண்மைக்குப் புறம்பானது என்று தெளிவுபடச் சொல்கிறார்.
காந்திஜி ஆசிரமத்தில்  11 நடத்தை விதிகள். அவற்றில் தலையாயது உண்மை-சத்தியம்.அன்றாட வாழ்வில், சின்ன சின்ன விஷயங்களில் கூட நாம் உண்மைக்கு மாறாக-பொய்யாக நடந்து கொள்ளும் அபாயம் இருக்கிறது என்பதை அவர் ஓர் உதாரணத்துடன் விளக்குகிறார்.
ஒரு நண்பர் காந்திஜியிடம் வந்தார். “ஒரு சொந்தப் பிரச்சினை; உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்” என்றார். காந்திஜி உடன் சம்மதிக்கவே இருவரும் ஒதுக்குப்புறமாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் அப்போது பரஸ்பர நண்பர் ஒருவர் அங்கு வந்து நின்று விட்டார் .”என்ன, நான் வந்து கலந்து கொள்வது உங்கள் பேச்சுக்கு இடைஞ்சலாக இருக்காதே?” என்று யதார்த்தமாகக் கேட்டார். அதற்கு நம் நண்பர் சொன்ன பதில் காந்திஜிக்கு அதிர்ச்சியாக இருந்தது. “அதெல்லாம் ஒண்ணுமில்லே! நீங்கள் தாராளமாக் கலந்துக்கலாம்!” நம்ம நண்பர் நயத்தக்க நாகரிகம் உடையவராக நினைத்துக்கொண்டு பேசினார். இது நாகரிகமே இல்லை. அதி-நாகரிகம்-அல்லது அநாகரிகம். நண்பர் என்ன சொல்லியிருக்கவேண்டும் என்கிறார் காந்திஜி? “ஆமாம்.கொஞ்சம் தனிப்பட்ட விஷயமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் வந்தால் எங்கள் பேச்சு தடைப்படும்” என்று சொல்லியிருக்க வேண்டும். சொல்லும் விதம் அவர் மனம் புண்படாதபடி இருக்க வேண்டும். வந்த நண்பர் பண்புடையவராக, இங்கிதம் தெரிந்தவராக இருந்தால், தவறாக நினைக்காமல் ஒதுங்கிக்கொண்டு விடுவார்.”.
இப்படி சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம் நாம் சின்ன பொய்களைச் சொல்லிக்கொண்டிருந்தால் நாம் சீக்கிரமே பொய்யொழுக்கதாரிகளின் தேசமாக மாறி விடுவோம் என்கிறார் காந்திஜி.
என்ன, இந்தக் கட்டுரை நன்றாயிருக்குதானே?

Yes or No?

அற்புதங்கள் நிகழவே செய்யும்!

அற்புதங்கள் நிகழவே செய்யும்!
கடவுளின்மீதும் பிரார்த்தனையின் வலிமை மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார் காந்திஜி. தொழுத கையில் ஒடுங்கியிருந்த தோட்டாவால் துளைக்கப்பட்ட அந்த நேரத்தில் கூட அவரது உதடுகள் உச்சரித்துக் கொண்டிருந்தது ராமநாமமே. நல்லதொரு நோக்கத்துக்காக நேர்மையான வழிமுறையில் செயல்படும்போது,அத்தனை நண்பர்களும் கைவிட்டு ஓடிவிட்டபோதிலும், நம்பிக்கையின் அடிவிளிம்புக்கே வந்து விட்ட போதிலும்-அடிவானம் இருளடைந்து காணும்போது-ஆண்டவன் வந்து துணை புரிவான் என்பது அவரது அருமறை.
அவரது வாழ்வில் ஒரு நிகழ்வு.
சத்தியாக்கிரக ஆசிரமத்தில் ஒரு ஹரிஜனக் குடும்பத்தை ஆசிரமவாசிகள் சேர்த்துக்கொண்டு விட்டார்கள். கணவன் மனைவி ஒரு குழந்தை அடங்கிய குடும்பம் அது. அது ஊரில் மாபெரும் புயலைக் கிளப்பிவிட்டது. “இந்த காந்திக் கடங்காரனாலெ வந்த வினை. எப்படி ஊருக்குள்ளே  இப்படி ஒரு .குடும்பத்தைச் சேத்துக்கப்போச்சு? நம்ம ஜாதிக்கடுக்குமோ?” இப்படி எல்லாம் பேசிக்கொண்டார்கள். இதற்கெல்லாம் காந்திஜி கவலைப்படவில்லை. ஆனால் ஆசிரமத்தின் அடி வயிற்றில் அடித்துவிட்டார்களே! நன்கொடை எல்லாம் நின்னு போச்சு. அடுத்தவேளைக்கு என்ன செய்யப்போகிறோம்  என்று தெரியாத நிலை. சமூக பகிஷ்காரம் வேறு செய்யப்போகிறார்களாம். காலனிக்கே நாம் எல்லாரும் போய் குடிசை போட்டுக்கலாம்! கூலிவேலை செய்து ஆசிரமத்தை நடத்தலாம்  என்று காந்தி ஆலோசித்துக் கொண்டிருந்தார்.
திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பார் காந்திஜி. ஆசிரமச் சிறுவன் ஒருவன் அவரிடம் ஓடி வந்தான்.”.பாபு! ஒரு சேட்டு உங்களை பார்க்கணுமாம்! வெளியிலே நிக்கறார்!”  காந்திஜி வெளியில் சென்று பார்த்தபோது காரின்மீது சாய்ந்தபடி ஒரு கம்பீரமான மனிதர் நின்றிருந்தார். முன்னெப் பின்னெ பார்த்திராதவர். எடுத்த எடுப்பில் அவர் கேட்டார்: ”நான் ஆசிரமத்துக்கு நிதி உதவி செய்யலாம் என்று இருக்கிறேன்.வாங்கிக் கொள்வீர்களா?” காந்திஜிக்கு தன்னையே நம்ப முடியவில்லை. “அவசியம்! அவசியம்! இப்பொ ரொம்ப கஷ்டமான நிலையில் இருக்கிறோம்” என்றார் காந்திஜி.
புறப்பட்டுப்போன மனிதர் மனிதர் மறுநாளே வந்து 13000 ருபாய் ரொக்கமாகக் கொடுத்து விட்டுப்போனார். அவர் அம்பாலால் சாராபாய் என்ற தொழிலதிபர் என்பது பின்னால்தான் தெரிய வந்தது. அவர் பின்னொரு சந்தர்ப்பத்தில்  காந்திஜியின் வாழ்க்கையில் குறுக்கிடப் போகிறார். அதைப் பின்னால் பார்ப்போம்.
அடுத்து விவேகானந்தர்..
விவேகானந்தர் அமெரிக்கா போய்ச் சேர்ந்தார். சர்வ சமய மாமன்றத்தில் கலந்துகொள்ளப்போனவர் ஊருக்கு முன்னால் போய்ச் சேர்ந்து விட்டார். கையில் இருக்கிற காசு அற்பம். அமெரிக்கா விலைவாசி அவருக்குத் தெரியாது. தெரிந்த முகம் ஒன்று கூட இல்லை. அறிமுகக் கடிதம் என்று யாரிடமும் வாங்கிக்கொண்டு வரவில்லை. இந்த லட்சணத்தில் போக வேண்டிய விலாசத்தையும் தொலைத்து விட்டார். யாரைக் கேட்டாலும், முகத்தைத் திருப்பிக்கொண்டு பதில் சொல்லாமல் போகிறார்கள். இவரையும் இவரது உடையையும் வினோதமாகப் பார்க்கிறார்கள். இருக்க இடமில்லை. வயிற்றுக்கு ஆகாரமில்லை. அலமந்து போன அவர் மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டார், ”மேரி மாதாவின் பிள்ளைகளிடம் வந்திருக்கிறேன்; இயேசுநாதர் என்னக் காப்பாற்றுவார்”
காப்பாற்றியே விட்டார். சரக்கு ரயில் பெட்டியில் குளிரில் விரைத்துப்போய் படுத்துத் தூங்கி விட்ட அவர் விழித்து எழுகையில், எதிர்வீட்டுப் பெண்மணி,” நீங்கள் சர்வசமய மாமன்றத்துக்குத்தானே வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டு வீட்டுக்கு அழைத்து, உபசரித்து உணவு தந்து, மாமன்றத் தலைவர் அவரது நண்பராய் இருந்ததால் அவரிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். அதற்குப் பிறகு ஒரே நாளில் அவர் உலகப்புகழ் பெற்ற கதை நாமறிவோம்.
ராமன் என்றால் என்ன? இயேசு என்றால் என்ன? கடவுள் ஒருவரே. நம்பிக்கை வைத்து விட்டால் அற்புதங்கள் நிகழவே செய்யும்!!.


Monday, 4 December 2017

உலகை உலுக்கிய உப்பு சத்தியாக்கிரகம்


உலகை உலுக்கிய உப்பு சத்தியாக்கிரகம்
எடுத்த உப்போ கையளவு. ஏற்பட்ட தாக்கமோ உலகளவு. இதுதான் காந்திஜி நடத்திய உப்பு சத்தியாக்கிரகத்தின் ரத்னச் சுருக்க வரலாறு.
காந்திஜி தலைமை ஏற்று நடத்திய போராட்டங்களில் இது ஒரு மாஸ்டர்-ஸ்ட்ரோக். ஏழை எளிய மக்களின் தோள்களைச் சுமையாய் அழுத்திய பிரச்சினை பற்றியது. முழுக்க முழுக்க ஆன்ம சக்தியை அடிப்படையாய்க் கொண்டு சத்தியத்திலிருந்தும் அகிம்சையிலிருந்தும் பிறழாது நடத்திய போர் இது.
பிரிட்டிஷாரிடத்திலே  மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால், நமது பிரச்சினைகள் குறித்து உலகத்தின் ஒட்டுமொத்த நல்லெண்ணத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்று காந்திஜி நினைத்தார். உப்பு சத்தியாக்கிரகத்தின் மையப் பிரச்சினையும்,அதன் செயல்பாடும் இதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்று அவர் நம்பினார். இந்த நோக்கில் போராட்டத்தின் நுட்பமான அம்சங்களில் கூட ஆழ்ந்த கவனம் செலுத்தினார். தொண்டர்களுக்குத் தீவிரப் பயிற்சி அளித்தார். மேனாட்டுப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களுடன் நட்புப்பாலம் அமைத்துக் கொண்டார்.
ஏப்ரல் 5ம்தேதி,1930. தண்டியில் உப்பெடுத்த புனிதப் பொன்னாளுக்கு முன் தினம். அவர் உலகுக்கு விடுத்த ஒற்றை வரிச் செய்தி இதுதான்:
“வலிமைக்கு எதிராக நியாயம் தொடுத்துள்ள இந்தப் போரில் நான் உலகத்தின் அனுதாபத்தை நாடுகிறேன்”
அதே தினம், அமெரிக்க மக்களூக்கு, இந்திய மக்களுடைய சுதந்திரத்துக்கு ஆதரவாக, நீங்கள் திட்டவட்டமாக ஒட்டுமொத்தமாகக் குரல் எழுப்ப வேண்டும் முழுக்க முழுக்க அகிம்சை முறையில் இந்தப் போராட்டம் நடக்கிறது என்பதற்கு உங்கள் ஒப்புதல் வேண்டும். இந்தப் போராட்டம் வெற்றி பெறுமானால், இந்தியா உலகத்துக்கே ஒரு நற்செய்தியை வழங்கியிருக்கம்  என்பதை அடக்கத்துடன், ஆனால் ஆணித்தர உண்மையாகச்  சொல்லிக்கொள்வேன்”
உலக நாடுகளின் கவன வெளிச்சம் இந்த அமைதிப் போரின் மீது படிய வேண்டுமென்ற காந்திஜியின் நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறியது.
யாத்திரை தொடங்கிய நேரத்தில் சபர்மதியில், அவரைச் சுற்றிலும் நோட்டுப் புத்தகமும் பென்சிலுமாக,அடுத்து என்ன சொல்லப்போகிறார், என்ன செய்யப்போகிறார், என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் முண்டியடித்துக்கொண்டு,உள்நாட்டு வெளிநாட்டு நிருபர்கள் கூட்டம். விர் ரிடும் சினிமாடொக்ராஃப் இயந்திரங்கள். க்ளிக்கிடும் காமிராக்கள். அஹமதாபாத் அஞ்சல் இயந்திரம் அயல்நாட்டுத் தந்திகளால் மூழ்கிக் கிடந்தது. நியூயார்க் நகரத்திலிருந்து ஜான் ஹேய்ன் ஹோம்ஸ் என்ற பாதிரியார், ”கடவுள் உங்களைப் பாதுகாக்கட்டும்” என்று தந்தி கொடுத்திருந்தார்.
தர்ஸானா என்று ஓர் இடம்  அங்கு ஓர் உப்புக் கிடங்கு. அங்கு அமைதியான முற்றுகைப் போராட்டத்துக்காக காந்திஜியின் தொண்டர்கள் கூடியிருந்தார்கள். இந்தப் போராட்டம் குறித்து  வைஸ்ராய் இர்வின் பிரபு ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு  அனுப்பிய தகவலின்படி-’போலீசார் அமைதி காத்தார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே ,இலேசான வன்முறையைக் கையாள வேண்டியதாயிற்று. அதனால் பலருக்கு சிராய்ப்புகள் ஏர்பட்டன. ஆனால் அவர்கள் கீழே விழுந்து, குப்புறப் டுத்துக்கொண்டு,மயங்கி விழுந்தது போலவும், செத்து விடப் போவது போலவும், பண்ணிய பாசாங்கு, வேடிக்கையாக இருந்தது.”
இதுதான் வேதவாக்காக இருந்திருக்கும். சரித்திர உண்மையாக வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பெற்ரிருக்கும்----
வெப் மில்லர் என்ற அமெரிக்க நிருபர் அங்கு இல்லாதிருந்தால்-
நெஞ்சம் பதைக்காமல் இருந்திருந்தால்-.
யுனைடெட் பிரஸ் என்ற செய்திஸ்தாபனத்தின்  மூலம் சொற்சித்திரமாக அவர் அனுப்பிய செய்தி அறிக்கை பல்வேறு நாடுகளில் ஏறத்தாழ 1500 பத்திரிகைகளில் வெளிவராமல் இருந்திருந்தால்!
அவர் போலீஸாரின் காட்டு தர்பாரைத் தத்ரூபமாக விவரிக்கிறார். இன்னும் ஒரு வினாடியில் தங்கள் மீது இரும்புத்தடி இறங்கும், மரணம் கூட நேரலாம் என்று தெரிந்து கொண்டும் கூட,சிறிதும் சலனமோ அச்சமோ இல்லாமல் அணி அணியாகத் தொண்டர்கள் முன்னேறியதைச் சொல்கிறார். தற்காத்துக் கொள்ளக்கூட தங்கள் கையை உயர்த்தாதது பற்றிப் பேசுகிறார். அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சி பற்றி வியக்கிறார். முத்தாய்ப்பாக,”18 ஆண்டுகளாக 22 நாடுகளில் செய்தி சேகரிக்கச் சென்றிருக்கிறேன். புரட்சிகள், கிளர்ச்சிகள், உள்நாட்டுக் கலகங்கள், வீதிப் போர்கள் பலவற்றைக் கண்டிருக்கிறேன்.ஆனால் இது போல நெஞ்சுருக்கும் நிகழ்ச்சிகளை எங்கும் கண்டதில்லை” என்று எழுதுகிறார். மான்செஸ்டர் கார்டியன் வெளியிட்ட தாகூரின் அறிக்கை:” ஐரோப்பா உலக அரங்குகளில் நியாயமான நடத்தைக்குப் பாதுகாவலனாக, தார்மிக நெறிகளைப்பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்த காலம்  ஓய்ந்து  விட்டது.”
உலகின் பல நாடுகளில் இந்தப் போராட்டத்தின் எதிரொலி கேட்டது. விரிவான செய்திகள், கேலிச்சித்திரங்கள், அனுதாபப் போராட்டங்கள் பற்பல நாடுகளில் வெடித்தன.  கொலம்பியா பிராட்கேஸ்டிங் கார்ப்பொரேஷன் காந்திஜியின் பிரத்தியேகச் செய்தியை வெளியிட்டது.. பிரிட்டிஷ் சிங்கத்தின் வாலில் காந்திஜி உப்பைத் தேய்ப்பது போன்ற ஒர் கார்ட்டூனை பிரபல கார்ட்டூனிஸ்ட் டேவிட் லோ வரைந்திருந்தார். அது பெரும் பரபரப்பை ஏர்படுத்தியது
“சமீப காலத்தில் எழுந்த அற்புதமான மந்திர சக்தி வாய்ந்த சவால் இது” என்றார்-ஜியாஃப்ரே ஆஷ்.
”அகிம்சை எனப்து கோழைத்தனத்தின் வெளிப்பாடு என்று எள்ளி நகையாடிய உலக நாடுகள் இந்தப் போராட்டம் எவ்வளவு கட்டுக்கோப்பாக நடந்தது என்று தெரிந்து கொண்டால் ஏளனமெல்லாம் பொடிப்பொடியாகி விடும்” என்றார்-ரீச்சேர்டு க்ரேக்..
ஸ்லோகோம்ப் என்ற டெய்லி ஹெரால்டு நிருபர் சொல்லுவது: இந்த ரத்தமில்லாத ,வெற்றிகரமான புரட்சியை நோக்கி உலக நாடுகளின் கவனம் திரும்பியிருக்கிறதில் ஆச்சரியமில்லை” என்கிறார். காந்திஜி சிறைப்பட்டது குறித்து அவர் சொலவது ,”இந்தியாவின் ஆன்மா சிறைப்பட்டுக் கிடக்கிறது”:
இந்தப்  போராட்டம் உலகநாடுகளின் கவனத்தை கவர்ந்ததன்.. விளைவுதான் என்ன?
கைதானவர்கள் விடுதலையானார்கள். அரை நிர்வாணப் பக்கிரியாக, முன்னாள் இன்னர் டெம்பிள் வக்கீல் ,ராஜப்பிரதிநிதியுடன்யுடன் சரிசமமாக விவாதிக்க  வைஸ்ராய் மாளிகையின் படிக்கட்டுகளில் ஏறி வருவதைப் பார்க்க வின்ஸ்டன் சர்ச்சிலுக்க்கு ”குமட்டிக்கொண்டு” வந்ததாம்! ” இந்தியாவில் பிரிட்டிஷார் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து இத்தகைய அவமானத்தைச் சந்தித்ததில்லை” என்று அவர் குமுறுகிறார்.
அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், ராம்ஸே மாக்டொனால்டுக்கு இந்திய விடுதலை பற்றிப் பரிந்துரைக்கிறார். காந்திஜிக்கும் வைஸ்ராய் லின்லித்கோவுக்கும் இடையே சமரசம் பேச ஒரு பிரதிநிதியையும் அனுப்பி வைக்கிறார்.
லூயி ஃபிஷர் “தலையை நிமிர்த்திக் கொண்டு,முதுகுத் தண்டை விறைப்பாக வைத்துக்கொண்டால் கழுத்தில் உள்ள நுகத்தடியை உதறித் தள்ளி விடலாம் என்று இந்தப் போராட்டம் இந்தியர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது” என்கிறார்.
காந்திஜியைத் தமது வழிகாட்டியாகக் கொண்ட மார்ட்டின் லூதர் கிங் (இளையர்)  சொன்னது. நீக்ரோக்கள் இப்படிச் சொல்லும் நிலை வரவேண்டும்.
“துன்பத்தைதரும் உங்கள் வல்லமைக்கு எதிராக அதைத் தாங்கி கொள்ளும் வல்லமை எங்களுக்கு இருக்கிறது..
உங்களை நாங்கள் வெறுக்க மாட்டோம்-ஆனால் உங்கள் கேடான ஆணைகளுக்குகீழ்ப்படிய மாட்டோம்.,
இதுவே சத்தியாக்கிரக தத்துவத்தின் சாரம்



Sunday, 3 December 2017

காந்தி சொன்ன மார்க்கமன்றிக் கதி நமக்கு வேறில்லை!

காந்தி சொன்ன மார்க்கமன்றிக் கதி நமக்கு வேறில்லை!
சாணக்யம், சாதுர்யம் ராஜதந்திரம் என்னும் பெயரால் பொய்ம்மையும் சூழ்ச்சியும் அரங்கேறுகின்றன. பரஸ்பரம் வெறுப்பையும் அவநம்பிக்கையையும் தூண்டிவிடும் பிரசாரங்கள் நடைபெறுகின்றன. வன்முறையினால், போரினால், படுகொலைகளினால், வெறுப்பும் எண்ணிறந்த பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் ஏற்படுகின்றனவே தவிர முரண்பாடுகள் தீர்ந்தபாடில்லை. நம் கண்ணெதிரே காண்பது இது. இதை விளக்கச் சான்றுகளும் விவாதங்களும் தேவையில்லை. ”கண்ணுக்குப் பதில் கண் என்பதே உலக நியதியானால் அனைவருமே குருடர்களாகத்தான் இருப்பார்கள்” என்ற காந்திஜியின் வாக்கு இங்கு நினைவுகூரத்தக்கது.
இதற்கு மாற்றே உண்மையையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்ட சத்தியாக்கிரகப் போர்முறை.
சத்தியாக்கிரகி தான் உண்மை என்று கருதுவதை நிலைநாட்ட உறுதியோடு நிற்கிறான். தான் அநீதி என்று கருதுவதை ஏற்று அடிபணிய மறுக்கிறான். அதனால் விளையும் தண்டனையைத் தயக்கமின்றி ஏற்றுக் கொள்கிறான். அவனது அகிம்சை முடங்கிக் கிடக்கும் ஜடத்தன்மை அல்ல. வீறுகொண்டு எழும் செயல்திறம். பீரங்கிக்குப் பின்னால் இருந்து கொண்டு பிறரைத் துண்டுதுண்டாகச் சிதைப்பது; அல்லது, பீரங்கிக் குண்டுக்கு முன் மார்பைத் திறந்து காட்டி முன்செல்வது- இதில் எது வீரம்? எது கோழைத்தனம்? பிரகலாதனும் பக்த மீராவும், கொண்ட கருத்தில் உறுதியுடன், எந்த எதிர்ப்புக்கும் வன்முறைக்கும் அஞ்சாமல் செயல்பட்டார்களே, அது கோழைத்தனமா, அல்லது வீரமா? அவர்களன்றோ நமது வரலாற்றில் இடம் பெற்றுள்ள பூர்வகால சத்தியாக்கிரகிகள்?
இப்போது ஒரு கேள்வி எழுகிறது. எது நீதி, எது அநீதி என்பது அவ்வளவு திட்டவட்டமாகத் தீர்த்துக்கொள்ளக்கூடிய விஷயமல்லவே? எது உண்மை  என்பதும் அவரவர் பார்வையின் கோணத்துக்கேற்ப மாறுபடலாமே? உண்மைதான். இதனால்தான் சத்தியாக்கிரகி எதிராளி மீது தன் கருத்தைத் திணிப்பதில்லை..கருத்தோடு கருத்தை எதிர்வைத்து, தன் நியாயத்தை எடுத்துரைத்து, மறுதரப்பு நியாயத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறான். நடுநிலையாளர் துணையையும் நாடுகிறான். அனைத்து முயற்சிகளும் பயனளிக்காமல் போகும் இறுதிக் கட்டத்திலேயே சத்தியாக்கிரகப் போர்முறையை மேற்கொள்ள்கிறான். அதிலும் துன்பத்தைத் தானே வலிந்தேற்றுக் கொள்கிறானே தவிர எதிராளி மீது வன்முறையைப் பிரயோகிப்பதில்லை.
சத்தியாக்கிரகப் போர்முறையில் சூழ்ச்சிகளுக்கோ,ஒளிவுமறைவுக்கோ இடம் கிடையாது. சத்தியாக்கிரகியின் கோரிக்கையில்  அதிக பட்சம், குறைந்த பட்சம் என்று எதுவும் கிடையாது. மறைத்து வைத்த நிகழ்ச்சிநிரல் என்று எதுவும் கிடையாது. எது நியாயமோ அதுவே அவன் கோரிக்கையாகும், விட்டுக் கொடுப்பதற்கென்றே அதிக பட்சக் கோரிக்கையை முன் வைப்பதோ, வெற்றி கிட்டுவது எளிதென்று கருதினால், மேலும் மேலும் புதுக் கோரிக்கைகளை வைப்பதோ அவனிடம் இல்லை. அவன் விழையும் வெற்றி, கோரிக்கையின் நியாயத்தின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, எதிராளியின் இக்கட்டினால் கிடைப்பதில்லை. அத்தகைய இக்கட்டுகள் எதிராளிக்கு ஏற்படும் தருணத்தில்,அல்லது தனது போராட்டத்தில் வன்முறை போன்ற  களங்கங்கள்  ஏற்படுமானால், வேற்றிக்கு எவ்வளவு நெருங்கி வந்திருந்தபோதிலும் அவன் போராட்டத்தை விலக்கிக் கொள்வதற்குக் கூடத் தயங்குவதில்லை. அவனது போராட்டம் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர, தனி மனித வெறுப்பு என்பது சத்தியாக்கிரகியிடம் ஒருபோதும் கிடையாது. தீங்கு செய்பவனையும் தீங்கினையும் பிரித்துப் பார்க்கும் பக்குவம் அவனிடத்தில் உண்டு. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்வது அவன் பண்பு.
சில நிகழ்வுகளைக் காண்போம். அவமானப்படுத்தும் அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து காந்திஜியின் தலைமையில் மாபெரும் போராட்டம் நடக்கிறது. போராட்டம் ஒருமித்த உணர்வோடு ந்டக்கிறது. வெற்றிக்கான அலம் கனிந்து வந்திருக்கிறது. இந்தக் கால கட்டத்தில் ஐக்கிய ஐரோப்பிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்குகிறார்கள். “இது அதிர்ஷ்ட வசம்! எதிராளியை நெருக்கிப் பிடிக்க இதுவே தருணம்!” என்று பலரும் கூறுகையில், காந்திஜி தன் போராட்டத்தை ஒத்தி வைத்து விடுகிறார். எதிராளியின் இக்கட்டான நிலைமையை சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளக்கூடாது இது சத்தியாக்கிரகப் போர்முறைக்கு முரணானது, இதுவே ஜெனரல் ஸ்மட்ஸை வியக்க வைக்கிறது. “இந்த இந்தியர்களுடன் என்ன செய்வதென்றே புரியவில்லை. ஆபத்துக் காலத்தில் உதவுகிறார்கள். வன்முறையில் ஈடுபட்டார்களானால் எப்படி அடக்குவது என்று எங்களுக்குத் தெரியும். இவர்கள் பகைவர்களுக்குக் கூடத் துன்பம் விளைப்பதில்லை. துன்பத்தைத் தாங்களே வலிந்தேற்றுக் கொள்கிறார்கள்.!” என்று அவரது செயலாளர்களைப் போலவே அவரையும் ஆதங்கப் பட வைக்கிறது. காந்திஜி, தம்மைச் சிறையில் அடைத்துப் பல தொல்லைகளுக்கு ஆளாக்கிய ஸ்மட்ஸ் துரைக்கு செருப்புத் தைத்துத் தந்ததும்  அந்த ஜோடியை ஸ்மட்ஸ் பூஜைக்கு உரியதாகக் கருதியதும் அதிசயம், ஆனால் உண்மை!
உப்பு சத்தியாக்கிரகத்தின்போது, காந்திஜியின் ஆணையைச் சிரமேற்கொண்டு கை முட்டியே பிளந்தாலும் பிடியிலுள்ள உப்பை விடேன் என்று தொண்டர்கள் நின்றார்களே, தர்ஸானா உப்பள முற்றுகையில், மண்டை பிளக்க ,ரத்தம் ஆறாகப் பெருக, கையால்கூடத் தடுக்காமல்,சாரிசாரியாகச் சென்று தொண்டர் படை வன்முறைத் தாக்குதலை வலிந்தேற்றுக் கொண்டதே இவைதாம் அகிம்சாவாதியின் வீரம்.
அகிம்சையினால் எதையாவது சாதிக்கமுடியுமா என்ற சந்தேகக் குரல்கள் நம் செவிகளில் விழாமல் இல்லை. அகிம்சையை நம்மால் கடைப்பிடிக்க முடியுமா என்ற கேள்விகள் எழுவதும் நாம் அறிவோம்.
எனினும் நம் முன் உள்ள பிரச்சினையைத் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால்,மார்ட்டின் லூதர் கிங் (இளையர்) சொன்னதையே மேற்கோள் காட்ட வேண்டும், நம் முன் உள்ள கேள்வி வன்முறையா, அகிம்சையா என்பதல்ல. அகிம்சையா, அழிவா (Non-vilolence or Non –existence) என்பதே.
ஆற அமர்ந்து சிந்தித்துப் பார்த்தோமானால் நாம் வரக்கூடிய முடிவு-

காந்தி சொன்ன மார்க்கமன்றிக் கதி நமக்கு வேறில்லை என்பதே ஆகும்!

போபால் பேரிடர்-விதியின் பிழையன்று!

போபால் பேரிடர் –விதியின் பிழையன்று1
அமெரிக்க யூனியன் கார்பைடு கம்பெனி வேளாண்மைக்குப் பயன்படும் பூச்சி கொல்லி மருந்து ”செவி”னை 1957ம் ஆண்டு வாக்கில் உருவாக்கியது. பாஸ்ஜீன் என்ற வாயுவையும் மோனோமெதிலமின் என்ற வாயுவையும் இணைத்து ஒரு புதிய மாலிக்யூலை உருவாக்கினார்கள். அதுதான் நமது வில்லன். செவினில் முக்கியப் பங்கு இதற்குத்தான். ஆராய்ச்சி செய்ததில் இது பயங்கரமான விளைவுகளைக் கொண்டது என்று முடிவு வந்தது. இந்த வாயுவை நுகரும் விலங்குகளுக்கு நொடியில் சிவலோகப் ப்ராப்தி நிச்சயம் மின்னல் வேகத்தில் சுவாச உறுப்புகளைத் தாக்கும். முழுமையாகக் கண்பார்வை  போய்விடும். தோலின் நிறமிகள் பொசுங்கிப் போகும். இதற்கு Tolerance Limit  என்று ஒன்றைச் சொல்லி சான்று “வாங்கி” வைத்து விட்டார்கள்.
“வையத் தலைமை கொள்”வதில் தீவிரமாக இருந்த யூனியன் கார்பைடு உலகச் சந்தையை நோட்டம் விட்டது. இந்த சந்தர்ப்பத்தில் இந்தியா தனது பசுமைப் புரட்சிக்குத் துணையாக ஒரு பூச்சி கொல்லி மருந்தைத் தேடிக் கொண்டிருந்தது. அந்நிய நாட்டு கம்பெனி ஏதும் கிடைக்காதா என்று பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில்தான் யூனியன் கார்பைடு நுழைந்தது. மேள தாளத்துடன் அவர்களை வரவேற்று, உடனடியாக 1200 டன் செவினுக்கு ஆர்டர் கொடுத்தது இந்தியா. யூனியன் கார்பைடும் ஆண்டுக்கு 5000 டன்னை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து தருவதற்கு ஒரு தொழிற்சாலை அமைக்க ஒத்துக்கொண்டது. உடனடியாக 1200 டன் செவின் தர வேண்டுமே? அதற்கு என்ன வழி?  கெடுபிடி காரணமாக அலெக்ஸாண்ட்ரியா துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த செவினை இந்தியாவுக்குத் தள்ளி விட்டார்கள். அது வந்த பிறகுதான் தெரிந்தது; வந்த செவின் அப்படியே பயன்படுத்தக் கூடியதல்ல. MIC சேர்த்துக் கலக்கியாக வேண்டும்.இப்படிப்பட்ட தயாரிப்பைச் செய்வதற்கு பெரிய கம்பெனிகளுக்கு உரிமை கிடையாது மத்தியதரத் தயாரிப்பாளர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த துறை அது. என்றாலும், ஒரு பினாமி பேரில் உரிமை வாங்கி விட்டார்கள். இந்திய அரசாங்கத்துக்கோ, நகராட்சிக்கோ இவர்கள் மூலப்பொருள் அபாயகரமான நச்சுத்தன்மை வாய்ந்தது என்று சொன்னார்களா? ஊஹூம்…மூச்! சரி. MIC  எப்படிக் கிடைக்கும்? அமெரிக்காவிலிருந்து பம்பாய்த் துறைமுகத்துக்கு வந்து அங்கிருந்து இரண்டு லொட லொட லாரிகளில் 530 மைல் தூரம் ஒவ்வொன்றும் 44 கேலன் கொண்ட 16 டிரம்களில் கொண்டு வந்தார்கள். இது 0 டிகிரி செல்ஷியசிலேயே இருக்க வேண்டும் என்பதையும்,கொடும் நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதையும் கணக்கில் கொண்டால்,தாக்குப்பிடித்தது ஓர் அற்புதம்தான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அடுத்தபடி, போபால் மன்னருக்குக் கிடுக்கிப்பிடி போட்டு அடிமாட்டு விலைக்கு அவரது அரண்மணை நிலத்தை வாங்கி விட்டார்கள். முதல் அமைச்சர் அர்ஜுன் சிங்குக்கு அங்கே ஒரு உல்லாச விருந்தினர் மாளிகையையும் ஒதுக்கி விட்டார்கள். அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகளின்  கேளிக்கை மண்டபமாக அது பயன்பட்டது என்பது தனிக் கதை.
இந்த, ஆண்டுக்கு 5000 டன் சமாச்சாரம் இங்கு அமெரிக்கக் கம்பெனியின் மார்க்கெட்டிங் அதிகாரியாக வந்த முனோஸ்  என்பவருக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தியது. ஆண்டுக்கு 2000 டன்னுக்கு மேல் இந்தியாவில் விற்பதற்கு சாத்தியமே இல்லை. இதை அமெரிக்கத் தலைமையிடம் சொன்னால்,’காரியத்தை கெடுத்து விடாதே, பாவீ! விற்பதற்கு 2000 டன் தயாரித்து விட்டு  பாக்கிக்கான MIC ஐ டாங்க்குகளில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்றார்கள்,கூலாக. முனோஸுக்கு இதைக் கேட்டதுமே குளிர்ஜுரம்போல் வந்து விட்டது! தமக்குத் தெரிந்த ஜெர்மனி இஞ்சினீயர்களிடம் விசாரித்தார். அவர்கள் சொன்னது: “உங்க இஞ்சினீயர்கள் எல்லாம் என்ன கிறுக்குப் பிடிச்ச பயலுவளா? ஃபாக்டரிக்கு நடுவிலே அணு ஆலையை வெக்கச் சொல்றாங்க? அத்தனை பேரும் வெடிச்சு செத்துடுவீங்கடா!” முனோஸ் இதை “மென்மையாக” எடுத்துச் சொன்னதற்கு, இஞ்சினீயர்களின் பதில் : கவலையே படாதெ! இது ஒரு சாக்கலேட் தயாரிக்கற மாதிரிதான்! ஆபத்தே கிடையாது!
4.5.1980ல் தொழிற்சாலை தனது இயக்கத்தைத் தொடங்கியது, அப்போது கமல் பாரிக் என்ற ஒரு மூத்த இஞ்சினீயருக்கு ஒரு சந்தேகம் வந்தது. “திடீரென்று ஒரு வால்வு உடைந்து போய் வாயுக் கசிவு ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த சமயம் ஒரு ரயில் வண்டி போகிறது. ரயில் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படாதா?” புகைக்குழாயின் உயரம், வாயு செல்லக்கூடிய திசை,வேகம் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு ஓர் ஆவணம் தயாரித்து அமெரிக்க நிபுணர்களுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் கம்ப்யூட்டரில் எல்லாம் போட்டுப் பார்த்து விட்டு,” கவலையே வேண்டாம். ரயில் உயரத்தைத் தாண்டி புகை சென்று விடும்” என்று பதில் அனுப்பினார்கள். ‘திக்’கென்றது பாரிக்குக்கு. அட பாவிகளா! ரயில் பாதைக்கு அன்னண்டைப் பக்கம் குடிசைப் பகுதிகள் அல்லவா? ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் வசிக்கிறார்களே? குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று தலைமை அதிகாரிகள் மூலம் அரசாங்கத்தை வேண்டிக்கொண்டார் அர்ஜுன் சிங் இசையவில்லை. மாறாக தேர்தலுக்கு முன்னால் அத்தனை பேருக்கும் பட்டா வழங்கி விட்டார் அத்தனை பேரும் ஏழைபங்காளன் அர்ஜுன்சிங் வாழ்க என்று கோஷித்தபடியே வாக்குச்சாவடிக்குப் போனார்கள்!
இந்த தொழிற்சாலை தொடங்கிய சில வாரங்களிலேயே,அருகிலுள்ள குடிசைப்பகுதிகளில் கிணற்று நீர் துர்நாற்றம் வீசத் தொடங்கியது; வெள்ளை நிறமாக மாறியது; பசுமாடுகள் செத்துப் போயின. அவற்றைக் கொத்தித் தின்ற காக்கைகளும் கழுகுகளும் செத்துப் போயின. ஒவ்வொருவருக்கும் 5000 ரூபாய் கொடுத்துச் சமாளித்து விட்டார்கள். “நீரைச் சோதனை செய்து பார்க்கிறோம்; ஏதாவது கோளாறு இருந்தால் சரி செய்து விடுகிறோம்” என்றார்கள். சோதனை செய்தார்கள். “நச்சுத்தன்மை கலந்துதான் இருக்கிறது” என்று முடிவு வந்தது. என்ன செய்தார்கள்? கிடப்பில் போட்டு விட்டார்கள்!
1978ல் ஒரு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. போபால் நகரம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து கொண்டது. ராஜ்குமார் கேஸ்வானி என்ற பத்திரிகையாளர் தொழிற்சாலைக்கு விரைந்தார். நூறூ போலீஸ்காரர்கள் சுற்றி அரண் அமைத்திருந்தார்கள்.யாரையும் தொழிற்சாலைக்குள் வரவிடவில்லை.
23.12.1981ல் அஷ்ரஃப் என்ற ஊழியர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். அவரது அஜாக்கிரதையினால் ஏற்பட்ட மரணம் என்று விட்டது நிர்வாகம்.
10.2.1982ல் 25 ஊழியர்கள் பாஸ்ஜீன் வாயு தாக்கி உயிரிழந்தார்கள். நிர்வாகம் இயந்திரக் கோளாறினால் ஏற்பட்ட வாயுக்கசிவு அபாய எல்லையைத் தாண்டவே இல்லை என்றுய் சாதித்து விட்டது.
தொழிற்சங்கத்தினர் 6000 நோட்டீஸ்களை அச்சிட்டு வினியோகித்தார்கள்: “ஜாக்கிரதை! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! விபத்துகள்! விபத்துகள்! விபத்துகள்!!” என்று.
மாளவியா என்ற தொழிற்சங்கத் தலைவர் நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து உண்ணாவிரதம் தொடங்கினார். தினம் ஐந்து பேராக தொழிலாளர்கள் அவருடன் கூட உண்ணாவிரதம் இருந்தார்கள். தொழிற்சாலை வாயிலில்  மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நிர்வாகம் இந்த காந்தியப் போராட்டத்தை பிரிட்டிஷாரினும் மோசமாகக் கையாண்டது. உண்ணாவிரதப் பந்தல் தீக்கிரையாக்கப் பட்டது. தொழிற்சங்கங்களைத் தடை செய்து விட்டார்கள். நிறையப் பேரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள். தாக்குப் பிடிக்க முடியாமல் போராட்டம் ‘பிசுபிசுத்தது!’
ராஜ்குமார் கேஸ்வானி பத்திரிகைகளில் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார். “நகரத்தைக் காப்பாற்றுங்கள்! பின்னாலெங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது என்று சொல்லாதீர்கள்! போபால் ஓர் எரிமலையின்மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறது!” என்றெல்லாம் எழுதினார். அவர் மேலும் எழுதியது : இப்போது புரிந்துகொள்ள மறுத்திர்களானால் சாம்பலாய்த்தான் போவீர்கள்!
அமெரிக்காவிலிருந்து இஞ்சினீயர்கள் வந்து சோதனை செய்து 51 பக்க அறிக்கை கொடுத்து விட்டுப் போனார்கள். “தொழிற்சாலை கேவலமான நிலையில் இருக்கிறது; பாதுகாப்பு என்பது எள்ளளவும் கிடையாது.” என்றெல்லாம் சான்றுகளுடன் குறிப்பிட்டார்கள். முடிவாக அவர்கள் சொன்னது: ஒரு நாள் மாபெரும் துன்பியல் நிகழ்வு நடக்கத்தான் போகிறது!” உள்ளூர் நிர்வாகம் அனுப்பிய பதில்,All defects will be rectified.” அப்புறம் என்ன ஆச்சு? இப்பல்லாம் கோர்ட் உத்தரவுகளுக்கு என்ன ஆகிறதோ, அதே கதிதான்!
மத்தியப் பிரதேச தொழில் மந்திரி சட்டசபையில் முழங்கினர்
: :கார்பைடு தொழிற்சாலையைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையே இல்லை. அங்கு பயன்படுத்தப்படும் பாஸ்ஜீன் வாயு நச்சுத்தன்மை கொண்டதல்ல!”
தொடர்ந்து தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்ததால் செவின் உற்பத்தியை முடக்கினார்கள். உற்பத்திதான் இல்லையே என்று பாதுகாப்புச் செயல்பாடுகள் அத்தனையையும் முடக்கிவிட்டார்கள். முக்கிய ஊழியர்களை ஆயிரக்கணக்கில் வேலையை விட்டு நீக்கினார்கள். MIC டிரம் டிரம்மாக இருக்கிறது அது 0 டிகிரீயில் இருப்பதற்கு கண்ட்ரோல் தேவை என்பதையெல்லாம் புறக்கணித்து விட்டார்கள். இந்த நிலையில் அங்கு வேலை செய்யப் பிடிக்காமல் பல இஞ்சினீயர்கள் வேலையை விட்டு  விலகி விட்டார்கள். அவர்களில் மிக சீனியரான கமல் பாரிக்  போகுமுன், ஏணி வழியாகத் தொட்டி மீது ஏறி,ஏதாவது ஆபத்து வந்தால் எப்படி MIC ஐ 0 டெகிரிக்குக் கொண்டு வரவேண்டும் என்று ஒரு வால்வைத் திருகிக் காட்டி விட்டு ,நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டார் ,”பார்த்துக்கொள்ளுங்கள்! இப்போது 0 டிகிரி; இனி உங்கள் பாடு! டாட்டா!”
மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படவில்தாக தெரியவில்லை. விரக்தியில் கேஸ்வானி வேறு வேலை பார்த்துக்கொண்டு, கடை விரித்தேன் ,கொள்வாரில்லை என்று புலம்பியபடியே இந்தூருக்குப் போய்விட்டார் அத்தனை ஆபத்துகளையும் விலாவாரியாக  குறிப்பிட்டு. முதல் அமைச்சர் அர்ஜுன் சிங்குக்கு ஒரு கடிதமும், தொழிற்சாலையை உடனடியாக மூடக்கோரி உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதிக்கு ஒரு மனுவும் அனுப்பி விட்டுப் போய்ச் சேர்ந்தார். இரண்டு பேரும் கப்சிப்!
1984 விபத்து நடந்ததற்குச் சில வாரங்களுக்கு முன்னல்தான் மனசு கேட்காமல் கேஸ்வானி போபாலுக்கு வந்தார். மீண்டும் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்ஸில் எழுதினர். “ பொது நன்மையை எடுத்துச் சொல்கிறவர்களை மக்கள் நம்பவில்லையா? நான் கார்பைடு கம்பெனியிடம் பணம் பறிப்பதற்காக இப்படி எல்லாம் எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?”
பிறகு டிசம்பர் 2ம் தேதி,1984 நடந்ததெல்லாம் ஊரறிந்த சங்கதி. ரயில்வே அதிகாரிகள்,கடைநிலை ஊழியர்கள், ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஜூனியர்கள் ,இணைந்து பணியாற்றிய இந்து முஸ்லிம் இளைஞர்கள்,கமிஷனர் ரஞ்சித் சிங், சில வாரங்களுக்கு முன்பே இந்திரா காந்தி கொலையை ஒட்டி நடந்திருந்த கலவரத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரை இழந்திருந்த சீக்கிய அதிகாரி கனூஜா ஆகியவர்கள் ஆற்றிய சேவையை மறக்க முடியாது.
இந்த நிலையில் முதலமைச்சர் அர்ஜுன்சிங் என்ன செய்தார்? ஊருக்கு வெளியில் இருந்துகொண்டு,போலீஸ் அதிகாரிகளுக்கு  போன் செய்திருக்கிறார்: “ஊரை விட்டு யாரும் போகக்கூடாது. ஊரைச் சுற்றித் தடுப்பு வையுங்கள்! அவரவர்களை வீட்டுக்குத் திருப்பி அனுப்புங்கள்!” போலீஸ் அதிகாரியிடம் போனை வாங்கிப் பேசினார் கமிஷனர்: “ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், முதலமைச்சர் அவர்களே! இங்கே அவரவர் பாட்டை அவரவர் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது! ஆபத்திலிருந்து தப்பி ஓடுகிறவர்களை எந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு நிறுத்தப் பார்க்கிறிர்கள்?” ’என்று. இரைந்து விட்டு டக்கென்று போனை வைத்து விட்டார்!
இறுதியாக ஒரு தகவல். யூனியன் கார்பைடு தலைமை அதிகாரி வாரன் ஆண்டர்சன் கைது செய்யப்பட்டபோது முதல் தகவல் அறிக்கைப்படி  உரிய தண்டனை-ஆயுள் சிறை!
25000 ரூபாய் ஜாமீனில்  சட்டம் எப்ப அழைத்தாலும் இந்தியாவுக்கு நான் வரத் தயார், நீதிக்குத் தலை வணங்குவேனாக்கும்” என்றெல்லாம் டயலாக் பேசியவர். போனவன் போனாண்டீதான்!  காலம் வந்து மரித்துப் போனார். இறைவனாவது நீதி காத்திருந்தால் இந்நேரம் கருடபுராண தண்டனை கிடைத்திருக்கும்!
இத்தனை அவலங்களும் நிகழ்ந்தது யார் பிழையால்? நிச்சயமாக விதியின் பிழையன்று!
(நன்றி:Donique Lapierre and Javier Moro-Five past Midnight in BHOPAL


Saturday, 2 December 2017

சத்தியாக்கிரகம்-பெயர்க்காரணம்

சத்தியாக்கிரகம்-பெயர்க்காரணம்
சத்தியாக்கிரகம் பிறந்த கதையைப் பார்த்தோம். அதன் பெயர்க்காரணத்தை இப்போது பார்ப்போம்.
புதுமையான இந்த இயக்கத்துக்கு இதுவரை வேறு எந்தப் பெயரும் இல்லாததால் இதனை ‘சாத்வீக மறுப்பு (Passive Resistence) என்றே குறிப்பிட்டனர். இந்த இயக்கத்தின்பால் பரிவு கொண்டிருந்த சில ஐரோப்பியரிடம் கூட இதைப்பற்றி ஒரு தவறான கருத்து இருந்தது. “பலவீனர்கள்; நிராயுதபாணிகள்; எண்ணிக்கையில் குறைந்தவர்கள். எனவேதான், வேறு வழி இல்லாமல் சாத்வீக எதிர்ப்பை மேற்கொண்டுள்ளார்கள்” என்ற கருத்து அவர்களிடம் நிலவியது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இங்கிலாந்தில்,  வன்முறையில் நம்பிக்கை குன்றாமல்,ஆனால் வேறு வழி இல்லாமல் சாத்வீக எதிர்ப்பை மேற்கொண்ட சில இயக்கங்கள் இருந்தன.
இந்த சூழ்நிலையில் அன்பையும் அகிம்சையையுமே அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டு காந்திஜியின் தலைமையில் இயங்கிய இயக்கத்துக்கு வேறு பெயர் தேவைப்பட்டது. இந்தப் பெயர், இயக்கத்தின் அடிப்படை நோக்கத்தை விளக்குவதாக இருக்க வேண்டும். ஆங்கிலமறியாத,பல இந்திய மொழிகள் பேசுகிற மக்கள் எளிதில் புழங்கத் தக்கதாக இருக்க வேண்டும். இத்தகைய பெயர் ஒன்றுக்கான கருத்துகளைக் கேட்டு ,”இந்தியன் ஒப்பினியன்” பத்திரிகையில் ஒரு போட்டி அறிவிக்கப் பட்டது. அதன் அடிப்படையில் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்,”சதாக்கிரகம்” என்பது. மகன்லால் காந்தி பரிந்துரைத்தது. இதுவே சற்று மாற்றி “சத்தியாக்கிரகம்” என்று கொள்ளப்பட்டது. இதன் பொருள் சத்தியத்தில் உறுதி என்பதாகும். இது சத்தியத்தையும் அகிம்சையையும் அடிப்படையாகக் கொண்டு, ஆன்மபலத்தால் நடத்தும் போர்முறையைக் குறிப்பதாயிற்று.


Friday, 1 December 2017

சத்தியாக்கிரகம் பிறந்த கதை

சத்தியாக்கிரகம் பிறந்த கதை
1906 செப்டம்பர் 11.
டிரான்ஸ்வால் எம்பயர் தியேட்டரில் அரங்கு நிரம்பி வழிந்த கூட்டம். டிரான்ஸ்வால் வாழ் இந்தியர்களை அவமானப்படுத்துகிற, குற்றவாளிகளைப்போல் நடத்துகிற ,அவர்களது வாழ்வுரிமையைப் பறிக்கிற, அவசரப் பிரகடனத்தை எதிர்த்து உணர்வுபூர்வமாக ஒன்றுபட்ட இந்தியர்களின் கூட்டம்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று. தங்களது எதிர்ப்பையும் மீறி அந்த அவசரப் பிரகடனம் சட்டவடிவம் பெற்றால், அதற்கு அடிபணிய மாட்டோம்; அடிபணியாததற்கான அனைத்து தண்டனைகளையும் ஏற்றுக்கொள்வோம் என்று இதயபூர்வமாக உறுதி பூண்ட தீர்மானம்.
ஹாஜி ஹபீப்சேத் என்ற இந்தியர் உணர்ச்சிவசப் படுகிறார். இறைவனின் பேரில் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார். மற்றவர்களையும் அவ்வாறே  இறைவனின் பெயரால் உறுதி பூண வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறார். இந்த வினாடியில்தான்  காந்திஜியின் மனத்தில் பளிச்சென்று ஒரு பொறி தட்டுகிறது. இறைவனின் பெயரால் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி ,பொதுவாகக் கூட்டங்களில் நிறைவேற்றி மறந்து விடுவது போன்ற இலேசான தீர்மானமல்ல. இறைவனின் பெயரால் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழியின் புனிதத்தன்மையைக் காந்திஜி விளக்குகிறார். உறுதிமொழியைக் காப்பதற்கான உறுதி தங்களிடம் இருக்கிறது என்று  நிச்சயமாக நம்புபவர்கள் மட்டுமே அத்தகைய உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விளக்குகிறார். காந்திஜியின் பெச்சை ஊன்றி கவனித்த அத்தனை பேருமே,அநீதியான சட்டத்துக்கு அடிபணிய மாட்டோம் என்று ,ஏகோபித்து,,கரமுயர்த்தி, உறுதி பூணுகிறார்கள்.

இதுவே சத்தியாக்கிரகம் பிறந்த கதை.